தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ஆரூர் மண்ணில் கால் வைத்தால்...

சிவன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவன்

ஆரூர் கோயில் புகுந்த சுந்தரர், சிவச்சிந்தையில் லயித்தபடியே... திருக்கோயிலின் தேவாசிரியன் மண்டபத் திலிருந்த அடியார்களைக் கவனிக்காமலும் அவர்களை வணங்காமலும் சென்றுவிட்டார்.

பரந்தாமன் தேடியும் காணக் கிடைக்காத அந்தத் திருவடிகள் திருவாரூரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. ஆம், பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த நா ஏறு செல்வியும், நாரணனும், நான் மறையும், மா ஏறு சோதியும், வானவரும் தாம் அறியா சேவடிகள் சிவந்த வண்ணம் ஓடிக்கொண்டிருந்தன.

அண்ட சராசரங்களையும் தன்னுள் அடக் கிக்கொண்டிருந்த அந்தத் திருமேனி, வியர்வை வழிய ஓடிக்கொண்டிருந்தது. ``ஆஹா... என் அன்பிற்குரிய விறன்மிண்டனிடம் சிக்கிக் கொண்டால், வலது காது அறுபட்டுப் போகுமே'' என்று தவித்த சிவனார், ஆரூரை நோக்கி விரைந்து ஓடினார்.

ஏன் இந்த ஓட்டம்? அன்பிற்குரிய அடியவரிடம் சிக்கிக்கொள்ளாமல் பரமன் ஓடுகிறார் என்றால், அதற்கு என்ன காரணம்.

ஒருமுறை, ஆரூர் கோயில் புகுந்த சுந்தரர், சிவச்சிந்தையில் லயித்தபடியே... திருக்கோயிலின் தேவாசிரியன் மண்டபத் திலிருந்த அடியார்களைக் கவனிக்காமலும் அவர்களை வணங்காமலும் சென்றுவிட்டார்.

சிவன்
சிவன்

அடியார்களை மிகப்போற்றும் விறன் மிண்டர் கொதித்துப்போனார். அடியார்களை மதியாத ஆரூரன் (சுந்தரரை) மீதும், அவரின் நாயகனாம் ஆரூர் ஈசன் மீதும் கடும்கோபம் கொண்டார். இருவரையும் புறக்கணிப்பது என்று தீர்மானித்தார். `இனி திருவாரூர் எல்லையைக்கூட மிதிக்க மாட்டேன்; ஆரூர் பெருமானை வணங்கமாட்டேன்' என்று சங்கல்பித்துக் கொண்டார். சுந்தரர் வந்து தன் நிலை குறித்து விளக்கியும், எவ்வளவோ வேண்டிக்கொண்டும் விறன்மிண்டர் தன் நிலையிலிருந்த்து இறங்கவில்லை.

இறை சும்மா இருக்குமா?

அன்பால் தம்மை மகிழ்விக்கும் சுந்தரரையும் விறன்மிண்டரையும் இணைத்து வைக்க விரும்பியது. அதற்கும் மேலாக கண்ணை மறைக்கும் கோபத்தால் அடியார்களை இம்சிக்கும் விறன்மிண்டரின் செயலைத் தடுக்கவும் அவரைத் திருவாரூர் அழைத்து வரவும் திருவுளம் கொண்டது. விளைவு அருளாடல் தொடங்கியது.

`திருவாரூர் எல்லையைக்கூட மிதிப்பதில்லை' என்று சபதம் செய்திருந்த விறன்மிண்டர், நகரின் எல்லைக்கு அப்பால் குடில் அமைத்து தங்கியிருந்தார். சோழ நாட்டின் எல்லா ஆலயங் களுக்கும் சென்று வணங்கிவந்த இவர் ஆரூர் பெருமானை மட்டும் புறக்கணித்து வந்தார்.

மேலும், தமது இல்லத்துக்கு இளைப்பாற வரும் அடியார்களிடம், விருந்துக்குப் பிறகு `எந்த ஊருக்குச் செல்கிறீர்கள்' என்று கேள்வி கேட்பார். அவர்கள் `திருவாரூர்' என்று சொன்னால், உடனே தன் கையில் உள்ள பொன் துரட்டால் சொன்னவரின் காதை இழுத்து அறுத்துவிடுவார்.இந்தக் கொடிய செயலைக் கண்டு செய்வதறியாது வருந்தி நின்றார் விறன் மிண்டரின் மனைவியார். இந்த நிலையில் விறன்மிண்டரை ஆட் கொள்ள ஈசன், சிவனடியார் போல் வேடம் பூண்டு நாயனாரின் இல்லத்துக்கு வந்தார்.

`விண்ணோர் முழு முதல்; பாதாளத்தார் வித்து, மண்ணோர் மருந்து; அயன் மால் உடைய வைப்பு; அடியோம் கண் ஆர வந்து நின்றான்; கருணைக் கழல் பாடி, தென்னா, தென்னா...' என்று தெவிட்டதாத் தேனை கண்ணால் பருகிக் கதறியபடி வரவேற்றாள் விறன்மிண்டர் மனையாள். நடப்பதை எல்லாம் சொன்னாள்.

``கண்ணைப் பறிக்கும் வண்ணம் மின்னும் அடியவரே நீவிரே ஈசனாக இருக்கக்கூடும் என்று எண்ணி வணங்குகிறேன் சுவாமி. தாங்கள் தயவுசெய்து ஊரைப் பற்றிக் கேட்டால் திருவாரூர் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டாள்.

சிவன்
சிவன்

சத்தியத்தின் வடிவான எம்பெருமான் அஞ்சியவாறு நடித்து ``தாயே அடியவருக்குப் பொய் பேசத் தெரியாது. நானும் அப்படியே. அதனால் நீவிர் அவர் என்னை தண்டிக்க எடுக்கும் துரட்டை வலப்புறத்திலிருந்து இடப்புறம் வைத்துவிடுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்றார்.

அம்மையாரும் அவ்வாறே செய்தார். வழக்கம்போல விறன்மிண்டர் வந்தார். அமுதிட்டார். விருந்துக்குப் பிறகு நலம் விசாரித்தார். `எங்கே செல்கிறீர்கள்?' என்ற அவரின் கேள்விக்கு, சிவனடியார் நகைத்தபடி `திருவாரூர்' என்று உரைத்ததும்... ``என்ன! திருவாரூரா? அடியார்களை அவமதிக்கும் அந்த அற்பன் பிறந்த ஊரில் பிறந்தவரா நீர்? உம்மை என்ன செய்கிறேன் பார்!'' என்று கூறி சட்டென்று வலப்பக்கம் திரும்பி துரட்டை எடுக்க முயன்றார் விறன்மிண்டர். அங்கு அது இல்லை. சற்று நேரம் தேடிவிட்டு அது இடப்பக்கம் இருக்கவும் எடுக்க முயன்றார். இதற்குள் சிவனடியார் வெளியே ஓடிவிட்டார்.

விடுவாரா விறன்மிண்டர் அடியாரைத் துரத்திக் கொண்டு ஓடினார். இதுதான் இந்த ஓட்டத்துக்கான காரணம்!

முத்தனை, முதல் சோதியை, முக்கண் அப்பனை பிடித்துவிடும் வேகத்தில் விறன் மிண்டர் கண்மண் தெரியாமல் துரத்தினார்.

விளைவு, அவரையும் அறியாமல் திருவாரூரின் எல்லையை அடைந்து ஊருக்குள் வந்து சேர்ந்தார். நினைத்ததை நடத்திக் காட்டிய ஈசன் சிரித்துக்கொண்டே, ``நீரே ஆரூர் எல்லையைத் தாண்டி மிதித்து விட்டீரே, உமக்கு என்ன தண்டனை?'' என்று கேட்க, விறன்மிண்டர் பதறினார்.

ஈசன் மீதே ஆணையிட்டுச் சொன்ன சொல்லை மீறியதால் அங்கிருந்த கொடுவாளை எடுத்துத் தமது காலை வெட்டிக்கொண்டார். மறுகணம், ரிஷப வாகனத்தில் கமலாம்பாள் சமேதராய்க் காட்சியளித்தார் திருவாரூர் தியாகேசர். இறையின் அருள்திறனை எண்ணி கண்ணீர் உகுத்தார் விறன்மிண்டர்.

அவரை ஆசீர்வதித்த ஈசன், ``உம்மையும் சுந்தரரையும் இணைத்து வைக்கவே இந்த லீலை. உம் தியாகம் மகத்தானது. இனி சிவலோகத்தில் எம்மோடு இருந்து சிவ கணங்களுக்குத் தலைவராகத் திகழும் திருவருளைப் பெறுவீர்'' என்று அருளினார்.

பெறுவதற்குரிய அந்த பேற்றினை தனது பிடிவாத அன்பால் பெற்ற விறன்மிண்டர் இன்றும் ஈசனின் அருகிருந்து பூஜைகளைக் கவனித்து வருகிறார் என்று நம்பப்படுகிறது. செங்கனூரில் பிறந்து திருவாரூரில் சித்திரைத் திருவாதிரை நாளில் சிவலோகம் அடைந்த விறன்மிண்டரை வணங்கிப் போற்றுவோம்.

அடியாருக்கு அடியேன் போற்றி!

விறன்மிண்ட நாயனார் குருபூஜை 28.4.2020 (சித்திரை 15-ம் நாள்)

புதனும் நீராடலாம் தெரியுமா?

அஸ்வத்த விவாகம்!

ரச மரத்துக்குக் கல்யாணம் உண்டு. நாமெல்லாம் அரச மரத்தை தெய்வமாகக் கொண்டாடுகிறோம். அதனால், அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபடுவதற்கு முன்பு அதற்குக் கல்யாணம் செய்து வைக்கிறோம். இதற்கு அஸ்வத்த விவாகம் என்று பெயர்.

அரச மரம்- ஆண், வேப்ப மரம்- பெண். வேப்ப மரம் பெண்டாட்டி என்பது இல்லை. அரச மரத்துக்குள்ளேயே ஆண்- பெண் என்கிற இரண்டு அம்சங்களும் உண்டு. அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் என்பது சம்பிரதாயத்தில் வந்தது.

அரச மரமும் நல்லது, வேம்பும் நல்லது என்பதால் இரண்டையும் அருகருகே வைக்கிறார்கள். சாஸ்திரத்திலும் ஜோதிடத் திலும் கல்யாணம் தாமதமானால், இந்த அஸ்வத்த விவாகம் ஒரு பரிகாரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

சனி நீராடல்!

ந்தச் சொல்வழக்கு பாதிதான். சனி, புதன் நீராடு என்பதுதான் முழுசு.

முன்பெல்லாம் சனி, புதன் நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். இப்போது நாம் ஷாம்புக்கு வந்தாச்சு. புதிதாக வந்த வைத்தியங்களும் எண்ணெய் தேய்க்கத் தேவை இல்லை என்று சொல்லி விட்டன. அது நமக்கு இஷ்டமாக இருப்பதால், அப்படியே செய்கிறோம். நிறைய வியாதிகளும் வந்து அவஸ்தைப்படுகிறோம். தேக ஆரோக்கியத்துக்காக நீங்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க விரும்பினால், சனியோடு புதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

- சேஷு மாமா