திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

தேகத்தைப் பொலிவாக்கும் தெய்விக முத்திரைகள்!

தெய்விக முத்திரைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்விக முத்திரைகள்

உலக சித்தர்கள் ஆய்வு கலை மையம்

மு.ஹரி

தெய்வங்களுக்கு மகிழ்வையும் மன நிறைவையும் அளிப்பதும், விரைவாகப் பாவங்களை அகற்றுவதுமான எளிய கிரியைக்கு ‘முத்திரை’ என்று பெயர் என விவரிக்கின்றன ஞானநூல்கள்.

வழிபாட்டிலும், யோக - நாட்டிய சாஸ்திரத்திலும் முத்திரைகளின் பங்கு அளப்பரியது. நாட்டிய சாஸ்திரத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், தாந்திரிகத்தில் 108 முத்திரைகளும் உள்ளன என்பார்கள்.

ஒட்டுமொத்தமாக முத்திரை வகைகள் இத்தனை என்று எவரும் கணிக்க இயலாத வகையில் எண்ணற்ற முத்திரைகள் நம் ரிஷிகளால் உண்டாக்கப்பட்டுள்ளன. தியானம், பிராணாயாமம், பூஜைகள், வேள்வி போன்றவை சிறப்பான பலன்களைத் தர முத்திரைகள் அவசியமாகின்றன. முத்திரைகள் உடல்நலனுக்கும் மனநல மேம்பாட்டுக்கும் பெரும் ஆற்றலை அளிப்பவை. அக்குபஞ்சர், ரெய்க்கி, பிராணிக் ஹீலிங்ஸ் போன்ற இன்றைய நவீன மருத்துவ முறைகளுக்கு முத்திரைப் பயிற்சி, தாய்வீடு எனலாம்.

பஞ்சபூத சக்திகளும் நம் உள்ளங்கையில் அடக்கம் என்பதால் விரல்களை மடக்கி நம் முன்னோர்கள் சொன்ன முத்திரை யோகங்களின்படி உடலுக்கும், மனதுக்கும் சக்தியைத் திரட்டிக்கொள்ளலாம் என்கின்றன யோக சாஸ்திரங்கள். அநேக கர்மங்கள் கரங்களால் செய்யப்படுவதால் உடலில் கரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. பஞ்சபூதங்களின் சாந்நித்தியம் கொண்ட விரல்களால் அநேக சூட்சுமப் பலன்களை அடைகிறோம்.

தேகத்தைப் பொலிவாக்கும் 
தெய்விக முத்திரைகள்!

கட்டைவிரல் அக்னி வடிவம் என்பதால் உடலில் குறிப்பிட்ட வெப்பத்தைத் தக்கவைக்க இந்த விரல் பயன்படுகிறது. ஆள்காட்டி விரல் வாயுத் தன்மை கொண்டது. நடுவிரல் ஆகாயத் தத்துவம் கொண்டது. மோதிர விரல் மண் சக்தி கொண்டது. இது புனிதமான விரல் என்பதால் பவித்ரம் அணிவிக்கப்படுகிறது. சுண்டுவிரல் நீர் தத்துவம் கொண்டது. இது உடலில் இருக்கும் நீர் சக்தியை பாதுகாக்கப் பயன்படுகிறது.

வழிபாடுகளில்... குறிப்பிட்ட முத்திரைகளால் வழிபடப்படுகிற தெய்வங்கள் மகிழ்ந்து, வேண்டிய வரத்தை அளிக்கும் என்கின்றன ஆகமங்கள். காரணாகமம் 32 முத்திரை களைப் பற்றிச் சொல்கிறது. இவற்றை உரிய காலங்களில் செய்து இறைவனை மனத்தில் ஆவாஹனம் செய்து ஞானியாகலாம் என்கிறது.

முத்திரைகள் ஞான வடிவம் என்பதை உணர்த்தவே நம் ஆகமம் மற்றும் ஞான நூல்கள், ஒவ்வொரு தெய்வத்துக்கும் அதற்குரிய முத்திரைகளைத் திருக்கரங்களில் வைத்து, `அந்த முத்திரைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று வழிபடும் பக்தர்களுக்கு வழிகாட்டுகின்றன போலும். ஞானியரின் வடிவங்களிலும் இந்த ஞான முத்திரைகள் இடம் பிடித்திருப்பதைக் காணலாம்!

விரல்களை மடக்கி ஒன்றுடன் ஒன்று இணைத்து எளிமையாகச் செய்யப்படும் இந்த முத்திரைகளால் தெளிவான மனோ திடத்தை மட்டுமன்றி, உடல் நலனையும் பெறலாம் என்கிறது யோக சாஸ்திரம். ஆம், உடலின் அடிப்படையான பஞ்சபூதக் கலவை ஒழுங்கின்றி மாறும்போது, இந்த முத்திரைகள் அதன் அளவைச் சமச் சீராக்கி உடலையும் மனத்தையும் பண்படுத்தி, அதன் வழியே உடலெங்கும் இறையாற்றலை அதிகப்படுத்தி ஞான நிலையை எட்டச் செய்கின்றன. தகுதிவாய்ந்த குருவின் உதவியால் கற்று முத்திரைகளை முறைப்படி பயன்படுத்தினால் வாழ்வே தவமாகும்; தேகம் தெய்விகமாகும்.

அவ்வகையில், தேகத்தில் தெய்விக ஆற்றலைப் பெருக்கச் செய்யும் 5 முத்திரைகளின் சிறப்பை இங்கே காண்போம். பத்மாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து செய்வது நலம். முதுகுத்தண்டு வளையாமல் நிமிர்ந்த நிலையில் அமர்ந்து செய்வதே நல்லது. ஐந்து நிமிடங்கள் கண் மூடி ஆழ்ந்து மூச்சு இழுத்துவிட்டுச் செய்ய வேண்டும். இரண்டு கரங்களிலும் செய்வதே நல்லது.

இதயத்தை வலுப்படுத்தும் சூன்ய முத்திரை

றையோடு ஒன்றிணைக்க வைக்கும் முத்திரை இது. நடு விரலை மடக்கிக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து, கட்டை விரலால் நடுவிரலுக்கு அழுத்தம் கொடுக்கும்படிச் செய்யப்படும் முத்திரை இது. இந்த முத்திரையால் மனத்தில் உண்டாகும் படபடப்பு, பயம் நீங்கும். நல்ல உறக்கம் வரும். மலர்ச்சி உண்டாகி முகம் பொலிவு பெரும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களும் இதய நோய் உள்ளவர்களும் இந்த முத்திரையைச் செய்து நல்ல பலன் பெறலாம். மன ஆற்றல் மேம்படும்.

தேகத்தைப் பொலிவாக்கும் 
தெய்விக முத்திரைகள்!

இந்த முத்திரைகளை, ஆரம்பத்தில் ஐந்து நிமிடங்கள் செய்து, பழகியபிறகு 15 நிமிடங்கள் வரை செய்யலாம். அதிகாலையில் காற்றோட்டமுள்ள இடத்தில் அமர்ந்து, மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்வது சிறப்பு. உங்களின் எதிரில் ஒரு விளக்கு சுடர்விட்டுக் கொண்டிருந்தால் மிகவும் விசேஷம்!

மனத்தைச் செம்மைப்படுத்தும் குபேர முத்திரை

தேகத்தைப் பொலிவாக்கும் 
தெய்விக முத்திரைகள்!

ட்டை விரலின் நுனியை வளைத்து, ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலுடன் இணைத்து, ஒரு மலரைப் பிடித்திருப்பதைப்போல வைத்துக் கொண்டிருக்க, மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் உள்ளங்கையில் இணைந்திருக்கும் முத்திரை இது. செல்வ வளத்தை அளிப்பதோடு மன வளத்தையும் மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த முத்திரை. மனத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கித் தெளிவு கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள் விலகி முகம் பொலிவடையும்.

தடைகளைத் தகர்க்கும் கணபதி முத்திரை

முழுமுதற் தெய்வமாம் விநாயகருக்குக் கணபதி என்றும் பெயர் உண்டு. அந்தப் பெயரில் அமைந்திருக்கிறது இந்த முத்திரை. நின்ற நிலையில் நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைக்கவும். இடக்கை உள்ளங்கையை வெளிப்புறம் பார்க்கும்படியும், வலக்கை உள்ளங்கையை உட்புறம் பார்க்கும்படியும் வைத்து, இரண்டு கை விரல்களையும் கொக்கிபோல் கோத்து இழுத்துப் பிடிக்கவும். கைகளை இழுத்துப் பிடிக்கும்போது மூச்சை வெளிவிடவும். கைகளை இலகுவாக வைக்கும்போது மூச்சை உள்ளிழுக்கவும்.

தேகத்தைப் பொலிவாக்கும் 
தெய்விக முத்திரைகள்!

இதேபோல் ஆறு முறை செய்யலாம். பின்னர் வலக்கை உள்ளங்கையை வெளிப்புறம் பார்க்கும் படியும், இடக்கை உட்புறம் பார்க்கும்படியும் வைத்து ஆறு முறை செய்ய வேண்டும். ‘பதி’ என்ற பரம்பொருளைக் காண முயல்வதே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் முதற்கடமை. ஆனால், அதற்கு ஏற்படும் தடைகளோ ஏராளம். அந்தத் தடைகளைக் கடக்க உதவுவதே கணபதி முத்திரை.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் ஆதி முத்திரை

பிறக்கும் முன்பே குழந்தை கருவில் இறையருளால் பிடித்திருக்கும் முத்திரை இது. இந்த முத்திரையில்தான் குழந்தைகள் உறங்கும். இதுவே தவத்துக்கான முத்திரையாகவும் உள்ளது. அம்பிகை தவக்கோலத்தில் இருக்கும் முத்திரை இது.

தேகத்தைப் பொலிவாக்கும் 
தெய்விக முத்திரைகள்!

இந்த முத்திரையைக்கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தால், உடலில் உயிரோட்டம் சீராக நடைபெறும். உயிர்சக்தி பாதுகாக்கப்படும். உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மன ஒருமைப்பாடு கிடைக்கும்.

மனச்சோர்வை நீக்கும் சின் முத்திரை

ட்டைவிரல் தெய்வ சக்தியையும், ஆள்காட்டி விரல் மனித சக்தியையும் குறிக்கிறது. மனிதன் முயன்றால் தெய்வமாகலாம் என்பதன் எளிய வடிவமே சின் முத்திரை.

தேகத்தைப் பொலிவாக்கும் 
தெய்விக முத்திரைகள்!

கட்டை விரலை ஆள்காட்டி விரல் குனிந்து தொட மற்ற மூன்று விரல்கள் நிமிர்ந்திருக்கும் முத்திரை. இந்த முத்திரையில் அமர்ந்து கடவுளைத் தியானித்தால் எண்ணியவை நிறைவேறும். கோபம், மன அழுத்தம், கவலைகள் நீங்கும். ஞாபகசக்தி மேலோங்கும். மனச்சோர்வு நீங்கும். படித்தவை நினைவில் நிற்கும்.