Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: ''தமிழகத்தின் தர்மஸ்தலா!'

அறப்பணியே ஆண்டவன் பணி!

பிரீமியம் ஸ்டோரி
கொடுப்பவருக்கு அளவற்ற புண்ணியத்தையும் பெறுபவருக்கு முழு மனநிறைவையும் அளிக்கக்கூடிய தானம் என்று சொன்னால் அது அன்னதானம் மட்டும்தான்.

அன்னதானத்தின் மகத்துவம் பற்றி காஞ்சி பெரியவர் தெய்வத்தின் குரலாய் மொழிந்திருப்பது...

‘`மகாபாரதத்துல கர்ணன் நிறைய தானம் பண்ணினவன்தான். யார் வந்து எதைக் கேட்டாலும் குடுத்துடுவான். மகாபாரதச் சண்டையில உசிர் போனதுக்கப்புறம் ஸ்வர்க்கத்துக்குப் போனான். அங்கே அவனுக்கு எல்லாம் கெடைச்சாலும் ஒண்ணு மட்டும் கெடைக்கலே. அவனுக்குப் பசி எடுக்கறச்சே, அங்கே தங்கம், வைரம் எல்லாம் கொட்டிக் கெடந்தாலும் ஒரு வாய் சோறும், ஒரு வாய் ஜலமும் கெடைக்கலே. அவனுக்கு ஒண்ணும் புரியலே.

எங்கள் ஆன்மிகம்: ''தமிழகத்தின் தர்மஸ்தலா!'

அங்கிருந்தவாகிட்டே கேட்டான். அதுக்கு அவா சொன்னா, ‘நீ எத்தனையோ விலை உசந்த பொருளா வாரி வாரிக் கொடுத்திருக்கே. வாஸ்தவம்தான். ஆனா, முக்கியமான தானமான அன்னதானத்தை மட்டும் நீ பண்ணலே. அதான் இப்படி ஒரு நிலைமை உனக்கு ஏற்பட்டிருக்கு. அங்கே நீ குடுத்ததுதானே இங்கே கெடைக்கும்’னு சொன்னா. பசியைப் போக்கிக்க வழி தெரியாம தவிச்சிண்டிருந்தான். அப்ப அங்க வந்த நாரதர், கர்ணனோட நிலைமையைப் பார்த்து ஓர் உபாயம் சொன்னார்.

‘பஞ்சபாண்டவர்களுக்காக பகவான் கிருஷ்ணன் தூது வந்தப்போ, நீ ஒன்னோட ஆள்காட்டி விரலால விதுரரோட வீட்டை காமிச்சு, அவனை அங்க போய் சாப்பிடுன்னு கேலியா சொன்னே. அதனால, ஒன்னோட ஆள்காட்டி வெரலை வாய்ல வச்சிக்கிட்டா ஒன்னோட பசி போய்டும்’னு சொன்னார். அவனும் அப்படியே செஞ்சு தன்னோட பசியைப் போக்கிண்டான். இப்படி ஒரு கதை பெரியவா சொல்றதுண்டு. அதையே நான் ஒங்களுக்குச் சொன்னேன்’’ என்று அன்னதானத்தின் மகத்துவம் பற்றி பக்தர்களுக்கு விளக்கிக் கூறிய மகா பெரியவா, ஓர் அற்புதமான திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அந்த திட்டம்தான், ‘பிடியரிசித் திட்டம்’.

வள்ளலார் சுவாமிகள், வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவி பசியென்று வந்தோருக்கு எந்த நேரமும் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அன்று அவர் தொடங்கி வைத்த அறப்பணி இன்றைக்கும் தொடர்கிறது.

அமுதசுரபி என்னும் அட்சயபாத்திரத்தின் மூலம் அன்னதானம் செய்து சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றிய மணிமேகலையின் காப்பியமும் ஒருவரின் பசிப்பிணி அகற்று வதை விட உயர்ந்த அறம் எதுவும் இல்லை என்பதை விவரிக்கிறது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் அன்னதானம் எனும் அறத்தின் புண்ணிய மகிமைகளை!

எங்கள் ஆன்மிகம்: ''தமிழகத்தின் தர்மஸ்தலா!'

தர்மஸ்தலா, உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, கட்டீல், திருமலை போன்ற தலங்களில் யாத்ரீகர்களுக்குக் காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதேபோல், நம் தமிழகத்திலும் இரண்டு தர்மஸ்தலாக்கள் என்று சொல்லும் வண்ணம் காஞ்சிபுரத்திலும், திருவண்ணாமலையிலும் மிக பிரமாண்டமான அளவில் அன்னதானக் கூடம் ஏற்படுத்தி, நாள்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் எனும் தர்ம நோக்கத்துடன், அந்தத் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றனர், `அண்ணாமலை சாரிடபிள் ஃபவுண்டேஷன்’ உறுப்பினர்கள். தற்போதைய பெருந்தொற்று பாதிப்புச் சூழலில், 1,100 குடும் பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கியது, 40 நாள்கள் தினமும் 3,000 பேருக்கு உணவு வழங்கியது என்று இவர்கள் செய்த அறப்பணி குறிப்பிடத்தக்கது.

எங்கள் ஆன்மிகம்: ''தமிழகத்தின் தர்மஸ்தலா!'

அந்த அமைப்பைச் சேர்ந்த எஸ்.ஶ்ரீதரிடம் பேசினோம். மிக்க ஆர்வத்துடன் தங்களின் அறப்பணிக்கான முன்னோட்ட செயல்பாடுகளைப் பகிர்ந்துகொண்டார் அவர்.

‘`இப்படி ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்தியதே காஞ்சி மகா சுவாமிகள்தான். 1985-ம் வருடம் தெய்வத்தின் குரல் மூன்றாம் தொகுதியில் அநாதையாக இறப்பவர்களுக்கு உரிய கிரியைகளைச் செய்வதன் அவசியத்தைப் பற்றி வலியுறுத்தி இருந்தார். அதில் ஈர்க்கப்பட்ட நான் அதை நடைமுறைப்படுத்துவதற்காக காஞ்சி மகா சுவாமிகளை தரிசித்து என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன்.

அவருடைய அருளாசிகளுடன் ‘ஏபிகேடி’ என்ற (Anatha Pretha Kainkarya Trust) அமைப்பைத் தொடங்கி, எங்களால் இயன்ற அளவு கைங்கர்யம் செய்து வருகிறோம். அதேபோல் என்னுடைய நண்பர் ஆர்.ராஜ்குமார் ரத்ததானம், அன்னதானம் போன்ற சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.

எங்கள் ஆன்மிகம்: ''தமிழகத்தின் தர்மஸ்தலா!'

இந்நிலையில், கர்நாடகத்தில் உள்ள தர்மஸ்தலாவைப் போலவே தமிழகத்திலும் இரண்டு புனிதத் தலங்களில் அன்னதான கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்கு ஏற்பட்டது. அதுவும்கூட காஞ்சி மகா சுவாமிகளின் திருவுள்ளம் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்காகவே அண்ணாமலை சாரிடபிள் ஃபவுண்டேஷன் அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறோம்’’ என்றார் எஸ்.ஶ்ரீதர்.

எங்கள் ஆன்மிகம்: ''தமிழகத்தின் தர்மஸ்தலா!'

‘தமிழகத்தின் தர்மஸ்தலா’ என்ற பெயருக்கான காரணம் பற்றி ஆர்.ராஜ்குமாரிடம் கேட்டோம்.

‘`சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் சிலபேர் தர்மஸ்தலாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு வந்தவர்கள் எல்லோருமே சுவாமி மஞ்சுநாதர் தரிசன அனுபவத்தோடு, அந்தத் தலத்தில் காலை முதல் இரவு வரை நடைபெறும் அன்னதானம் பற்றியும் சிலாகித்துப் பேசினார்கள். அந்த அன்னதான கைங்கர்யம் பக்தர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும் கண்கூடாகக் கண்டோம்.

ஏற்கெனவே திருவண்ணாமலையிலும் காஞ்சிபுரத்திலும் அன்னதானக் கூடம் தொடங்க வேண்டும் என்று நினைத்திருந்த நாங்கள், அதற்கு `தமிழகத்தின் தர்மஸ்தலா’ என்றே பெயர் வைக்க தீர்மானித்தோம்’’ என்றார் ராஜ்குமார். அவரே தொடர்ந்து `தமிழகத்தின் தர்மஸ்தலா’ எப்படி அமையும் அதற்கான திட்டங்கள் என்ன என்பதையும் விவரித்தார்.

எங்கள் ஆன்மிகம்: ''தமிழகத்தின் தர்மஸ்தலா!'

``சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமான முறையில் அன்னதானக் கூடம் அமைத்து, மூன்று வேளையும் யாத்ரீகர்களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். கோயில்களுக்கு வட இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால், தென்னிந்திய உணவுகள் மட்டுமல்லாமல், வட இந்திய உணவுகளையும் வழங்க இருக்கிறோம். முதலில் எந்த ஊரில் இடம் கிடைக்கிறதோ அந்த ஊரில் இந்தப் பணியைத் தொடங்க இருக்கிறோம்.

எங்கள் ஆன்மிகம்: ''தமிழகத்தின் தர்மஸ்தலா!'

எப்படியும் இரண்டு இடங்களிலும் தொடங்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். முதலில் கோயிலை தரிசிக்க வரும் யாத்ரீகர்களுக்கு மட்டுமே உணவு வழங்க திட்டம். பின்னர் அரசின் அனுமதியுடன் பள்ளி, மருத்துவமனை ஆகியவற்றிலும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். எல்லாம் அன்னபூரணியின் கையில்தான் இருக்கிறது’’ என்றார்.

அன்னையின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அன்புடன் கூடிய இதுபோன்ற அறப்பணிகளுக்கு ஆண்டவனின் அனுக்கிரகம் நிச்சயம் கைகூடும். இவர்களின் இந்தப் பிரமாண்டமான திட்டம் பரிபூரணமாக நிறைவேறும். தர்மஸ்தலாவைப் போன்றே நம் திருவண்ணாமலையும் காஞ்சியும் புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள். திருவண்ணாமலையில், மலையே சிவலிங்கமாக வழிபடப் பெறுகிறது. காஞ்சியிலோ அன்னை காமாட்சியே அன்ன பூரணியாக அமர்ந்து அருளாட்சி நடத்துகிறாள்.

ஆக, மிகப் பொருத்தமான க்ஷேத்திரங்களில் மிக உன்னதமான அறப்பணியைத் தொடங்கவுள்ளார்கள் இந்த அமைப்பினர். அவர்களின் புனிதமான நோக்கம் குறையின்றி தடையின்றி நிறைவேற வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.

எங்கள் ஆன்மிகம்: ''தமிழகத்தின் தர்மஸ்தலா!'

அன்னம் அளிப்பதை ஓர் உன்னத அறமாக, அளவற்ற புண்ணியம் தருவதாக ஏற்றுக்கொண்டிருக்கிறது நம்முடைய தர்மம். அதிலும் புனிதத் தலங்களில் அமைந்துள்ள ஆலயங்களை தரிசிக்க வரும் யாத்ரீகர்களுக்கு அன்னம் அளிப்பது பல மடங்கு புண்ணியம் தரவல்லது. இந்த உன்னதமான பெரும்பணி விரைவில் தொடங்கி, காலங்காலமாகத் தொடர்ந்து நடைபெறட்டும்.

‘நடமாடும் கோயில் நம்பருக்கொன்று ஈயில் படமாடும் கோயில் பரமர்க்கு அது ஆகும்’ என்று திருமூலரும், ‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப்புழி’ என்று திருவள்ளுவரும் அன்னதானத்தின் சிறப்பினை எடுத்துக் கூறியிருக்கின்றனர்.

எனவே, நாமும் பெரும் புண்ணியம் தரும் இந்த அறப்பணிக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம். அதன் பலனால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் அன்னபூரணியின் அருளால் வாழ்வில் அனைத்து வளங்களும் ஸித்திக்கும். (அறப்பணி தொடர்பான மேலும் விவரங்களுக்கு: எஸ்.ஶ்ரீதர் - 098407 44400; ஆர்.ராஜ்குமார் - 098410 60853).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு