தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ஶ்ரீராமாநுஜரின் வடிவழகு!

ஶ்ரீராமாநுஜர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீராமாநுஜர்

சமூக சீர்திருத்தங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிகழ்த்திக் காட்டியவர்.

பரம கருணையின் உறைவிடமான ஶ்ரீராமாநுஜர், இறைவனின் அருளைப் பெறுவதற்கும் அவருடைய திருவடிகளை அடைவதற்கும் எல்லோருக்கும் உரிமை உண்டு என்று உறுதிபடக் கூறியவர். மனிதர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த பேதங்களை அகற்றிட அவதரித்தவர் பகவத் ராமாநுஜர்.

ஶ்ரீராமாநுஜர் கருணை வடிவினராக இருந்தபடியால், அவருடைய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சமதிருஷ்டி - சமத்துவப் பார்வை ஏற்பட்டது. ஶ்ரீராமாநுஜரின் பார்வையில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாருமே இல்லை. மற்றவர்களால் தாழ்த்தப்பட்டவர்களாக நினைக்கப்பட்ட மக்களை ஶ்ரீராமாநுஜர், ‘திருக்குலத்தார்’ - மகாலட்சுமியின் குழந்தைகள் என்று அழைக்கச் செய்தார்.

சமூக சீர்திருத்தங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிகழ்த்திக் காட்டியவர். பெருமாளிடம் அளவற்ற பக்தி கொண்டி ருந்த பீபி நாச்சியாருக்குத் திருவரங்கம் கோயிலில் சந்நிதி அமைத்து, அனைவரும் வழிபடச் செய்தார். மேலும், நம்பெருமாளுக்கு லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்தியம் செய்யவுமான நியமத்தையும் ஏற்படுத்தினார். இறைவன் அல்லது இறைவியின் வடிவழகை வர்ணித்துப் பாடுவது உண்டு. அதேபோல் ஶ்ரீராமாநுஜரின் வடிவழகை வர்ணிக்கும் ஒரு பாடலும் உள்ளது. `வடிவழகு கட்டியம்' என்று சொல்லப்படும் அந்தப் பாடல், ஶ்ரீராமாநுஜரின் திருவாதிரை திருமஞ்சனத்தின்போது சேவிக்கப்படுவது மரபு.

ஶ்ரீராமாநுஜர்
ஶ்ரீராமாநுஜர்

ஶ்ரீராமாநுஜர் வடிவழகு கட்டியத்தை அருளியவர் எம்பார் ஜீயர். ஆவணி மாதம் ஶ்ரீஜயந்தி திருநாளில் தோன்றிய எம்பார், ஶ்ரீபெரும்புதூர் கோயிலில் பல திருப்பணிகள் செய்து வந்தவர்.இவர் அருளிய பகவத் ராமாநுஜரின் வடிவழகு கட்டியம்...

பத்மமெனத்திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்

முப்புரிநூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல்தன்னழகும்

முன்னவர்தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல்நிலாவழகும்

கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலமுகத்தழகும்

காரிசுதன் கழல்சூடிய முடியும் கனநற்சிகை அழகும்

எப்பொழுதும் யதிராசன்வடிவழகு என் இதயத்துளதால்

இல்லையெனக்கு எதிர் இல்லையெனக்கு எதிர்

இல்லையெனக்கு எதிரே!

திருவாதிரை நட்சத்திரத்தன்று இந்தப் பாடலைப் பாடி, ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்த பகவத் ராமாநுஜரை வழிபட, சகலவிதமான சர்ப்ப தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம். வரும் சித்திரை - 15, செவ்வாய் (28.4.2020) அன்று ஶ்ரீராமாநுஜர் ஜயந்தி. இந்தத் திருநாளில் உடையவரின் மகிமையைத் தியானித்து அருள்பெறுவோம்.