கண்ணுக்குப் புலப்படும் உருவத் திருமேனிக்கும் புலப்படாத அருவத்துக்கும் மூலமானவர் சிவபெருமான். அவரை வழிபட ஓர் அடையாளமாக விளங்குவது சிவலிங்கம். லிங்-லயம்; கம்- தோற்றம். அதாவது உலகு, தோன்றி ஒடுங்கும் இடம் என்பர். லிம் - உலக முடிவில் அண்ட சராசரங்களும் லயிப்பதற்கு உரிய இடம் என்றும், கம்- அவ்வாறு லயித்த பொருள்கள், அதிலிருந்து வெளிப்படுவது என்றும் கூறலாம்.
லிங்கம் என்பதற்குப் பிரகாசம் என்றும் பொருள் உண்டு. படைத்தல் உட்பட ஐந்தொழில்களால் உலகைப் பிரகாசிக்கச் செய்வது லிங்கம் என்பார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரிலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழுவூரிலும் சிவனாரின் அரியவகை சிற்பங்களைக் காணலாம்.
அதாவது சிவபெருமானே தன் தோளில் சிவலிங்கத்தைச் சுமந்தபடி காட்சிதரும் அற்புதச் சிற்பங்கள் அவை. திருமூலர் அருளிய திருமந்திரத்தில் `தன்மேனி தற்சிவலிங்கமாய்...’ எனத் தொடங்கும் பாடலும், `உருவும் அருவும் உருவோட ருவும்’ எனத் தொடங்கும் பாடலும் அற்புதமான இந்தச் சிவவடிவத்தைப் பற்றி விளக்குவதாக உள்ளது என ஆன்மிக ஆன்றோர்கள் கூறுவர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயில் பிரசித்திபெற்றது. சோழப் பேரரசர்களின் காலத்தில் அவர்களின் ஆட்சிக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக விளங்கியவர்கள் கொடும்பாளூர் இருக்குவேளீர் மரபைச் சேர்ந்த அரசர்கள். அந்த மரபில் வந்த பூதிவிக்கிரம கேசரி என்ற மன்னனால் கட்டப்பட்டதுதான் கொடும்பாளூர் மூவர் கோயில். அவற்றில் வடபுறம் அமைந்த கோயில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. நடுவில் உள்ள கோயிலில், ஸ்ரீவிமானத்து மேல்தளத்தின் கிரீவப் பகுதியில், வடபுறத்தில் மிக அரிதான சிவனாரின் சிற்பம் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசிவனார் தனக்குப் பின்புறம் படுத்திருக்கும் காளையின் மீது சாய்ந்த வண்ணம், ஒரு காலை மடக்கி வைத்தும் ஒரு காலைக் குத்திட்டவாறும் ஒய்யாரமாக அமர்ந்துள்ளார். இறைவன் தமது வலது முன்கரத்தைக் காளையின் தலைமீது வைத்துள்ளார். இடது முன் கரம் வரத முத்திரை காட்டுகிறது. இடது பின் கரத்தில் மான் ஒன்றை ஏந்தியுள்ளார். அவரின் வலது பின் கரம், அந்தத் தோளில் அவர் சுமக்கும் சிவலிங்கத்தைப் பிடித்தவாறு உள்ளது. வழக்கம்போல் சிவனாருக்கே உரிய சடாமகுடம், செவிகளில் முறையே மகரக்குழை மற்றும் பத்ர குண்டலம் திகழ்கிறது.
இதேபோன்று, அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரில் அமைந்துள்ள அவனி கந்தர்வ ஈஸ்வர கிருகம் எனப் போற்றப்படும் கீழையூர் சிவாலய வளாகத்தில் இரண்டு சிவாலயங்கள் அருகருகே உள்ளன. அவற்றில் தென்புற சிவாலயத்தின் மேல்தளத்தில், சிவலிங்கத்தைச் சுமக்கும் சிவ வடிவைக் காணலாம்.
இங்கு சிவபெருமான் இடது பின்கரத்தில் மானுக்குப் பதில் ருத்ராட்ச மாலையைப் பிடித்துள்ளார். வலத்தோளில் சிவலிங்க வடிவம் உள்ளது. அதை வலப் பின்கரம் தாங்கி நிற்கிறது. இந்தச் சிற்பம் சோழர்களின் சிற்றரசர்களான பழுவூர் பழுவேட்டரையர்களால் வடிக்கப்பெற்றது. முற்காலச் சோழர்கள் காலத்தில் வடிக்கப்பெற்ற இந்த இரண்டு சிற்பங்களும் காளாமுக பாசுபத சைவக் கோட்பாட்டின் அடிப்படையில் வடிக்கப்பெற்றவையாம். இந்தத் தலங்களுக்குச் செல்லும் அன்பர்கள் மூலவர் தரிசனத்தோடு, இந்தச் சிற்பங்களையும் தரிசித்து மகிழலாம்!