Published:Updated:

எண்ணியதை நிறைவேற்றித் தரும் எட்டுக்குடி முருகன்!

எட்டுக்குடி முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
எட்டுக்குடி முருகன்

இந்த முருகன் சிலை பொறவைச்சேரி தலத்தில் எழுந்தருளியது. இவ்வூரே `சிக்கல்’ திருத்தலமாகும்.

அழகன் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் முந்தையது ஆதலால் ஆதி படைவீடு எனச் சிறப்புப் பெற்ற தலம், கந்தவேள் போர்க்கோலத்தில் காட்சி தருவதால் சத்ரு சம்ஹாரத் தலம் என்று சிறப்பு பெற்ற க்ஷேத்திரம், முற்காலத்தில் எட்டுக்குடிகள் மட்டுமே வாழ்ந்த பதி, எட்டு லட்சுமியரும் வசிக்கும் இடம், பறந்துசென்ற மயிலை `எட்டிப் பிடி’ என்று சொன்ன வார்த்தையால் பெயர் பெற்ற ஊர் - எட்டுக்குடி!

எட்டுக்குடி
எட்டுக்குடி

நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி பேருந்து மார்க்கத்தில், சீரா வட்டம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், அங்கிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். வான்மீகி முனிவரால் வணங்கப் பெற்றதும், அருணகிரிநாதரால் பாடல் பெற்றதுமான இவ்வூரில் தேவியருடன் ஆறுமுகப்பெருமானாய் அருள்பாலிக்கிறார், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சோழர் காலத்துக் கோயில் இது. தேவர்களின் சேனாதிபதியாகப் பொறுப்பேற்ற முருகப்பெருமான், இந்தத் தலத்திலிருந்துதான் போருக்குப் புறப்பட்டாராம். பின்னர் சிக்கல் தலத்துக்குச் சென்று அன்னையிடன் சக்திவேல் பெற்று, திருச்செந்தூரில் சூரனை வீழ்த்தியதாக ஐதிகம். இதன் பின்னரே ஆறுபடை வீடுகள் அமைந்தனவாம். ஆக, காலத்தால் அவற்றுக்கும் முந்தைய தலமான இவ்வூரை ஆதிப் படைவீடு என ஆன்மிக ஆன்றோர்கள் போற்றுகிறார்கள்.

எட்டுக்குடி ஈசன்
எட்டுக்குடி ஈசன்


அஷ்ட லட்சுமியரும் நித்யவாசம் செய்யும் தலம் இது என்கின்றன புராணங்கள். ஆக, இத்தலத்துக்கு வந்து எட்டுக்குடி முருகனை வணங்கி வழிபட்டால் செல்வகடாட்சத்துக்குக் குறையிருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலம் குறித்து மிக அற்புதமான திருக்கதை ஒன்று உண்டு.

முருகப்பெருமானின் திருவருளைப் பெறும் பொருட்டு, இங்கு வசித்த வான்மிக சித்தரின் துணையுடன் பெரும் யாகம் ஒன்றைச் செய்தான் இந்திரன். சிறப்புற நடைபெற்ற யாக பூஜையின் நிறைவில், யாகக் குண்டத்தில் தோன்றி அருள்பாலித்தார் முருகப்பெருமான்.

எட்டுக்குடி முருகன்
எட்டுக்குடி முருகன்

இந்தக் காட்சியை இவ்வூருக்கு அருகிலிலுள்ள பொறவைச்சேரி எனும் ஊரைச் சேர்ந்த சிற்பி ஒருவரும் தரிசித்தார். முருகப்பெருமானின் இந்த எழில்கோல காட்சியைச் சிற்பமாக வடிப்பது என்று மனத்துக்குள் சங்கல்பித்துக்கொண்டார். அப்படியே சிலை வடிக்கவும் செய்தார்.

எட்டுக்குடி
எட்டுக்குடி

ஒரே கல்லில்... மயூரம் கால்களைத் தரையில் ஊன்றி நிற்க, அதன் மீது வள்ளி-தெய்வானை தேவியருடன் முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் வண்ணம் சிற்பம் அமைத்தார். காண்போரை பிரமிக்கவைத்தது அந்தச் சிற்பம். சோழ மன்னன் முத்தரசனும் சிற்பத்தைக் கண்டு வியந்தான். `தனித்துவமான இந்தச் சிற்பமும் அதன் மகிமையும் இந்த மண்ணுக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும். இதுபோல் வேறொரு சிலையை சிற்பி வடித்துவிடக் கூடாது’ என்று எண்ணம் கொண்டான். ஆகவே, சிற்பியின் கட்டைவிரலைத் துண்டிக்க ஆணையிட்டான்.

இந்த முருகன் சிலை பொறவைச்சேரி தலத்தில் எழுந்தருளியது. இவ்வூரே `சிக்கல்’ திருத்தலமாகும்.

எட்டுக்குடி அம்மன்
எட்டுக்குடி அம்மன்

இரு கரங்களிலும் கட்டைவிரலை இழந்தும் முருகன்மீதான பக்தியை இழக்காத சிற்பி, எட்டு விரல்களைக் கொண்டு மீண்டும் அதேபோன்ற தொரு சிற்பத்தைப் படைத்தார். அதுவே எட்டுக்குடியில் குடிகொண்டது.

தகவலறிந்த மன்னன் சினந்தான். கண்கள் இருந்தால்தானே மீண்டும் சிலை வடிப்பான் சிற்பி என்று கருதி, அவருடைய கண்களைக் குருடாக்கக் கட்டளையிட்டான்.

கண்களை இழந்தபிறகும் சிற்பி சோர்வடையவில்லை. மகளின் உதவியோடு மூன்றாவதாக ஒரு சிற்பம் செய்தார். அதே கோலம், அதே பேரழகு, அதே சாந்நித்தியத்துடன் திகழ்ந்த சிலையைக் கண்டு அனைவரும் சிற்பியை வியந்து பாராட்டினர். ஆனால் சிற்பிக்கோ, `எல்லோரும் ரசித்து மகிழும் முருகனின் எழில்கோலத்தைத் தன்னால் காண இயலவில்லையே’ என்று வருத்தம். முருகனிடம் பிரார்த்தித்தார்.

எட்டுக்குடி
எட்டுக்குடி

பக்தன் வருந்தினால் குமரன் பொறுப்பானா? ``என் கண்களையே உனக்குத் தருகிறேன்’’ என்று கூறி சிற்பிக்குப் பார்வை அளித்ததுடன், கட்டை விரல்கள் முளைக்கவும் அருள்செய்தார். மூன்றாவதான அந்தச் சிற்பம் குடியிருக்கும் தலமே எண்கண் தலமாகும். சிற்பி அந்தத் தலத்திலேயே இறுதிவரையிலும் வாழ்ந்து முக்தி அடைந்தார்.

இந்த மூன்று தலங்களில் இரண்டாவது தலம் எட்டுக்குடி. இங்குள்ள முருகப்பெருமான், தரிசிப்போரின் பார்வைக்கேற்ப காட்சி தருவாராம். பக்தர்கள் இவரைக் குழந்தையாக நினைத்தால் குழந்தை முருகனாகவும், இளைஞனாகக் கருதி தரிசித்தால் இளைய கோலத்திலும், முதியவனாகக் கருதி தரிசித்தால் முதிய கோலத்திலும் காட்சி தருவார் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

எட்டுக்குடி
எட்டுக்குடி

ஒரு காலை தொங்கவிட்டபடி தேவியர் இருவருடன் மயூரத்தில் முருகப்பெருமான் அமர்ந்து அருள்செய்யும் இந்தச் சிற்பத் தொகுப்பில் அதன் ஒட்டுமொத்த ஆதாரமுமாய் மயிலின் கால்கள் மட்டுமே தரையில் ஊன்றியிருக்கும்படி சிற்பம் அமைந்திருப்பது அதிசயமாகும்!

எட்டி மரங்கள் நிறைந்த பகுதி ஆதலால் எட்டுக்குடி எனும் பெயர் வந்தது என்ற தகவலும் உண்டு. இங்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருப்பதை அறிந்து சோழன் முத்தரசன் இங்கு வந்தபோது, மயில் உயிர்ப்பெற்று பறந்தாம். மயிலை `எட்டிப் பிடி’ என்று கூவ, அவ்விதமாய் மயில்களின் கால்களைப் பிடிக்க முனைந்தபோது அதன் கால்கள் பின்னம் அடைந்தன; இதனால் மயில் மேலும் பறக்காமல் இங்கேயே நிலைகொண்டது என்றொரு தகவலையும் சொல்கிறார்கள்.

எட்டுக்குடி
எட்டுக்குடி

இங்கே, ஆனந்தவள்ளி சமேத செளந்தரேஸ் வரர், தல விநாயகர், நவ வீரர்கள், கூத்தாடும் கணபதி, சுரத் தேவர், ஸ்ரீநிவாஸ செளந்தராஜப் பெருமாள், அனுமன், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். கோயிலின் சிறப்பு குறித்து ஹரிகர சிவாசார்யரிடம் பேசினோம்.

“இத்தலத்தைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களுக்கும் எட்டுக்குடி முருகனே குலதெய்வமாக விளங்குகிறார். மீனவக் கிராம மக்கள் இத்தலத்து முருகனையே பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றனர்.

வான்மீகி
வான்மீகி

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்முன், இங்கு வந்து முருகனை வழிபட்டு, சரவண பொய்கையின் தீர்த்தத்தை எடுத்துச் சென்று படகுகள் மீது தெளிப்பார்கள். அதன் பிறகே கடலுக்குச் செல்கிறார்கள்.

சுனாமிப் பேரழிவு பாதிப்பின்போது வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் என்ற மீனவக் கிராமத்தில் உயிரிழப்பைத் தடுத்தவர், இந்த எட்டுக்குடி முருகன்தான் என்று பெரிதும் நம்பினர் அந்த ஊர்மக்கள். அதன்பொருட்டு அனைவரும் குடும்பத்தோடு பால்குடம் எடுத்து வந்து, முடிகாணிக்கை செய்து வழிபட்டு சென்றனர்.

எட்டுக்குடி
எட்டுக்குடி

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து, அபிஷேகத் தேனைப் பிரசாதமாகப் பெற்றுச் செல்கிறார்கள். அதைப் பருகினால் விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வாறு வேண்டுதல் பலித்த பக்தர்கள் பலரும் முருகன் அருளால் கிடைத்த குழந்தையை இங்கு அழைத்து வந்து, எட்டுக்குடி முருகன் சந்நிதியில் குழந்தையை தத்தம் செய்து அவனிடம் ஒப்படைத்து வணங்குவது வழக்கம்.

எட்டுக்குடி
எட்டுக்குடி

அந்தப் பிள்ளை திருமணப் பருவம் எய்தியதும், தென்னம்பிள்ளையை வாங்கி அர்ப்பணிப்பர். இப்படிச் செய்து தங்கள் பிள்ளையை முருகனிடமிருந்து திரும்பப் பெறுவதாக ஐதிகம். பெரும்பாலும் அந்தப் பிள்ளைகளின் திருமணமும் இங்குதான் நடைபெறுகிறது.

இங்கு சத்ரு சம்ஹார ஹோமம் பிரசித்தி பெற்றது. வழக்கு, வாய்தா என்று அவதிப்படும் பக்தர்கள் பலரும் இந்த யாக பூஜையில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள். வெள்ளி ரதம் இழுத்தும் வேண்டு தலைச் செலுத்துகிறார்கள் பக்தர்கள்.

இங்கே வாழ்ந்த வால்மீகி முனிவருக்கு அம்பாள் காட்சி கொடுத்தற்குச் சான்றாக அம்பாள் சந்நிதி ஒருபுறம் சாய்ந்தே இருக்கும். சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது, ஆயிரக்கணக்கானோர் பால் காவடி எடுத்து வருவார்கள்.

எட்டுக்குடி
எட்டுக்குடி

சிறந்த வரப்பிரசாதி இந்த முருகன். ஒருமுறை, குழந்தைப் பேற்றுக்கு வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்களே கைவிட்டுவிட்ட ஒரு தம்பதி இங்கு வந்து முருகனை வழிபட்டு தேனபிஷேகம் செய்து, தேன் பெற்றுச் சென்றார்கள். விரைவில் இரட்டைக் குழந்தைகளோடு நன்றி செலுத்த வந்தார்கள். அதெபோல், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அன்பர் ஒருவர் இந்த முருகனுக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டார். விரைவில் அவரின் நோயின் தீவிரம் குறைந்து மெள்ள மெள்ள குணம் பெற்றார்.

தைப்பூசமும் இங்கே விசேஷம். காலையில் மஞ்சத்தில் வீதியுலா, மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா, சிறப்பு அபிஷேகங்கள், காவடி வேண்டுதல்கள் என்று கோலாகலமாக இருக்கும் கோயில். இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பாதிப்புக் கட்டுப்பாடுகள் காரண மாக இவையாவும் நடைபெறாது; தரிசனம் மட்டும்தான்’’ என்றார் ஹரிகர சிவாசார்யர்.

வந்த வினைகளையும், வருகின்ற வல்வினை களையும் வேரறுக்கும் வடிவேலனாய் அருளும் எட்டுக்குடி முருகப்பெருமான், நம் வாழ்வு முழுவதும் துணை நிற்பவனுமாகவும் திகழ்கிறான்.

நீங்களும் ஒருமுறை எட்டுக்குடிக்குச் சென்று வாருங்கள்; முருகன் அருளால் வாழ்வில் பெரும் வெற்றிகளை எட்டிப்பிடிப்பீர்கள்!

தண்ணீர்க் குடம் பாற்குடமாக மாறிய அதிசயம்!

ந்தக் கோயிலில் ஓதுவாராகப் பணியாற்றும் அன்பர் சிவபாலமுருகன் கூறிய செய்தி சிலிர்ப்பூட்டும் விதமாக இருந்தது.

“எங்கள் குடும்பத்துக்கு `நாக்கறுத்தான் பரம்பரை’ என்ற பெயருண்டு. காரணம், எங்கள் மூதாதையரில் தியாகராஜன் என்ற பெயருடைய தாத்தா ஒருவர், எட்டுக்குடி முருகன் மீது தீவிர பக்தி கொண்டவர்.

ஆண்டுதோறும் முருகப்பெருமானுக்குப் பால்காவடி எடுத்து வந்து வழிபடுவார். ஒரு முறை பாலுக்குப் பதிலாக பச்சை தண்ணீரை காவடியில் கட்டிக்கொண்டார். `இந்தத் தண்ணீர் எட்டுக்குடி முருகன் சந்நிதியை அடையும்போது அவனருளால் பாலாக மாறும்’ என்று சபையோர் முன்னிலையில் கூறிவிட்டுப் புறப்பட்டாராம்.

ஆனால், தண்ணீர் பாலாக மாறவில்லை. தவறான வாக்குறுதி கொடுத்ததற்காக, முருகன் சந்நிதியில் வைத்து தன்னுடைய நாக்கைத் துண்டித்துக் கொண்டார். ஆனால், ஒரு சொட்டு ரத்தம் சிந்தியதுமே அவரது நாக்கு மறுபடியும் ஒட்டிக்கொண்டது. தண்ணீர் குடம் பால் குடமாக மாறியது. அதைக் கண்ட அனைவரும் முருகப்பெருமானின் பேரரருளை எண்ணி வியந்து போற்றினார்களாம்’’ என்றார் சிலிர்ப்புடன்!

எப்படிச் செல்வது?: நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி பேருந்து மார்க்கத்தில், சீராவட்டம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும்.அங்கிருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டுக்குடி. கார், ஆட்டோ வசதிகள் உண்டு.

அன்புடன் தேடினால் ஓடி வருவான்!

`அவ்யக்தஹா’ எனும் திருநாமமும் அமையப் பெற்றவன் கண்ணன். `அவ்யக்தஹா’ என்றால், வெளிப்படாதவன், புலப்படாதவன் என்று அர்த்தம். தன் பெருமைகளைத் தானே அறியாத வனாக, மனிதப் பிறப்பெடுத்து, தன்னை மறைத்துக் கொண்டவன் அல்லவா இறைவன். எல்லாவற்றிலும் அவன் இருக்கிறான்; எல்லாமுமாகவே அவன் உறைந்திருக்கிறான்!

சரி... இவ்வளவு பிரமாண்டமானவனை, மாயக்கண்ணனை எப்படி நெருங்குவது? அவனின் அருளை எவ்விதம் பெறுவது? இதற்கும் பகவானே வழி சொல்கிறார்...

lord krishna
lord krishnaபகவத்கீதையில் - இப்படி நம்மைப் போல் தவித்து மருகி நின்ற அர்ஜுனனிடம், ``யக்ஞம், யாகம், தபஸ் போன்றவற்றைச் செய்தால் என்னை அறிந்துவிடலாம், நெருங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். புலன்களுக்கு அப்பாற்பட்டவன் நான். பக்தி எனும் ஒன்றால் மட்டுமே என்னை அறியவும் நெருங்கவும் முடியும்!'' என்கிறார் கண்ணன்.

பக்தி என்பது அன்பின் மற்றொரு வடிவம். பக்தி என்பது தேடலின் ஆரம்பப் புள்ளி. தேடலுடன் கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டால், அந்த அழகுக் கண்ணன், தேடியும் ஓடியும் வருவான் நம்மிடம்!

(சொற்பொழிவில் கேட்டது)

- எஸ். கோபால், திருநெல்வேலி-2