ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

'மணல் சோறாகுமா?'

தீபாவளி தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி தரிசனம்

தீபாவளி தரிசனம்

தீபாவளி என்றதும் காசியும் அன்னபூரணியும் நம் மனதில் தோன்றுவார்கள். ஆம், அம்பிகையே அகிலம் அனைத்துக்கும் பசிப் பிணி போக்கும் அன்னபூரணியாகவும் திகழ் கிறாள் என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.

தீபாவளி தரிசனம்
தீபாவளி தரிசனம்

அம்பாள் அன்னபூரணி எனில், ஐயன் ஈசன்..? அவரை அன்னவினோதன் எனச் சிறப்பிக்கின்றன புராணங்கள்.

தென்னாடுடைய சிவபெருமான் இங்ஙனம் அன்னவிநோதனாய் அருள்பாலித்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று தென்னகத்து வைகை தீரத்தில் ஒரு க்ஷேத்திரத்தில் நடந்தேறியது.

வைகை தீரத்தில் சிவபக்தியில் சிறந்த வேதியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். தலபுராணம் அந்த வேதியரைச் சொக்கர் என்று பெயரிட்டு அழைக்கிறது. வறுமையில் வாடினாலும் அறக் குணங்களில் இருந்து வழுவாமல் வாழ்ந்து வந்தார் வேதியர்.

தன் குடும்பமே பட்டினி கிடந்தாலும் வருந்தாதவர், அவ்வூர் ஸ்வாமிக்கு நைவேத்தி யம் செய்ய இயலவில்லை எனில் தவியாய்த் தவித்துவிடுவார். ஓவ்வொரு நாளும் எப்படியேனும் கஷ்டப்பட்டாவது அன்னம் கொண்டு வந்து சிவனாருக்கு நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபட்டுவிடுவார்.

அவரின் இந்த பக்தியும் மாண்பும் தனக்கு மட்டும் தெரிந்தால் போதுமா? உலகுக்குத் தெரியவேண்டாமா என்று சிவப்பரம் பொருள் எண்ணியது போலும்; திருவிளை யாடல் புரிந்தது.

ஒரு நாள், பழக்கதோஷத்தில் நைவேத்தியம் சமைப்பதற்காக உலை வைத்துவிட்டார் வேதியர். அப்புறம்தான், மணி அரிசிகூட இல்லை என்பது நினைவுக்கு வந்தது. ‘ஐயோ அபசாரம் செய்துவிட்டேனே’ என்று கதறினார். அப்போது, ‘கவலைப்படாதே சொக்கா’ என்று அசரீரி கேட்டது. கருவறைப் படியில் மோதி அழுது கொண்டிருந்தவர், அசரீரியைக் கேட்டு அயர்ச்சியுடன் தலைநிமிர்ந்தார்.

‘சொக்கா, வைகைக்குப் போ. கை நிறைய மணல் எடுத்து வந்து, அன்னபூரணியை மனதார வணங்கி பானையில் இடு. இன்று முதல், உனது பானை பொங்கப் பொங்கச் சோறளிக்கும்!’ என்று ஆணை பிறப்பித்தது அசரீரி ஒலி!

இப்போது வேதியரின் அயர்ச்சி, அதிர்ச்சியானது! `சாத்தியமா? இது என்ன வேடிக்கையா? மந்திரத்தில் மாங்காய் விழுமா? மணல் சோறாகுமா?’ என்றெல்லாம் திகைப்புடன் எழுந்து நின்று ஸ்வாமியை நோக்கினார்.

ஆப்புடையார்கோயில்
ஆப்புடையார்கோயில்

லிங்கத் திருமேனியரைக் கண்ட வுடன் இப்போது வேறொரு எண்ண மும் நம்பிக்கையும் முளைத்தது அவருக்குள். இறைவனார் திருவுளம் கொண்டுவிட்டால் எதுதான் நடக்காது, என்னதான் நடக்காது? ஆகவே தெய்வ வாக்குக்குச் செவிமடுப்போம்’ என்று தீர்மானித்தார்.

வேகவேகமாக வைகைக்கரைக்குச் சென்றார். ஆற்று மணலெடுத்து வந்து உலையிலிட்டார். உலை கொதித்து, அரிசி வெந்து சோறாகி, அன்னப் பூக்கள் மலர்ந்தன. அன்னம் மலர்த்திய வைகைக் கரை ஈசனார், அன்ன வினோதன் எனும் திருநாமம் கொண்டார். இப்படியான அற்புதம் நிகழ்ந்த தலம் எது தெரியுமா?

`ஆப்புடையார்கோயில்’ என்று தற்போது வழங்கப் பெறும் இந்தத் திருக் கோயில், மதுரை நகருக்குள் - செல்லூர் பகுதியில் இருக்கிறது; வைகை ஆற்றின் வடகரையில் தாழ் பாலத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இத்தலத்தை திருஆப்பனூர் எனப் போற்றுகிறது தேவாரம். சிறிய கோயில்தான் என்றாலும் கீர்த்தியுடன் திகழ்கிறது.

இங்கு அருளும் இறைவனை மிக அற்புதமாகப் பாடிப் பரவுகிறார் திருஞானசம்பந்தப் பெருமான். குறிஞ்சிப் பண்ணில் அவர் பாடிய பதிகம் வினைப் பற்று அறுப்பவர் என்று இவ்வூர் ஈசனைச் சிறப்பிக்கிறது.

முற்றும் சடைமுடிமேல் முதிரா இளம்பிறையான்

ஒற்றைப் பட அரவம் அதுகொண்டு அரைக்கணிந்தான்

செற்றமில் சீரானைத் திரு ஆப்பனூரானைப்

பற்று மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே

- என்று தொழுகிறது ஆப்பனூர் இறைவனை. அதாவது, இந்த ஈசன் பாம்பணிந்தவரே தவிர, அவருக்குச் சினம் இல்லையாம். இவரைப் பற்றிக் கொண்டவர்களுக்குப் பிற பற்றுகள் எல்லாம் போய்விடுமாம்!

திருஆப்பனூர்க் காரணர், ஆப்பனூர் ஈஸ்வரர், ஆப்ப புரீஸ்வரர் முதலான திருநாமங்களும் உண்டு இங்குள்ள ஈசனுக்கு. பாண்டிய மன்னன் ஒருவனுக்காக ஆப்பு ஒன்றில் தோன்றி அருள்பாலித் ததால் இப்படியான திருப்பெயர்கள் இறைவனுக்கு ஏற்பட்டன என்கிறது தலபுராணம்.

ஸ்வாமி சந்நிதிக்கு இணையாகவே அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாளுக்கு அருள்மிகு குரவம்கமழ் குழலி என்று திருநாமம். வேண்டிய வரங்களை வேண்டியபடி அருளும் தாய்.

ஆப்பனூருக்கு ரிஷபபுரி (தமிழில் இடபபுரி) என்றும் ஒரு பெயர் காணப்படுகிறது. ரிஷபம் வந்து இறைவ னாரை வழிபட்ட தலம் என்பதாக ஐதீகம். ஆகவே, இறைவனாருக்கு, ‘ரிஷபபுரீஸ்வரர்’ என்றும் ஒரு பெயர் உண்டாம்.

ஆப்பனூர் எனும் இந்த ஊருக்கு வந்து அம்மையையும் அப்பனையும் ஒருமுறை வழிபட்டுச் சென்றால், வீட்டில் அன்னத்துக்குக் குறையே இருக்காது என்பது பெரியோர்கள் வாக்கு!

`ஆழ்வார்கள் ஏற்றிய தீபங்கள்!’

தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து, அதன் ஒளிச் சுடர் போன்று நம் வாழ்வும் இன்ப ஒளியால் நிரம்பித் திகழவேண்டும் எனும் பிரார்த்தனையுடன் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. இந்த நாளில் தீபத்துடன் தொடர்புடைய தலங்களைத் தரிசிப்பதும் அந்தத் தலங்கள் தொடர்பான திருக்கதைகளைப் படிப்பதும் பெரும் புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

தீபம் என்றதுமே நன் நினைவுக்கு வரும் சிவத் தலம் திருவண்ணாமலை. அதேபோல், வைணவம் போற்றும் தலம் - காஞ்சி விளக்கொளி பெருமாள் ஆலயம். இந்த வரிசையில் ஆழ்வார்கள் பாசுரங்களால் தீபமேற்றிப் பெருமாளைப் போற்றிய தலம்தான் திருக்கோவிலூர்.

முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் ஓரிடத்தில் சேர்த்து, அவர்கள் மூலம் உலகை உய்விக்க எம்பெருமான் திருவுளம் கொண்டார். அதன்படி மூவரும் திருக்கோவிலூர் தலத்தை அடைந்தனர்.

அங்கே, வைணவர் ஒருவரது இல்லத்தில் இருந்த இடைகழியில் தங்கியிருந்தார் பொய்கையாழ்வார். அப்போது பூதத்தாழ்வாரும் அங்கு வந்தார். ‘இந்த இடத்தில் ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்’ என்று பொய்கையாழ்வார் சொல்ல, இருவரும் அமர்ந்தனர்.

சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் வந்தார். ‘இங்கு இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்’ என்று கூறி, மூவரும் நின்றுகொண்டனர். மூவரும் பகவானின் மகிமைகளைப் பேசிக் களித்திருந்தனர். அப்போது நான்காவதாக ஓர் நபர் உட்புகுந்தது போன்று நெருக்கம் ஏற்பட்டது. இருள் சூழ்ந்துவிட்ட அந்த வேளையில் புதிதாக வந்திருப்பது யார் என்று தெரிய வேண்டாமா?

எனவே பொய்கையாழ்வார், ‘வையம் தகழியா...’ என்று துவங்கி தமது பாசுரத்தால், பூமியாகிய தகழியில் கடல் நீரையே நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார்.

பூதத்தாழ்வார், ‘அன்பே தகழியா...’ எனத் தொடங்கி அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தனையைத் திரியாகவும் கொண்டு ஞான தீபம் ஏற்றினார். பேயாழ்வார் ‘இந்த இரண்டு ஒளியினாலும் இருள் அகன்றதால் எம்பெருமானைக் கண்டேன்’ என்று பாசுரம் பாடுகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது திருக்கோவிலூர்; திருவண்ணாமலையில் இருந்து சுமார் 34 கி.மீ. தொலைவு.

பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்று திருக்கோவிலூர் (மற்றவை: திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, திருக்கண்ண கவித்தலம்). புராணங்களும் கிருஷ்ண க்ஷேத்திரம் என்றே இத்தலத்தைச் சிறப்பிக்கின்றன.

திருக்கோவிலூர் கோயிலில், சத்யபாமா- ருக்மிணி தேவியருடன் சாளக்கிராம மேனியராக அருள்கிறார் வேணுகோபாலன். இவரையே ஆதிக்ஷேத்திராதிபதியாகக் கருதுவதால், பெரும்பாலும் இவரை முதலில் தரிசித்துவிட்டே உலகளந்த பெருமாளைத் தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள்.

நாமும் நம் மனத்துள் அன்பெனும் விளக்கேற்றி, மாசுகள் எனும் இருளகற்றி, உள்ளே பரம்பொருளைக் குடியிருத்தி, நாளும் நல்லதே செய்து, நல்லொளி பெருக்கி மகிழ்வோம்!