Published:Updated:

குருசாமியைக் கேளுங்கள்... சபரிமலை விரத மகிமைகளும் பக்தர்களின் கேள்விக்கான பதிலும்!

முதன்முறை மாலையிடுபவர், கார்த்திகை முதல் நாளன்று மட்டும்தான் மாலையிட வேண்டுமா? முதன் முறை மாலையிடுபவர் 41 நாள்கள் முழுமையான விரதம் இருக்க வேண்டுமா? இல்லை, அவரால் இயன்ற அளவு பின்பற்றினால் பரவாயில்லையா? - உங்களின் கேள்விகளுக்கு விடை இதோ...

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்

நெய் - தேங்காய் - தத்துவம்

சபரிமலைக்கு மாலையிட்டு 41 நாள்கள் விரதமிருந்து சுவாமிமார்கள் நெய்யால் நிரப்பப்பட்ட தேங்காயைச் சுமந்து செல்வர். தேங்காய் என்பது இந்த உடலாகிய மெய்யின் குறியீடு. அதில் நிரப்பப்படும் நெய் - மெய்யான உயிரைக் குறிக்கும். விரதம் இருந்து நம் உடலால் தூய்மைபெற்று மெய்யான அந்த இறைவனைத் தொழுதவாறு நெய்யை நிரப்புவர் சுவாமிமார்கள்.

ஐயப்பன்
ஐயப்பன்

சுவாமிக்கு நெய் நிரப்பும்போது, நம் உதடுகளில் அந்த ஐயப்பனின் நாமம் மட்டுமே இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருப்பவர்களும் இறைவனையே துதித்துக்கொண்டிருக்க வேண்டும். நம் விரதம் இறைவனைக் காண்பதற்கானதுவே என்றாலும், மனதுக்குள் சில வேண்டுதல்களும் இருக்கும். அவற்றையெல்லாம் நெய்யை இட்டு நிரப்பும்போது நினைத்துக்கொள்ள வேண்டும்.

சபரிமலையில் ஐயனுக்கு நெய்யை சமர்ப்பிக்கும்போது, அதை அபிஷேகம்போல கொட்டாமல், ஐயனின் திருமேனி மீது பூசுவார்கள். நாம் கொண்டுசென்ற நெய் ஐயனைச் சேர்ந்துவிட்டது, அதுவும் அவன் மெய்யோடு சேர்ந்துவிட்டது. இனி நம் வேண்டுதல்கள் பொய்க்காது நிறைவேறும் என்பதுதான் இதன் தத்துவம்.

சபரிமலை
சபரிமலை
`பழைய உத்தரவுக்குத் தடையில்லை; 7 நீதிபதிகள் அமர்வு விசாரணை!' - சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

இப்படி ஐயப்ப விரதம் என்பது பல தத்துவங்கள் நிரம்பிய அற்புத வழிபாடு. இதில், அன்பர்கள் பலருக்கும் பல விதமான சந்தேகங்கள் உள்ளன. அவற்றை எங்களுக்கு அனுப்புங்கள். மூத்த குருசாமியிடம் பதில்கள் பெற்றுத்தருகிறோம் என்று சொல்லியிருந்தோம். அதற்கேற்ப வாசகர்கள் பலர் கேள்விகளை அனுப்பியிருந்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கான பதில்களைத் தினமும் ஒன்றாகக் காணலாம்.

பல ஆண்டுகளாக மலைக்கு மாலையிட்டுச் செல்லக்கூடிய பக்தர்கள் இருக்கிறார்கள். அதேபோல், ஒவ்வோர் ஆண்டும் புதிதாக மாலையிட்டுச் செல்லும் கன்னிசாமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. முதல்முறையாக மாலையிடுவதுகுறித்து நிறைய கேள்விகள் இருக்கும். அப்படியொரு கேள்வியை விகடன் வாசகர் சந்திரமோகன் எழுப்பியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்
"முதன்முறை மாலையிடுபவர், கார்த்திகை முதல் நாளன்று மட்டும்தான் மாலையிட வேண்டுமா... முதன் முறை மாலையிடுபவர் 41 நாள்கள் முழுமையான விரதம் இருக்க வேண்டுமா... இல்லை, அவரால் இயன்ற அளவு பின்பற்றினால் பரவாயில்லையா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்விகளை மூத்த குருசாமியும் பேச்சாளருமான அரவிந்த் ஸுப்ரமணியம் அவர்களிடம் கேட்டோம்.

"அந்தக் காலத்தில் சபரிமலை மகரவிளக்கை ஒட்டியே நடைதிறக்கும் வழக்கம் இருந்தது. அப்போது, தரிசனம் காணப் போகிறவர்கள், கார்த்திகை மாதம் முதல்நாள் மாலைபோட்டு, ஒரு மண்டலம் விரதம் பூர்த்தியாகி, வீட்டிலிருந்தே நடந்து செல்லும் வழக்கம் இருந்தது. அப்போது, ஒருவாரத்துக்கு மேல் நடைப்பயணத்துக்குத் தேவைப்படும். இப்போது, கார்த்திகை மாதம் முதல் தேதியிலேயே நடை திறந்துவிடுகிறது. இரண்டு மாதம் முழுமையாக நடை திறந்திருக்கும். அதுபோல, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நடை திறந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், மலைக்குப் போக விரும்புகிற நாளுக்கு முன்பாக ஒரு மண்டல விரதம் இருக்கும்படி மாலைபோடுவது சரியாக இருக்கும். நடை திறந்திருக்கும் எந்த நாளிலும் சென்று தரிசனம் செய்யலாம், தவறில்லை. ஆனால், முதல்முறையாகப் போகிறவர்கள், பெரியபாதை வழியாகப் பயணம் மேற்கொண்டு ஜோதி தரிசனம் காண்பது விசேஷம். எனவே, கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலையிடுவதை சம்பிரதாயமாகக் கடைபிடிக்கிறோம். இது சிறப்பு. ஆனால், இது முடியாதபோது எப்போது வாய்க்கிறதோ அப்போது செல்லலாம். முக்கியமானது, மாலையைப் போட்டுக்கொண்ட நாளிலிருந்து ஒரு மண்டல காலம் விரதமிருக்க வேண்டும் என்பதுதான்.

 சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்
சரணகோஷம் ஒலிக்கும் கார்த்திகை மாதம்... ஐயப்ப சாமிக்கு விரதம் இருப்பது எப்படி?

இந்தப் பக்தரின் அடுத்த கேள்வி, முதல்முறை மாலையிடுபவர் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டுமா அல்லது அவரால் இயன்ற அளவு நாள்கள் விரதமிருக்கலாமா என்பது. முதல்முறை என்று இல்லை, 18 வருடங்கள் ஆனாலும் சரி, இல்லை 50 வருடங்களே ஆகியிருந்தாலும் சரி, 41 நாள்கள் (ஒரு மண்டலம்) விரதம் கட்டாயம். தமிழ்நாட்டில் ஒரு மண்டலம் என்பதை 48 நாள்கள் என்று கணக்கு சொல்கிறார்கள். பழைய சம்பிரதாயத்தில், 54 நாள்கள் ஒரு மண்டலம் என்றும் சொல்வதுண்டு. தற்போது, குறைந்தது 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும். அதைவிட அதிகமாகப் போனால் தவறில்லை. குறையக்கூடாது என்பதுதான் விதி" என்று தெரிவித்தார்.

இதுபோன்ற சந்தேகங்கள் உங்களுக்கும் இருந்தால், கீழே உள்ள படிவத்தில் கேளுங்கள். ஆன்மிகப் பெரியவர்களிடம் கேட்டு உங்களுக்கான பதிலை பெற்றுத்தருகிறோம்.