Published:Updated:

சிவபெருமானுக்கு நீலநிறப் பூக்களைச் சமர்ப்பிக்கலாமா?

கேள்வி பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்கள்

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

சிவபெருமானுக்கு நீலநிறப் பூக்களைச் சமர்ப்பிக்கலாமா?

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

Published:Updated:
கேள்வி பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்கள்

? வழிபாட்டில் பூக்களின் அவசியம் என்ன?

`புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு’ என்பது திருஞான சம்பந்த சுவாமிகளின் திருவாக்கு. நம் கர்மவினைகள் எல்லாம் நீங்கி, நாம் எல்லாம்வல்ல சிவபெருமானை அடைய, நீரும் பூவும் அவசியம் என்பது திருஞானசம்பந்தரின் வழிகாட்டல்.

உலகில் உள்ள அனைத்துமே கடவுளின் படைப்புகளே. அவை ஒவ்வொன்றிலும் இறைசக்தி நிறைந்திருக்கும். ஒவ்வொன்றும் எந்தக் காரணத்துக்காகப் படைக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றி முழுமைப் பெறுகிறது.

பிரபஞ்சம் மிகவும் பெரியது. நாம் நம்மைச் சுற்றியிருக்கும் பகுதியைப் பார்த்தறிவதே பிரமிப்பாக இருக்கிறது. எனில், பெரிதினும் பெரிதான இறையை - சிவப்பரம்பொருளை அறிந்துய்வது எப்படி? அதற்கான ஒரு எளிய வழியே மலர் வழிபாடு.

? எந்தத் தெய்வத்துக்கு எவ்வகைப் பூக்களைச் சமர்ப்பிக்கலாம்?

பல்வேறு நிறங்கள் உடைய மலர்கள் நம் மனதை மலர்விக்கச் செய்கின்றன. பூக்களில் ஸாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்று முக்குணங் களைக் கொண்ட மலர்கள் குறித்த தகவல்களை நம் சாஸ்திரங்கள் அளித்திருக்கின்றன.

வெண்மையான மலர்கள் ஸாத்வீகம். வெண்ணிற ஊமத்தை, அல்லி, சிறுசெண்பகம், மகிழம்பூ, வெண் தாமரை, ஜாதிப் பூ, மல்லிகை, நந்தியாவட்டை, தும்பை போன்றவை ஸாத்வீக மானவை. ஸாத்வீகமான மலர்களால் சிவ பெருமானை வழிபட்டால் மோக்ஷம் கிட்டும்.

சிவப்பு நிறப் பூக்கள் ராஜஸ குணம் கொண்டவை. செங்கழுநீர், செந்தாமரை, செவ்வரளி, சிவந்த பட்டிப்பூ, செம்பாதிரிப்பூ போன்றன இவ்வகை. இந்த மலர்களால் சிவபெருமானை வழிபட்டால் இம்மைப் பயனும் மறுமைப் பயனும் கிட்டும். கணபதி, சிவபெருமான், ஸ்கந்தர், திருமால், காளீ, துர்கை என அனைத்துத் தெய்வங் களுக்கும் ராஜஸ பூக்களைச் சமர்ப் பிக்கலாம்.

நீல நிறமுள்ளவை தாமஸ குணம் வாய்ந்தவை. இவ்வகையில் நீலோத்பலம் மட்டும் சிவ பெருமானுக்கானது. மற்றவற்றை உரிய தெய்வங்களுக்குச் சேர்க்கலாம். அதாவது, தமோகுண ரூபமான சாஸ்தா, பைரவர், யமன், சனீஸ்வரர் முதலான உக்ரகோல தெய்வங் களுக்கு தாமஸ மலர்களை அளிப்பதால், சத்ருவிநாசம் ஏற்படும் என்கின்றன ஆகமங்கள்.

அதேபோல் மிச்ர புஷ்பங்கள் என்ற வகை உண்டு. செண்பகப்பூ, பொன்னூமத்தைப் பூ, கோங்குப் பூ, சரக்கொன்றை போன்ற மஞ்சள் நிறப் பூக்கள் யாவும் மிச்ர புஷ்பம் ஆகும். இவை சத்வம் மற்றும் ராஜஸ குணம் கலந்தவை.

? ஆலயங்களில் இறைவனுக்குப் பூக்களைச் சமர்ப்பிப்பதற்கான நியதிகள் என்ன?

கடவுளுக்கு 8, 16, 108, 1000, 10,000 என்று பல எண்ணிக்கைகளில் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். இதனால் மிக உயர்ந்த பலன்கள் கிடைக்கும். பூஜை செய்யும்போது ஒரே நிற பூக்களை அர்ச்சனை செய்தபிறகே, மற்ற வகைகளைப் பயன்படுத்த வேண்டும்.

பூக்களை மேல்நோக்கியே சார்த்தவேண்டும். கவிழ்ந்து இருப்பது போல் சார்த்தக் கூடாது. அர்ச்சனை போன்ற தருணங்களில் கவிழ்ந்து விழுந்தால் தவறில்லை. ஆலயங்களில் வளரும் மலரையே இறைவனுக்கு அளிக்க வேண்டும். மிகவும் தூய்மையான இடத்தில் அவற்றைப் பாதுகாத்துப் பராமரிக்கவேண்டும். இந்தக் காரணங்களாலேயே நந்தவனங்கள் போற்றிப் பாதுகாக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஸ்தல விருக்ஷம் என்று போற்றப்படும் மரம் இருக்கும். `வ்ருக்ஷம் சிவமயம் த்யாத்வா’ என்ற வரிகளின்படி விருக்ஷத்தை சிவபெருமானாகவே நினைத்து அவற்றுக்குப் பூஜைகள் செய்யவேண்டும் என்று வழிகாட்டுகின்றன ஆகமங்கள்.

ஆசார்யன் லிங்கத் திருமேனியில் உள்ள தலைப்பகுதியில் தனது இரண்டு விரல்களினால் பழைய மலர்களை அகற்றிவிட்டு, வேறிரு விரல்களால் புதிய மலர்களை வைத்து... இறைவனின் மீது எப்போதும் மலர் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது ஆகமங்களின் கட்டளை. இதன் அடிப் படையிலேயே சிவாலயங்களில் கொண்டை மாலையும் `இண்டம்' என்ற வளைவு மாலையும் சிவனாரின் தலையில் எப்போதும் இருக்கும்.

அதேபோல் சிவபெருமானின் தலையில் புஷ்பம் இல்லாமலும் ஆவுடையார் பகுதியில் வஸ்திரம் இல்லாமலும் ஒருபோதும் இருக்கக் கூடாது. மீறினால் அரசனுக்கும் நாட்டுக்கும் தீமை ஏற்படும் என்று சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன.

வழிபாட்டில் பூக்களின் அவசியம்
வழிபாட்டில் பூக்களின் அவசியம்


? பூக்களைப் பறிக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?

பூக்களைப் பறித்து கைகளிலோ, துணிகளிலோ வைத்திருக்காமல் பாத்திரங்களில் வைக்க வேண்டும். அதாவது மரம், செப்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களினால் ஆன பாத்திரங்களிலேயே பூக்களை வைத்திருக்க வேண்டும்.

குளித்துவிட்டு தெய்வத் துதிகளைக் கூறிக்கொண்டே பூக்களைப் பறிக்கவேண்டும். காலில் செருப்புப் போட்டுக்கொண்டு பறிக்கக் கூடாது. வில்வம், துளசி போன்றவற்றைக் கிளைகளாகப் பறிக்கக் கூடாது. வில்வமானால் மூன்று இலைகளுடனேயே உபயோகித்தல் வேண்டும். இவை இரண்டையும் ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தாலும் நீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம்.

? வழிபாட்டில் இலைகளுக்கும் மகத்துவம் உண்டா?

பச்சை நிறமான இலைகள் யாவும் தாமஸ குணமும் ராஜஸ குணமும் நிறைந்தவை. பத்ரங்கள் பூவுக்குச் சமமானவை. வில்வ இலை, துளசி ஆகிய இரண்டும் உயர்ந்த வகைகளைச் சாரும். மேலும்பல உயர்வகை பத்திர வகைகள் பூஜைக்குச் சிறப்பாகப் பயன் படுத்தப்பட்டன.

அருகம்புல்லினால் விநாயகரைத் தொழ நம் வினைகள் அனைத்தும் விலகும். பஞ்சவில்வங்கள் எனப் போற்றப்படும் முல்லை, கிளுவை, வில்வம், நொச்சி, விளா ஆகிய பத்திரங்களால் சிவனை அர்ச்சிக்க இணை யில்லா ஆனந்தத்தைப் பெறலாம்.

ஞாயிறு - வில்வம்; திங்கள் - துளசி; செவ்வாய் - விளா; புதன் - மாவிலங்கம்; வியாழன் - மந்தாரை; வெள்ளி - நாவல்; சனி- விஷ்ணுகாந்தி என்று வாரத்தின் ஏழு நாள்களும் அந்தந்த நாள்களின் அடிப்படையில் இறைவனை அர்ச்சித்து வழிபடலாம்.

பூக்களைப் பறிக்கும்போது பின்பற்ற வேண்டியவை
பூக்களைப் பறிக்கும்போது பின்பற்ற வேண்டியவை


? பூக்கள் கிடைக்காத சூழல் எனில் என்ன செய்வது?

பூக்கள் கிடைக்கவில்லை எனில் வில்வம், துளசி போன்ற இலைகளைப் பயன்படுத்தி வழிபடலாம். அவையும் இல்லையெனில், அக்ஷதையாலும் தூய நெற்பொரி கொண்டும் வழிபடலாம். இவையும் இல்லையென்றாலும் பக்தியுடன் இறைவனை நினைத்து வழிபடலாம்.

அதற்காக... `மனதில் பக்தி இருந்தால் போதும்; வழிபாட்டு முறைகள் தேவையில்லை' என்று இருந்துவிடக் கூடாது.

பக்திக்கான தன்மைகளை வளர்த்துக் கொண்டு, தினமும் ஞானநூல்களில் சொல்லப் பட்ட வழிமுறைப் படி, நம்பிக்கையுடனும் தூய மனதுடனும் உரிய பொருள்களைக் கொண்டு இறைவனை தவறாமல் வழிபட வேண்டும். அப்போது இம்மைக்கான தேவைகள் நிறைவேறுவதுடன் பிறவியில்லா ஆனந்த நிலையான மோக்ஷத்தை அடையக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

- பதில்கள் தொடரும்...