
மகா பெரியவாளின் அளவற்ற அன்புக்குப் பாத்திரமானவர் எனப் பிரதோஷம் மாமாவைச் சொல்வார்கள்.
மகாபெரியவா அப்போதெல்லாம் `மேனா'வில் போவார். பல்லக்கு மாதிரி அதிக பாரமாக இல்லாமல், கனம் குறைவாக இருக்கும். நாலு பேர் அதைத் தூக்கிக்கொண்டு போவார்கள்.
பெரியவா அதில் ஒடுங்கி உட்கார்ந்துகொள்வார். ஒரு தடவை, பொதுக்கூட்டம் ஒன்றில் நாத்திக அன்பர் ஒருவர், `இவர் மட்டும் பல்லக்குல போவாராம். இவரை மத்தவங்க தூக்கிட்டுப் போகணுமாம். ஏன், அவங்க மட்டும் மனுஷங்க இல்லையா... நடந்துபோனா என்ன இவருக்கு...' என்று ஆவேசமாகப் பேசினார்.
பெரியவாளின் காதுக்கு இது எட்டியது. உடனே மேனாவை நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கி, நடந்து போக ஆரம்பிச்சார்.
`அவர் சொல்றதைப் பெரியவா காதுலேயே போட்டுக்க வேணாம். உங்களைச் சுமந்து போறது எங்க பாக்கியம்! மேனாவிலே ஏறுங்கோ'ன்னு அதைச் சுமக்கிற பக்தர்கள் எவ்வளவோ தயவுபண்ணிக் கேட்டுண்டும் பெரியவா மேனாவில் ஏற மறுத்துட்டார். `இல்லை. அவா சொல்றதும் சரிதானே! துறவிக்கு மேனா எதுக்கு?'ன்னு சொல்லி, அன்னியிலேர்ந்து `மேனா'வில் ஏறுவதையே தவிர்த்துவிட்டார் பெரியவா.

வெயில், மழைன்னா அங்கங்கே கிடைக்கிற இடத்தில் தங்கிக் கொண்டு பிரயாணத்தைத் தொடர்வாரே தவிர, எங்கே போனாலும் சரி, எவ்வளவு தூரம் போவதாக இருந்தாலும் சரி, நடந்தேதான் போக ஆரம்பிச்சார். கடைசி வரை அந்த வைராக்கியத்தை அவர் விடவே இல்லை.
மகா பெரியவாளின் அளவற்ற அன்புக்குப் பாத்திரமானவர் எனப் பிரதோஷம் மாமாவைச் சொல்வார்கள். ஒருமுறை சுபாஷ் சந்திரன், கணேஷ்-குமரேஷை அழைத்துக்கொண்டு பிரதோஷம் மாமாவின் இல்லத்துக்குச் சென்றார். சாந்நித்யம் நிறைந்த புனிதமான இடம் அது. வயலின் கலைஞர்கள் இரண்டு பேரும் அங்கேயிருந்த பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன்னே பவ்யமாக அமர்ந்து இசைத்தனர். பிறகு மாமாவை நமஸ்கரித்து, `உங்கள் கையால் தங்கக் காசு கிடைத்தால், அது எங்களுக்குப் பொக்கிஷம்’ என வேண்டினர். உடனே மாமாவும், `அதற்கென்ன குழந்தைகளா, அடுத்த மாசம் 23-ஆம் தேதி வாங்கோ; கட்டாயம் தரேன்!’ எனச் சொல்லி அவர்களை வாழ்த்தினார்.
அதன்படி அவர்கள், அந்தக் குறிப்பிட்ட தேதியில் காஞ்சிபுரம் வந்தபோது, பிரதோஷம் மாமாவின் வீட்டுக்குச் செல்லாமல், முதலில் பெரியவாளை தரிசிக்க மடத்துக்குச் சென்றனர். பெரியவாளைத் தரிசித்து விடைபெறும் வேளையில், அவர்களைச் சற்றே காத்திருக்கச் சொல்லிவிட்டு, மடத்துச் சிப்பந்திகளிடம் ஏதோ சொன்னார் பெரியவா. பெரியவாளின் ஆசீர்வாதமாகவும் பிரசாதமாகவும் பழங்கள் மற்றும் சால்வைகளைப் பெறுவது பக்தர்களின் வழக்கம். ஆனால், மூங்கில் தட்டில் வெற்றிலை-பாக்கு, பழங்களுடன் அந்த முறை தங்கக் காசுகளையும் அளித்தார், காஞ்சி மகான். ஆம், பிரதோஷம் மாமா தருவதாகச் சொன்ன தேதி; அதே தங்கக் காசு! இருவரும் அதிர்ந்தனர்.
`தந்தது உன்தன்னை; கொண்டது என்தன்னை’ என மகாபெரியவா, தன்னுள் பக்தரை ஐக்கியமாக்கிக் கொண்டுவிட்டதுபோல அமைந்தது, அந்த நிகழ்வு!
- ச.ரேணுகாம்பாள், வேலூர்