Published:Updated:

சைவ சமயத்தின் முதல் பெண் ஓதுவாமூர்த்தி மதங்க சூளாமணியார் வரலாறும், கற்றுத்தரும் பாடமும்!

மதங்க சூளாமணி
மதங்க சூளாமணி

சாதி பேதம் மட்டும் அல்ல, ஆண் - பெண் என்ற பால் பேதங்களையும் சைவம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே மதங்க சூளாமணியார் வரலாறு சொல்லும் பாடம்.

பெண்களைப் பெரிதும் போற்றும் சமயம் சைவம். பெண்களை அர்ச்சகர்கள் ஆக்கலாமா என்று இன்றைய அரசு எண்ணி வருகிறது. ஆனால் குங்கிலியக் கலய நாயனார் வாழ்ந்த ஆறாம் நூற்றாண்டிலேயே திருப்பனந்தாள் ஈஸ்வரன் கோயிலில் தாடகை என்ற பெண் அர்ச்சனைகள் செய்யும் பூசகராக இருந்து இருக்கிறார் என்றும், அதனால் அந்த திருத்தலத்தின் ஈசன் பெயரே தாடகையீஸ்வரன் என்றானதாகவும் பெரிய புராணம் தெரிவிக்கின்றது. தாடகை சூட்ட விரும்பிய மாலையை ஈசனே தலை தாழ்ந்து ஏற்றுக் கொண்ட நெகிழ்ச்சியான வரலாற்றை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

இதுபோலவே சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சைவ சமயத்தில் முதல் பெண் ஓதுவா மூர்த்தியாகக் கொண்டாடப்பட வேண்டியவர் நீலகண்ட யாழ்ப்பாணரின் துணைவியான மதங்க சூளாமணி அம்மையாரே. சகோட யாழினை ஈசனே உருகும் வண்ணம் வாசிக்கும் திறன் கொண்டவர் நீலகண்ட யாழ்ப்பாணர். அவருக்கு இணையாக தாளமிட்டு ஈசனின் திருப்பாடல்களை கல்லும் கனிந்துருகப் பாடும் அருள் கொண்டவர் இந்த அம்மையார். 'மதங்கர்' என்றால் இசைப் பாரம்பர்யம் கொண்ட ஒரு குலத்தின் பெயர். சூளாமணி என்றால் ஒளிமிக்க மணி போன்றவர் என்று பொருள். ஆம், சூளாமணியாரின் இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை. இவரின் குலப்பெயரும், இசையால் பெற்ற பட்டமும் இணைந்தே மதங்க சூளாமணி என்றானதாகவும் சொல்வார்கள்.

ஈசன்
ஈசன்

தில்லை அருகே உள்ள எருக்கத்தம்புலியூரில் அவதரித்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். காரைக்காலுக்கு அருகே இருக்கும் தருமபுரம் என்ற ஊரில் அவதரித்தவர் மதங்க சூளாமணியார். பெரியோர்களின் ஆசியால் இருவரும் வாழ்க்கைத் துணையாக அமைய, ஈசன் குடிகொண்ட ஆலயங்கள் எங்கும் இவர்கள் சென்று ஈசனைப் பாடி பணிந்து வந்தனர். யாழிசையால் ஈசனைப் யாழ்ப்பாணர் பணிய, மதங்க சூளாமணியார் பாடல் புனைந்துப் பாடுவார். ஈசனே தங்கள் தலைவன் என வாழ்ந்த இவர்களின் பெருமையை உலகரியச் செய்ய எண்ணிய ஈசன் மதுரையில் அதை நிறைவேற்றினார்.

மதுரை சொக்கனை யாழிசைத்துப் பணிய அங்கு சென்றார்கள். அப்போதைய வழக்கப்படி பாணர் குடி என்பதால் கோயிலின் வாசலில் நின்றவாறே யாழிசைத்தும் பாடியும் தொழுத அவர்களை ஈசன் தன் திருமுன் அழைத்துவரச் சொன்னார். இது கண்டு இருவரும் நெக்குருகிப் பணிந்தனர். இதைத்தொடர்ந்து முப்புரம் எரித்த லீலை, யானை உரித்த வரலாறு, காமதகனம், அடிமுடி காண இயலாத அண்ணாமலையார் புராணம், எனப் புராண வரலாறுகள் பலவற்றை யாழில் இசைத்துப் பாடினர். ஈசனும் அவர்களின் இசையில் மயங்கி அவர்களை மேலும் கௌரவிக்க பொற்பலகை ஒன்று இடப்பட்டது. அதன் மீது நின்று யாழ் இசைத்தார் திருநீலகண்ட யாழ்ப்பாணர்.

சிவனடி
சிவனடி

திருவாரூரில் காலசம்ஹாரமூர்த்தியின் அருளை யாழில் வாசித்து இசைத்த இவர் திருஞான சம்பந்த மூர்த்தியின் நெருங்கிய நண்பர் என்று ஆனார். சைவமே உயர்ந்தது; ஈசனே உயர்ந்தவர்; எனவே சைவத்தில் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லை என்று வாழ்ந்து காட்டிய ஞானப்பிள்ளையாம் சம்பந்தர், சாதி வேறுபாடு இன்றி திருநீலகண்டரையும் அவரது துணைவியாரையும் மரியாதையோடு நடத்தினார். அவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும் உரிய வசதிகள் செய்து கொடுத்தார் என பெரிய புராணம் கூறும்.

ஆடி அம்மன் தரிசனம்: கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் மண்டைக்காடு பகவதி அம்மன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சாத்தமங்கை எனும் ஊரில் மறையோர் குலத்தில் தோன்றிய திருநீலநக்க நாயனார் இல்லத்திற்கு திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். அவரோடு திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணி அம்மையும் வந்திருந்தனர். அவர்களைத் தங்க வைக்க, வேள்விச்சாலையினை ஒதுக்கித் தந்தார் திருநீலநக்கர் என்கிறது பெரிய புராணம். அதுபோலவே திருப்புகலூரில் இறைவனுக்கு மலர் தொடுக்கிற தொண்டினைச் செய்த முருக நாயனார் திருமடத்திலேயும் இவர்கள் எந்த பேதமும் இன்றி தங்கி இருந்தனர்.

சாதி பேதம் மட்டும் அல்ல, ஆண் - பெண் என்ற பால் பேதங்களையும் சைவம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே மதங்க சூளாமணியார் வரலாறு சொல்லும் பாடம். இதேபோல் செங்காட்டங்குடி, மதுரையம்பதி என அநேக திருத்தலங்களில் ஞானசம்பந்த பெருமானோடு இணைந்து இந்த தம்பதி இசைப்பணியும் இறைப்பணியும் செய்துள்ளார்கள். இறுதியாக நல்லூர் பெருமணத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தோண்டிய மாபெரும் பேரொளியில் சம்பந்தரோடும் இறை அடியார்கள் பலரோடும் கலந்து சிவனடி சேர்ந்தார்கள் யாழ்ப்பாணரும் அவர் மனைவியாரும். இறைவனைப் பாடுவது மட்டுமின்றி, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சைவப் பாடல்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததும் இந்த அம்மையாரின் சாதனை எனலாம்.

நல்லூர் பெருமணம்
நல்லூர் பெருமணம்

பெரிய புராணத்தின் தகவல்கள் படி பெண்களும் ஓதுவா மூர்த்திகளாக இருந்தார்கள் என்பதை மதங்க சூளாமணியார் எடுத்துக் காட்டாக உள்ளார். அதுமட்டுமா, நம்பியாண்டார் நம்பி தேவாரங்களை சிதம்பரத்தில் மீட்டெடுத்து, திருமுறைகளைத் தொகுத்தார். அதற்கு மாமன்னர் ராஜராஜன் உதவி புரிந்தான். சமயக் குரவர் காலத்தில் இசைக்கப்பட்ட அதே பண் முறையில் திருமுறைகள் பாடப்பட வேண்டும் என்று ஈசனை வேண்டியபோது, நம்பிகளுக்கு ஈசன் காட்டிய ஒரு இசை வாணி 'வள்ளி'. இவள் மதங்க சூளாமணி அம்மையாரின் வழி வந்த இசைப்பாடகி. இவரும் எருக்கத்தம்புலியூரில் வாழ்ந்த ஒரு பெண் ஓதுவார் என்றே வரலாறு கூறுகின்றது. இவரே திருமுறைகளை பண் அமைத்து இன்றுவரை ஓதுவா மூர்த்திகள் பாட வழி வகை செய்தவர் என்கிறது சைவ சமய நூல்கள்.

அடுத்த கட்டுரைக்கு