வழக்கும் வயிற்று வலியும்!
பாவ் ஸாகேப் துமால் என்பவர் வழக்கறிஞர். தன் தொழிலைப் போலவே பாபாமீது மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் ஒரு வழக்கு விசாரணைக்காக ‘நிபாட்’ என்னும் ஊருக்குச் செல்ல நேர்ந்தது.
செல்லும் வழியில் ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்து அவரது அருளாசியைப் பெற்றார். பின்னர் நிபாட்டுக்குக் கிளம்பியபோது பாபா அவரைத் தடுத்து நிறுத்தினார். ஷீர்டியிலேயே மேலும் சில நாள்கள் தங்கிவிட்டுச் செல்லுமாறு பணித்தார். நிபாட் செல்லும் முன் வழக்கு முடிந்துவிடுமே என்று துமால் கவலைகொண்டாலும் பாபாவின் ஆணையை மீற முடியாமல் ஷீர்டியிலேயே சில தினங்கள் தங்கிவிட்டார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபாபா சொல்வது எதுவாக இருந்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதில் அவருக்குப் பெரும் நம்பிக்கை இருந்தது. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. நிபாட்டில் உள்ள நீதிபதிக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. அதனால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப் பட்டது. பாபாவின் சொற்படி தங்கிவிட்டுப் பின்பு துமால், நிபாட் சென்று சேர்ந்த பிறகுதான் வழக்கு விசாரணை தொடர ஆரம்பித்தது. வழக்கில் துமால் வெற்றிபெற்றார்.

பாபா கூறியபடி நடந்துகொண்டதால், இடர் ஏதுமின்றி எளிதில் வெற்றிபெற முடிந்தது என்பதை உணர்ந்த துமால், பாபாவை மனமுருகிப் பிரார்த்தனை செய்து நன்றி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காலணியால் கற்ற பாடம்!
ஹரி கானோபா என்பவர் மும்பையைச் சேர்ந்தவர். இயல்பாகவே எவரையும் துளியும் நம்பாதவர். ஒவ்வொன்றையும் தானே சென்று நேரில் பார்த்து உறுதிசெய்து கொண்டால்தான் அவருக்கு நம்பிக்கை பிறக்கும்.
அவரின் நண்பர்களும் உறவினர்களும் பாபாவைப் பற்றியும் அவரது லீலைகளைப் பற்றியும் கூறுவதைக் கேள்விப்பட்ட ஹரி, வழக்கம்போல் அதை நம்பவில்லை.
பாபாவின் அதிசய ஆற்றல்கள் பற்றிய செய்திகள் உண்மையா என்பதை அறிந்துகொள்ளும் ஆவலால் உந்தப்பட்ட ஹரி கானோபா, நண்பர்கள் சிலருடன் ஷீர்டி சென்றார்.
அழகான சரிகைத் தலைப்பாகை, காலில் புதிய விலையுயர்ந்த காலணி ஆகியவற்றை அணிந்து கொண்டு ஆடம்பரமாகச்சென்ற ஹரி, பாபாவின் அருகில் சென்று வணங்க விரும்பினார்.
ஆனால், பளபளப்பான புதிய காலணிகளை என்ன செய்வது என்ற கவலை அவரைப் பாடாகப்படுத்தியது. வேறு வழியின்றி, மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு ஒரு மூலையில் காலணிகளை வைத்துவிட்டு மசூதிக்குச் சென்று பாபாவை தரிசித்தார். பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி.
காலணிகளைக் காணவில்லை. மனம் உடைந்து போன ஹரி, நைவேத்தியம் படைக்கும்போதும் உண்ணும்போதும் காலணிகளைப் பறி கொடுத்த கவலையில் மூழ்கியிருந்தார்.
இந்த நிலையில், தனது பளபளப்பான புதிய காலணிகளைக் கோல் ஒன்றின் நுனியில் ஏந்திக் கொண்டு ஒரு சிறுவன் வருவதைக் கண்டார். அவன், தன்னை பாபா அனுப்பியதாகவும், தலைப்பாகை அணிந்தவரும் ஹரி என்பவர் யார் என்பதையும் விசாரித்து அவரிடம் இந்தக் காலணிகளைத் தருமாறு கூறினார் என்றும் தெரிவித்தான்.
அவனிடமிருந்து தனது காலணிகளைப் பெற்றுக் கொண்ட ஹரியின் உள்ளம் குற்ற உணர்வால் கனக்கத் தொடங்கியது. மகா புருஷரான பாபாவைத் தான் சோதிக்க நினைத்தது சரியல்ல என்பதை அவர் புரிந்துகொண்டார்.
பாபாவின் ஆற்றலை எண்ணி வியப்பில் ஆழ்ந்தார். அன்று முதல் பாபாவின் தூய பக்தராக மாறினார் ஹரி.