பிரீமியம் ஸ்டோரி

மிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. ‘கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் திருவிழா திருக்கார்த்திகை தீப விழா.

அதிகாலையில் கோயிலில் பரணி தீபம், மாலை வேளையில் மலை முகடு களிலும் கோயில் கோபுரங்களிலும் மகா தீபம், வீடுகளில் மாவிளக்கு தீபம், அகல் விளக்குகள் சுடர்வீச ஒவ்வோர் ஊரிலும், வீதிகளிலும் - இல்லங்களிலும் இன்ப ஒளி கூட்டும் அற்புதத் திருநாள்தான் திருக்கார்த்திகை திருநாள்.

சுடர்விடும் தீபங்களால் மட்டுமல்ல அனுஷ்டிக்கப்படும் வைபவங்களாலும் சிறப்புப் பெற்றது திருக்கார்த்திகை. அவற்றில் குறிப்பிடத் தக்கவை மாவளி சுற்றுதலும், சொக்கர்பனையுமாகும்.

`மாவலியோ மாவலி’

கார்த்திகைத் தீப நாளில் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். பனை மரத்தில் பூக்கள் மலரும் காம்பினை (பனம் பூளை என்பார்கள்) நன்கு காயவைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டி கட்டிக்கொள்வார்கள்.

பின்னர், பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவர். பிறகு அதை உரிபோல் நீண்ட கயிற்றில் பிணைப்பார் கள். பின்னர், துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர்.

பின்னர், கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப் பொறிகளைச் சிதறவிட்டு, கண்ணுக்கு விருந் தாய்க் காட்சியளிக்கும். அப்போது `மாவளியோ மாவளி’ என்று சத்தமிடுவர்.

‘சொக்கர் பனை எதற்காக?’

மா ஒளி (பெரிய ஒளி) என்பது மருவி மாவளி ஆனது என்றும், பாதாளத்தில் வசிக்கும் மாவலி, தீபத் திருநாளில் மண்ணுலகம் வந்து தீபாலங்காரத்தைக் கண்டு மகிழ்கிறார் என்பது ஐதிகம். ஆகவே, அவரின் பெயரால் இது `மாவலி’ ஆனது என்றும் கூறுவார்கள்.

இதேபோன்று கார்த்திகை விழாவில் சிறப்பு பெறும் மற்றொரு வைபவம் - `சொக்கப்பனை’ கொழுத்துதல்.

சொக்கர் பனை!

சொக்கர் பனை என்பதே சொக்கப்பனை ஆனது என்பார்கள் பெரியோர்கள். ஆதியில் அசுரச் சகோதரர்கள் மூவர் இருந்தார்கள். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்பது அவர்களின் பெயர்கள்.

பெரும் தவத் தின் மூலம் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய நகரும் கோட்டைகளை வரமாகப் பெற்ற அசுரர்கள் மூவரும் அனைத்து உயிர்களுக்கும் கொடுமை விளைவித்தனர்.

அவர்களையும் அவர்களின் முப்புரங்களை யும் எரித்து அழித்தார் சிவபெருமான். ஆகவே அவருக்குத் திரிபுர சம்ஹாரி, முப்புரம் எரித்தவர் ஆகிய சிறப்புப் பெயர்கள் உண்டு. தத்துவ நோக்கில் இதை `நம்முள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூவித தீய குணங்களை எரித்து அழித்து சிவபெருமான் நம்மை ஆட்கொள்கிறார்’ எனும் பொருள்பட சிறப்பிக்கிறது திருமந்திரப் பாடலொன்று.

இப்படிச் சிவபெருமான் முப்புரம் எரித்தது கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று. இதை நினைவூட்டும் விதமாக சிவாலயங்களில் சொக்கப்பனை கொழுத்தப்படுகிறது.

பெரிய புராணத்தில் அற்புதமான

பாடல் உண்டு.

காணாத அருவினுக்கும் உருவினுக்கும்

காரணாய

நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம்

சிவலிங்கம்

நாணாது மேடிய மால் நான்முகனும்

காண நடுச்சேணாலும்

தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தார்...

- என்கிறதுதான் அந்தப் பாடல்.

திருமாலும் பிரம்மனும் அடிமுடி தேடிக் கண்டடைய முடியாத வண்ணம், நெருப்புத் தழலாகக் காட்சியளித்த பரமேஸ்வரனை அக்னிமய லிங்கமாக வழிபடுவதே சொக்கப்பனையின் தாத்பர்யம் என்றும் ஒரு தகவல் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருக்கார்த்திகை தினத்தில் பனை மரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத் தின் முன் வெட்டவெளியில் நடுவார்கள்.

அதைச் சுற்றி பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக் கூம்பின் முன் ஸ்வாமி எழுந்தருள்வார்.

சில கோயில்களில் அம்பாளும் ஸ்வாமியும் எழுந்தருள்வார்கள். சில கோயில்களில் பஞ்சமூர்த்திகள் (ஈசன், அம்பாள், விநாயகர், முருகன், சண்டி கேஸ்வரர்) எழுந்தருள்வார்கள்.

அவர்களுக்குத் தீபாராதனை முடிந் ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும். கொழுந்துவிட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள்.

சகல ஆலயங்களிலும் சொக்கப்பனை வைபவம் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும். குறிப்பாக உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக் கோயிலில் வைக்கப்படும் சொக்கப்பனை தமிழகத் திலேயே பிரமாண்டமானது. சுமார் முப்பது அல்லது முப்பத்தைந்து அடி உயரத்துக்கு (முழுப் பனையையே சொக்கப்பனைக்குப் பயன் படுத்துவார்கள்) அமைக்கப்படும் சொக்கப்பனை வைபவம், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலின் தனிச் சிறப்பு.

சில ஊர்களில், சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயற்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

சொக்கர் பனை தரிசனம், நம் தீவினைகளை யெல்லாம் சுட்டுப் பொசுக்கும்; நாளும் நன்மைகள் கைகூட வரம் அருளும் வைபவம் ஆகும்!

‘சொக்கர் பனை எதற்காக?’

திருக்கார்த்திகையும் பனை மரமும்!

திருக்கார்த்திகை தினத்தில் சொக்கர் பனை, மாவளி சுற்றுதல், ஓலைக் கொழுக்கட்டை செய்வது ஆகியவற்றில் பனை மரம் சிறப்பிடம் பெறுகிறது. அந்த மரத்தை பூலோகத்துக் கற்பக விருட்சம் என்பார்கள்.

பனை மரங்கள் சிறப்புப் பெற்றுத் திகழும் சிவத் தலங்கள் பல உண்டு. திருப்பனந்தாள், வன்பார்த்தான் பனங்காட்டூர், பனையபுரம், திருவோத்தூர் ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். `கன்றாப்பூர்’ எனும் தலத்தில் கல்பனை தலமரமாக உள்ளது என்பார்கள்.

திருவோத்தூர் தொண்டைநாட்டு சிவத்தலம். இங்கே, சிவ பெருமானுக்குப் பனம் பழங் களைப் படைக்க விரும்பிய அடியார் ஒருவர் பனைமரங்களை நட்டுவைத்தார். ஆனால், அவையாவும் ஆண் மரங்களாக இருந்ததால் காய்க்காமல் போயின. பின்னர் அவ்வூருக்கு வந்த திருஞான சம்பந்தர், ‘பூர்த்தேர்ந் தாயென’ எனும் பதிகம் பாடி சிவபெருமானைத் துதிக்க, ஆண் பனைகள் பெண் பனைகளாகி பூத்துக் காய்த்துக் கனிந்து கனிகளை உதிர்த்தன என்கிறது தல வரலாறு.

`தாடகை’ என்பதும் பனைவகைகளில் ஒன்று. தென் மாவட்டங்களில் இவ்வகைப் பனை அதிகம் உண்டு. தெய்வாம்சம் மிகுந்த தாகக் கருதப்பட்ட இந்த மரத்தின் பெயரை பெண்பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கமும் உண்டாம். ராவணனின் சகோதரிக்கு, `தாடகை’ என்று பெயர். தாடகை மரங்கள் நிறைந்த தாடகை மலையில் பிறந்து வளர்ந்ததால், அவளுக்கு `தாடகை’ என்று பெயர் வந்ததாகத் தகவல் உண்டு.

திருப்பனந்தாள் எனும் ஊர் பிரசித்திபெற்ற சிவத் தலம். இங்கே பனங்காட்டின் மத்தியில் அமைந்த சிவாலயம், `தாடகேச்சுவரம்’ எனச் சிறப்பிக்கப்பட்டது.

இங்கே சிவனாரை வழிபட்ட தாடகை என்ற பெண்ணுக்காக, அவள் சூடிய மாலையை சிவனார் தலைகுனிந்து ஏற்றதாக திருக்கதை உண்டு. அவரே, பிற்காலத்தில் குங்கிலியக்கலய நாயனா ரின் பக்தியை ஏற்று தலைநிமிர்ந்தாராம்!

‘சொக்கர் பனை எதற்காக?’

பனை ஓலைக் கொழுக்கட்டை!

தீபம், சொக்கப்பனை மட்டுமல்ல... பனை ஓலைக் கொழுக்கட்டையும் திருக்கார்த்திகை ஸ்பெஷல்தான்.

பச்சரிசி மாவுடன், பாசிப்பயறு, வெல்லம் அல்லது கருப்பட்டி, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து, இந்தக் கலவையைப் பனை ஓலையில் பொதிந்து, அவித்துச் செய்யப்படும் பனை ஓலைக் கொழுக்கட்டைக்கு இணை யேதும் இல்லை எனலாம்.

பனை ஓலைக் கொழுக்கட்டை செய்வது எப்படி? வீடியோ வடிவில் காண...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு