Published:Updated:

ஶ்ரீகாமாட்சி தந்த வரப்பிரசாதம்!

ஶ்ரீகாமாட்சி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீகாமாட்சி

அம்மா! உங்கள் குழந்தையைப் பார்த்தால் கிருஷ்ணனைப் போலவே இருக்குது.

ஶ்ரீகாமாட்சி தந்த வரப்பிரசாதம்!

அம்மா! உங்கள் குழந்தையைப் பார்த்தால் கிருஷ்ணனைப் போலவே இருக்குது.

Published:Updated:
ஶ்ரீகாமாட்சி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீகாமாட்சி
காஞ்சிபுரத்தின் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குத் தன் நான்கு வயது பிள்ளையுடன் சென்றாள் மரகதம் என்ற பெண்மணி. அப்போது திருவிழாக் காலம்.

விற்பனைக்காக ஒருவன் சாக்கு நிறைய பாலகிருஷ்ண விக்கிரகங்களைக் கொண்டு வந்திருந்தான். அதைக் கண்ட பிள்ளை தனக்கு ஒரு பொம்மை வேண்டும் என்று தாயிடம் கெஞ்சினான்.

அன்னையோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. கடைக்காரன் குழந்தை யின் அழகைக் கண்டு சொக்கிப் போனான்.

‘‘அம்மா! உங்கள் குழந்தையைப் பார்த்தால் கிருஷ்ணனைப் போலவே இருக்குது. அது ஆசைப்பட்டுக் கேட்குது. ஒரு பொம்மையை எடுத்துக்கொள்ளட்டும்’’ என்று சொல்லி, அந்தப் பிள்ளையை ஒரு பொம்மையை எடுத்துக் கொள்ளும்படி கூறினான்.

மகிழ்ச்சி அடைந்த அந்தப் பிள்ளை, சாக்குப் பையில் தன் பிஞ்சுக் கையை விட்டு, ஓர் அழகிய கிருஷ்ண விக்கிரகத்தை எடுத்துக் கொண்டு துள்ளிக் குதித்து ஓடினான். மரகதம் பணத்தை எடுத்துக்கொடுத்தாள். ஆனால், சிலை விற்பவன் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். என்ன ஆச்சர்யம்! அவன் கொண்டு வந்திருந்த ஓராயிரம் வெண்கல விக்கிரகங்களும் அன்று மாலைக்குள் விற்பனை ஆகிவிட்டன!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுநாளும் தன் பிள்ளையுடன் கோயிலுக்கு வந்த மரகதத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமானான் அந்த வியாபாரி. பாய்ந்தோடி வந்து, அவள் கால்களில் விழுந்து கும்பிட்டான். மரகதத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. உடல் நடுங்க எழுந்து நின்ற வியாபாரியை நோக்கி, ‘‘என்னப்பா? என்ன நடந்தது?’’ என்று அன்புடன் விசாரித்தாள் மரகதம்.

ஶ்ரீகாமாட்சி
ஶ்ரீகாமாட்சி

அவன் ‘‘அம்மா! நீங்கள் பெற்ற பிள்ளை சாதாரணப் பிள்ளை இல்லே. அது அதிர்ஷ்டக் குழந்தை. அது கை வெச்ச வேளை, நான் கொண்டுவந்திருந்த விக்கிரகங்களெல்லாம் வித்துப் போயிடுச்சுங்க. எத்தனையோ திருவிழாவுக்குப் போயிருக்கேன். நூறு பொம்மைகூட விற்காது. நேத்து ஆயிரம் வித்துப் போயிடுச்சு. இது தங்கக்கை, தங்கக்கை’’ என்று கூறிக்கொண்டே பிள்ளையின் கைகளைப் பற்றி முத்த மழை பொழிந்தான்.

இந்தச் செய்தி ஊரெங்கும் பரவிற்று. எல்லோரும் குழந்தையை, ‘தங்கக்கை சேஷாத்ரி’ என்றே அழைத்தனர். ஆமாம், திருவண்ணாமலை ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் பால பருவத்தில் நிகழ்ந்த சம்பவம்தான் நாம் மேலே பார்த்தது. அவருடைய அந்தத் தங்கக் கைதான் பிற்காலத்தில் திருவண்ணாமலை வியாபாரிகளை வாழ வைத்தது. ‘நம் கடைக்குள் நுழைய மாட்டாரா, நம் பண்டங் களைத் தொட மாட்டாரா?’ என்று அவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். தங்கக்கை தொட்டதெல்லாம் துலங்கியது!

`தங்கக் கை சேஷாத்ரி சுவாமிகள்’ என்று ஊரும் உலகமும் போற்றிய அந்த அருள்பொக்கிஷம், காஞ்சி ஶ்ரீகாமாட்சியம்பாள் இவ்வுலகுக்கு அருளிய வரப்பிரசாதம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிந்த நீரோடை போன்ற நிம்மதியான வாழ்வில், பிள்ளை இல்லாத சோகம் காஞ்சி வரதராஜ ஜோசியர் - மரகதம் தம்பதியை பெரிதும் வாட்டியது. தங்கள் வாழ்வை மலரச் செய்யவும், தங்கள் வம்சத்தை விளங்கச் செய்யவும் ஒரு மகன் பிறக்கவில்லையே என்று வரதராஜ ஜோசியரும் மரகதமும் ஏக்கமுற்றனர்.

‘காஞ்சி அம்பிகையின் அருள்கிட்டாதா... பிள்ளைச் செல்வம் வாய்க்காதா’ என்று அனு தினமும் மறுகினர். மரகதத்தின் தந்தையான காமகோடி சாஸ்திரியார், பிரபலமான வேத பண்டிதர். மகளின் நிலை குறித்து மனவேதனைப்பட்டார். மகளும் மாப்பிள்ளையும் உள்ளுக்குள்ளேயே குமைந்து, உள்ளம் குமுறும் காட்சி அவர் நெஞ்சை அறுத்தது.

ஒருநாள், காமாட்சியின் சந்நிதிக்குச் சென்றார். அன்னையைத் தோத்திரம் செய்தார். ‘‘என் குழந்தைகளைத் தண்டிக்க வேண்டாம். உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். லோகநாயகியே! கருணைக் கடலே! குலக்கொழுந்து ஒன்று யாசிக்கிறேன். உன் திருக்கடாட்சம்பட்டால் பட்ட மரமும் துளிர்க்குமே, தாயே!’’ என்று கண்ணீர்விட்டுக் கதறினார் காமகோடி சாஸ்திரியார்.

குலதேவி கருணை காட்டினாள். அன்று இரவே, காமாட்சியன்னை சாஸ்திரியாரின் கனவில் தோன்றி, ‘தம்பதிக்கு வெண்ணெய் கொடு. ஞானக்குழந்தை பிறக்கும்’ என்று கூறி மறைந்தாள். அந்தக் கணமே விழித்துக் கொண்டு விட்டார் பெரியவர். விடியும் வரை காமாட்சி தேவியின் அருள் வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தார்.

காலையில் நீராடி விட்டு, அனுஷ்டானங் களை எல்லாம் முடித்துக் கொண்டு தம்பதியை அருகில் அழைத்து தாம் கண்ட கனவைப் பற்றிக் கூறினார். இருவரும் மெய்சிலிர்த்து சாஸ்திரியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, கரம் கூப்பி அம்பிகையைத் தொழுத வண்ணம் இருந்தனர்.

பின்னர் சாஸ்திரியார், நவநீதம் (வெண்ணெய்) எடுத்து, பராசக்திக்குப் படைத்துவிட்டு, மந்திரங்கள் ஜபித்து அதை இருவருக்கும் கொடுத்து உண்ணும்படி கூறினார். தேவியின் பிரசாதத்தைப் பரம பக்தியுடன், இருவரும் உட்கொண்டனர்.

அன்னையின் அருள் பிரசாதம் அருமருந் தன்றோ? விரைவில் மரகதம் கருவுற்றாள். ஞானக்குழந்தை வளர்பிறை போல் வயிற்றில் வளர்ந்து வந்தது. வளைகாப்பு, சீமந்த வைபவங்கள் இனிது நடந்தேறின. மரகதத்துக்கு மங்கையர், மலர் சூடி மகிழ்ந்தனர். புண்ணியனைச் சுமந்த புண்ணியவதியின் திருமேனி பூரண சந்திரன் போல் பொலிவுற, தந்தத்தில் கடைந்தெடுத்த பதுமை போல் தோற்றம் அளித்தாள்.

நாளும் கோளும் கூடின. விண்ணோர் ஆசி கூற, மண்ணோர் ஆசி பெற, கண்ணனுக்கு இணையான ஆண் மகவை ஈன்றெடுத்தாள் மரகதம். 1870-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 22-ம் நாள், சனிக்கிழமை, அஸ்த நட்சத்திரம் கூடிய மங்கள நாளில் காமாட்சி தேவி அளித்த வரப் பிரசாதமாக அந்தக் குழந்தை அவனியில் அவதரித்தது.

பாட்டனாரின் பெயராக அமைந்ததாலும், குலதெய்வமான வேங்கடாசலபதிக்கு உரிய சனி வாரத்தில் பிறந்ததாலும் அந்தத் தெய்வக் குழந்தைக்கு சேஷாத்ரி என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

பின்னாளில் அண்ணாமலையில் ஐக்கியப்பட்டுப்போன அந்தத் தெய்வக் குழந்தையால் அந்தத் தலம் மட்டுமல்ல இந்த அவனியே மகிழ்ந்தது, நாமறிந்ததுதானே!

மகானின் திருவடியைப் போற்றுவோம்!

(பரணீதரன் எழுதிய அருணாசல மகிமை தொடரிலிருந்து...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism