Published:Updated:

கீழ்திருப்பதியிலேயே தரிசன டோக்கன் பெறுவதுதான் நல்லது! - திருமலை யாத்திரை ஒரு வழிகாட்டல் #Tirupati

எஸ்.கதிரேசன்

இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுன்ட்டர்கள், கீழ்திருப்பதியில் விஷ்ணு நிவாஸம், சீனிவாஸம் காம்ப்ளக்ஸ், திருப்பதி ஆர்.டி.சி பஸ் ஸ்டாண்டு, பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் திறக்கப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

 Tirupati
Tirupati

திருப்பதி வேங்கடேசப்பெருமாளை தரிசிப்பதற்காக, நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் படையெடுத்து வருகின்றனர். நாளொன்றுக்கு குறைந்தபட்சமாக 60,000 முதல் விடுமுறை நாள்களில் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். இதனால், பக்தர்கள் 10 முதல் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலையே நிலவிவந்தது. குறிப்பாக, இலவச சர்வதரிசனம் செய்பவர்கள் இதைத் தவிர்ப்பதற்காக, நேரம், நாள் குறிப்பிட்ட புதிய டோக்கன் தரிசன முறையை, கடந்த ஆண்டு மார்ச் மாதம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம்செய்தது.

Tirupati
Tirupati

தற்போது, பக்தர்கள் இதன்மூலம் 3 முதல் 4 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸிலிருக்கும் கம்பார்ட்மென்ட்டுகளில் அடைபட்டிருக்கும் நேரம் குறைந்தது.

ஆனால், திருப்பதிக்கு வரும் பலரும், 'மேல் திருப்பதியில் சர்வதரிசன டோக்கனைப் பெறலாம்' என்று வந்துவிடுகின்றனர். ஆனால், திருமலையின் சி.ஆர்.ஓ ஆபீஸுக்கு எதிரிலிருக்கும் சர்வ தரிசன டோக்கன் கவுன்ட்டரில் 2 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இவை, காலை 8 மணி முதல் 9 மணிக்குள் முடிவடைந்துவிடும்.

இத்தனைக்கும், இவற்றைப் பெற திருமலா பஸ்ஸில் விடியற்காலையில் வந்திறங்கிய பக்தர்கள் பலரும், ஏற்கெனவே காத்துக்கிடப்பார்கள். அதனால், காலை 9 மணியளவில் வரும் பக்தர்களுக்கு டோக்கன் கிடைக்காது. டோக்கனுக்காக மறுநாள் வரை காத்திருக்க வேண்டும் அல்லது வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் வழியாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். இது பக்தர்களின் பயணத்திட்டத்தில் மாறுதல்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க கீழ்திருப்பதியிலேயே டோக்கன்களை வாங்கிக்கொண்டு மேல் திருப்பதிக்கு வருவது நல்லது.

இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுன்ட்டர்கள், கீழ்திருப்பதியில் விஷ்ணு நிவாஸம், சீனிவாஸம் காம்ப்ளக்ஸ், திருப்பதி ஆர்.டி.சி பஸ் ஸ்டாண்டு, பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் திறக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள், அதிகாலை 4.00 முதல் 6 மணி வரை மட்டுமே வழங்கப்படும்.

Lord Perumal
Lord Perumal

கூட்டம் குறைவாக இருக்கும் வார நாள்களில், ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு டிக்கெட்டுகள் தீரும் வரை வழங்கப்படும்.

வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இவை சீக்கிரம் தீர்ந்துவிடும். இதேபோல், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் திருமலையில் 1000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

அலிபிரி-யிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரம் நடந்து வருபவர்களுக்கு உடனடி தரிசனம் தரும் வகையில், 'திவ்ய தரிசனம்' எனும் முறை ஏற்படுத்தப்பட்டது. இதனால், மலைப்பாதை வழியே நடந்துவரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வார விடுமுறை நாள்களில் 30 முதல் 35 ஆயிரம் பேர் வருகின்றனர். ஆனால், தரிசன டிக்கெட்டுகள் 22 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகின்றன. மற்றவர்கள், மலையேறி வந்தும் சர்வ தரிசன க்யூவில் மீண்டும் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை.

Devotees
Devotees

'ஶ்ரீவாரி மெட்டு வழி' எனும் பழைமையான பாதையிலும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை தினமும் வருகிறார்கள். ஆனால், அங்கு 6 ஆயிரம் டிக்கெட்டுகளே வழங்கப்படுகின்றன. மற்றவர்கள், சர்வ தரிசன க்யூவில் மீண்டும் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள்.

இதற்குக் காரணம், இளைஞர்கள் திருமலைக்கு அடிக்கடி வரத் தொடங்கிவிட்டனர். டிரெக்கிங் அனுபவமாகவும் வீக் எண்டு ஹேப்பி ட்ரிப்பாகவும் இருப்பதால், வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருகின்றனர். இதனால், பிரார்த்தனைக்காக வரும் குடும்பஸ்தர்களும் வயதானவர்களும் திவ்ய தரிசன வாய்ப்பு கிடைக்காமல்போய் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

Tirupati
Tirupati
Vikatan

"ஒருமுறை திவ்ய தரிசனம் வழங்கப்பட்டால், குறைந்தது ஆறு மாதத்துக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படக்கூடாது. இப்படி ஒருவரே அடிக்கடி வருவதைத் தவிர்த்தால், இந்தப் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வு காண முடியும்" என்று கோரிக்கை வைக்கின்றனர் பக்தர்கள்.