சிவபெருமானை, பக்தர்களின் வேண்டுகோள்களை ஏற்று வரம் வாரி வழங்கும் வள்ளல் என்று பக்தர்கள் சிறப்பித்துச் சொல்வதுண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில், ஈசனை வள்ளலாகவே அழைத்து வழிபடும் தலங்கள் ஐந்து அமைந்துள்ளன.
தமிழகத்தின் ஆன்மிகத் தலங்களில் முக்கியமானது மயிலாடுதுறை. அம்பிகை மயிலாகி வந்து வழிபட்ட தலமாதலால், மயிலாடுதுறை என்று திருப்பெயர். புண்ணிய நதியாம் காவிரியில், கங்கையே வந்து நீராடித் தன் பாவங்களைப் போக்கிக்கொண்டதும் இந்தத் தலத்தில்தான்!
இப்படியான மகிமைகளைப் பெற்ற இந்தத் தலத்தைச் சுற்றிலும் அமைந்த ஐந்து தலங்களையே ‘வள்ளல் தலங்கள்’ என்று போற்றிச் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். வேண்டும் வரங்களை வாரி வழங்கும் அந்தத் தலங்களைக் குறித்த தகவல்கள், உங்களுக்காக...
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஞானம் தரும் வள்ளல் மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர்
இறைவன் : ஸ்ரீவதாரண்யேஸ்வரர் (வள்ளலார் கோயில்)
இறைவி : ஸ்ரீஞானாம்பிகை
திருத்தலச் சிறப்புகள் : ஒருமுறை, அன்னை பார்வதி மயில் உருவம் கொண்டு, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தாள். அந்த எழில்கோலத்தைக் காண நான்முகன் அன்ன வாகனத்திலும், நாராயணன் கருட வாகனத்திலும், மற்ற தேவர்கள் அவரவர் வாகனத்திலும் பயணித்து வந்தனர்.

பராக்கிரமசாலியான நந்திதேவரோ, சிவபெருமானைச் சுமந்தபடி, மற்ற வாகனங்களை விட மிக வேகமாக விரைந்தார். தன் அபாரவேகத்தைக் கண்டு நந்திதேவருக்குக் கர்வம் மேலிட்டது. இதையறிந்த ஈசன், நந்தியின் கர்வத்தை நீக்கி, நல்லறிவு புகட்ட எண்ணினார். உடனே, தன் சடை முடி ஒன்றினைப் பிடுங்கி நந்தியின் முதுகில் வைத்தார். அவ்வளவுதான்... அதுவரை, காற்றைப்போலப் பயணித்த நந்தி, முடியின் பாரம் தாங்காமல் சுருண்டு விழுந்து மயங்கினார்.
பின்னர், மயக்கம் தெளிந்து எழுந்த நந்தி, தன் பிழை நீங்க இந்தத் தலத்துக்கு வந்து தவமிருந்தார். ஈசனும் அவருக்கு ஞானகுருவாகக் காட்சி கொடுத்து அருள்பாலித்தார். அதனால் இவ்வூர் ஈசன், ‘ஞானம் தரும் வள்ளல்’ என்று சிறப்புப் பெற்றார்.

வழிபாட்டுச் சிறப்புகள் : இந்தத் தலத்துக்குச் சென்று, ஈசனையும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டால், மன மாயைகள் அகன்று மெய்ஞ்ஞான ஒளி கிட்டும் என்கிறது, தலவரலாறு. நந்தி ஈசனைத் துதித்து எட்டுப் பாடல்களை இந்தத் தலத்தில் பாடினார். அந்தப் பாடல்களைப் பாடி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டால், கல்வி கேள்விகளில் மேன்மை உண்டாகும். மேலும், இந்தத் தலத்து இறைவனை வழிபட்டே, நவகிரகங்களில் ஒருவரானார் குரு என்கின்றன புராணங்கள். ஆக, ஜாதகத்தில் குருவின் பலம் குறைவாக உள்ளவர்கள், இங்குள்ள ‘ஞானபுஷ்கரணி’ தீர்த்தத்தில் நீராடி ஈசனை வணங்க, குருவின் பரிபூரண அருள் கிடைக்கும்.
எப்படிச் செல்வது ? மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வதாரண்யேசுவரர் திருக்கோயில்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துறை காட்டும் வள்ளல் திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர்
இறைவன் : ஸ்ரீஉச்சிரவனேஸ்வரர்
இறைவி : ஸ்ரீவேயுறுதோளியம்மை
திருத்தலச் சிறப்புகள் : அருள்வித்தன் என்ற பக்தன், இந்தத் தலத்து இறைவனுக்குத் தினமும் மலர் கைங்கர்யம் செய்துவந்தான். ஒருநாள், இறைவனுக்கான மலர்களை எடுத்துக்கொண்டு காவிரியைக் கடக்க முயற்சி செய்தான். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ‘வெள்ளத்தில் மலர்கள் இருக்கும் கூடை கைநழுவிவிடக் கூடாது’ எனும் எச்சரிக்கையோடு ஆற்றைக் கடந்தான் பக்தன்.

எனினும் ஒரு நிலையில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்க, கரையையே காணமுடியாத நிலை. பிறவிக்கடலைக் கடக்க உதவும் பெருமானான உச்சிரவனேஸ்வரரை நினைத்து வேண்டிக்கொண்டான், அந்தப் பக்தன். அவன் கரையேறும் வகையில் ஆற்றுத் துறையினைக் காட்டியருளினார் இறைவன். அதனால் இந்தத் தலத்து ஈசனைத் ‘துறைகாட்டும் வள்ளல்’ என்று போற்றுகிறார்கள். திருஞானசம்பந்தப் பெருமான் இந்தத் தலத்துக்கு வந்தபோதும் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்போதும் இறைவனே வேடனாக வந்து, சம்பந்தரின் கைகளைப் பற்றி அழைத்துச் சென்று, மறுகரையில் இருந்த துறைக்குக் கொண்டு சேர்த்து அருள்பாலித்தாராம்!
வழிபாட்டுச் சிறப்புகள் : துன்பங்கள் வெள்ளம்போல் நம்மைச் சூழ்ந்துகொண்டாலும் நம்மைக் காத்துக் கரைசேர்ப்பவர் உச்சிரவனேஸ்வரர் என்பதால், இந்தத் தலத்துக்கு வந்து இவரை வழிபட்டால், துயர்கள் அனைத்தும் தீரும். கோயிலின் ஸ்தல விருட்சமான விழல் செடியில், பிரார்த்தனை முடிச்சு இட்டு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டால், இப்பிறப்பில் உண்டாகும் துன்பங்கள் தீர்வதோடு, பிறவிப்பெருங்கடலையும் கடக்கலாம் என்பது அடியவர்களின் நம்பிக்கை.
எப்படிச் செல்வது : வதாரண்யேசுவரர் (வள்ளலார்) கோயிலிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவிளநாதர் தலம்.
வாக்கு வள்ளல் பெருஞ்சேரி வாகீஸ்வரர்
இறைவன் : ஸ்ரீவாகீஸ்வரர்
இறைவி : ஸ்ரீசுவாதந்தர நாயகி
திருத்தலச் சிறப்புகள் : பிட்சாடனர் கோலத்தில் வந்து, தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தைப் பங்கம் செய்த ஈசன் என்று இத்தலத்து இறைவனைப் போற்றுகின்றனர்.
அதேபோல், தட்ச யாகத்தை அழிக்க சிவனார் வீரபத்திரரை ஏவிய திருக் கதையை அறிவோம். யாகத்தை அழித்த வீரபத்திரர், அதில் கலந்துகொண்ட தேவர்களையும் தண்டித்தார். அப்போது, சரஸ்வதிதேவிக்கும் சிறு அங்கக் குறை ஏற்பட்டது.

தன் குறை நீங்க வழி ஈசனைத் தொழுவது ஒன்றேதான் என்பதை அறிந்த சரஸ்வதிதேவி, இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை பக்தியுடன் வழிபட்டு வேண்டி, தன் குறை நீங்கப் பெற்றார் என்கின்றன புராணங்கள். மேலும், அனைவரது வாக்கிலும் அமர்ந்து ஞானமருளும் வரத்தையும் சரஸ்வதிதேவி பெற்றது இந்தத் தலத்தில்தான் என்கின்றன, ஞானநூல்கள்.
இப்படி, கலைவாணிக்கு வாக்கு ஸித்தி அளித்ததால், இந்தத் தலத்து இறைவனான வாகீஸ்வரர், `வாக்கு வள்ளல்' எனப் போற்றப்படுகிறார்.
வழிபாட்டுச் சிறப்புகள் : ஒருமுறை மனதில் சாந்தமின்றி திரிந்த வியாழ பகவான், இந்தத் தலத்துக்கு வந்து 12 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்து சிவபெருமானைப் பூஜை செய்தும் தவமிருந்தும் வழிபட்டார். அதனால் மகிழ்ந்த சிவனார், வியாழ பகவானுக்குக் காட்சி கொடுத்து நல்லருள் புரிந்தார். வியாழனின் மனக்குறை நீங்கி மகிழ்ச்சி உண்டானது.

இந்தத் திருக்கதையையொட்டி, இந்தத் தலம் குரு பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு வந்து வாகீஸ்வரரை வழிபட்டால், மனக் குறைகள் நீங்கும். குருவினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும். கல்வி, வாக்கு போன்றவற்றில் மேன்மை உண்டாகும்.
எப்படிச் செல்வது :
திருவாரூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சுந்தரப்பன் சாவடி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. கிழக்கு நோக்கிப் பயணித்தால் பெருஞ்சேரியை அடையலாம்.
வழி காட்டும் வள்ளல் மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர்
இறைவன் : ஸ்ரீமார்க்கசகாயேஸ்வரர்
இறைவி : ஸ்ரீமங்களநாயகி, ஸ்ரீசௌந்தரநாயகி.
திருத்தலச் சிறப்புகள் : திரிபுரம் என்று பெயர்பெற்ற பறக்கும் கோட்டைகளைக் கொண்டிருந்த வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சகன் ஆகிய மூன்று அசுரர்களையும் அழித்து தங்களைக் காக்கும்படி பரமேஸ்வரனை வேண்டினர் தேவர்கள்.

சூரிய, சந்திரர்கள் சக்கரங்களாகவும், பூமி தேராகவும், விஷ்ணு அம்பாகவும், பிரம்மா தேரோட்டியாகவும் மாற, அந்தத் தேரில் ஏறி அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார் சிவன். அந்தத் தருணத்தில் தேவர்கள் ஒவ்வொருவரும், ‘தாம் இல்லாவிட்டால் ஈசனால் அசுரர்களை அழிக்க முடியாது’ என்று கர்வம் கொண்டார்கள். அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், தேவர்களின் செருக்கினை அடக்க நினைத்தார். புன்முறுவல் பூத்து அந்தச் சிரிப்பினாலேயே திரிபுரங்களையும் அழித்தார்.
பிரம்மாவும் திருமாலும் தேவர்கள் செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டனர். ஈசன், ‘தன்னை இந்தத் தலத்தில் லிங்க வடிவில் நிறுவி வழிபட்டால் அனைவரது பாவமும் தீரும்’ என்று வழிகாட்டினார். தேவர்களின் பாவங்கள் தொலைய வழிகாட்டியதால், இத்தலத்தின் இறைவன் மார்க்கசகாயேஸ்வரர் அல்லது ‘வழிகாட்டும் வள்ளல்’ என்று போற்றப்படுகிறார்.

வழிபாட்டுச் சிறப்புகள் : மகிஷாசுரனை வதைத்த பாவம் நீங்க, துர்கை வந்து வழிபட்ட தலம் இது. அதன் பலனாக அன்னையின் ஆங்கார ரூபம் நீங்கி, அழகிய எழிற்கோலம் பெற்றாள். அதனாலேயே இங்கு சௌந்தரநாயகி என்று அழைக்கப்படுகிறாள். தேவர்கள் பாவம் நீங்க இத்தலத்தில் வழிபட்டு பயன்பெற்றனர். எனவே, இந்தத் தலத்தில் ஈசனை வணங்கி வழிபட்டால், பாவங்கள் தொலையும்; நோய்கள் நீங்கும். வாழ்வில் வாழ வழியின்றித் தவிப்பவர்கள், இங்கு வந்து இறைவனைச் சரணடைந்தால், அவர்களின் நல்வாழ்க்கைக்கு இந்த இறைவன் வழிகாட்டி அருள்வார் என்பது நம்பிக்கை.
எப்படிச் செல்வது :
பெருஞ்சேரி கோயிலிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது மூவலூர் கோயில்.
அனைத்தையும் அருளும் வள்ளல் மயிலாடுதுறை மயூரநாதர்
இறைவன் : ஸ்ரீகௌரி மயூரநாதர் - ஸ்ரீகௌரி தண்டவரேசர்
இறைவி : ஸ்ரீஅபயாம்பிகை, ஸ்ரீஅஞ்சொல்நாயகி
திருத்தலச் சிறப்புகள் : காசிக்கு இணையான 6 தலங்களில் இதுவும் ஒன்று. தாட்சாயினியாக அவதரித்த அன்னை பார்வதி, தட்சனால் ஏற்பட்ட இடர் தீரவும் ஈசனின் அருளைப் பெறவும் மயிலாக மாறி வந்து இறைவனை வழிபட்ட தலம் இது. அப்படி பூஜித்த அம்பிகைக்கு, சிவபெருமான் ஆண் மயிலாகத் தோன்றி நடனமிட்டு, காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.

நாத சர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதி ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடிப் புண்ணியம் பெறுவதற்காக நீண்ட தூரம் பயணித்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் ஐப்பசி மாதத்தின் கடைசி நாள் முடிவடைந்துவிட்டது. அதனால் வருந்திய தம்பதி, சிவனாரை வேண்டினார்கள்.அன்று இரவு நாத சர்மாவின் கனவில் தோன்றிய ஈசன், ‘நாளை அதிகாலையில் நீராடினாலும் ஐப்பசியில் நீராடிய பலனைப் பெறுவாய்’ என்று அருளினார். மறுநாள் காலையில் இருவரும் காவிரியில் நீராடி, புண்ணியம் பெற்றனர். இக்கதையையொட்டியே `முடவன் முழுக்கு' எனும் நீராடல் வைபவம் ஏற்பட்டது என்பர்.
வழிபாட்டுச் சிறப்புகள் : காவிரியில் நீராடி, கங்காதேவியே தன் பாவங்களைப் போக்கிக்கொண்ட தலம் இது. அப்படி கங்கை இங்கே வரும்போது, ஸ்ரீகாசிவிசுவநாதர், ஸ்ரீவிசாலாக்ஷி, ஸ்ரீதுண்டி விநாயகர், ஸ்ரீகாலபைரவர் ஆகியோரும் இங்கே வந்துவிட்டார்களாம். ஆகவே, இத்தலத்தில் வழிபடுவது, காசிக்குச் சென்று வழிபடுவதற்குச் சமம். பக்தர்கள் வேண்டிக் கொள்ளும் அனைத்தையும் அருள்வதால், இந்தத் தல ஈசனுக்கு ‘அனைத்தையும் அருளும் வள்ளல்’ என்று பெயர்.

இங்கு, சிரசில் அக்னியுடன் அருள்பாலிக்கிறார் ஸ்ரீஜுவாலா சனி. இவரின் அருளால் சனி தொடர்பான தோஷங்கள் நீங்கும். மேலும், ஈசன் இங்கு மயிலாகத் தோன்றி நடனமாடியதால், நடனம் கற்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால், கலையில் மேன்மை உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
எப்படிச் செல்வது :
மூவலூர் கோயிலிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது மயூரநாதர் கோயில்.