ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

திருமகள் தீபாவளி

தீபாவளி தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி தரிசனம்

தீபாவளி தரிசனம்! - பி.சந்திரமௌலி

தீபாவளித் திருநாளுக்குப் பல காரணங்களை, பல்வேறு சிறப்புகளைச் சொல்கின்றன புரா ணங்கள். அவற்றில் நரகாசுரனின் கதையே பெரும்பாலும் பேசப்படுகிறது.

தீபாவளி தரிசனம்
தீபாவளி தரிசனம்


நரகாசுரன் பூமாதேவியின் மகன். அசுரன் இரண்யாட்சனை அழிக்க வராஹ அவதாரம் எடுத்த பெருமாளுக்கும் பூமிப் பிராட் டிக்கும் பிறந்தவனே நரகாசுரன்.

இவன் பிரம்மனிடம் சாகா வரம் கேட்டான். அப்படியான வரத்தைத் தர இயலாது என்று மறுத்தார் பிரம்மன்.

``எனில், எனது மரணம் என் அன்னையால் நிகழ வேண்டும்’’ என்று வரம் கேட்டான். பெற்ற தாயே மகனைக் கொல்ல மாட்டாள் என்ற எண்ணத்தில் இந்த வரத்தைக் கேட்டான். பிரம்மதேவனும் வரம் தந்தார். அதன்படியே அவன் முடிவும் அமைந்தது. பூமிதேவியின் மகன் என்பதால்தான் நரகாசுரனுக்கு பௌமன் என்றும் பெயர் உண்டு!

நரகாசுரன் ப்ரக்ஜோதிஷ புரத்தைத் தலைநகரகாகக் கொண்டு ஆட்சிபுரிந்தான். அவனுடைய தேசத்துக்குப் பாதுகாவலாக கிரி துர்கம், அக்னி துர்கம், ஜல துர்கம், வாயு துர்கம் எனும் நான்கு கோட்டைகள் இருந்தன. இந்த நான்கு கோட்டைகளையும் அழித்து நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் கண்ண பரமாத்மா என்கிறது திருக்கதை.

அதாவது, பஞ்சபூதங்களால் ஆன நம் உடலுக்குள் புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கெல்லாம் அருள்புரிகிறார் கண்ணன் என்பதைக் குறிக்கிறதாம் இது.

கிரி துர்கம் - மண்; அக்னி துர்கம் -நெருப்பு; ஜல துர்கம் - தண்ணீர்; வாயு துர்கம் - காற்று. ஆக, நிலம், நெருப்பு, நீர், காற்று எனும் நான்கையும் சொல்லியிருப்பதால், ஐந்தாவது பூதமான ஆகாயமும் இதில் சேரும்.

பஞ்ச பூதங்களால் ஆன நம் உடலில், பகவானைக் குடியேற்ற வேண்டும்.பகவானுக்கு நம் உள்ளத்தில் இருக்க இடம் கொடுத்தால், அவன் நமது உள்ளத்தில் உள்ள அறியாமையை நீக்குவான்; ஞான ஒளி பிரகாசிக்கும். இதுவே தீபாவளியின் உட்பொருள்.

‘`தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது- அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி’’ என்கிறார் பகவான் ரமணர்.

ஜோதிமயமான ஸ்வாமியை உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக வைத்து, வழிபடுகிறோம். இதன் காரணமாகவே தீப ஆவளி என்பது தீபாவளி என்றானது. இதையே திருமகள் தீபாவளி என்றும் லட்சுமி தீபாவளி என்றும் சொல்வர்.

நரகாசுரனை அழிக்க கண்ணன் சென்ற போது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர்.

அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி!

இதன் காரணமாகவே தீபாவளியன்று தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம். சிலர் தீபாவளியன்று புதுவருடக் கணக்கு தொடங்குவதும், இந்தத் திருமகள் வழிபாட்டை முன்னிட்டே நடைபெறுகிறது.

தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடும்போது, ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் கீழ்க்காணும் பாடலைப் பாடி அலைமகளை வணங்கி வழிபடலாம்.

நமோ(அ)ஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை

நமோ(அ)ஸ்து பூமண்டல நாயிகாயை

நமோ(அ)ஸ்து தேவாதிதயாபராயை

நமோ(அ)ஸ்து ஸார்ங்காயுத வல்லபாயை

இந்த ஸ்தோத்திரத்தைப் பாடலாம். அல்லது கீழ்க்காணும் துதிப் பாடலைப் பாடியும் வழிபடலாம்.

தாயென்று தினம் காக்கும்  

தீப லட்சுமியே போற்றி 

நோயின்றி வாழவை

தீப லட்சுமியே போற்றி

வாதைதரும் துயர்தீர்ப்பாய்    

தீப லட்சுமியே போற்றி  

பாதை காட்டி அருள்புரிவாய்

தீப லட்சுமியே போற்றி போற்றி!

இங்ஙனம் வழிபடுவதால், நமது வறுமைகள் யாவும் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் பொங்கிப் பெருகும்; துன்பங்களும் தடைகளும் நீங்கி, திருமகள் அருளால் நம் வாழ்க்கை ஒளிரும்.

காளியைப் போற்றும் திருவிழா!

தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள்.

தீபாவளி நாளில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடி னார்களாம். இதனால் குஜராத் மாநில மக்கள் தீபாவளியில் சொக் கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் தோன்றி யவர் தன்வந்திரி. அவர் தோன்றிய நாள் தீபாவளி.

சிவபெருமானின் திருமேனியில் பாதியை அடைய திருக் கேதாரத்தில் தவம் செய்தாள் பார்வதி. சதுர்த்தசி நாளில் சக்திக்குத் தன் உடலில் பாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன்.

தீபாவளி திருநாளிலேயே ஆதிசங்கரர் தனது ஞான பீடத்தை ஏற்படுத்தினாராம்.

வாரணாசியில் கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில், சீதாதேவியை மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் ‘மகாநிசா’ என்ற பெயரில் காளிதேவிக்கு விழா எடுக்கிறார்கள். அன்று புத்தாடைகள் வாங்கும் வழக்கமில்லை.

கொல்கத்தாவில் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறும். மகாராஷ்டிர மாநிலத்தில் தாம்பூலம் போடும் திரு நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அங்கே, அன்று `உடன்’ எனப்படும் நறுமண எண்ணெயைத் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் உண்டு.

வழிபாட்டு நேரங்கள்!

தீபாவளி கொண்டாட்டத் திரு விழா மட்டுமல்ல. அது ஓர் ஆன்மிகப் பண்டிகையும்கூட. தீபாவளியை ஒட்டி பல்வேறு வழிபாடுகள் செய்யும் வழக்கம் நம் தேசத்தில் உண்டு. அவற்றுள் லட்சுமி குபேர பூஜை, கேதார கௌரி விரதம் மற்றும் அமாவாசை வழிபாடு ஆகியவை முக்கியமானவை.

இந்த ஆண்டு 24.10.22 திங்கள் கிழமை அன்று தீபாவளி வருகிறது. மறுநாள் அமாவாசையோடு சேர்ந்து சூரிய கிரகணமும் வருகிறது. எனவே, நம் வழக்கமான வழிபாடுகளை அதற்கேற்பத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

பூஜைகள் செய்ய உகந்த நேரம்:

லட்சுமி குபேர பூஜை : 24.10.22 அன்று மாலை 6-53 to 8-16 வரை

கேதார கௌரி விரதம் : 25.10.22 அன்று காலை 7.45 முதல் 8.45 வரை

அமாவாசை தர்ப்பணம் : 25.10.22 அன்று பகல் 11 மணிக்குள்

சூரிய கிரகணத் தர்ப்பணம் : 25.10.22 அன்று மாலை 4.45 முதல் 5.45 வரை.

தீபாவளி வழிபாடுகள்!

தமிழகத்தில் தீபாவளி என்பது நரக சதுர்த்தசி மட்டுமே. ஆனால் சில மாநிலங்களில், அடுத்த நாளான அமாவாசை மற்றும் பிரதமை வரை மூன்று நாட்கள் வரையிலும் கொண்டாடப்படுகிறது.

‘தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா’ என்பர். இந்த தினத்தில் எண்ணெயில் லட்சுமியும், தண்ணீரில் கங்கையும் இருப்பார்கள். அதாவது நரகசதுர்த்தசி அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடை அணிந்துகொள்வது வழக்கமாக இருக்கிறது.

அதேபோல், கங்கா ஸ்நானமும் அன்னபூரணி தரிசனமும் இந்த நன்னாளில் மிக விசேஷம். அடுத்த நாள் அமாவாசை, வடக்கே ‘ஸாத் பூஜா’ என்று தங்கள் இல்லத்தில் இருக்கும் ஆண்களின் நலனுக்காக பெண்கள் செய்யும் பூஜை நடக்கும். இதேபோல இங்கே கேதார கௌரீ விரதம், மாங்கல்ய பலத்துக்காகச் செய்யப்படுகிறது.

அமாவாசை தினத்தன்று மாலை லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது. சூரிய அஸ்தமன நேரத்தில், மகாலட்சுமியை முறைப்படி பூஜித்து, அவருடன் குபேரரையும் பூஜிப்பது வழக்கம்.