Published:Updated:

சூரிய கிரகணத்தன்று அமாவாசை தர்ப்பணமும் செய்ய வேண்டுமா? சாஸ்திரம் சொல்வது என்ன?

தர்ப்பணம் ( Sudip Biswas )

ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டுமா என்னும் குழப்பம் பலரிடையே நிலவி வருகிறது. ஒரு சிலர் கிரகண தர்ப்பணம் செய்தால் போதும். அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள். இது குறித்து சாஸ்திரம் சொல்வது என்ன?

சூரிய கிரகணத்தன்று அமாவாசை தர்ப்பணமும் செய்ய வேண்டுமா? சாஸ்திரம் சொல்வது என்ன?

ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டுமா என்னும் குழப்பம் பலரிடையே நிலவி வருகிறது. ஒரு சிலர் கிரகண தர்ப்பணம் செய்தால் போதும். அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள். இது குறித்து சாஸ்திரம் சொல்வது என்ன?

Published:Updated:
தர்ப்பணம் ( Sudip Biswas )
தீபாவளிக்கு அடுத்த நாள் அமாவாசை. அமாவாசை திதி என்றாலே அது முன்னோர்கள் வழிபட வேண்டிய நாள் என்பது பொருள். இந்த நாளில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் தந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு அமாவாசை தினத்தில் சூரிய கிரகணமும் வருகிறது.

கிரகண காலத்தில் தர்ப்பணம் செய்யும் வழக்கமும் நம்மிடையே உண்டு. அப்படியானால் ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டுமா என்னும் குழப்பம் பலரிடையே நிலவி வருகிறது. ஒரு சிலர் கிரகண தர்ப்பணம் செய்தால் போதும். அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள். சிலர் இரண்டுமே செய்ய வேண்டும் என்கிறார்கள். எனவே இதைப் பற்றிய தெளிவைப் பெற நாம் வேத சாஸ்திர விற்பன்னர்களோடு பேசினோம்.

தர்ப்பணம்
தர்ப்பணம்

ஓர் ஆண்டில் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதாவது தமிழ் மாதப் பிறப்பு, மாதந்தோறும் வருகிற அமாவாசை திதி, மகாளய பட்சத்தின் 15 நாள்கள், கிரகண காலங்கள், திதி முதலான நாள்கள் எனத் தர்ப்பணங்கள் செய்ய வேண்டியது ஒரு கர்த்தாவின் கடமை என்கிறது தர்ம சாஸ்திரம். இவற்றில் கிரகண தர்ப்பணம் என்று வரும்போது சந்திர கிரகண காலத்தில் பிரச்னை இல்லை. ஆனால் அமாவாசையோடு வரும் சூரிய கிரகணம் குறித்த சில அபிப்ராய பேதங்கள் உள்ளன. இந்த ஆண்டு அமாவாசை 25.10.22 அன்று நிகழ்கிறது. அன்று மாலையே சூரிய கிரகணமும் தோன்றுகிறது.

அமாவாசை திதி அன்று சூரிய கிரகணம் வந்தாலும் அது ஒன்றாக ஒரே நேரத்தில் வரவில்லை. பகல் பொழுதை ஐந்து பாகமாக பிரித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும். இந்த அபரான்னம் ஒரு நாளின் 24 நாழிகைகளுக்கு உட்பட்டு இருக்கும். அபரான்ன காலத்துக்குள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணங்கள் ஆகியன கொடுப்பதுதான் சாஸ்திரப்படி சரி. அதாவது பகல் உணவுக்கு முன்பு. அதற்குப் பின்பு தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் இல்லை.

ஒருவேளை சூரிய கிரகணமும் அமாவாசை தர்ப்பண நேரமும் மாறுபாடு இல்லாமல் ஒரே நேரத்தில் வருமானால் இரண்டுக்கும் தனித்தனியாகத் தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த ஆண்டு இரண்டும் செய்ய வேண்டிய காலம் மாறுபடுகிறது. கிரகணமும் அமாவாசை முடியும் தறுவாயில்தான் கிரகணம் பிடிக்கிறது. மாலை வேளையில் அமாவாசை தர்ப்பணம் செய்யக்கூடாது.
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

காரணம், அமாவாசை தர்ப்பணம் என்பது 22 நாழிகைகளுக்குள் செய்ய வேண்டியது. இந்த ஆண்டு சூரிய கிரகணமோ 27 வது நாழிகையில்தான் வருகிறது. எனவே, அனைவரும் தவறாமல் காலையில் அமாவாசை தர்ப்பணமும் சூரிய கிரகண காலத் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதுதான் தர்ம சாஸ்திரம் சொல்லும் விதி.

அமாவாசை தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது?

அப்படியானால் இந்த ஆண்டு தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் எது என்று கேட்கிறார்கள். 25.10.22 அன்று காலை 9 மணிக்குள் உணவு உட்கொள்ள வேண்டும். எனவே அதற்கு முன்பாக அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். நடைமுறையில் அலுவலகம் செல்பவர்கள் காலையிலேயே தர்ப்பணம் செய்துவிட்டு பணிக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். அது சாஸ்திர விரோதம் இல்லை. காரணம், 10 நாழிகை முன்னாகச் செய்யலாம். எனவே காலை 8.30க்குள் தர்ப்பணம் செய்து 9 மணிக்குள் உணவு உட்கொள்ளலாம் தவறில்லை. அதேபோன்று சூரிய கிரகணத் தர்ப்பணம் முடிந்தபின்பு புதிதாக உணவு சமைத்து உண்ணலாம்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

சிலர் சொல்வதுபோல் மறுநாள் காலையில் சூரியனைப் பார்த்துவிட்டு பின் உண்ணவேண்டும் என்றால் பலருக்கும் உடல் நலக் கோளாறு வந்துவிடும். உடல் நலனை பாதிக்கும் எதையும் தர்ம சாஸ்திரம் அறிவுறுத்துவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் என்று விளக்கினார்கள் சாஸ்திர நிபுணர்கள்.

எனவே 25.10.22 அன்று காலை 9 மணிக்குள் அமாவாசைத் தர்ப்பணமும் மாலையில் சூரிய கிரகணத் தர்ப்பணமும் செய்ய வேண்டியது அவசியம்.