Published:Updated:

நான்கு கால மூர்த்தங்கள்!

மகா சிவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
மகா சிவராத்திரி

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், ஓவியம்: ம.செ

நான்கு கால மூர்த்தங்கள்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், ஓவியம்: ம.செ

Published:Updated:
மகா சிவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி பிப்ரவரி 21, 2020

ண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்கி சிவனுள் ஐக்கியமாக, மீண்டும் உலகங்களைப் படைக்கவும் அதில் ஜீவராசிகள் தழைக்கவும் அன்னை சக்தி சிவாகமங்களில் கூறியுள்ளபடி மாசி மாத தேய்பிறை திரயோதசி நாள் நள்ளிரவில் நான்கு கால பூஜை செய்து வழிபட்டாள். அவளுக்கு அனுக்கிரகம் செய்த ஈசன், அதேபோல் பூஜிக்கும் ஒவ்வோர் உயிருக்கும் அருள்பாலிப்பேன் என்று உறுதி கூறினார். சக்தி தேவி நான்கு காலமும் வழிபட்ட விசேஷ மூர்த்தங்களை விளக்கியுள்ளோம். நடராஜரையும் பிரதோஷ நாயகரையும் முதலில் வணங்கிவிட்டு இந்த நான்கு கால நாயகர்களையும் முறைப்படி வணங்கி எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டுகிறோம்...

நான்கு கால மூர்த்தங்கள்
நான்கு கால மூர்த்தங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் கால மூர்த்தம்

ஸ்ரீசசோமாஸ்கந்தர் முதல் கால பூஜை - இரவு 7:30

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்தின் வலப்பக்கத்தில் தனிச் சந்நிதியில் சோமாஸ்கந்த வடிவம் காணப்படும். இங்கு சிவபிரான் அமர்ந்த கோலத்தில் இடக்காலை மடித்துவைத்து, வலக்காலைத் தொங்கவிட்ட நிலையில் விளங்குவார். சிவபிரானுக்கு இடப்பக்கம் உமாதேவி, இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில், வலக்காலை மடித்து அமர்ந்திருப்பார். சிவபிரானுக்கும் உமைக்கும் நடுவே கந்தன் சிறுகுழந்தையாக, நடனமாடிய நிலையிலோ அல்லது உமை மடிமீது அமர்ந்தோ காட்சியளிப்பார்.

ஸ + உமா + ஸ்கந்தர் = அதாவது உமை மற்றும் கந்தனுடன் விளங்கும் சிவபிரான் என்பது இதன் பொருள். இறைவன், இல்லறத்தானாக - இனிய கணவனாக - பாசமுள்ள தந்தையாக தனயனுடன் காட்சியளிக்கும் இந்தக் கருணை வடிவம், தரிசித்து மகிழ வேண்டியது. சச்சிதானந்தம் என்பதை சத்து - இறைவன்; சித்து - இறைவி; ஆனந்தம் - முருகன் எனலாம். இந்த மூன்று இயல்புகளின் அழகிய வடிவே சோமாஸ்கந்தம் என்று தத்துவ நூல்கள் விளக்குகின்றன.

ஸ்ரீசசோமாஸ்கந்தர்
ஸ்ரீசசோமாஸ்கந்தர்

திருவாரூரில் புகழ்பெற்ற கமலை தியாகேசர் என்னும் சோமாஸ்கந்தரைப் பார்க்கும்போது, குமரகுருபர சுவாமிகளுக்கு திரிவேணி சங்கமம் நினைவுக்கு வருகிறது. சிவபெருமான் உடல் முழுவதும் வெண்ணீறணிந்து திகழ்வது - வெண்மை நிற கங்கை போலவும், உமாதேவி தன் நீல நிறத்தால் யமுனை போலவும், சிவந்த நிறமுள்ள கந்தன் சரஸ்வதி நதியைப் போலவும் காட்சியளிக்கின்றனராம். இந்தக் கருத்தை, ‘திருவாரூர் நான்மணி மாலை’ நூலில் ஆரூர் தியாகேசருக்குப் புது விளக்கமாகத் தருகிறார் குமரகுருபர சுவாமிகள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்த மூர்த்தி. நமது நாட்டில் வேறெங்கும் இந்த வடிவம் காணப்படுவதில்லை. சிவன் - சக்தி - முருகன் ஆகிய வழிபாட்டை ஒருங்கிணைத்து பல்லவர் காலத்தில் பிரபலமான வடிவம் இது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. திருக்கருகாவூர், திருக்கள்ளில் ஆகிய தலங்களில் சிவபிரான், முருகன், அம்பிகை ஆகியோரது சந்நிதிகள் சோமாஸ்கந்த வடிவில் அமைந்துள்ளன. சப்தவிடங்கத் தலங்களில் சோமாஸ்கந்த பெருமானைத் தியாகராஜராகப் போற்றி வழிபடுவது மரபு. சாலுவன் குப்பம், பனமலைத்தாளபுரீசர் கோயில் சிற்பங்களில் சோமாஸ்கந்தருடன் பிரம்மாவும் திருமாலும் புடை சூழ விளங்குகின்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரேசர் கோயிலும், குமர கோட்டமும், காமாட்சியம்மன் கோயிலும் அமைந்துள்ள பாங்கு, சோமாஸ்கந்த வடிவத்துக்கு மற்றோர் எடுத்துக்காட்டு. சமண-பௌத்த சமயங்களில், ‘துறவறமே பேரின்பம்’ என்ற கொள்கை செயல்பட்ட காலத்தில், இல்லற வாழ்வின் நலன்களை உணர்த்தி, பக்தி இயக்கத்தின் மூலம் குடும்ப வாழ்வின் நலத்தையும் சிறப்பையும் எடுத்துச்சொல்ல அமைந்த வடிவமே சோமாஸ்கந்த மூர்த்தம். இந்த மூர்த்தம் புத்திர பாக்கியத்தை அளிக்கவல்லது. ஆகையால், இந்த வடிவில் உமையம்மை ‘புத்திர சௌபாக்கிய பிரதாயினி’ என்று போற்றப் பெறுகிறார்.

இரண்டாம் கால மூர்த்தம்

ஸ்ரீசதட்சிணாமூர்த்தி இரண்டாம் கால பூஜை - இரவு 10:30

யோகம், இசை மற்றும் ஏனைய அறிவியற்கலைகளைக் கற்பிக்கும் ஞானாசாரியனாக - ஞானத் திருவடிவாக வழிபடப்படும் சிவபெருமானின் திருக்கோலமே ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருவடிவம். ‘தட்சிணம்’ என்பதற்கும் ‘தென்னன்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கும் தெற்கு, ஞானம், சாமர்த்தியம், ஆற்றல், ஆளுமை, யோகம் மற்றும் வீரம் என்று பல பொருள்கள் உண்டு. இவை யாவற்றையும் உடையவர் ஆதலால் ஸ்ரீதட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.

ஆலமர் செல்வனாக -ஆலமரத்தின் அடியில்... சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மௌனமாக - சொல்லாமல் சொல்லி உபதேசிக்கும் ஞான வடிவம் இது. இவர் ஆசிரியர்களுக்கு எல்லாம் மேம்பட்ட பரமாச்சார்யர். மகிமைமிக்க சிவனாரின் இந்தத் திருவுருவை அனைத்து சிவாலயங்களிலும் தரிசிக்கலாம்.

ஸ்ரீசதட்சிணாமூர்த்தி
ஸ்ரீசதட்சிணாமூர்த்தி

தனது மோனத்தால் நம்மை அழைத்து, திருக்கண் பார்வையிலேயே சிவஞானத்தை தந்தருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் வடிவமே பெரும் தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது. முயலகனை மிதித்திருக்கும் வலப்பாதம் ஆணவம் ஆகிய அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் ஆற்றல். அறிவுப் பிழம்பாகிய வடிவம்.

தட்சிணாமூர்த்தியின் சின் முத்திரை ஞானத்தின் அடையாளம். பெரு விரலின் (கட்டை விரலின்) அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொட... ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. இடக்கரத்தில் உள்ள அமிர்த கலசம் அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்கவல்லது.

தீ அகல் அல்லது தீச்சுடரானது உயிர்களது பிறவித் தளைகளை நீக்கும் பொருட்டு ஈசன் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது. அணிந்துள்ள பாம்பு குண்டலினி சக்தியைக் குறிப்பது. யோகத்தின் சின்னம் பாம்பு. மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் அதை, குருவின் அருட்பார்வையால் விழிப்புறச் செய்து, பின் செயல்பட வேண்டும் என்று யோக சாதகர்கள் கூறுவர். ‘தாமரை மலர் மீது அமர்தல்’ என்பது, அன்பர்தம் இதயத் தாமரையில் வீற்றிருப்பவர் என்று பொருள்படும். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.

சக்தி தட்சிணாமூர்த்தி, கோஷ்டத்தில் அமைந்துள்ள தலம் சுருட்டப்பள்ளி. தக்கோலம் சோமநாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள உத்குடிகாசன தட்சிணாமூர்த்தி, சென்னைக்கு அருகில் உள்ள திரிசூலம் மற்றும் திருவெண்காடு ஆகிய தலங்களிலும் இந்த வடிவைக் காணலாம்.

உலகம் தோன்றி நிலைபெற்று, அந்த உலகையே மீண்டும் ஒடுங்கச் செய்யும் பேராற்றல் மிக்க சிவபெருமானின் வடிவமே ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இவர் காமனை வென்றவர். மகா யோகி; ஞானத்தை அருள்பவர்.

மூன்றாம் கால மூர்த்தம்

ஸ்ரீசலிங்கோத்பவர் மூன்றாம் கால பூஜை - இரவு 12.00

‘லிங்கம்’ என்றால் உருவம். ‘உற்பவம்’ என்றால் வெளிப்படுதல் என்று பொருள். லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு, ‘உருவமற்ற இறைவன் வடிவம் கொள்ளுதல்’ என்று பொருள் கூறுவர். சூன்யத்தில் இருந்து படிப்படியாக உருவம் கொள்ளும் நிலையே லிங்கோற்பவம் எனப்படும். ஒருமுறை, சரஸ்வதியின் நாயகன் பிரம்மனுக்கும் திருமகளின் நாயகன் மகாவிஷ்ணுவுக்கும் இடையே, ‘தங்களில் யார் பெரியவர்?’ என்று விவாதம் எழுந்தது. அப்போது அவர்களின் அஞ்ஞானத்தை அழிக்க எழுந்த வடிவமே லிங்கோத்பவர் என புராணங்கள் கூறுகின்றன.

லிங்க பாணத்தின் நடுவில், சந்திரசேகர் திருமேனிபோல் அமைந்திருப்பதே லிங்கோத்பவ வடிவம். இதில், திருமுடியும் திருவடியும் மறைக்கப்பட்டிருக்கும். இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடன் சிவனார் திகழ... பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர். சிவாலயங்களில் கருவறைக்குப் பின்புறச் சுவரில், லிங்கோத்பவ மூர்த்தியை அமைக்கும் வழக்கம், முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே இருந்துள்ளது. லிங்கத்தின் நடுவில் - சிவபெருமானும், மேல் பகுதியில் - அன்னபட்சியாக பிரம்மனும், கீழ்ப்பகுதியில்- வராகமாக திருமாலும் உள்ள லிங்கோத்பவ வடிவை பல கோயில்களில் காணலாம்.

ஸ்ரீசலிங்கோத்பவர்
ஸ்ரீசலிங்கோத்பவர்

லிங்கோத்பவ தத்துவ விளக்கத்தை, சிவலிங்கத் தத்துவம் எனலாம். பஞ்ச பூதங்களின் ஒவ்வோர் அணுவிலும் நிறைந்துள்ளார் இறைவன். பஞ்ச பூதங்களில் காற்று, நீர், ஆகாயம் ஆகியவற்றை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வர இயலாது. ஜோதி உருவை, கண்ணால் காணலாம். கொழுந்து விட்டு எரியும் தீயில்... அதன் மையத்தை உற்று நோக்கினால், நீள் வட்ட வடிவத்தில்- நீல நிற பிரகாசத்தைக் காணலாம். இதையே லிங்கமாக்கினர் நம் முன்னோர். இதுவே லிங்கோத்பவ மூர்த்தி!

காஞ்சிபுரம் கயிலாயநாதர் ஆலயத்தில், எட்டு தோள்களுடன் கூடிய லிங்கோத்பவரை தரிசிக்கலாம். வேளச்சேரி தண்டீஸ்வரர் ஆலயத்தில், மானும் மழுவும் இடம் மாறி அமைந்திருக்கும் லிங்கோத்பவ மூர்த்தியைக் காணலாம். குன்றக்குடி மலைக்கொழுந்தீஸ் வரர் குகைக் கோயிலில், கிழக்குப்புறம் லிங்கோத்பவர் வடிவம் உள்ளது. இவரின் வலப் புறம் பிரம்மனும்; இடப்புறம் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர்.

சுசீந்தரம் தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலில், முழுமையான லிங்கோத்பவர் திருமேனி உள்ளது. இரு புறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூரில் உள்ள பால்வண்ணநாதர் ஆலயத்தில், பஞ்சலோகத்திலான லிங்கோத்பவ மூர்த்தம் உள்ளது. தவிர திருமயம், குடிமல்லூர், பிள்ளையார்பட்டி, அரிசிற்கரை புத்தூர், திருச்செங்காட்டங்குடி, நாகப்பட்டினம், கூவம் மற்றும் கூளம்பந்தல் ஆகிய தலங்களில் உள்ள லிங்கோத்பவ வடிவங்களும் அற்புத மானவை.

இவரை வணங்கினால் ஞானமும் மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

நான்காம் கால மூர்த்தம்

ஸ்ரீசரிஷபாரூடர் நான்காம் கால பூஜை - இரவு 4.00

சிவபெருமானின் திருக்கோலங்களுள் உன்னத வடிவாகத் திகழ்வது ரிஷபாரூட மூர்த்தி. திருக்கோயில் திருவிழாக்களில் பெருமானின் ரிஷப வாகனக் காட்சி காண அடியார்கள் காத்து நிற்பர். ‘‘பிரம்மோற்சவத்தில் நாலாம் திருநாள் அன்று ரிஷப வாகனம்; அவசியம் சென்று தரிசிக்க வேண்டும்!’’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருப்போம்.

சிவபெருமான், தன் அடியார்களுக்கு ரிஷப வாகனராகத் திருக்கோலம் காட்டி ஆட்கொண்டு அருளியதை பெரிய புராணத்தில் பல அடியார்களது வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது. திருநீலகண்டர், இயற்பகையார், இளையான்குடி மாறர், மானக்கஞ்சாறர், அரிவாட்டாயர், ஆனாயர், திருக்குறிப்புத் தொண்டர், சண்டேசர், திருஞானசம்பந்தர், சாணக்கியர், சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மார்களது வரலாறு இதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

ஸ்ரீசரிஷபாரூடர்
ஸ்ரீசரிஷபாரூடர்

‘உலகமும் அதன் உயிர்களும் ஒடுங்கி அழியும் ஊழிக் காலத்தில் தாமும் அழிய நேரிடுமே!’ என்று அஞ்சிய தரும தேவதை, என்ன செய்வதென்று ஆராய்ந்து ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானைத் தஞ்சமடைய... அவர் தர்ம ரிஷபமாகிய அதன் மீது ஏறிக் கொண்டு, அருள்புரிந்த நிலையே ரிஷபாந்திக மூர்த்தி. தம்மை அன்புடன் வழிபடும் மெய்யடியவர்க்கு சிவபெருமான், தரும தேவதையான அறவெள்விடைமீது அமர்ந்து காட்சி தந்து அருள்புரிவார் என்பது கருத்து. திருமழிசை, இஞ்சிக்குடி, திருவெண்காடு, வேதாரண்யம், தண்டந்தோட்டம், திருநெல்வேலி மாவட்டம் திருவாலீசுரம் ஆகிய தலக் கோயில்களில் ரிஷபாந்திக மூர்த்தி திருக்கோலம் காணப்படுகிறது.

முப்புரம் எரிக்க திருமால் ரிஷப வடிவம்கொண்டு சிவபெருமானைத் தாங்கினார் என்கிறது திருமுறை. இந்த ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உமையோடு ஆரோகணித்ததால், அவருக்கு ‘ரிஷபாரூட மூர்த்தி’ என்று பெயர் என்கிறது சிவபராக்ரமம் நூல். இந்த வடிவ அம்பிகை ‘தர்ம சித்திப்பிரதாயினி’ எனப்படுகிறார்.

நான்கு கால மூர்த்தங்கள்!

‘சிவபெருமான் பின் இரு கரங்களில் மான்- மழு ஏந்தி, இடப் புறம் உமாதேவியுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்திருப்பார். வலப் பக்கமாக மடியில் கணபதியை அணைத்தபடி கடக ஹஸ்தம் மற்றும் வலக் கரத்தில் ஜபமாலையுடன் காட்சியளிக்கும் தோற்றம் ரிஷபாரூடர்!’ என்கிறது ஸ்ரீதத்வநிதி எனும் சிற்ப நூல். இந்த மூர்த்தியை வணங்குபவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதிகம்.