
- பூசை. ச.அருணவசந்தன்
உலகில் தோன்றிய எண்ணிலாத சித்தர்கள் மக்களுக்குச் சூட்சுமத் துணையாக இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
மெய்ஞ்ஞானத்தைத் தேடி அலைந்து, இயற்கையின் ரகசியத்தை அறிய முனைந்து, அதில் வெற்றியும் பெற்றவர்கள் சித்தர்கள். எல்லாம்வல்ல சிவபெருமானே பெரும் சித்தராகத் தோன்றி மதுரையில் திருவிளையாடல் புரிந்த திருக்கதை உண்டு. சித்தர் மரபில் 18 என்ற எண்ணுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. யோக நெறிக்கு 18 படிகள் உண்டு. யோகக் கலையை உணர்த்தும் சபரிமலையில் 18 படிகள் உண்டு. அதேபோல், கீழ்வேளூர் எனும் தலத்தில் யோகராஜ வித்தையின் தலைவனாக விளங்கும் தியாகேச பெருமானும் 18 படிகள்மீது அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, யோக படிநிலைகள் பதினெட்டையும் யோக சாதனையால் கடந்தவர்கள் சித்தர் பெருமக்கள். இவர்களில் பதினெட்டு பேரை பதினெண் சித்தர்கள் எனப் போற்றுவர். பதினெட்டு சித்தர்கள் இன்னார் என்று குறிப்பிட்டு அவர்களின் திருப்பெயர்களை வரிசைப்படுத்திக் கூறும் பல துதிப்பாடல்கள் உண்டு. அவற்றில் ஒன்று உங்களுக்காக இங்கே. இந்தப் பாடலைப் படித்து சித்தர் பெருமக்களை மனத்தால் துதிக்க பிணிகள் முதலான அனைத்து சங்கடங்களும் விலகும்.
நந்தி, அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
நல்தவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
கந்து இடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார் கொங்கணவர் காலாங்கி அன்பின்
சிந்தில் அழுகண்ணார் அகப்பையர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ்ச் சீர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தையிலுன்னி சிரந்தாழ்த்தி சேர்ந்து துதிப்போமே.