ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

'திருவடிகளுக்கே சரணம்!'

சத்குரு சிவன்சார்
பிரீமியம் ஸ்டோரி
News
சத்குரு சிவன்சார்

சத்குரு சிவன்சார் அற்புதங்கள்

`என் தம்பி சாச்சு பிறவியிலேயே பெரிய மகான்’ என்று காஞ்சி முனிவர் மகாபெரியவராலேயே சிலாகிக் கப்பட்டவர் சிவன் சார். அவருக்கு மூன்று பாஷைகள் தெரியும் என்பதுவும் மகா பெரியவரின் திருவாக்கு.

சிவன் சார்
சிவன் சார்

சிவன் சார், கைப்பிடி நெல்லை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ஒருவித ஒலியெழுப்பிக் கூவ, குருவிகள் வந்து, அவரது கையில் அமர்ந்து நெல்லைச் சாப்பிடுமாம். வேத வித்தான விஜயபானு கனபாடிகளுக்கு, இந்தக் காட்சியை நேரிலேயெ காணும் பாக்கியம் கிடைத்தது.

கனபாடிகள் இதுகுறித்து மகாபெரியவாளிடம் சொன்னதும், ‘`சாச்சுவுக்கு மூணு பாஷை தெரியும். உனக்குத் தெரியுமோ?’’ என்றாராம் மகாபெரியவா. அதாவது, மனிதர்கள், மிருகங்கள் மற்றும் பட்சிகளின் பாஷையை அறிந்தவர் சிவன் சார்!

மகான்களிடம் தனது குறைகளைச் சொல்லித்தான் பரிகாரம் தேட வேண்டும் என்பதில்லை. அவர்களின் சந்நிதியை நோக்கி நடக்கத் தொடங்கினாலே, ஊழ்வினைகள் அலறி ஓடிவிடும் என்பார்கள். ஆம், குருவருள் மகத்துவம் வாய்ந்தது. இவ்வகையில் சிவன் சாரின் திருவருளைப் பெற்ற பாக்கியசாலிகள் பலர் உண்டு. அவர்களில் லக்ஷ்மியும் ஒருவர். இதோ அவரின் அனுபவம்...

லக்ஷ்மி
லக்ஷ்மி


“என் பெயர் லக்ஷ்மி. சொல்லப் போனால் எனக்குச் சிவன் சார்னு ஒரு மகான் இருப்பதே தெரியாது. ஒருமுறை, எங்கள் ஃப்ளாட்டில்தான் சார் இருக்கார்ன்னு சொல்லி, எங்கள் வீட்டு மாடியில் இருக்கிறவங்கதான் வந்து என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. தினமும் போய் நிர்மால்யம் எடுத்தேன்.

அதில் ஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி. சார் என்னுடனேயே இருக்கிற மாதிரி உணர்வு இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா அந்த உணர்வு என்னை முழுமையாக ஆக்கிரமிக்க, நாளாவட்டத்தில் சார் இல்லாமல் எதுவுமே இல்லை எனும் மனநிலைக்கு வந்துட்டேன்.

எங்க வீட்டுக்காரர் பெங்களூருவில் இருந்தார். திடீர்னு அவருக்கு வேலை போனதும் சென்னை வந்துட்டார். அவருக்கு வேலை இல்லையேன்னு என் மனசில் கவலை ஒருபுறம் இருந்தாலும், ‘சார் இருக்கார். அவர் நம்மைக் காப்பாத்துவார்’ன்னு அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தது.

அது என்ன அதிசயம்னு தெரியல... இந்த முறை சாரின் ஆராதனை நடைபெற்ற தருணம். என் கணவரின் பழைய கம்பெனியில் இருந்து கூப்பிட்டாங்க. ‘சென்னை ஆபீஸில் உடனே ஜாயின் பண்ணுங்க’ன்னு சொன்னாங்க.

அதுவரையிலும் சென்னை தரமாட்டோம்னு சொன்னவங்க, இப்ப இப்படிச் சொன்னதும் எங்களுக்கு திகைப்பு... சந்தோஷம். அதுமட்டுமில்ல... அந்த நேரத்தில் சிவன் சார் ஆராதனையில் உட்கார்ந்திருந்தேன். அவருக்கு அபிஷேகம் எல்லாம் முடிஞ்சு வெளியே வர்றேன்... கணவர் போன் பண்ணி விஷயத்தைச் சொல்றார். எனக்கோ மனம் கொள்ளா சந்தோஷம்.

‘சாரே உத்தரவு கொடுத்திட்டார். இனிமேல் என்ன... உடனே ஜாயின் பண்ணுங்க’ன்னு சொன்னேன். என் வீட்டுக்காரர் திருப்பி வேலையில் சேர்ந்து, அவருடைய செகன்ட் இன்னிங்க்ஸை ஆரம்பிச்சிட்டார். எல்லாம் சார் எங்களுக்குக் கொடுத்த பிச்சை.

அனுதினமும் ஒவ்வொரு விஷயத்திலும் நான் சாரைப் பார்ப்பேன்... நினைப்பேன். மனசுல ‘நம் கூடவே சார் இருக்கார்’ என்னும் தைரியம் நிறையவே வந்துடுச்சி.

நான் பெங்களூருவில் இருந்தபோது நடக்க முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டேன். இப்போ எனக்கே ஆச்சர்யமா இருக்கு... நல்ல நடக்கறேன். சார்தான் இவ்வளவுதூரம் நடக்க வைக்கிறார் என்பதுதான் உண்மை. இதுக்குமேல எப்படிச் சொல்றது அவரின் திருவருள் கடாட்சத்தை... வார்த்தைகளே இல்லை... சத்குரு சிவன் சார் திருவடிகளுக்கே சரணம்!”

அவதாரப் புருஷர்!

ஓர் அவதாரப் புருஷர்- ஜீவன் முக்தர் எந்த நிலையில் இருப்பார்? இதற்கு, தனது புத்தகம் ஒன்றில் சிவன் சார் தரும் பதில்...

‘சர்வ சக்திகளையும் கொண்ட ஒருவர் அல்லது கடவுள், இந்த உலகில் அவதரித்தாலும், அவர் மக்கள் அனைவருக்கும் நிவர்த்தி அளிக்கும் தொண்டில் ஈடுபடுவது இல்லை. இது ஒரு நியதி!

ஆனாலும், அத்தகைய ஆத்மிக சக்தி என்றொரு மகத்துவம் உண்டு என்பதை உலகம் அறியும் பொருட்டு, ஏதோ தனக்குத் தோன்றும் ஒரு சில சந்தர்ப்பங்களில், அற்புதங்கள் செய்துவிட்டு தன்பாட்டில் மறைந்துபோய் விடுவதும் உண்டு.

ஆன்மிகத்தில் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள், கீர்த்தி யைக் கொண்டிருக்க வேண்டுமென்ற நியாயம் கிடையாது. எவனொருவன் பதவி, ஸ்தாபனம், காணிக்கை போன்ற அனைத்தை யும் துறந்து தனித்து இயங்குகிறானோ, அவனே வைராக்கியம் உள்ளவன்.