புனிதப்படுத்தவும் வேண்டாம், இழிவுபடுத்தவும் வேண்டாம்! - பெண் தெய்வ வழிபாடு... ஓர் அலசல்

`பெருந்தெய்வங்கள் பெரிய கோயில்கள் எழுப்பி வணங்குவதாகவும், நாட்டார் தெய்வங்கள், எளிய மக்களால் எளிய முறையில் வழிபடுவதாகவும் இருக்கின்றன.
இந்திய சமூகத்தில் எண்ணற்ற தெய்வ வழிபாடுகள் உள்ளன. இவற்றை பெருந்தெய்வ வழிபாடு, நாட்டார் தெய்வ வழிபாடு என இரண்டாகப் பிரிக்கலாம். மக்களோடு மக்களாக வாழ்ந்து மடிந்தவர்களை, உள்ளூர் மக்கள், நாட்டார் தெய்வங்களாக வழிபடுகின்றனர். நாட்டார் தெய்வங் களின் வரலாறு, வீரஞ்செறிந்த கதை களையும், வலி மற்றும் சுரண்டல் நிறைந்த கதைகளையும் உள்ளடக்கியது. பெருந்தெய்வங்களுக்கு உள்ளதுபோல் நாட்டார் தெய்வங்களுக்கு மதச்சார்பு இல்லை. அனைத்து மதத்தினரும் நாட்டார் தெய்வங்களை வழிபடு கின்றனர். நாட்டார் பெண் தெய்வ வழிபாடு இல்லாத தமிழக கிராமங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு பெண் தெய்வ வழிபாடு சிறப்புடையது.

நாட்டார் பெண் தெய்வ வழிபாடு குறித்த தகவல்களைப் பகிர்கிறார், தமிழக தொல்லியல் துறையின் சுவடிக்குழுமத்தின் மாநில ஒருங் கிணைப்பாளரும் ஆய்வாளருமான சசிகலா...
‘`பெருந்தெய்வங்கள் பெரிய கோயில்கள் எழுப்பி வணங்குவதாகவும், நாட்டார் தெய்வங்கள், எளிய மக்களால் எளிய முறையில் வழிபடுவதாகவும் இருக்கின்றன. இப்படி வழிபாடுகளிலும் வர்க்க வேற்றுமை இருக்கிறது. இரு தெய்வங் களுக்கும் இருவேறு வழிபாட்டு முறையும் வரலாற்றுக் கூறுகளும் உண்டு. இவற்றுள் பெண் தெய்வ வழிபாடு கூடுதல் சிறப்புடையது.
தாய்வழி சமூகமாக இருந்த காலத்தில் பெண்களே வேட்டையாடுவர். அவர்களின் வீரம் அளப்பரியதாக இருந்ததை வரலாறு சொல்கிறது. கொற்றவை என்ற பெண் தெய்வத்தை வீரத்தின் அடையாளமாக நாம் வழிபடத் தொடங்கியதன் பின்னணி இது தான். சில கிராமங்களில் பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்களுடன் துணை நிற்கும். அந்த ஆண் தெய்வங்கள் பெண் தெய்வத்தின் அண்ணன், தம்பியாக இருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அன்றைய காலங் களில் ராஜாக்கள் தாங்கள் விரும்பும் பெண் களை பெண் வீட்டாரிடம் தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்பர். இதற்கு முரண்படு பவர்கள் தங்கள் வீட்டு பெண்களைக் கொன்று அவர்களையே சாமியாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது’’ என்றார்.
‘தெய்வமே சாட்சி’ புத்தகத்தின் ஆசிரிய ரான ச.தமிழ்செல்வனிடம் சிறுதெய்வ வழிபாடு குறித்துப் பேசினோம்.
‘`நாட்டார் தெய்வங்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வணங்கக்கூடியவை. நாட்டார் தெய்வ வழி பாடு பன்முகத் தன்மையுடையது.
பொதுவாக இளம்வயதில் இறந்துபோன பெண்கள், இயற்கையாக இறக்காத பெண்கள், திருமணமாகாமல் இறந்த பெண்கள் ஆகியவர் களை தெய்வங்களாக மக்கள் வழிபடுகின்றனர்.
எண்ணற்ற பெண் தெய்வங்கள் சமூகத்தின் குற்ற உணர்ச்சியால் வணங்கப்படுபவை. வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, பழிச்சொல், ஆணவக்கொலைகள் ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்களை கிராம மக்கள் தெய்வங்களாக வணங்கி வருகின்றனர். இப்பெண்களை தெய்வமாக வணங்குவதற்கு இறந்த பெண்கள் மீதான பாவ உணர்ச்சியும், வணங்குபவர்களின் குற்ற உணர்ச்சியும் காரணமாகின்றன.

சமூகத்தால் அநீதி இழைக்கப்பட்ட பெண்களை வணங்குவதன் மூலம் சமூகம், தன் குற்ற உணர்ச்சியைத் தணித்துக்கொள்ள எத்தனிக்கிறது. நாட்டார் பெண் தெய்வங்கள் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மடிந்தவர்கள் என்பதால் மக்கள் செல்லும் இடமெல்லாம் நாட்டார் தெய்வ வழிபாடும் பயணிக்கும். நாட்டார் பெண் தெய்வங்களையும் தற்போது வாழும் பெண்களின் வாழ்க்கைநிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் காலங்காலமாக பெண்கள் மீது சுமத்தப்படும் பண்பாடும், மானச்சுமையும் அவர்களை நசுக்குவது புரியும்.
பெண்மீது நடத்தப்படும் சுரண்டலை யும், ஒடுக்குமுறையையும் களைய வேண்டு மென்றால் அனைத்தையும் பகுத்தறிந்து பார்க்கும் அளவுக்கு குழந்தைகள் உள்பட சமூகத்திலிருக்கும் அனைவரையுமே தயார் படுத்த வேண்டும். இதை ஓர் இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டும். தெருக்கள், பள்ளிகள் போன்ற அனைத்து பொது இடங்களிலும் இந்த விழிப்புணர்வூட்டும் இயக்கம் தொடர்ச்சி யாக நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.
பெண்ணை தெய்விக நிலைக்கு உயர்த்திப் பிடிப்பது அல்லது வார்த்தை, கருத்தாக்கங்கள், செயல்கள் ஆகியவற்றால் அவர்களை இழிவு படுத்துவது என இவ்விரு மனநிலையுமே பெண்ணுக்கு சுமையைத் தருபவை. எனவே பெண்ணைப் புனிதப்படுத்தவும் வேண்டாம், இழிவுபடுத்தவும் வேண்டாம். அனைத்து உணர்வுகளும், உரிமைகளும் உள்ள சக உயிராக மதித்து அவளை நடத்தினாலே போதும்!