Published:Updated:

திருவண்ணாமலை கோயில்: 400 ஆண்டுகள் பழைமையான ஓவியம் கண்டுபிடிப்பு!

முருகன் ஓவியம்

இவ்வோவியத்தில் சுண்ணாம்பு, கறுப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை கோயில்: 400 ஆண்டுகள் பழைமையான ஓவியம் கண்டுபிடிப்பு!

இவ்வோவியத்தில் சுண்ணாம்பு, கறுப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டியுள்ளனர்.

Published:Updated:
முருகன் ஓவியம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருமஞ்சன கோபுர விதானத்தில் பாதி அழிந்த நிலையில் ஓவியம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்துள்ளனர், திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர்.

இது தொடர்பாக, இந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், இரு நண்பர்களுடன் மீள் ஆய்வை நடத்திய போது தெற்கு ராஜ கோபுரத்தின் விதானத்தில் ஓவியம் ஒன்று சிதைந்த நிலையில் இருப்பதைக் கண்டு ஆய்வு மேற்கொண்டோம். அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுரம் , புரவி மண்டபம் , கல்யாண மண்டபம் மற்றும் மேற்கு திருமால் பத்தியில் உள்ள ஓவியங்களே இதுவரை ஆவணம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஓவியம் இதுவரையிலும் ஆவணம் செய்யப்படவில்லை.

விதானம்
விதானம்

இந்த ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தருகிறார். அவரின் வலது பக்கத்தில் வள்ளியும், இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர்.

தலையை அழகான கிரீட மகுடம் அலங்கரிக்க, காதில் குண்டலங்களும்; கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிந்து மார்பின் மீது முறையே ஸ்தன சூத்திரம், முப்புரிநூல் மற்றும் உரஸ் சூத்திரம் அணிந்து காட்சிதருகிறார். வலது மேற்கரம் வஜ்ராயுதம் ஏந்தியும், கீழ்க் கரம் அருள்பாலிக்கும் அபய முத்திரையையும்; இடது மேற்கரம் சக்தி குலிசம் ஏந்தியும், கீழ் இடது கரம் வரத முத்திரையையும் கொண்டும் காணப்படுகிறார்.

அனைத்து கைகளிலும் தோள் வளை மற்றும் கைவளைகள் அணிந்திருக்க, இருபக்கத் தோள்களிலும் தோள் மாலை அழகுற காட்டப்பட்டுள்ளது. முருகன் தனது இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டு மயிலின் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து 'சிகிவாகனராக' நீள்வட்ட பிரபையினுள் காட்சி தருகிறார். கந்த புராணம் கூறும் முருகனின் 16 கோலங்களில் ஒன்று 'சிகிவாகனர்' ஆகும்.

இந்த ஓவியத்தில், முருகனின் வலப்புறம் உள்ள வள்ளியும், இடப்புறம் உள்ள தெய்வானையும் மிகவும் சேதமுற்ற நிலையில இருப்பதால் தெளிவாகக் காண முடியவில்லை. இடப்புறம் தெய்வானையின் அருகே சேடிப்பெண் ஒருவர் அக்காலத்திய உடை மற்றும் கொண்டை அணிந்து சாமரம் வீசும் காட்சி உள்ளது. அதற்கு மேல் இடப்புறம் உள்ள ஓவியம் முற்றிலும் சிதைந்துள்ளது.

அதே போல வலப்புறம் வள்ளியின் அருகே காட்டப்பட்டுள்ள சாமரம் வீசம் சேடிப்பெண், மிகவும் சிதைந்து கால்கள் மட்டும் தெரிகின்றன. அதற்குமேல் வலப்புறமும் ஓவியம் மிகவும் சேதமாகி உள்ளது.

முருகர் ஓவியம்
முருகர் ஓவியம்

இவ்வோவியத்தில் சுண்ணாம்பு, கறுப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டியுள்ளனர். இந்த வண்ணங்கள் மற்றும் காட்டப்பட்டுள்ள ஆபரணங்கள் யாவும் தஞ்சைப் பெரிய கோயிலின் நாயக்கர் கால ஓவியத்துடனும், ஆந்திர மாநிலம் லீபாக்ஷி வீரபத்திரர் கோயில் ஓவியத்துடனும் ஒத்துப்போவதால் இதனை நாயக்கர் கால ஓவியமாகக் கருதலாம்.

அதுமட்டுமல்ல, இந்த ஓவியத்தின் அருகே இதே போல இரண்டு தொகுப்புகள் முற்றிலும் அழிந்து, ஆங்காங்கே வண்ணங்கள் மட்டுமே திட்டுகளாகத் தென்படுகின்றன. மேலும், இக்கோயிலில் புரவி மண்டபத்தின் விதானத்தில் உள்ள கிரிஜா கல்யாணம், பாற்கடலில் அமிர்தம் கடையும் காட்சி ஆகியவை அடங்கிய ஓவிய தொகுப்பையும், இந்த ஓவியம் ஒத்துள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோயிலின் ராஜ கோபுரத் திருப்பணி மற்றும் மதில்கள் ஆகியவை தஞ்சை நாயக்க மன்னரான 'சேவப்ப நாயக்கர்' காலத்தில் கட்டப்பட்டவையே. எனவே இவ்வோவியத்தையும் அவர் வாழ்ந்த 16 - ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். சுமார் 400 வருடம் பழைமையான இந்த ஓவியத்தை சிதைவில் இருந்து மீட்டு, தமிழக தொல்லியல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முறையாகப் பாதுகாத்திட வேண்டும்" என்றார்.