Published:Updated:

`நூற்றாண்டைக் கடந்த பொம்மைகள்; 60 ஆண்டுகளாகக் கொலு!' - நெகிழும் மூத்த தம்பதி

நூற்றாண்டு கால பழைமைவாய்ந்த பொம்மைகளுடன் 60 ஆண்டுகளாக நவராத்திரி விழாவை கொலு வைத்து சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர் 80 வயதைக் கடந்த விஸ்வநாதன் - இராதா தம்பதி.

50 ஆண்டுகள் பழைமைவாய்ந்த விநாயகர்
50 ஆண்டுகள் பழைமைவாய்ந்த விநாயகர்

தமிழகத்தைப் பிரிந்து, தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் நிலையிலும் பாரம்பர்ய விழாவை நடத்தி அம்பாளின் பரிபூரண அருளாசியைப் பெறுவதாகக் கூறி மகிழ்கின்றனர் இந்தத் தம்பதி.

Viswanathan - Radha
Viswanathan - Radha

அரியலூர் மாவட்டம் திருமானூரில் சுவாமிநாத குருக்களுக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் விஸ்வநாதன். 1959 -ல் இராதாவை மணமுடித்த விஸ்வநாதன் நீண்டகாலம் நாகப்பட்டினத்தில் தங்கி, பொதுப்பணித்துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர், பணி ஓய்வுபெற்று, தற்போது குடும்பத்தினருடன் புனேவில் வசித்து வருகிறார். நாகை வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்திருக்கும் விஸ்வநாதன், தன் வீட்டில் கொலு வைத்திருப்பது குறித்து பதிவிட்டிருந்தார்.

அத்திவரதர் முதல் கலைஞர், ஜெயலலிதா வரை... கண்ணை கவரும் வண்ணமயமான நவராத்திரி விழா கொலு பொம்மைகள்!

அப்பதிவில், ``1970-ல் நாகை நீலா சந்நிதிக்கு எதிரிலுள்ள ஒரு காயலான் கடையில் பெயின்ட் எல்லாம் போய்விட்ட அழகாக ஸ்வாமி பொம்மையை ரூ.5-க்கு பேரம் பேசி வாங்கினேன். அதைச் சுத்தப்படுத்தி பெயின்ட் பிரஷ் வாங்கிவந்து நானே கலர் கொடுத்தேன். இன்றுவரை அந்தப் பொம்மையைப் பொக்கிஷம் போல் பாதுகாத்து கொலு வைத்துள்ளேன். இதில் திருமணத்தின்போது என் மாமியாருக்கு சீதனமாக வந்த நூறாண்டு கடந்த பொம்மைகளும் இருக்கின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Meenakshi Amman
Meenakshi Amman

இதுதொடர்பாக புனேவிலுள்ள விஸ்வநாதனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ஏழு வயதிலேயே தாயை இழந்துவிட்ட எனக்கு, எங்க அம்மாவின் நினைவாக மனதில் பசுமையாய் பதிந்திருப்பது அந்தக் காலத்தில் வீட்டில் அம்மா கொண்டாடிய கொலு காட்சிகள்தான். திருமணமானதிலிருந்து இன்றுவரை ஆண்டுதோறும் தவறாமல் கொலுவைத்து நவராத்திரி விழாவைக் கொண்டாடிட்டு வர்றோம். நாகையில் வசித்தபோது 1977-ல் வீசிய கடும் புயலில் நாங்கள் வசித்த வீடு முற்றிலும் சேதமடைந்து அனைத்துப் பொருள்களும் பறிபோய்விட்டன. ஆனா.. அம்பாள் அனுக்கிரஹத்தால் பழைமைவாய்ந்த சில கொலு பொம்மைகள் மட்டும் சேதாரமின்றி கிடைத்தது. அவற்றை இன்றுவரை பாதுகாத்து கொலுவில் வைத்துள்ளேன்.

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் சக்தி கொலு... ஏற்பாடுகள் தீவிரம்! #Video

பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் நவராத்திரி விழா நாள்களில் அக்கம் பக்கம் உள்ளவங்க மற்றும் உறவுக்காரப் பெண்களை வரவழைத்து, கொலு பூஜைகள் நடத்தி புதிய சேலையுடன் மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருள்கள் கொடுக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இங்கெல்லாம் துர்கா லெட்சுமி மட்டும் வைத்து வணங்கி, விடிய விடிய பெண்கள் கோலாட்டம் அடித்து தாண்டியா ஆட்டம் ஆடுவாங்க. அது அவுங்க கலாசாரம்.

Vinayagar
Vinayagar

நாங்க ஊர்விட்டு ஊர் வந்தாலும் நமது தமிழ் பாரம்பர்ய வழக்கப்படியே நவராத்திரி விழா கொண்டாடுறோம். இங்குள்ள வடமொழி பேசும் பெண்களும் உரிமையோடு கலந்துகொள்வார்கள். இது ஒரு கெட் டு கெதர் மாதிரிதான். இளமைக்கால நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும், முப்பெரும் தேவியர்களை இல்லத்துக்கு வரவழைத்து அவர்களது ஆசியைப் பெற்றுக்கொள்ளவும் சம்பிரதாயமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை என் அம்மாவும் சேர்ந்து வந்து குடும்பத்தை வாழவைக்கிறதா தோன்றுகிறது. எனக்கு வயசு 86. என் மனைவிக்கு வயசு 81. மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் நோய்நொடியின்றி ஆரோக்யமாக வாழ்கிறோம். எல்லாம் எங்க அம்மா மற்றும் அந்த அம்பாள் அனுக்கிரஹம்தான் காரணம். இறைவனடி சேரும்வரை தொடர்ந்து கொலு வைப்போம். அந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் எதிர்பார்த்துக் காத்திருப்போம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.