Published:Updated:

புத்தாண்டு தினத்தில் முதல் தல யாத்திரை- ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதீனம்!

புதிய ஆதீனம்
புதிய ஆதீனம்

புதிய ஆதீனம் - முதல் தல யாத்திரையாக ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயில் சுவாமி தரிசனம்

தருமபுரம் ஆதினத்தின் 27 - வது குருமகாசந்நிதானமாக ஞானபீடம் ஏற்ற ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், புத்தாண்டு தினத்தில் தல யாத்திரையாக திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஆதீனம்
ஆதீனம்

நாகை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதின நிர்வாகத்திற்கு உட்பட்ட ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலத்தில் உள்ள விநாயகர், முருகன், நடராஜர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், காலசம்ஹாரமூர்த்தி ஆகிய சுவாமிகள் தனி சந்நிதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

மார்க்கண்டேயனுக்கு `என்றும் பதினாறு' சிரஞ்சீவி வரம் அளித்த ஸ்ரீ அபிராமி உடனாய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்தியை வழிபட்டால் நோய்நொடியின்றி நீடித்த ஆயுள் கிட்டும் என்பது ஐதிகம். எனவேதான் இத்தலத்தில் 60 வயது முடிந்து சஷ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம் மற்றும் ஆயஷ்ய ஹோமம் போன்றவை தினந்தோறும் நடைபெறுகின்றன. வெளிமாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் தருமபுர ஆதினத்தின் 27 -வது குருமகா சந்நிதானமாக ஞானபீடம் ஏற்ற ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முதல்முறையாக நேற்று ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குத் தல யாத்திரையாக வருகை தந்தார். ஊர் எல்லையில் காளியம்மன் கோயில் அருகே கோயில் நிர்வாக மேலாளர் கோவிந்தராஜன் மற்றும் ஸ்ரீராம் தலைமையில் வரவேற்பு அளித்தனர். கோயில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.

மேளதாளங்கள் முழங்க, வான வெடிகள் வெடிக்க, வழியெங்கும் இருபுறமும் பெண்கள் பூமாரி பொழிய குருமகாசந்நிதானம் அனைவருக்கும் ஆசீர்வாதம் தந்தபடியே கோயிலுக்கு வந்தார். கோயில் வளாகம் முழுவதும் தோரணங்கள், சந்நிதானத்தை வரவேற்கும் பதாகைகள் என அலங்கரிக்கப்பட்டிருந்தன.

ஆதீனம்
ஆதீனம்

காலை 11 மணிக்கு கோ பூஜை அடுத்து கஜ பூஜை முடிந்த ஆதீனம் அதன்பின் கள்ள விநாயகர், அமிர்தகடேசுவரர், காலசம்ஹாரமூர்த்தி, அபிராமி ஆகிய சந்நதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அருளாசியும் பிரசாதமும் வழங்கினார்.

ஆதீனம் வருகையால், நீண்ட காலமாகத் தடைப்பட்டு நிற்கும் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே கூடியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு