பிரீமியம் ஸ்டோரி

காப்பு, பாதுகாப்பு, கட்டு, இரட்சை முதலிய பல பொருள்கள் கொண்ட சொல் `காப்பு’ என்பதாகும். பழங்காலத்தில் உடம்பை ஆயுதங்கள் தாக்காதபடி - போர்க்களத்தில் பயன்படும் பாதுகாப்புக் கவசத்தை ‘மெய்ப்புக் கருவி’ என்று அழைத்தனர் என்ற தகவலைப் புறநானூற்றில் காணமுடிகிறது.

இதனை தோல்களாலும் இரும்பினாலும் செய்தனர். இதைப்போல், பல வகை ஆயுதங்கள் உடலை (மெய்யை)த் தாக்க முடியாதபடி முற்றிலும் மறைப்பது ‘மெய்ம்மறை’ என்று பெயர் பெற்றது. ‘பதிற்றுப் பத்து’ என்னும் இலக்கியத்தில் காணப்படும் பதம் இது. இரும்புப் போர்வை, இரும்புக் கவனம் என்று வழங்கப்படுகிறது.

இப்படி, பாராயணம் செய்யும் பக்தர்களி உடம்பு, உள்ளம், உயிருக்குத் துன்பம் வராமல் காக்கும் மந்திர வடிவுக்குக் கவசம் என்று பெயர் வழங்கலாயிற்று.

திருநீறு, விபூதி, குங்குமம், சந்தனம், திலகங் கள், தாயத்துகள், மந்திர பில்லைகள், மந்திரத் தகடுகள், செப்புக் காப்பு, செப்பு மோதிரம், பல வகைக் கற்கள் பதித்த மோதிரங்கள், புலிப் பல், புலி நகம், நரிப்பல், ஐம்படைத்தாலி, கருமணி மாலை, கருநிற முடி கயிறுகள், சிகப்பு நிற நோன்புக் கயிறுகள், மஞ்சள் நிறக் குஞ்சங்கள், வசம்பு, வெண்சிறு கடுகு, மை வகைகள் முதலியனவும் கவசங்களாகக் குறிக்கத்தக்கன.

வழிக்குத் துணையாகும் வேலும் மயிலும்!

ஆக, துஷ்ட தேவதைகளால் தீமைகள் ஏற்படாதபடி, மந்திரங்களால் கவசம் கட்டும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக உள்ளது.

மந்திரக் கவசம் என்பது இரும்பு போர்வையைப் போன்றது. தெய்விகத் தன்மை வாய்ந்தது. இறைவனது பேராற்றலை, பேரருளை மையமாகக் கொண்ட பாதுகாப்பு வளையம் அது. இவ்வாறு பாதுகாப்புப் போர்வையாக, வளையமாக, கோட்டையாக, அகழியாகக் கவச நூல்கள் விளங்குகின்றன. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றில் ‘கந்தன் அருளையே கவசம்’ என்கிறார்.

‘வேலாயுதன் சங்கு சக்கர ஆயுதன் விஞ்சன் அறியாச்

சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர் குடுமிக்

காலாயுதக் கொடியோன் அருளாய கவசம் உண்டு என்

பால் ஆயுதம் வருமோ எமனோடு பகைக்கினுமே’

திருமாலும் பிரம்மனும் கண்டறியாத சூலாயுத மூர்த்தியாகிய சிவபிரான் தந்தவன் கந்தசுவாமி. அவன், ஒளி பொருந்திய

கொண்டையை உடையதும், கால்களையே ஆயுதமாகக் கொண்டு சண்டை செய்வதுமான கோழிக்கொடியை உடையவன். அப்பெருமானின் திருவருள் என்கிற கவசம் எனக்கு உண்டு. ஆதலால் எமனுடைய ஆயுதம்கூட என்னை ஒன்றும் செய்யாது என்று உறுதியாகக் கூறுகிறார் அருணகிரியார்!

கவச நூல்கள் உயிரைக் காக்கும் மந்திர ஆற்றல் உடையன. பல அரிய மந்திரங்களின் தொகுதியே கவச நூலாக அமைகிறது. சான்றோர்கள், துறவிகள், தவமுனிவர்கள், அருளாளர்கள், தெய்வத் தன்மை பெற்றவர்கள் போன்றோர் ஆணையிட்டுக் கூறிய சொற்கள், மந்திரச் சொற்களாக மேன்மை அடைந்து, அதிசயமான நற்பயன்களை அளிக்கின்றன.

கவசத்தின் ஒவ்வோர்அடியும் மந்திரமாக விளங்குகிறது. ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரமும் ‘சரவணபவ’ என்ற ஆறெழுத்து மந்திரமும், `நம’ `ஹ்ரீம்’ முதலான பீஜாட்சரங்களும் கவசத்தின் பல அடிகளில் அமைந்து வருகின்றன. மேலும் கவச அடிகளின் நிறைவில் காக்க, வாழ்க, போற்றி, வருக, சரணம் முதலான சொற்கள் பயின்று வருகின்றன. இவை வெறும் சொற்கள் அல்ல; மந்திரச் சொற்கள்!

கவச நூலை உருவேற்றிப் பலமுறை படித்து மனனம் செய்து, பாராயணம் செய்யும்போது, அது மந்திர நூலாகவே மாறிவிடுகிறது. அதனால்தான் தினமும் கவச நூலை 36 முறை உருவேற்ற வேண்டும் என்று விதித்தனர்.

தினமும் உருவேற்றும் எண்ணிக்கை கூடுதலாகும்போது, கவச நூலின் மந்திர ஆற்றலும் கூடுதலாகும். கவச மந்திரங்களை ஒலி தவறாமல் உச்சரிப்பதால், தெய்வங்கள் அடியார்களின் முன் எழுந்தருளுகின்றனர். அவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்கின்றனர். இதை அனுபவத்தால் உணரலாம்.

கவச இலக்கியங்கள் நிறைய உள்ளன. விநாயகர் கவசம், சிவ கவசம், இடும்பன் கவசம், கடம்பன் கவசம், சக்திக் கவசம், ஸ்கந்த குரு கவசம், கார்த்திகை கவசம், தேவசேனாதிபதி கவசம் ஆகியவை உண்டு.

வழிக்குத் துணையாகும் வேலும் மயிலும்!

ஆயினும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிந்த, பெரும்பாலான இந்து மக்கள் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் தினமும் ஒலிக்கும் திருமுருகனின் தெய்விகக் கவசம் ஒன்று உண்டு. படிப்போரையும் கேட் போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் மந்திர மறைநூல் அது.

சஷ்டியை நோக்க சரவணபவனார்

சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாட கிண்கிணி ஆட

மைய நடஞ்செயும் மயில்வா கனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

வரவர வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

என்று தொடங்கி, கேட்கும் இடங்களில் எல்லாம் நம்மை மீண்டும் மீண்டும் உச்சரிக்க வைக்கும்; உள்ளத்திலும் உடலிலும் அதிர்வைத் தரும்; ஆற்றல்மிக்க அழகு முருகனின் அருந்தமிழ் பாமாலையாம் கந்தர் சஷ்டிக் கவசம்தான் அது. இதைப் பாடியவர் தேவராய சுவாமிகள் எனும் அருளாளர்.

ஒருமுறை தேவராய சுவாமிகள் பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலில் வழிபடச் சென்றார். முதலில் மலையைச் சுற்றி வலம் வந்தார். அங்குள்ள மண்டபங்களில் உடல் நோயால் பீடிக்கப்பட்டவர்கள், மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற்றோர் என பலர் அழுவதும் அரற்றுவதும் கண்டு மனம் வருந்தினார்.

வழிக்குத் துணையாகும் வேலும் மயிலும்!

அவர்கள் அனைவரும் நலம்பெற ஆறுமுகப் பரமன் வழிகாட்ட வேண்டுமென்று மனத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு, கோயில் மண்டபத்திலேயே துயில் கொண்டார். அன்றிரவு அவரது கனவில் பழநிப் பரமன் பிரசன்னமானார் .

`உன் எண்ணம் ஈடேற அருளினோம். பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகில் உள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந் தமிழில் பாடு’ என்று ஆசியளித்து கந்தவேள் மறைந்தார். உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். `சண்முகா போற்றி... சரவணபவனே போற்றி...’ என்று ஆடிப் பாடி மகிழ்ந்தார். முருகன் திருவருளை வியந்து போற்றி, பாமாலை சூட்டி அருளினார்.

அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்த சஷ்டி கவசம் எனும் புகழ்பெற்ற தோத்திரம்.

இதனைச் சிந்தை கலங்காது தியானிப்ப வர்கள், ஒருநாள் 36 உரு கொண்டு ஓதி ஜபம் செய்து, திருநீறு அணிந்தால், எல்லா நோயும் நீங்கும்; நவகிரகங்கள் மகிழ்ந்து நன்மையே செய்வர் என்றும், இன்பமுடன் வாழலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார் தேவராயர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவருக்குப் பின்னாளில் அவதரித்த பாம்பன் மத் குமரகுருதாச சுவாமிகள், இளமையிலேயே கந்த சஷ்டி கவசத்தை அதில் கூறியவாறு ஒவ்வொரு நாளும் 36 முறை பாராயணம் செய்தவர். அதன்பின்பே சண்முகக் கவசம் பாடினார் என்றும் அதற் கான வித்து கந்த சஷ்டிக் கவசமே என்றும் பெரியோர்கள் குறிப்பிடுவர்.

வழிக்குத் துணையாகும் வேலும் மயிலும்!

தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன் குடி பழநி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச் சோலை ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே 6 கவசம் பாடி உள்ளார் என்று அறியமுடிகிறது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் தலத்திற்குரிய கவசம் 78 வரிகள் உடையது. `திருப்பரங்குன்றுரைத் தீரனே குகனே மறுப்பில் பொருளே வள்ளி மனோகரா...’ என்று தொடங்குகிறது. இந்தத் துதிப்பாடலில்...

தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்

சேயெனக் காத்த‍ருள் திவ்யமா முகனே

அல்லும் பகலும் அனுதினம் என்னை

எல்லினும் இருட்டிலும் எரிபகல் படுக்கை

வல்ல‍ விடங்கள் வராமல் தடுத்து

நல்ல‍ மனத்துடன் ஞான குரு உனை

வ‌ணங்கித் துதிக்க‍ மகிழ்ந்துநீ வரங்கள்

இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும் (32-38)

- என்ற பகுதி அற்புதமான பிரார்த்தனையாக அமைந்துள்ளது.

திருச்செந்தூர்

பல்லாயிரக்கணக்கானோர் தினமும் பாராயணம் செய்யும் பிரபல மான கவசம் திருச்செந்தூர் தலத்துக்கு உரியது.

இதில், `உன் திருவடியை உறுதியென் றென்னும் என்தலை வைத்துன் இணையடி காக்க’ என்று (61-வது வரி முதல்) சிரசில் தொடங்கி நெற்றி, கண், செவி, நாசி, வாய், நாக்கு, கன்னம், கழுத்து, மார்பு, தனம், தோள், பிடரி, முதுகு, வயிறு, இடை, குறி, பிட்டம், குதம், தொடை, கணைக்கால், முழந்தாள், விரல்கள், கைகள் முதலான அனைத்து அங்கங்களையும்... பகலிரவு நேரங்களில் கந்தவேள் என்னை காக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

வழிக்குத் துணையாகும் வேலும் மயிலும்!

மேலும் பில்லி, சூனியம், பேய், முனி, பிரம்ம ராட்சசன், காட்டேரி முதலானவற்றால் ஏற்படும் துன்பங்கள் நீங்க முருகன் கை வேல் துணைநிற்க வேண்டுகிறார். புலி, நரி, நாய், கரடி முதலான மிருகங்களாலும் எலி, தேள், பாம்பு, பூரான் முதலான ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், பலவிதமான உடல் நோய்களும் நில்லாத ஓடவும் அருள்செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து முருகனின் பல்வேறு திருநாமங்களை அழைக்கிறார்.

அவனைப் புகழ்ந்து பாடியும் ஆடியும் பரவசமாகி, `அவனது விபூதியை நெற்றியில் அணிய வினை நீங்கி வாழலாம்’ என மயிலோனை வடிவேலனை, மலைக்குருவை வாழ்த்திப் போற்றுகிறார். அடியேன் செய்த பிழைகளைப் பொறுத்து அருள் செய்திட வேண்டும். அது உன் கடமை என்று உரிமை யாகக் கேட்கிறார்.

பழநி திருஆவினன்குடி

இந்தத் தலத்துக்கான கவசம் 142 அடிகள் கொண்டது. இதில் கந்தவேளின் கவின் மிகு ஆறுமுகங்களின் அருள்செயலைக் காட்டு கிறார்.

குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து

உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்

சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்

அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்

வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்

தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்

சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்

ஆரணம் ஓதும் அருமறை யடியார்

தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்! (25-33)

இதனை நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படையில் உள்ள திருச்சீரலை வாய் பகுதியின் ஆறுமுகங்களின் தொழில்களைக் காட்டும் முறையோடு ஒப்பிடலாம்.

இந்தப் பழநிக் கவசத்தில் நாற்கோணம், முக்கோணம், அறுகோணம், ஆகாச வட்டம், தந்திர அர்ச்சனை, வாசியோகம், முதலானவற்றைக் குறிப்பிடுகிறார்.

வழிக்குத் துணையாகும் வேலும் மயிலும்!

மேலும் சிதம்பரச் சக்கரம், தேவிச் சக்கரம், காளிச் சக்கரம், சதாசிவச் சக்கரம், வீரபத்ர சக்கரம், திருமால் சக்கரம், அக்னிச் சக்கரம், சண்முகச் சக்கரம் ஆகிய அனைத்தும் ஒரே வடிவாய் என் முன் நின்று... மனத்துள் இருந்து...

தம்பனம், மோகனம், வசீகரம் முதலான தந்திர மந்திரங்களாய் விபூதியுடன் ஜபிக்க... கந்தனின் தோத்திரக் கவசம் காக்க வேண்டும் என்கிறார்.

திருவேரகம் - சுவாமி மலை

திருவேரகம் கவசம் 74 வரிகள் உடையது. இதைச் சிவபெருமானுக்கு முருகன் பிரணவப் பொருளை உபதேசித்த செய்தியுடன் தொடங்குகிறார்.

ஏகாட் சரமாய் எங்கும் தானாகி

வாகாய் நின்ற மறைமுதற் பொருளே

துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்

அதிசய மாக அமைத்தவா போற்றி

திரியட் சரத்தால் சிவனயன் மாலும்

விரிபா ருலகில் மேன்மையுற் றவனே

சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்

மதுர மாய் அளிக்கும் மயில்வா கனனே

பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்

தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்

நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம் (17-27)

- என்று பாடி, அட்சரப் பொருளாய் ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரவணப் பெருமானைப் போற்றுகிறார்.

குன்றுதோறாடல்

குன்றுதோறாடல் கவசம் 157 வரிகளை கொண்டது. இதில் கந்த பெருமானின் திருவடிவழகைத் திருமுடி முதல் தொடங்கி வர்ணிக்கிறார். சிவன் பார்வதி இருவரும் குழந்தை குமரனை எடுத்து அணைத்து, `ஐயா... குமரா... அப்பனே...’ என்று மார்பிலும் தோளிலும் மடியிலும் வைத்துக் கொஞ்சி, அவனோடு வட்டமிட்டு ஆடி விளையாடும் காட்சியை வர்ணிக்கிறார்.

அவன் அணிந்துள்ள ஆபரணங்கள், பீதாம்பரம், கச்சை முதலானவற்றையும் பட்டியலிடுகிறார். அவனுடைய திருக்கரங் களில் திகழும் ஆயுதங்களையும் காட்டுகிறார்.

அஷ்டபைரவர், சப்த ரிஷிகள், முனிவர்கள், கந்தர்வர்கள், பூத வேதாளங்கள், அடியார்கள் மற்றும் பலவித வாத்தியங்கள் முழங்க முருகன் வரும் காட்சி மிக மிக அற்புதமாக உள்ளது.

14 உலகங்களிலும் பக்தர்தம் மனத்திலும் எங்கும் அவனே இருந்து, அடியார்தம் பங்கிலிருந்து பாங்குடன் வாழ்க என்று நிறைவு செய்கிறார்.

பழமுதிர்ச்சோலை

பழமுதிர்ச்சோலை கவசம் 80 அடிகளைக் கொண்டது. `சங்கரன் மகனே சரவண பவனே’ என்று தொடங்கி, ஐயன் முருகனுக்கு சரணம் கூறி, ஆறெழுத்து மந்திரத்தின் அற்புதத்தைக் காட்டுகிறார்.

சவ்வும் ரவ்வுமாய் தானே யாகி

வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே

பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்

தவ்வியே ஆடும் சரவண பவனே (17-20)

இதன் நிறைவுப் பகுதியில்,

`அருணகிரி தனக்கு அருளிய தமிழ் போல்

கருணையால் எனக்கு கடாட்சித்தருள்வாய்.

தேவராயன் செப்பிய கவசம்.

பூவலயத்தோர் புகழ்ந்து கொண்டாட

சஷ்டி கவசம் தான் செபிப்போரை

சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா’ (69-74)

என்று நூற் பயனைப் பாடுகிறார்.

தேவராய சுவாமிகள், திருச்செந்தூர் கவசத்திலும் இந்தப் பழமுதிர்ச் சோலை கவசத்திலும் தன் பெயர் முத்திரையை பதிவு செய்கிறார்.

`சரவண பவ’ எனும் ஆறெழுத்து மந்திரம், இந்தக் கந்த சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். கவசத்தின் ஒவ்வோர் அடியும் கந்தசுவாமியின் திருக் கையில் உள்ள வேலைப் போன்றது.

உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் வேலே கவசமாக உள்ளது. கந்த சஷ்டிக் கவசம், ‘மந்திர மறைநூல்’ என்பதைப் பாராயணம் செய்து பலன் அடைந்தவர்களின் அனுபவம் கொண்டு உணர முடியும்.

முருகா சரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு