Published:Updated:

வனத்தில் திரிந்த மன்னன் மகன்!

ஏகாதசி கதை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏகாதசி கதை

கதை கதையாம்...

சம்பாவதீ நகரத்து மன்னன் மாஹிஷ்மதன். அவருக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தவனின் பெயர் லும்பகன். பாவங்களுக்கு எல்லாம் இருப்பிடம் ஆனவன். தந்தையின் செல்வத்தை சுகபோகங்களுக்காக செலவு செய்துவந்தான். தெய்வ நிந்தையும், அடியார்களைத் திட்டுவதும் அவனுடைய வாடிக்கை.

மகனை நினைத்து மிகவும் வருந்தினார் மன்னர். ஒருநாள், வேறு வழியற்ற நிலையில் காவலாளிகளை அழைத்து, ‘‘லும்பகனைக் கொண்டு போய்க் காட்டில் விட்டுவிடுங்கள்!’’ என்று உத்தரவிட்டார். காட்டுக்குப் போயும் லும்பகன் திருந்தவில்லை. அவ்வப்போது நகரத்துக்குள் நுழைந்து திருட ஆரம்பித்தான். திருடுவதும் தப்புவதும் அவனுக்குக் கைவந்த கலையாகிவிட்டது. எனினும், ஒரு நாள் காவலர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவனை அடித்துத் துவைத்தார்கள் காவலர்கள்.

மகாவிஷ்ணூ
மகாவிஷ்ணூ

‘‘அடிக்காதீர்கள்... அடிக்காதீர்கள்... நான் மாஹிஷ்மத மன்னனின் மகன்’’ எனக் கதறினான். அரசனின் மகன் என்பதால் கருணையுடன் லும்பகனை விட்டுவிட்டனர் காவலர்கள்.

அடிபட்ட லும்பகன் திருந்தினான். இனி, திருடக்கூடாது என்று முடிவெடுத்தான். ஒரு மரத்தடியில் வசிக்கத் தொடங்கியவன், காட் டில் கிடைத்த கனிகளையும், கிழங்குகளையும் உணவாகக் கொண் டான். அந்த உணவுகள் போதுமானதாக இல்லை. ஆகவே, உடல் மெலியத் தொடங்கியது.

விரைவில் குளிர் காலமும் வந்தது. ஆகவே, நன்கு வெயில் ஏறும் வரை காத்திருந்து அதன்பிறகே உணவு தேடுவதை வழக்கமாகக் கொண்டான் லும்பகன்.

ஒரு நாள் லும்பகனுக்கு ஏதும் கிடைக்கவில்லை. அந்தி சாயும் வரை அலைந்து திரிந்தும் ஒரு சில பழங்கள்தான் கிடைத்தன. மரத்தடிக்குத் திரும்பிய லும்பகன், இரவு முழுவதும் குளிராலும் பசியாலும் வாடினான். தூக்கம் வரவில்லை. கிடைத்த ஒரு சில பழங்களையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்தான்.

பொழுது விடிந்தது. ஆகாயத்தில் ஓர் அசரீரி ஒலித்து,

‘‘லும்பகா! நேற்று ஸபலா ஏகாதசி. நீ தங்கியிருந்தது அரச மரத்தின் அடியில். இரவு முழுவதும் நீ தூங்கவில்லை. கிடைத்த பழங்களையும், பசியோடு இருந்தும் நீ உண்ணவில்லை. பகவானுக்கு அர்ப்பணம் செய்தாய். இந்த பலனால் உன் பாவங்கள் அனைத்தும் பறந்தோடின. காட்டை விடு நாடு திரும்பு. அரச பதவி உனக்குத்தான்!’’ என்றது.

அசரீரி சொன்னது போல், லும்பகனின் எதிரில் அவன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், பட்டத்து யானையுடன் வந்தனர்.

‘‘மன்னர் மறைந்துவிட்டார். தாங்கள் வந்து தரணி ஆள வேண்டும்!’’ என்று வேண்டிக்கொண்டனர். அவனைப் பட்டத்து யானையின் மேல் ஏற்றிப் பரிவோடு அழைத்துப்போய், பட்டாபிஷேகம் நடத்தி வைத்தார்கள்!

யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே அந்தப் பாவம் அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது. அப்படி தவறுக்காக வருந்தி, பகவானிடம் தன்னைச் சமர்ப்பிப்பவருக்கு இறையருள் கைகூடும் என்பதற்குச் சான்றான கதை இது.

அதுசரி, புண்ணியத் திருநாளான ஸபலா ஏகாதசி எப்போது வரும் தெரியுமா? தை மாதம் வரும் தேய்பிறை ஏகாதசியையே ஸபலா ஏகாதசி ஆகும். நாம் அறிந்தும் அறியாமலும் எவ்வளவோ தவறுகள் செய்துவிடுகிறோம். அவற்றின் பொருட்டு பகவானிடம் மனம் திறந்து மன்னிப்பு வேண்டி, புனிதமான ஸபலா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து ஸ்ரீமந் நாராயணனை வழிபடவேண்டும். அதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்வே வரமாகும்.

அற்புதமான விரதக் கதையைப் பார்த்தோம். இனி, குருபக்தியை விளக்கும் சுதீட்சணரின் திருக்கதையை அறிந்து மகிழ்வோம்.

குருவருள் கதை!
குருவருள் கதை!

சாளக்கிராமமும் நாவல் பழமும்!

`மாதா பிதா குரு தெய்வம்’ என்று சொல்லிவைத்துள்ளார்கள் நம் முன்னோர். குருபக்தியில் சிறந்தது நம் பாரத பூமி. இதற்கு சாட்சியாகத் திகழும் புண்ணியக் கதைகள் பல உண்டு. அவற்றில் ஒன்று சுதீட்சண முனிவரின் கதை.

அகத்திய முனிவரின் சீடன் சுதீட்சணன். விளையாட்டுத் தனமும் குறும்பும் நிறைந்தவன். ஒரு நாள் அகத்தியர் கோயிலுக்குக் கிளம்பியபோது, தம்முடைய பூஜைப் பெட்டி மற்றும் சாளக்கிராமத்தை சீடனிடம் ஒப்படைத்து, ‘‘இவற்றைப் பத்திரமாக வைத்திருந்து சுவாமிக்குக் கவனமாகப் பூஜை செய்!’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

முதல் நாள் ஏரியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து சாளக் கிராமத் துக்கு ஆர்வமாக அபிஷேகம் செய்தான் சுதீட்சணன். ஆனால், சோம்பேறியான அவனுக்கு மறு நாள் ஒரு யுக்தி தோன்றியது.

‘நாம் பூஜைப் பெட்டியை நதிக்கரைக்குக் கொண்டு போனால், அங்கு நாவல் மரமும் புஷ்பச் செடிகளும் உண்டு. அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்தியம் ஆகியவற்றை அங்கேயே முடித்துக் கொண்டு வரலாமே!’ என்று நினைத்தான்.

அதன்படி பூஜைப் பெட்டியை ஏரிக்கரைக்கு எடுத்துச் சென்றான். நாவல் மரத்தில் பழங்கள் பழுத்திருந்தன. ரிஷி குமாரர்கள் கல் வீசி வீழ்த்தி நாவற் பழங்களைச் சாப்பிட்டார்கள். சுதீட்சணனும் அவர்களுடன் இணைந்துகொண்டான். விளையாட்டு ஆர்வத்தால் பூஜையை மறந்தான்.

அப்போது உயரத்தில் ஒரு பெரிய பழக் கொத்து இருந்ததை ரிஷி குமாரர்கள் கவனித்தனர். அதை யார் கல் எறிந்து வீழ்த்துவது என்று அவர்களுக்கு இடையில் போட்டி ஏற்பட்டது. அவர்கள் ஆளுக்கொரு கல்லாக எறிந்தனர். சுதீட்சணனுக்குக் கல் கிடைக்கவில்லை. பழம் தின்னும் ஆசையோ தலைக்கேறியது; குரு தந்த சாளக்கிராமத்தை எடுத்து நாவல் பழக்கொத்தினை நோக்கி வீசினான். ஆவலுடன் கை ஏந்தியதும் நசுங்காமல் அவன் கையில் பழக்கொத்து விழுந்தது. ஆனால், சாளக்கிராமம் கிளையில் சிக்கிக்கொண்டது.

அந்தக் கிளைக்கு அருகிலுள்ள பொந்தில் ஒரு பாம்பு இருப்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் எவரும் மரம் ஏறத் துணியவில்லை. சாளக்கிராமம் சிக்கிக் கொண்டதால் சுதீட்சணன் பயந்தான். குரு வந்தால் என்ன பதில் சொல்வது?

அவனது குழந்தை உள்ளத்தில் சட்டென்று ஒரு யோசனை உதித்தது. அந்த நாவற் பழக்கொத்தும் சாளக்கிராமத்தின் அளவிலேயே இருந்தது. எனவே, அதற்குச் சந்தனம் இட்டு பூஜைப் பெட்டியில் வைத்துவிட்டான். அன்று மாலை நேரத்தில் அகத்தியர் திரும்பி வந்தார். மறுநாள் பூஜைப் பெட்டியைத் திறந்து சாளக்கிராமத்தை அகத்தியர் வெளியே எடுத்தபோது கொழகொழவென்று இருக்கவே உற்றுப் பார்த்தார்.

சீடனிடம், ‘‘இது என்னடா?’’ என்று அதட்டினார்.

சுதீட்சணன், ‘‘தினம் அபிஷேகம் செய்வதால் சாளக்கிராமம் இப்படி ஆகி விட்டது. அதற்கு நான் என்ன செய்ய?’’ என்றான் தயக்கத்துடன்.

கோபம் கொண்ட அகத்தியர், ‘‘இங்கு வருவதாக இருந்தால் ஸ்ரீமந் நாராயணனுடன் வா (சாளக்கிராமத்துடன் வா எனும் பொருளில்). இல்லாவிட்டால் என் முன் நில்லாதே, போ!’’ என்று விரட்டினார். என்ன செய்வதென்று புரியாமல் கண்ணீர்மல்க குருவின் கால்களில் விழுந்து நமஸ்கரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் சுதீட்சணன்.

‘எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த உடலில் உயிர் இருந்தால், ஸ்ரீமந் நாராயணனுடன்தான் திரும்பி வருவேன்!’ என்று மனத்தில் உறுதி கொண்டான். தண்டகாரண்யம் சென்று நீண்ட காலம் தவம் செய்தான். தவம் நீடிக்க, சுதீட்சணர் என்று மரியாதையுடன் அழைக் கப்படும் முனிவரானார்.

ஸ்ரீராமனின் வனவாசத்தின்போது சுதீட்சணர், ராமரை தரிசித்தார். அதோடு, அவரை தன் குரு அகத்தியரிடமும் அழைத்துச் சென்றார். முன்பு ஒரு நாள் குரு கோபமாகச் சொன்ன சொல்லை மீறக்கூடாது என்பதால் ஸ்ரீமந் நாராயணனையும் தன்னுடன் கூட்டிச் சென்ற இந்த சீடரின் குருபக்தியை எப்படிப் பாராட்டுவது?

குருவருள் திருவருள் சேர்க்கும்.

வனத்தில் திரிந்த மன்னன் மகன்!

மறு நாளே பாவம் நீங்கும்!

கீதையில் கண்ணன், `‘மரங்களில் நான் அரச மரம்!’’ என்கிறார். அரச மரம் சர்வ தேவதா ஸ்வரூபம். மும்மூர்த்திகளது வடிவமாகக் கருதப்படும் அரச மரத்தைக் காலை வேளையில் வலம் வந்தால் சகல நலன்களும் பெறலாம். திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதி நிலையம் ஆகிய சிவத் தலங்களிலும், திருக்கச்சி திருப்புட்குழி, திருப்புல்லாணி போன்ற திருமால் தலங்களிலும் அரச மரம் தல விருட்சமாக விளங்குகிறது. அரச மரத்துக்கு வடமொழியில் ‘அஸ்வத்த விருட்சம்’ என்று பெயர். அரச மரத்தை வழிபடு வோரின் பாவம் மறு நாளுக்குள் அழிந்துவிடும்.

அரச மர நிழல் ‘போதம்’ என்ற தத்துவ ஞானத்தைத் தரும். அரச மர நிழல் படும் நீர் நிலைகளில் வியாழன், அமாவாசை நாட்களில் நீராடுவது பிரயாகை- திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமம்!