Published:Updated:

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: நந்தனாருடன் திருக்குளம் வெட்டிய கணபதி... திருமுறைகள் கூறும் அதிசயம்!

விநாயகர்
விநாயகர்

திருக்குளம் முழுவதுமாக சீர்படும் வரை தினமும் பணியாற்றி அந்த கூலியும் வாங்காமல் தொண்டாற்றியவர் திருப்புன்கூர் கணபதி. இன்றும் இந்த வரலாறு அந்த வட்டாரத்தில் உலாவி வருகிறது.

சைவ சமயத்தவர்களின் வேதமாகத் திகழ்வன 12 திருமுறைகள். இதில் முதலாவதும், முக்கியமானதும் ஆன முதல் 7 திருமுறைகளை நம்பி ஆண்டார் நம்பி கண்டறிந்துத் தொகுத்து அளித்தார் என்று அறிந்து இருக்கலாம். அந்த வகையில் திருமுறைகளை கண்டறிந்துக் கொடுத்த காவல் தெய்வமாகவேத் திகழ்பவர் கணநாதர். தில்லையில் இருக்கும் வழிகாட்டி கணபதியே திருமுறைகள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியவர்.

திருமுறைகளைக் கண்டறிந்து கொடுத்தது மட்டுமில்லாமல், திருமுறைகளில் பல இடங்களில் நிறைந்தும் இருப்பவர் கணநாதர். 'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி’ என்று சீர்காழிப் பிள்ளை பல இடங்களில் கணபதியைத் தொழுகிறார். நாவுக்கரச பெருமானும் சுந்தரரும் விநாயகரைத் தேவாரத்தில் 'கணபதி' என்று திருநாமம் உரைத்தே பாடியுள்ளனர். திருமூலரின் திருமந்திரத்திலும் மற்றும் பதினோராம் திருமுறையில் கபிலதேவர், பரணதேவர், அதிராவடிகள் பாடல்களிலும் விநாயகர் சிறப்பாகப் போற்றப்படுகிறார். (திருமுறைகளில் திருவாசகத்தில் மட்டுமே கணபதியை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லை)

12-ம் திருமுறையான பெரிய புராணத்தில் 'வானுலகும், மண்ணுலகும் வாழ, நான்கு மறை வாழ, செய்யத் தமிழ் பார்மிசை விளங்க, ஆனைமுகனைப் பரவு’ என்கிறார் தெய்வ சேக்கிழார். அது மட்டுமா, பெரிய புராணத்தின் பல நாயன்மார்களின் கதையில் கணபதியின் புகழ் பெரிதும் பாடப்பட்டு உள்ளது.

கணபதி
கணபதி

திருநாவுக்கரசரை யானை மிதிக்க வந்தபோது 'கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறு' என்று யானையை கணபதியாக நாவுக்கரசர் பாட யானை விலகியது. அதேபோல் சிறுத்தொண்டர் நாயனாரின் திருக்கதையில் கஜமுகாசுரனை அழித்த கணபதியின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சுந்தரமூர்த்தி நாயனார் திருவையாற்றுக்குப் போனபோது காவிரியில் பெரும் வெள்ளம் உண்டாகி அவரைத் தடுத்தது. அப்போது 'ஐயாறுடைய அடிகளே! ஓலம் ஓலம்' என்றார் தம்பிரான் தோழர். தந்தையை முந்திக் கொண்டு கணபதிதான் தன்னுடைய ஓலத்தை ஈசனுக்கு மீண்டும் அறிவித்தார். இதனால் அவருக்கு 'ஓலமிட்ட விநாயகர்' பெயர் உண்டானது. அதேபோல் முதுகுன்றத்தில் தாம் பெற்ற பொன்னை, திருவாரூரில் பெற்றுக் கொள்ளும்போது அந்த தங்கத்தின் தரத்தை உரசி தரம் பார்த்துச் சொன்னவர் 'மாற்றுரைத்த பிள்ளையார்' தான்.

பஞ்சாங்கக் குறிப்புகள் - செப் 6 முதல் 12 வரை! #VikatanPhotoCards
மாணிக்கவாசகர் திருக்கதையிலும், அவர் திருப்பெருந்துறையில் தங்கி இருந்தபோது, அந்த ஊரில் வீற்றிருந்த 'வெய்யில் காத்த பிள்ளையார்' அவருக்குத் தோன்றி தானே மும்மூர்த்திகளும் என்று விஸ்வரூப காட்சி அளித்து பெருந்துறை ஆலயத்தை எப்படி கட்டவேண்டும் என்று சொன்னதாக ஒரு தகவல் உள்ளது.

நந்தனார் எனும் திருநாளைப்போவார் சரிதத்திலும் கணநாதரின் பெருமை சொல்லும் ஒரு உருக்கமான தகவல் உண்டு. நந்தியை விலகச் சொல்லிவிட்டு தனக்கு அருள் காட்சி தந்த திருப்புன்கூர் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டார் திருநாளைப்போவார். அன்றாடம் அவரை வழிபடுவதை தமது கடமையாகக் கொண்டார். அப்போது அந்த சிவாலயத்தின் திருக்குளம் பழுது அடைந்திருப்பதைக் கண்டு மனம் நொந்தார். தன்னந்தனியராக அந்த ஆலயத்து திருக்குளத்தை சீர் செய்யவும் தொடங்கினார். நாள்கள் பல கடந்தன.

பிள்ளையார்
பிள்ளையார்

அந்த பரந்து விரிந்த குளம் எத்தனை மண்ணை தோண்டினாலும் சீர்படவே இல்லை. ஒரு கட்டத்தில் தனக்கு துணையாக யாரையேனும் அனுப்ப வேண்டும் என்று ஈசனைப் பணிந்து வேண்டினார் நந்தனார். அப்போது ஈசனின் ஆணைப்படி நந்தனாருக்கு துணையாக ஒரு வேலையாளாக வந்தவர் கணபதி. தன்னுடைய தகப்பனார் உறையும் ஆலயத்து குளத்தை சீர் செய்ய தானே மண் சுமந்தார். படிகளுக்கான கல் சுமந்தார். சுண்ணமும் நீரும் கூட சுமந்தார் அந்த செல்லப் பிள்ளையார்.

திருக்குளம் முழுவதுமாக சீர்படும் வரை தினமும் பணியாற்றி அந்த கூலியும் வாங்காமல் தொண்டாற்றியவர் திருப்புன்கூர் கணபதி. இன்றும் இந்த வரலாறு அந்த வட்டாரத்தில் உலாவி வருகிறது. கணபதி வெட்டிய திருக்குளம் அவர் பெயரால் 'கணபதி தீர்த்தம்' என்றும், குளம் வெட்டிய கணபதி 'குளம் வெட்டிய விநாயகர்' என்றுமே வணங்கப்படுகிறார்.

வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் எளிய கடவுளான கணபதியை எந்நாளும் நெஞ்சில் ஏந்தி வல்வினை தீர்ப்போம்.
அடுத்த கட்டுரைக்கு