Published:Updated:

குருவே சரணம்!

ராகவேந்திர ஸ்வாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ராகவேந்திர ஸ்வாமி

மந்த்ராலய அற்புதங்கள்

``இனிமே யாரும் இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேச வேண்டாம். நாளைலேர்ந்து அஞ்சு நாள் சங்கல்ப சேவை செய்யுறதா முடிவு பண்ணியிருக்கேன்.

இத்தனை நாளும் என்னைக் கரையேத்துன என் குருராயர் இப்பவும் காப்பாத்துவார். அவங்க அவங்க வேலையைப் பாக்கலாம்.”

கணேஷ் இப்படிச் சொன்னதும் மற்றவர்கள் பூஜை அறைக்குப் போய், அங்கிருந்த ராகவேந்திர சுவாமி படத்துக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்கள். பின்னே, சங்கல்ப சேவையில் கணேஷைவிட அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அல்லவா அவர்கள்.

குருவே சரணம்!

கணேஷ் பூஜை அறைக்குள் நுழைந்து ராகவேந்திர சுவாமி படத்தைப் பார்த்தார்.

பிருந்தாவனம் பின்னணியில் இருக்க, கருணை மழை பொழியும் சந்திரன் போன்ற முகத்தோடு, கையில் ஜபமாலை தரித்து அபயம் காட்டும் திருக்கோலம். `பக்தர்களின் துன்பங்களை எல்லாம் போக்கும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக இருந்து காக்கிறேன்' என்னும் திருக்கோலம்.

கணேஷுக்குக் கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்துகொண்டால் தேவலாம்போல இருந்தது. அமர்ந்துகொண்டார். மனத்தில் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடின.

பால்யத்தில் அப்பாவோடு காவிரிக் கரைக்குப் போகிறார். அப்பா, சலசலத்து ஓடும் காவிரியில் இறங்கி அனுஷ்டானம் செய்கிறார். சிறிது நேரம் கழித்து கணேஷையும் அழைத்து ஆற்றில் இறக்கி நீராடவைத்தார்.

குருவே சரணம்!

“கணேஷா, காவிரில ஸ்நானம் பண்றது நாம பண்ணின புண்ணியம். அதும் இந்தப் படித்துறைல நிக்கிறது அவ்வளவு பாக்கியம்.

சுவாமி ராகவேந்திரர், வேங்கடநாதனா இருந்தப்ப தினமும் இந்த வடவாத்தங்கரைப் படித்துறைலதான் ஸ்நானம் பண்ணுவாராம். அப்பேற்பட்ட மகான் நின்ன இடம் இது. அதோ தெரியறதுபார், பிருந்தாவனம். அது மந்த்ராலய பிருந்தாவனத்துக்குச் சமமான மகிமை கொண்டது. முதல்ல, நம்ம மண்ணோட மகிமையைத் தெரிஞ்சிக்கோ”

கணேஷுக்கு அப்பா சொற்கள் இப்போது சொல்வதுபோலக் காதுகளில் ஒலித்தன.

“அப்பா, நான் வரலை நீ போய் நமஸ்காரம் பண்ணிட்டு வா”

“கணேஷா! அப்படிச் சொல்லக்கூடாது, ராகவேந்திர சுவாமி கலியுகத்துல வாழும் கடவுள். நாம பக்தியோட அழைச்சா தரிசனம் கொடுக்கிற தெய்வம்...”

குருவே சரணம்!

“அப்பா, நம்புற மாதிரி சொல். இவ்ளோ பக்தி பண்ணுறியே நீ சுவாமியைப் பார்த்திருக்கியா... நீ அழைச்சு அவர் வந்திருக்காரா...”

அப்பா சிரித்தார்.

“கண்ணா! சந்தேகம் உனக்குள்ள இருக்கிறப்போ, நான் பாத்திருக்கேன்னு சொன்னா நம்பவா போறே... தெய்வம் மனுஷ்ய ரூபேனான்னு பெரியவா சொல்லியிருக்கா. நாம பக்தியோடயும் நம்பிக்கையோடயும் கூப்பிட்டா, அவர் கட்டாயம் தரிசனம் தருவார். அது இல்லாம பக்கத்து வீட்டுக்காரனைக் கூப்பிடுறமாதிரி கடமைக்குக் கூப்பிட்டுப் பிரயோஜனம் இல்லை.”

கணேஷுக்குக் கண்களைத் திறந்து கொள்ளவே மனமில்லை. பேசாமல் அப்படியே பால்யத்துக்குள்ளேயே போய்விட மாட்டோமா என்றிருந்தது. இப்படி மனம் தத்தளிக்கிறபோதெல்லாம் கணேஷ் பாடத் தொடங்கி விடுவார். பாடல் அவரை நினைவுகளின் சுழல்களிலிருந்து மீட்டெடுக்கும்.

‘இதயம் உன்னை நினைந்து உருகும் ராகவேந்திரா...'

கணேஷ், இந்தப் பாடலைப் பாடும் போதெல்லாம் அதீத ஜாக்கிரதையோடும் உணர்வுப் பெருக்கோடும் பாடுவார். காரணம் இந்தப்பாடல் அவர் குருநாதர் மகாராஜபுரம் சந்தானம் பாடியது. கணேஷ் தன் வாழ்நாள் பாக்கியமாகக் கருதுவது, அவர் குருவாக வாய்த்ததையே. அவரும் ராகவேந்திர சுவாமியின் பரமபக்தர். இன்று கணேஷுக்கு இருக்கும் பக்தியில் ஒரு பாதி, அவரைக் கண்டு வந்ததுதான்.

குருவே சரணம்!

அவருக்குப் பின் கணேஷ் தனியாகக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். அப்போது எல்லாம் ராகவேந்திர சுவாமிகள் படத்தைப் பேருக்குத் தொட்டு வணங்குவாரே தவிர, ஆழ்ந்த பக்தியெல்லாம் இல்லை.

ஆனால், சுவாமிகள் அனுக்கிரகம் செய்யத் தீர்மானம் செய்துவிட்டால் யார் அதைத் தடுக்க முடியும்...

ஒருநாள் அதிகாலையில் கனவு. அப்பாவும் கணேஷும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பா முடிவாக, “நீ நம்பிக்கையோடும் பக்தியோடும் கூப்பிட்டா அந்த மகான் பிரத்யட்சமா காட்சி கொடுப்பார்” என்று அப்பா சொல் லவும் உறக்கம் கலையவும் சரியாக இருந்தது.

கணேஷுக்கு அதற்கு மேல் உறக்கம் வரவில்லை. குளித்துமுடித்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு பூஜை அறைக்குச் சென்றார். ராகவேந்திர சுவாமிகளின் படத்தையே பார்த்தார். மனதார வேண்டிக்கொண்டார். ராகவேந்திர ஸ்தோத்திர மாலையைப் பாராயணம் செய்தார்.

திருப்பதியில் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. ‘சுவாமி, இன்னைக்குத் திருப்பதில கச்சேரி. நீங்க கட்டாயம் தரிசனம் தந்து என்னை ரட்சிக் கணும்’ என்று வேண்டிக்கொண்டு ஊருக்குப் புறப்படும் வேலைகளைப் பார்த்தார்.

மசால் வடையும், பேச்சுக் கச்சேரியுமாகக் களைகட்டியிருந்த ரயிலில் கணேஷ் மட்டும் மனத்தோடு பேசிக்கொண்டேயிருந்தார்.

‘அப்பா சொன்னதுபோல நடக்குமா... சுவாமி காட்சி தருவாரா...’

‘இதென்ன அசட்டுத்தனம்... தெய்வமாவது நேரில் வருவதாவது... கடைவீதியில் புரண்டு அழும் பிள்ளையின் பிடிவாதமல்லவா இது. அதுவும் இன்றே என்று என்ன அடம்..’.

மனத்துள் இதுநாள் வரை கற்றிருந்த அறிவியல் நியாயம் பேசியது. கணேஷ் மனத்தின் வாதங்களை அதட்டினார்.

`இன்றுதான். இன்றேதான் சுவாமியின் தரிசனம் நிகழ வேண்டும்.'

பயணத்தின் மீத நேரத்தையும் கணேஷ் நாம ஜபத்திலேயே கழித்தார்.

திருப்பதியில் கச்சேரி நடக்கும் இடம் போயாயிற்று. அது ஒரு மடம். சின்ன இடம். கூட்டத்தில் யார் வந்தாலும் போனாலும் எல்லோருக்கும் தெரியும். சின்ன மேடை போல அமைத்திருந்தார்கள்.

`இங்குதான் என் தெய்வம் எனக்குக் காட்சி கொடுக்கப் போகிறதா... எப்படி... எந்த ரூபத்தில்...'

கணேஷ் சிந்தனையில் லயித்திருக்க, நிகழ்ச்சியைத் தொடங்கச் சொன்னார்கள்.கணேஷ் பாட ஆரம்பித்தார். ஆனால் மனமோ, ‘இன்றுதான், இன்றேதான்’ என்று இறைஞ்சிக் கொண்டேயிருந்தது. பாதிக்குமேல் கச்சேரி முடிந்துவிட்டது. சில துக்கடாக்களைப் பாடினால் முடித்துவிடலாம். மனம் பதறியது.

‘இன்று இல்லையா... இன்றே இல்லையா...’

‘மனக்கண்ணில் சுவாமியின் திருவுருவத்தை நினைவூட்ட முயன்றார். ஆனால் கூடிக் கலையும் மேகம்போல சுவாமியின் முகம்கூடத் தோன்றாமல் மனம் வெறுமையாய் இருந்தது.

தன்னையும் அறியாமல் கண்ணில் நீர் கோர்த்தது. “சுவாமி, என் அப்பா பொய் சொல்லி விட்டாரா... அல்லது எனக்கு தரிசனம் பெறும் தகுதியில்லையா...” மனத்துக்குள் கதறினார் கணேஷ்.

சட்டென்று சுயநினைவு. எதிரே பாடலை ரசித்துக்கொண்டிருக்கும் சிறு கூட்டம். உதிரும் கண்ணீரை யாரும் அறியாமல் துடைக்க முனைந்தபோது, ஒருவர் மடத்துக்குள் வந்தார். நல்ல உயரம். மின்னும் தேகம். நெற்றியிலும் கரங்களிலும் திருமண். வெண்பஞ்சு போன்ற தாடி. அது புரளும் மார்பில் துளசி மாலை. மண்டபத்துக்குள் நுழைந்து கடைசி வரிசைக்குப் பின் நின்றார். கணேஷுக்கு உடல் சிலிர்த்தது.

குருவே சரணம்!

`ஏன் உடல் சிலிர்க்கிறது... ஏன் உயிரிலிருந்து ஓர் இன்ப ஊற்று பிறக்கிறது... கண்களிலிருந்து கண்ணீர் ஏன் கரை உடைத்த வெள்ளம் போல் பாய்கிறது. மனம், ‘இதோ... இதோ’ என்று கூத்தாடுகிறதே ஏன்!'

சிந்தனையோடு கணேஷ் சரணம் பாடி முடித்த இடைவெளி. பக்க வாத்தியங்கள் தனியாவர்த் தனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். கடைசி வரிசையின் நாற்காலி ஒன்றைப் பற்றிக் கொண்டு நிற்கிறார் அவர். அவர் வந்து நிற்பதை யாரும் அறிந்தார்போல இல்லை.

‘திருப்பதியில் சாதுக்களுக்கா பஞ்சம்... அவர்களில் ஒருவராக இருக்கலாம்...’ என்றது மனத்தின் மற்றுமொருகுரல்

‘இல்லை... இல்லை. இவர் அவர்தான்!’

தனியாவர்த்தனத்தில் கடம் வாசித்து முடித்து மிருதங்கத்துக்கு வழிவிட்ட நண்பரை அழைத்து, “அந்த சுவாமிகளைப் பாருங்களேன்... என்ன தேஜஸ்ல்ல” என்றார் கணேஷ்.

நண்பரோ “சுவாமிகளா... எங்கே...” என்றார்.

“அதான் சார், கடைசி வரிசை நாற்காலியைப் பிடிச்சிண்டு நிற்கிறாரே”

“அண்ணா, உட்காந்திருக்கிறவரா, நிற்கிறவரா... யாருமே நிற்கலையே...”

நண்பருக்குப் புலப்படவில்லை; கணேஷுக் குக் காட்சி தந்தார். `என் தெய்வமே, இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும்!' என்று எண்ணியவாறு, கணேஷ் வேகமாக எழுந்திருக்க முனைந்தபோது, கடைசி வரிசையில் நின்றிருந்த அவர் கரங்களை உயர்த்தி, ‘உட்கார் உட்கார்’ என்பது போல சைகை செய்தார்.

கணேஷால் எழுந்துகொள்ள முடியவில்லை. அடுத்த நொடி திரும்பி அவர் வெளியேறினார்.

இனி பொறுக்க முடியாது. கணேஷ் இந்த முறை துள்ளி எழுந்துகொண்டார். மேடையிலிருந்து வாசலுக்கு ஓடினார். சில நொடிகள்தான். ஆனால் அவரைக் காணவில்லை. அந்த இடத்திலேயே மண்டியிட்டு விழுந்து கணேஷ் அழுதார். ‘வருவாரா என்று கேட்டாயே... வந்து விட்டார். இனி என்ன செய்யப் போகிறாய்’ என்று மனம் கேலி செய்தது.

‘இது என்ன கேள்வி, இனி எல்லாம் அவரே...’

கணேஷ் சுவாமிகளின் சரணங்களில் தன்னை பரிபூரணமாய் சமர்ப்பித்துக்கொள்வதாய் சங்கல்பம் செய்துகொண்டார்!

பிரச்னைகள் வாழ்க்கையில் எப்போதும் மனிதர்களைத் துரத்திக்கொண்டேயிருக் கின்றன. அப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டபோது நண்பர் ஒருவரிடம் கேட்டார் கணேஷ்.

“என்ன பண்ணினா, சுவாமி அனுக்கிரகம் பண்ணியே தீருவார்... ஏதாவது விரதம், வழிபாடு இருக்கா” என்று இவர் கேட்க, நண்பருக்கு என்ன தோன்றியதோ, “மந்திராலயத்திலே 108 பிரதட்சிணமும் ஒவ்வொரு பிரதட்சிணத்துக்கு 8 நமஸ்காரங்களும் செய்து வேண்டிக்கோ. இதுக்கு சங்கல்ப சேவைன்னு பேரு” என்றார்.

மந்திராலயத்தில் 108 பிரதட்சிணம் என்றால் விளையாட்டா... அந்தக் காலத்தில் இருந்த உடல் வலிமையின் நம்பிக்கையில் கணேஷ் செய்யத் தொடங்கிவிட்டார். மூன்றே பிரதட்சிணம்... நமஸ்காரம் செய்து எழுந்துகொள்ளும்போதே முதுகுத் தண்டு கெஞ்சியது. சுவாமி சந்நிதியைப் பார்த்தார்...

“தேவையில்லாமல் சங்கல்பம் செய்து கொண்டேனா... ஒருவேளை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனால் குற்றமாகி விடுமா... குருராயா... நீயே வழிகாட்டு” என்று மனத்துக்குள் சொல்லி வேண்டிக்கொண்டு அடுத்த பிரதட்சிணம் செய்துவந்தார்.

சுவாமியின் சந்நிதானத்தில் அன்று முரளீதரன் என்கிறவர்தான் அர்ச்சகர். அவருக்குக் கணேஷைத் தெரியும்.

நான்காவது பிரதட்சிணம் முடிந்தபோது, “என்ன கணேஷ், என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று கேட்டார். ஆறுதலான அவரின் சொற்களுக்கு முன்பாக மறைக்க என்ன இருக்கிறது.

“தங்கைக்குக் கல்யாணம் தட்டித் தட்டிப் போறது... அவ உடம்பும் சரியில்லை. அதான் சங்கல்ப சேவை செய்யலாம்னு...'' - கணேஷ், மனத்தின் பாரத்தை இறக்கி வைப்பதைப் போலச் சொன்னார்.

“ஒரு நிமிஷம் இரு வர்றேன்” என்று சந்நிதானத்துக்குள் சென்ற முரளீதரன், கைகளில் சுவாமிகளின் பாதுகைகளோடு வெளியே வந்தார். ஒரு நாற்காலியைப் போட்டு அதில் பாதுகைகளை வைத்து, “இதோ சுவாமி. எவ்ளோ பிரதட்சிணம் வேணுமோ, நமஸ்காரம் வேணுமோ பண்ணிக்கோ” என்று அவர் சொன்னபோது கணேஷ் அடைந்த மகிழ்வுக்கு அளவேயில்லை.

‘சொல்லி ஒரு சில நிமிடங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக என் வேண்டுதலுக்கு பதில் சொன்னாயே இறைவா’ என்று சிலிர்த்தபடியே 108 பிரதட்சிணங்களையும் நமஸ்காரங்களையும் முடித்தார். சேவை முடிந்ததும் முரளீதரனே சொன்னார்.

“இதோ பாரு, நம்ம சரீரத்தால என்ன முடியுமோ அதைச் செய்தா போதும். பக்தியா வேண்டிக்கணும் அவ்ளோதான். இங்க வரணும்கூட இல்லை, வீட்டுலையேகூட நீ இதைச் செய்யலாம். சுவாமி படத்தை ஹால்ல வச்சி, உன்னால எவ்ளோ முடியறதோ அவ்ளோ பிரதட்சிணம் பண்ணி நமஸ்காரம் பண்ணு போதும். அந்த ராகவேந்திர சுவாமி எப்போதும் உன் கூட இருப்பார்.”

மந்திராலயத்திலிருந்து திரும்பிய ஒரே வாரத்தில் தங்கையின் திருமணம் நிச்சயமானது. அவள் உடல் நலனும் தேறியது.

கணேஷ் அன்று பிடித்துக்கொண்டதுதான் இந்தச் சங்கல்ப சேவை. சவாலான எந்தக் காரியத்தையும் தொடங்கும் முன்பாக 3,5,7 நாள்கள் என்கிற கணக்கில் சங்கல்ப சேவை செய்து வேண்டிக்கொண்டு தொடங்குவார். அப்படி அவர் தொடங்குவதெல்லாம் வெற்றிதான்.

எந்தத் தங்கைக்குத் திருமணம் நடக்க சங்கல்ப சேவை செய்தாரோ அந்தத் தங்கைக்காகவே இப்போதும் சங்கல்ப சேவை வேண்டுதல்.

அவள் இப்போது நிறைமாதமாக இருக்கிறாள். அவள் உடல்நலன் பிரசவத்தைத் தாங்காது என்று மருத்துவர்கள் கூறிவிட, வீட்டில் எல்லோருக்கும் வருத்தம்.

அப்போதுதான் கணேஷ், “இனிமே யாரும் இந்தப் பிரச்னையைப் பத்திப் பேச வேண்டாம். நாளைலேர்ந்து அஞ்சு நாள் சங்கல்ப சேவை செய்யுறதா முடிவு பண்ணியிருக்கேன்” என்று சொல்லி அனைவரையும் சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு வந்து பூஜை அறையில் அமர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டார்.

மறுநாள் காலை சங்கல்ப சேவை தொடங் கியது. ஐந்து நாள்கள் மின்னல்போல கழிந்தன. சேவை திவ்யமாக முடிந்தது. வார இறுதியில் தங்கைக்கு வலி எடுத்தது. மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். மருத்துவர்களின் ஆருடங்கள் பொய்யாயின. சுகப்பிரசவத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது.

கணேஷ் நின்ற இடத்திலேயே கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி, ‘குருவே சரணம்’ என்று தொழுதுகொண்டார்!

‘இதயம் உன்னை நினைந்து உருகும் ராகவேந்திரா...' அற்புதப் பாடலை வீடியோ வடிவில் காண...