
வழக்கறிஞர் பாரதி நாராயணன்
வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் வேண்டி விரும்பும் இடம் கயிலாயம்.

ஈசன் உறையும் இடமாகப் போற்றப்படும் இந்த புண்ணிய தலத்துக்கு இந்த எளியவள், இளம் வயதிலேயே போய்வந்தது என்பது ஈசனின் கருணைதான் எனலாம். அரூபமாக முப்பத்து முக்கோடி தேவர்களும் தொழும் மலை, நாற்பத்து எட்டாயிரம் ரிஷிகளும் தவமிருக்கும் மலை, எண்ணற்ற சிவகணங்கள் எந்நேரமும் வலம்வந்து கொண்டிருக்கும் உலகின் உயர்ந்த மலை கயிலை. இங்கு காணக்கிடைக்காத பல அரிய தரிசனங்களை நான் கண்டது என் பிறவிப் பயன் எனலாம். நேபாளம், திபெத், மானசரோவர், கயிலை எனப் பல இடங்களில் எழுத்தால் வடிக்க முடியாத பல தெய்விக அனுபவங்களைப் பெற்றாலும், கயிலையில் நான் கண்ட திவ்ய தரிசனம் என்பது என் ஜென்மத்தை சாபல்யமடையச் செய்யும் ஒரு வாழ்நாள் புண்ணிய காட்சிகள் என்றே சொல்வேன். நான் அடைந்த இந்த அரிய பெரிய தரிசனத்தை எல்லோருமே பெற வேண்டுமென எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொண்டு சில தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி!
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
என்று நாவுக்கரச பெருமான் போற்றிய கயிலையில் வடக்கு முக தரிசனம் இதோ.

கயிலையில் கோயில் கிடையாது. மலைதான் ஈசனாக வணங்கப்படுகிறது. இம்மலைக்கு நான்கு திசைகளை நோக்கிய வண்ணம் நான்கு முகங்கள் மற்றும் வானை நோக்கிய ஐந்தாவது முகமும் உள்ளதால் சதாசிவ வடிவமாக கயிலாயம் வணங்கப்படுகிறது. வடக்கு முகத்தில் காலை வெயில் படும்போது பொன் வண்ணமாய் ஜொலிக்கும். இதுவே பொன்னார்மேனி தரிசனம் என்பர். வடக்கு முகம் - மிக அருகில்...


பூலோகத்தில் கயிலாயமாக விளங்கும் இந்த பர்வதம், மலைமகளான பார்வதி பிறந்த இடமாகவும், ஈசன் யோக தவமிருக்கும் இடமாகவும் போற்றப்படுகிறது. இந்த மெய்சிலிர்க்கும் யாத்திரையில் சொல்ல முடியாத இறை அனுபவங்கள் பல நேர்ந்தன. கண்ணுக்குப் புலனாகாத ஒரு சக்தி நம்மை ஆள்வதையும், தேவதைகள் மானசரோவர் தடாகத்தில் புனித நீராடுவதையும், யோகத்தில் நெஞ்சில் தோன்றும் பொற்கோயிலையும், பொன்னிற அன்னங்களையும் செல்லும் வழியெங்கும் தரிசிக்கலாம்.


கயிலை மலையில் உருகி வழிந்தோடும் புண்ணிய நதி. தொட்டுப் பார்க்க முடியாத குளிர்ச்சியைக் கொண்ட புனித தீர்த்தம் இது. இங்கு நின்று வணங்கினால் மனித உடலில் உள்ள 108 சக்கரங்கள் தானாகவே இயங்கி உடல் சக்தி, இறை சக்தியோடு இணையும் என்கிறார்கள். எங்களுக்கும் இங்கே பரவசம் உண்டாகி இனம்தெரியாமல் கண்ணீர்விட்டு கயிலையானை வணங்கினோம்.

போனி எனும் குதிரையில் கயிலையை நோக்கி... ஞானத்தின் உறைவிடமும் பேரமைதியின் இருப்பிடமுமான கயிலை, ஆதி சிவன் யோகிகளுக்கு முதன்முதலாக தன்னை வெளிப்படுத்திய இடம் என்பார்கள். நிச்சயம் இங்கு வருபவர்களுக்கு ஒரு உள்முகப் பயணம் எங்காவது நடந்துவிடும் என்பதே உண்மை.

கயிலைக்கு வழி நடத்திச் செல்லும் பிரம்மபுத்திரா நதி. சலசலவென்ற தனது மந்திர வார்த்தைகளில் ஈசனைத் துதித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறது. யுகங்களைத் தாண்டி காலத்தின் சாட்சியாக நீண்டு செல்லும் இந்த நீர்க் காவியம், எத்தனை ரிஷிகளைக் கண்டிருக்கிறதோ என்ற வியப்போடு சென்றோம்.

டோல்மாலாபாஸ் என்ற மலை உச்சியை அடைந்தபோது, அங்கே நிறைய காகிதத்தால் ஆன கொடிகள் கட்டி வழிபாடு நடத்தப்படுகிறது. இங்கிருந்து காணும் அழகை இறைவனின் அடையாளங்களாகக் கருதி அவற்றுக்கு ஊதுவத்தி காட்டி வழிபடுவது வழக்கம். இங்கிருந்தே ஈசன், கயிலைக்கு தவம் செய்ய சென்றார் என்று சொல்வர்.