Published:Updated:

ராமனே ஏன் செல்லவில்லை?

14 ஆண்டுகள் நிறைவுபெற இன்னும் சிறிது நேரமே உள்ளது. அதுவும் விருந்தில் கழிந்துவிடும் என்பதை உணர்ந்தான் ராமன்.

பிரீமியம் ஸ்டோரி

நேர்மைக்கும் அநியாயத்துக்கும் நடக்கும் போர் எனும் வகையில் இலங்கையில், ராம - ராவண யுத்தம் கடுமையாக நடந்தது. முடிவில் ராவணன் மாண்டான். ராமன் அயோத்திக்குத் திரும்பினான். வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் இறங்கி, அவரிடம் ஆசி வேண்டி வணங்கினான். பரத்வாஜர் விருப்பப்படி ராமன் உட்பட அனைவரும் விருந்து உண்ண அமர்ந்தனர்.

14 ஆண்டுகள் நிறைவுபெற இன்னும் சிறிது நேரமே உள்ளது. அதுவும் விருந்தில் கழிந்துவிடும் என்பதை உணர்ந்தான் ராமன். 14 ஆண்டுகள் கழிந்தும், ஸ்ரீராமன் அயோத்தி திரும்பாவிட்டால் தீயில் மூழ்குவேன் என்று பரதன் செய்த சபதம் நினைவில் எழுந்தது. உடனே ராமன், அனுமனிடம் தனது மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து, ‘‘ஆஞ்சநேயா, என் அருமைச் சகோதரன் பரதன் என்னைக் காணாமல் அக்னிப் பிரவேசம் செய்ய இருக்கிறான். நீ விரைந்து சென்று அவனைக் காப்பாற்றி, நான் அயோத்திக்கு வந்துகொண்டிருக்கும் சேதியைச் சொல்!’’ என்று ஆணையிட்டான்.

ராமனது ஆணைப்படி அனுமன், சில நொடிகளில் பரதன் முன் நின்றான். ராமன் வர வேண்டிய நேரம் தாண்டிவிட்டதால், தீயில் குதிக்க எழும்பிய பரதனை தடுத்தான் அனுமன். பரதனிடம், ராமனது மோதிரத்தை அவனிடம் அளித்து, ‘‘பரதாழ்வாரே... புஷ்பக விமானத்தில் தங்களைக் காண விரைந்து வருகிறார் ராமர். அவர், அடியேனைத் தங்களுக்குச் சேதி அறிவிக்க அனுப்பி வைத்தார்!’’ என்று கூறி நின்றான்.

பிறகு ராமன் வந்ததும் இருவரும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கி மகிழ்ந்தனர். இங்கு ஒரு சந்தேகம் நமக்கு எழும். ‘பரதன் செய்த சபதம் ஸ்ரீராமனுக்கு நினைவில் உள்ளது. இதனால் பரத்வாஜரிடம் நிலைமையை விளக்கி, விருந்தைப் பின்னொரு தடவை ஏற்பதாகக் கூறி, தானே நேரில் வந்து பரதனை மனங்குளிரச் செய்திருக்கலாமே?’ என்று. இதற்கான விடையை, திருமந்திரத்தில் கூறுகிறார் திருமூலர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பனை நந்தியை ஆரா வமுதினை, ஒப்பிலி வள்ளலை ஊழி முதல் வனை எப்பரிசாயினும் ஏத்து மின், ஏத்தினால், அப்பரிசு ஈசனருள் பெறலாமே...

ராமனே ஏன் செல்லவில்லை?

`ஊழிக் காலத்திலும் அழியாதிருந்து உலகத்தையும், அதிலுள்ள உயிர்ப் பிராணிகளையும் படைத்துக் காக்கும் ஈரேழு உலகுக்கும் தலைவனான கடவுளை எந்த உருவில் வழிபடுகிறோமோ, அதே உருவில் தோன்றி நமக்கருள்வான்' என்பது பாடலின் கருத்து. ராமனது திருவடிகளைத் தாங்கும் பேறுபெற்ற பாதுகைகளை, ராமனாகவே கருதி வழிபட்டான் பரதன். எனவே, அப்படிப்பட்ட பரதனின் உயிர்காக்க, இறைவன் திருவடி உருவில்தானே வர வேண்டும்? அனுமனுக்கு ‘சிறிய திருவடி’ என்றும் பெயர் உண்டு.

எனவே, ராமனின் திருவடிகளை அலங்கரித்த பாதுகைகளை பூஜித்து வந்த பரதனைக் காப்பாற்ற, ராமன் தன் பக்தனான சிறிய திருவடி என்னும் அனுமனை அனுப்பினான் என்பது திருமூலரது கருத்து.

- நாகை முகுந்தன் சொற்பொழிவில் கேட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு