Published:Updated:

சேந்தன் அளித்த களியமுது!

ஈசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈசன்

ஈசன் மிகக் களிப்புடன் அமுது பெற்று உண்டதால் பெருமை பெற்ற அடியார்கள் இருவர் உண்டு.

எளியோர்க்கு எளியோனான ஈசன், வழிபாடுகள் மற்றும் பிரமாண்ட ஆராதனைகளுக்கு மட்டுமல்ல, ஆத்மார்த்த பக்தியைக் கண்டும் மகிழ்ந்து அருள்பவர். தனக்குச் சமர்ப்பிக்கப்படுவது எளிய அமுதாயினும் அதீத அன்புடனும் அர்ப்பணிப்புடனும் அதை அளிக்கும் தொண்டர்களைத் தேடி ஓடிவருபவர் சிவபெருமான் என்றே திருமுறைகள் கூறுகின்றன.

அவ்வகையில் ஈசன் மிகக் களிப்புடன் அமுது பெற்று உண்டதால் பெருமை பெற்ற அடியார்கள் இருவர் உண்டு. ஆம்! சகல ஜீவராசி களுக்கும் படியளக்கும் நம்பிரான், பூவுலகில் இரண்டே இரண்டு தருணத்தில்தான் உணவு உண்டார். மாமதுரையில், வைகைக் கரை அடைக்கும் பணியின் பொருட்டு மண் சுமக்கக் கூலியாக, ஏழை மூதாட்டி வந்தியிடம் பிட்டு வாங்கி உண்டார். அங்ஙனம் உண்டவர், பணி செய்யாது பிரம்படி பட்டு அருளாடல் புரிந்தார். இன்றும் மதுரை ஆவணி மூல விழாவின்போது, இந்த அற்புத நிகழ்வு ஐதிக விழாவாக நடைபெறுகிறது.

அடுத்து, தில்லையில் சேந்தனார் வீட்டில் முதியவராக வந்து திருவாதிரைக் களி உண்டு திருவிளையாடல் புரிந்தார். இந்தத் திருக்கதை அடியவர்களுக்கு நெகிழ்ச்சியை அளிப்பதாகும்.

சேந்தன் அளித்த களியமுது!

திருவெண்காட்டுக்கு அருகில் நாங்கூர் என்ற தலத்தில் பிறந்த சேந்தனார், பட்டினத்தாரின் தலைமை கணக்கராக பணியாற்றியவர். ‘காதற்ற ஊசியும் கடை வழிக்கு வாராது காண்’ என்பதை உணர்ந்த பட்டினத்தார் துறவறம் சென்றார்.

அவர் விருப்பப்படி அவரின் சொத்துக்களைப் பொதுமக்களுக்கும் தரும கைங்கர்யங்களுக்கும் கொடுத்துவிட்டார் சேந்தனார். இது சோழ அரசனுக்கு பெரும் கோபத்தைத் தந்தது. அளவிடமுடியாத பட்டினத்தாரின் சொத்துக்கள் அரசனுக்குத்தானே சொந்தம் என்று என்று எண்ணிய மன்னன், சேந்தனாரைச் சிறையிலிட்டான். இந்த விஷயத்தை அறிந்து வருந்திய பட்டினத்தடிகள், சேந்தனாரை சிறை மீட்கும்படி ஈசனை வேண்டினார். ஈசனும் கணபதியை அனுப்பி அவரைச் சிறை மீட்டார்.

அரச சம்பந்த உறவு தீராத இன்னல்களைத் தருகிறது என்று உணர்ந்த சேந்தனார் அங்கிருந்து கிளம்பி தில்லையின் புறப் பகுதியான தில்லைவனத்துக்கு வந்தார். அங்கு தன் மனைவி மக்களோடு எளிமையாக வாழ்ந்தார். தினமும் விறகு வெட்டி அதை விற்றுப் பெறும் பணத்தில் வாழக்கையை நடத்தினார்.

சேந்தன் அளித்த களியமுது!

வறுமையிலும் செம்மையாக தினமும் ஒரு சிவனடியாருக்கு அமுது படைத்து மகிழ்ந்தார். கடலளவு செல்வம் கொண்டோர் தர்மம் செய்வது பெரிதல்ல; அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாத ஏழைகள் செய்வதுதானே உயர்ந்த தானம்! இந்த எளிய தொண்டரின் பெருமையை உலகறியச் செய்ய திருவுளம் கொண்டார் சிவனார்..

ஒருநாள், விடாது மழை பெய்தது.அன்றைய உணவுக்கு வழி தெரியாத நிலையில் சேந்தனார் சோர்வுற்றார். மேலும் சோதனையாக... அந்த வேளையில் வயதான சிவனடியாராக சேந்தனாரின் இல்லம் தேடி பசியாற வந்தார் ஈசன். மாதரசியான சேந்தனாரின் மனைவி வீட்டில் இருந்த கொஞ்சம் அரிசி, பருப்புகளை வறுத்துக் களியாகக் கிண்டி, அந்த முதியவரின் பசியை ஆற்றினார்.

பாற்கடல் அமுதத்தைக் கூட விடுத்து ஆலகாலம் உண்ட தியாகப்பெருமான், அந்தக் களியை அமுதென உண்டார். மீதமான களியையும் தமது கந்தல் உடையில் கட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

இந்த நிலையில் சோழ அரசனான கண்டராதித்தர் வழக்கம் போல் சிவ பூஜை செய்தார். வழக்க மாக இரவு நைவேத்திய பூஜை முடிந்ததும் ஒலிக்கும் பெருமானின் சிலம்பொலி அன்று கேட்கவில்லை. அதனால் பெரிதும் கவலையுற்றுக் கலங்கினார் மன்னன்.

அன்றிரவு அவரது கனவில் தோன்றிய தில்லை அம்பலவாணன், ``சேந்தன் வீட்டில் களி அமுது எடுத்துக் கொண்டபடியால் உமது பூஜைக்குப் பிறகு நைவேத்தியம் எடுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால் சிலம்பொலியும் கொடுக்கவில்லை '' என்றார்.

மன்னன் சிலிர்த்தார். இறைவனே தேடிச் சென்றிருக்கிறார் என்றால், சேந்தன் எவ்வளவு பெரிய அருளாளராக இருப்பார் என்று எண்ணி வியந்தார்.

பொழுது விடிந்தது. அரசரைப் பார்க்க தில்லை அர்ச்சகர்கள் காத்திருந்தனர்.

‘`மன்னா! இன்று அதிகாலை கனகசபையைத் திறந்தபோது, அங்கே இறைவனின் திருமேனி யிலும் தரையிலும் களி உணவு சிந்தியிருக்கக் கண்டோம். அந்த உணவு அங்கே எப்படி வந்தது என்று தெரியவில்லை’' என்றனர்.

மன்னனுக்கு உண்மை புரிந்தது. களியமுதை உண்டதுடன், தாம் உண்டதை உலகறியச் செய்த சிவபெருமானின் கருணையை எண்ணிச் சிலிர்த்தார்!

சேந்தன் அளித்த களியமுது!

அன்று திருவாதிரைத் திருநாள். நடராஜ பெருமானின் தேரோட்டம் தொடங்கியது. ஆடகப் பொன் வீதியில் அசைந்து ஆடி வந்த ஆடல்வல்லானின் தேர், ஓரிடத்தில் சிக்கிக்கொண்டு அசைய மறுத்தது. படைகள் முழுக்க முயற்சி செய்தும் பலனில்லை. ஈசன் விளையாடல் அது.

‘’சேந்தா! தேர் அசையப் பல்லாண்டு பாடு!’’ என்று கட்டளையிட்டார் ஈசன்.

கூட்டத்தில் இருந்த சேந்தனாரோ அக்கணமே, ‘மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள்...’ என்று தொடங்கி 13 பாடல்கள் பாடினார். தேர் மீண்டும் அசைந்தது; நகர்ந்தது!

அன்புடன் களியமுது படைத்த தொண்டனை அரசனே வணங்கும்படிச் செய்து அருள்பாலித்தார் ஈசன். இதை ஒட்டியே மார்கழித் திருவாதிரைத் திருநாளில் ஈசனுக்கு வெல்லக் களி நைவேத்தியம் செய்யும் வழக்கம் உண்டானது.

திருவாதிரை நாளில் களி செய்து அடியார்களுக்கு வழங்கினால், தடைப்பட்ட காரியங்கள் யாவும் தடை கள் நீங்கி வெற்றி பெறும் என்பார்கள்.

தில்லையை விட்டு நீங்கிய சேந்தனார் குடும்பத்தோடு தல யாத்திரையைத் தொடங்கினார். ஒரு தைப்பூச நன்னாளில் திருவிடைக்கழி திருத்தலத்தில் வழிபாடு செய்தபடியே குடும்பத்தோடு ஈசனோடு கலந்தார்.

அடியார்களுக்கு அமுதிட்ட சேந்தனாரைச் சிறப்பிக்க ஈசனே வந்து களி உண்டதும், சேந்தனாருக்கு மேன்மையான நிலையை அருளியதும் உண்மைச் சம்பவங்களாகும்.

ஒன்பதாம் திருமுறையில் ஒன்றாகிய திருப்பல்லாண்டு முழங்கும் வரை சேந்தனார் புகழ் எந்நாளும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

நெல்லியின் மகிமை!

ஏகாதசி தினத்துக்கு மறுநாள் துவாதசி அன்று உணவில் நெல்லிக்கனி அவசியம் இடம்பெறும். நெல்லி கிருஷ்ணபகவானுக்கு உகந்தது. `நெல்லி எங்கு இருக்கிறதோ, அங்கு நான் வாசம் செய்வேன்’ என்கிறார் கிருஷ்ண பகவான்.

நெல்லி மரம் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு திருமகளுடன் உறைவதாக புராணங்கள் கூறுகின் றன. எனவே, நெல்லி மரம் வளர்க்கப்படும் வீடு, லட்சுமி கடாட்சத்துடன் திகழும். அங்கு, கெட்ட நிகழ்வுகள் நடக்காது, தீய சக்திகள் விலகும்.

நெல்லி இலைகளால் அர்ச்சிப்பதாலும், நெல்லிக் கனியைச் சமர்ப்பிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்.

சேந்தன் அளித்த களியமுது!

‘பிரம்மனால் உருவாக்கப்பட்ட நெல்லி மரம்- காமம், கோபம், மயக்கம் ஆகிய தீய குணங்களைப் போக்கும் வல்லமை படைத்தது’ என்கிறது கந்த புராணம். வெள்ளிக்கிழமைகளில் நெல்லி மரத்தை வலம் வந்து வழிபட்டால், மகாவிஷ்ணு மற்றும் மகா லட்சுமியின் அருளைப் பெறலாம்.

இப்படிப் புராணங்கள் போற்றும் நெல்லிக்கனிக்கு மருத்துவச் சிறப்புகளும் உண்டு. சுச்ருதர் என்ற முனிவர், ‘நெல்லிக் கனியின் புளிப்புத் தன்மை, இளமையைத் தரும் காயகல்பம்!’ என்கிறார்.

‘சரக சம்ஹிதை’ என்ற நூலில், ‘நெல்லிக்கனியின் சாறு இதயக் கோளாறுகளுக்கு சிறந்த மருந்து’ என்று குறிப்பிட்டுள்ளார் சரக முனிவர்.

- எம்.வாசுகி, சத்தியமங்கலம்