Published:Updated:

தெய்வம்...குரு...தோழன்... “எல்லாமே எனக்குப் பிள்ளையார்தான்!”

டாக்டர் கமலா செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் கமலா செல்வராஜ்

வி.ஐ.பி ஆன்மிகம்

தெய்வம்...குரு...தோழன்... “எல்லாமே எனக்குப் பிள்ளையார்தான்!”

வி.ஐ.பி ஆன்மிகம்

Published:Updated:
டாக்டர் கமலா செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் கமலா செல்வராஜ்

படங்கள்: எல்.சந்தீப்

உயிர் காக்கும் மருத்துவமனை பலருக்குக் கோயிலாக இருக்க, பல கருக்களுக்கு உயிர் கொடுத்து ஜனிக்கவைக்கும் டாக்டர் கமலா செல்வராஜின் மருத்துவமனைக்குள், ஓர் அழகான கோயிலே இருக்கிறது. சென்னை நுங்கம்பக்கத்தில் இருக்கும் ஜீஜீ மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே வரவேற்கிறது கோயில் மணியோசை.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன், அவருடைய தந்தை ஜெமினி கணேசன் கொடுத்த 10 கிரவுண்டு இடத்தில் மருத்துவமனை கட்டும்போதே உருவாக்கப்பட்ட கோயில் இது. டாக்டர் கமலா செல்வராஜின் இஷ்டதெய்வமான விநாயகர்தான் இங்கே பிரதான தெய்வமாக அருள்பாலிக்கிறார்.

விநாயகர்
விநாயகர்


‘`ரொம்பச் சின்ன கோயிலாக இருந்தது... இந்த மண்டபம் எல்லாம் அப்புறமாக வந்தது. நான் மருத்துவம் படிச்சு முடிச்சதும் அப்பாவிடம், ‘இந்த இடம் காலியாகத்தானே இருக்கு. எனக்குக் கொடுங்களேன் ஆஸ்பிடல் கட்டிக்கிறேன்’னு சொன்னதுமே, கொஞ்சமும் யோசிக்காமல், ‘எடுத்துக்கோம்மா’ன்னு அப்பா சொன்னதை இப்போதும் மறக்க முடியல. ஒரு ஜனவரி மாதம் 31-ம் தேதி கட்டட வேலை தொடங்கியது. வானம் தோண்டும்போதே, இந்த இடத்தின் மண்ணை எடுத்து மகா பெரியவாளிடம் ஆசீர்வாதம் வாங்கித்தான் கட்ட ஆரம்பிச்சேன்.

அதே மாதிரி அப்பாவுடன் ஷூட்டிங் போன போது நாகப்பட்டினம் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில் எல்லா இடத்திலும், ‘ஆரம்பிச்ச ஒரு வருஷத்துக்குள்ள மருத்துவமனை கட்டிட்டா, திரும்ப உங்க கோயிலுக்கு வருவேன்’னு வேண்டிட்டு வந்தேன். அதே மாதிரி ஒரு வருஷத்துக்குள்ள முடிச்சிட்டோம். மருத்துவமனையைத் திறந்ததும் வேண்டிக்கிட்டபடியே அந்தத் தலங்களுக்கெல்லாம் போய்ட்டும் வந்தேன்’’ என்று மதபேதம் இல்லாத பக்தியுடன் தன் கனவு மருத்துவமனையைத் தொடங்கிய வரலாற்றை விவரித்தார் டாக்டர் கமலா.

டாக்டர் கமலா
டாக்டர் கமலா
விநாயகர் சந்நிதி
விநாயகர் சந்நிதி

‘`இந்தக் கோயிலையும் அப்போதுதான் சின்னதா கட்டினேன். விநாயகர் எனக்குப் பிடிச்ச தெய்வம். அவர் இல்லாமல் நான் இல்லை. இங்கே மெயினா இருக்கிற பெரிய விநாயகர்தான் முதலில் பிரதிஷ்டை பண்ணினது. பக்கத்தில் இருக்கிற குட்டி விநாயகரை, முதலில் எங்க வீட்டில் துளசி மாடத்துக்குப் பக்கத்தில் வெச்சிருந்தோம். அப்புறமா இங்கே கொண்டு வந்து வெச்சோம். இவரும் ரொம்ப ராசியானவர்!’’ - புன்முறுவலுடன் சொல்கிறார்.

‘`இப்போ தினமும் சாஸ்திரிகள் வர்றார். முன்பு நானே பூஜை பண்ணுவேன். இப்போ முதுகுவலி பிரச்னை யால் குனிந்து செய்ய முடியல. இங்கே வர்ற எல்லாருக்கும் குழந்தை வரம் கொடுக்கும் வரப்பிரசாதி இவர். ரொம்பக் கஷ்டமான கேஸ்களுக்குச் சிகிச்சை அளிக்கிறப்போ, நானும் அவங்களுக்காக 108 தடவை இந்தப் பிள்ளையாரைச் சுத்துவேன்.

அதுக்காகவே 108 நாணயங்கள் டப்பாவில் போட்டு வெச்சிருக்கேன். கிட்டத்தட்ட 100 கேஸுக்கு மேல சுத்திருக்கேன். அத்தனை பேரும் நல்லபடியா குழந்தை பெத்திருக்காங்க. கடைசியா எங்க வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் மருமகளுக்காகச் சுத்தினேன். இப்போ சுத்த முடியறதில்லை. உடம்பு ஒத்துழைக்கல.. மனசுல வேண்டிக்கிறதோடு சரி..!’’ என்றபடியே, விநாயகர் சந்நிதியை மெதுவாக வலம் வந்தார்.

கோயிலின் பக்கவாட்டில் நீளமான இரும்புக் கம்பியில் வரிசையாக வெண்கல மணிகள் தொங்கின. கர்ப்பக்கிரஹத்தின் நேர் பின்னால் காளிங்க நர்த்தனம் போல, நாகத்தின் வாலைப் பிடித்தபடி நின்ற கோலத்தில் வித்தியாசமாக ஒரு வெண்கல விநாயகர் தரிசனம் தருகிறார்.

‘`எதற்காக இத்தனை மணிகள் டாக்டர்?’’

‘`எல்லாம் இங்கே குழந்தைக்கான சிகிச்சைக்கு வர்றவங்க வேண்டிக் கிட்டு கட்டிய மணிகள்தான். நல்லபடியா குழந்தை பிறந்தா மணி கட்டுறதா வேண்டிக்குவாங்க. நீங்க பார்க்கிறது ரொம்பக் கொஞ்சம்... நூற்றுக்கணக்கான மணிகளை மூட்டை, மூட்டையா கட்டி வெச்சிருந்தோம். அதையெல்லாம் கொடுத்து, பூம்புகாரில் இந்த விநாயகரை வாங்கினேன். ரொம்ப ஸ்வீட் இந்த விநாயகர்... இவர்தான் என்னுடைய ஃப்ரெண்ட்; என் துணைன்னு கூட சொல்லுவேன். கோயிலுக்கு வர்றப்ப எல்லாம் ஒரு குழந்தை போலக் கட்டிப்பேன்... சில்லுன்னு இதமா இருப்பார் எப்போதும்’’ என்று சொன்னபடி அந்தப் பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொள்கிறார். முகத்தில் அப்படி ஓர் ஆனந்தம்!

அந்த விக்கிரகத்துக்குப் பின்னால் அரசமரம் கிளை பரப்பி நிற்க, பக்கத்தில் ஒரு தொட்டியில் வேம்பும் இணையாக நின்றது. சுற்றி வந்து அமர்ந்தவர், கோயில் மண்டபத்தில் சுவரில் மாட்டியிருந்த படங்களைப் பார்த்தபடி பேசத் தொடங்கினார்.

‘`இங்கே வந்து குழந்தை பெறும் தம்பதிகள், வீட்டுக்குப் போறப்போ கொடுத்த சுவாமி படங்கள் இதெல்லாம். முருகனின் ஆறுபடை வீடுகள், திருவண்ணாமலை, ஷீர்டின்னு இந்தத் தலங்கள் எல்லாத்துக்குமே போயிருக்கேன். சபரிமலைக்கு ஐயப்பன் எப்போ கூப்பிடப் போறாரோ தெரியல... ஆர்வமாகக் காத்துக்கிட்டிருக்கேன். ‘வயசு இருக்கும் வரை, பார்வை நல்லா இருக்கும் மட்டும், நடக்க முடிந்த வரையில் உன்னால் முடிந்த கோயில்களைப் பார்த்துடணும்’னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. 50க்கும் மேல திவ்யதேசம் பார்த்துட்டேன்... மீதியெல்லாம் போகணும்!’’

‘`குருவாக யாரையாவது மனதில் வரித்ததுண்டா?’’

‘`அம்மா சொல்வாங்க, ‘நம்மை நல்வழிப்படுத்த யாராவது குரு வேணும்’ என்று. ஆனா எனக்கு விநாயகர்தான் குரு. எப்போதும் அவர் நாமம்தான் உச்சரிப்பேன். வீட்டிலும் வாசல் தொடங்கி பூஜை அறைவரை எங்கும் விநாயகர்தான் வியாபிச்சிருக்கார்’’ என்று கூறும் டாக்டர் கமலா, விநாயகர் சதுர்த்தியை விமர்சையாகக் கொண்டாடுவது வழக்கம்.

‘`என் முழுமுதல் தெய்வமாக இருப்பதால், விநாயகர் சதுர்த்தியை ரொம்ப கிராண்டாகக் கொண்டாடுவோம். 1,008 இனிப்பு கொழுக்கட்டை செய்து சாமிக்குப் படைச்சுக் கும்பிடுவோம். 2, 3 மணி நேரம் தொடர்ந்து பூஜைகள் நடக்கும். கோயம்பேடு போய் சாக்கு மூட்டைகளில் ரோஜா, மல்லி, சாமந்தின்னு பூ வாங்கி வந்து, எல்லோரும் உட்கார்ந்து கோத்து, விநாயகரையும் கோயிலையும் அலங்கரிப்போம். இப்ப கொரோனா லாக்டவுன் வந்ததிலிருந்து கோயம்பேடு போகமுடியல. சதுர்த்தியும் எளிமையாகவே கொண்டாடினோம்’’ என்றவர், தனக்கு பக்தி புகட்டிய மூத்தோர்களையும் நினைவுகூர்ந்தார்.

``நாங்க இப்போ இருக்கும் வீடு, எங்க அப்பாவின் அம்மா கங்கா பாட்டியினுடையது. பாட்டியுடனேயே வளர்ந்ததால் கடவுள் பக்தியும் நம்பிக்கையும் எனக்கு ஜாஸ்தி. அவங்கதான் என்னை முதன்முதல்ல கையைப் பிடிச்சுக்கிட்டு கோயிலுக்கு அழைச்சிட்டுப் போனவங்க. நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயிலுக்குப் போவோம். பரீட்சைன்னா பிள்ளையாரையும் நவகிரகத்தையும் 108 தடவை சுத்துவோம்.

‘கஜானனம் பூத கணாதி ஸேவிதம்..’ ஸ்லோகம் எல்லாம் பாட்டி சொல்லிக் கொடுத்ததுதான். இப்போதும் ராத்திரி முழிப்பு வந்தால்கூட அந்த ஸ்லோகத்தைத்தான் வாய் அனிச்சையாக முணுமுணுக்கும். காலம்பற எழுந்துக்கும்போதே பாட்டி, ‘கோபாலா எழுந்தருளும்’னு பாடிண்டேதான் எழுந்துக்குவார்னா பார்த்துக் கோங்க. பாட்டி பாடுறப்ப என் தங்கை, ‘ஏன் பாட்டி.. நீ பாடலன்னா அவர் எழுந்துக்கவே மாட்டாரா’ன்னு கிண்டல் பண்ணுவா.

நிறைய நல்லொழுக்கங்களைப் பாட்டி சொல்லித் தந்திருக்கார். இன்னிக்கு வரைக்கும் கடைப்பிடிச்சிட்டு வர்றேன். இப்போ நான் தினசரி பூஜை பண்றதைப் பார்த்தா அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க.

அம்மாவும் அப்படித்தான்... ரொம்ப ஆசாரமா, தெய்வ நம்பிக்கையுடன் இருப்பாங்க. அப்பாவும் நிறைய ஸ்லோகங்கள் சொல்வார். தினமும் சந்தியாவந்தனம் பண்ணுவார். எல்லாமே வீட்டுப் பெரியவங்ககிட்டேர்ந்து பழகியதுதான்.’’ என்று கூறும் டாக்டர் கமலா செல்வராஜ், நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வர் கோயிலின் திருக்குளத்தைச் சீர்செய்து, 100 லாரி தண்ணீர் கொண்டுவரச் செய்து நீரால் நிரப்பி, மீன்களையும் வாங்கிவிட்டது, மனநிறைவான திருப்பணி என்கிறார்.

அதேபோல், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் இருக்கும் திருக்குளத்தில் தூர்வாரி தண்ணீர் நிரப்பியது, அடையார் அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி கோயிலின் தங்கத் தேர் திருப்பணிக்கு ஒரு கிலோ தங்கம் வழங்கியது ஆகிய திருப்பணிகளையும் செய்துள்ளார்.

இந்தப் பணிகள் குறித்து கேட்டால், ``என்னால் இயன்ற சின்ன சேவை’’ என்று புன்னகைக்கிறார், டாக்டர் கமலா செல்வராஜ்.

டாக்டரின் வீட்டுப் பூஜையறையில் பொக்கிஷமாக அவர் பாதுகாப்பதும் ஒரு விநாயகர் சிலைதானாம். அந்தச் சிலையை அவருக்குக் கொடுத்தது யார்..., விநாயகரின் திருவருளால் பெரும் விபத்தில் டாக்டர் தப்பித்துப் பிழைத்த அற்புதம்... வீடியோ வடிவில்...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism