
தீபாவளி தரிசனம்!
வாழ்வில் ஒருமுறையேனும் காசி போன்ற புண்ணிய க்ஷேத்திரங் களுக்கு நேரில் சென்று அங்கே பாயும் கங்கையில் நீராடி மகிழ வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கும் அன்பர்களும் உண்டு.

அந்த வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கலாம்; பலருக்கும் கிடைக்காமல் போகலாம். அப்படி காசி - கங்கை தீரத்துக்குச் செல்ல இயலாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்?
`அப்படியான பக்தர்களைத் தேடி நானே வருவேன்’ என்று சங்கல்பம் ஏற்றவளாக, கங்காதேவி தென்னகத்தில் பொங்கி எழுந்து அருள்பாலித்த தலங்கள் பல உண்டு! அவற்றில் ஒன்றுதான் திருப்பூந்துருத்தி. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. அம்பாள் செளந்தர்ய நாயகியுடன் அருள்மிகு புஷ்பவனேஸ்வரராக ஐயன் கோயில் கொண்டிருக்கும் அற்புதத் திருத்தலம்!
பெரும் தவசீலர் காசியப முனிவர். இவர் `ஒரே நாளில் வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்குமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய 13 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிப் புண்ணியம் பெற வேண்டும்’ என்று சங்கல்பம் ஏற்றிருந்தார்.
அதன்பொருட்டு சிவத்தலம்தோறும் சென்று வழிபட்டு வந்தார். அப்படி திருப்பூந்துருத்தி வந்தடைந்து இங்கு கோயில்கொண்டிருந்த ஈசனை வழிபட்டபோது, ஈசன் அவருக்குக் காசிவிஸ்வநாதராக தரிசனம் கொடுத்தார். மேலும், அங்கே ஒரு தீர்த்தம் ஒன்றை உரு வாக்கி அதில் 13 புனித தீர்த்தங்களையும் எழுந்தருளச் செய்தாராம்.
இங்கு வந்து வழிபட்டால் காசிக்குச் சென்று இறைவனை தரிசித்த பலன் கிடைக்கும். ஆடி அமாவாசை போன்ற புண்ணிய தினங்களில், இங்குள்ள காசிப தீர்த்தத்தின் ஒரு துளி நம் மீது விழுந்தாலே, கங்கை முதலான 13 நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்!
- சி.கண்ணன், கும்பகோணம்
வரலாற்றில் தீபாவளி!
உஜ்ஜயினி அரசன் விக்கிரமாதித்தன், ‘சாகாஸ்’ என்பவர்களை வென்று, வாகை சூடிய நாள் தீபாவளி என்பர். அதேபோல், மௌரியப் பேரரசன் அசோகன் தனது திக் விஜயத்தை முடித்து, நாடு திரும்பிய நாளாக தீபாவளியைச் சொல்வார்கள்.
கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டு தோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்குத் தீபாவளிப் பரிசு வழங்கிய தாகக் கன்னட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு உள்ளது.
தீபாவளியை வாத்ஸ்யாயனர் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட் டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வது உண்டு.
- கா.ருத்ரா, தூத்துக்குடி