தொடர்கள்
Published:Updated:

வாரணமும் தோரணமும்

தோரணமலை
பிரீமியம் ஸ்டோரி
News
தோரணமலை

தோரணமலை

`சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்றொரு சொல் வழக்குக் கிராமப்புறங்களில் உண்டு. இதற்கு அழகானதோர் அர்த்தத்தை வாரியார் சுவாமிகள் முதலான ஆன்றோர்கள் எளிமையாய் சொல்லிச் சென்றுள்ளார்கள். என்ன தெரியுமா?

தோரணமலை
தோரணமலை
தோரணமலையான்
தோரணமலையான்

திருமணமாகி வெகுகாலம் ஆகியும் பிள்ளைச் செல்வம் இல்லா மல் வருந்தும் தம்பதியர், முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதிநாளில் விரதமிருந்து உள்ளம் உருக வேண்டிக்கொண்டால், நம் இல்லம் மகிழ குழந்தை வரம் கிடைக்கும். அதாவது சஷ்டியில் விரதம் இருந்தால் கந்தன் திருவருள் கைகூடும்; அகப்பையில்... அதாவது அகத்தில் உள்ள கருப் பையில் கரு ஜனிக்கும். முருகனைப் போன்றே அழகான அறிவுமிகுந்த குழந்தை பிறக்கும்.

ஆன்றோர் சொன்ன இதுபோன்ற வாக்குகள் எல்லாம் வெறும் நம்பிக்கையால் சொல்லப்பட்டவை அல்ல. பக்தர்கள் பலரும் அனுபவபூர்வமாக கண்டுணர்ந்ததால் சொல்லப்பட்டவை.

தோரணமலையான் திருவருளால் கிடைத்த வரப்பயனாக பலருக்கும் பிள்ளைக் கனி வாய்த்த நிகழ்வுகள் உண்டு. சிவகாசி அருகே சிறு தொழில் செய்துவந்தார் அன்பர் ஒருவர். அருமையான குடும்பம் அவருடையது. எனினும் ஒரு குறை இருந்தது. திருமணம் ஆகி ஐந்து வருடங்களாகியும் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் இருந்தது அந்த அன்பருக்கு. அவரின் மனைவி கருவுற்றாலும், உடல் நிலை காரணத்தால் ஓரிருமுறை கரு கலைந்துபோனது.

அதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தவருக்கு, நண்பர்கள் மூலம் தோரணமலையின் மகத்துவம் தெரியவந்தது. அடுத்தமுறை தோரணமலை கோயிலுக்குச் செல்லும்போது தனக்காகவும் வேண்டிக் கொள்ளும்படி நண்பர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அப்படியே செய்தார்கள். குகைக்கோயில் அழகனை வழிபட்டவர்கள், மறக்காமல் தோரணமலைச் சுனைத் தீர்த்தத்தை முருகனிடம் சமர்ப்பித்து, நண்பருக்காக எடுத்துச் சென்றார்கள்.

அருமருந்தென பக்தர்கள் யாவரும் போற்றும் தோரணமலைச் சுனைத் தீர்த்தம் சிவகாசி அன்பரிடம் கொடுக்கப்பட்டது. பயபக்தி யோடு வாங்கிக்கொண்டவர், அதைத் தன் மனைவிக்குக் கொடுத்தார். கந்தன் கருணை யால் விரைவிலேயே அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகென்ன... தம்பதி சமேதராக தோரணமலைக்கு வந்து, தங்களுக் குக் குழந்தை வரம் தந்த தோரணமலை குமரனை நன்றிப் பெருக்கோடு வழிபட்டுச் சென்றார்கள்.

இங்ஙனம் தோரணமலையானிடம் வரமும் வாழ்வும் பெற்ற அன்பர்கள் ஏராளம் உண்டு. `நவநிதி பதயே நமோநம’ எனக் கந்தனைப் போற்றுவார் பாம்பன் ஸ்வாமிகள். ஆம், சகல நிதிகளுக்கும் தலைவன் அந்த முருகனே என்பது அவரின் வாக்கு. மனமுருகி வழிபடும் யாவருக்கும் எல்லா சுகபோகங்களையும் குறைவின்றி அருள்வதில் தோரணமலை முருகனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.

பக்தர்களுக்கு ஞானத் தகப்பனாகவும் திகழ்கிறார் தோரணமலையான். அவ்வகையில் அந்த முருகனை `அப்பா’ என்றே அழைக்கும் பக்தர் ஒருவரும் சிவகாசியில் இருந்தார். தொழில் துறையில் பெரும் உயரம் கண்டவர்.

அவருக்குக் கல்யாணம் கூடிவந்தது. முதல் அழைப்பிதழை அப்பனுக்கே வைக்கவேண்டும் என்ற முடிவோடு நண்பர்களுடன் புறப்பட்டார். அதிகாலையில் புறப்பட்டவர்கள், அபிஷேகத்துக்காக சிவகாசியிலேயே பால் வாங்கிக் கொண்டார்கள். எல்லோரும் தோரணமலையை அடைந்து மலை உச்சியில் அழகனின் சந்நிதியை அடைந்தபோது மதியவேளை ஆகியிருந்தது.

குளிரக்குளிர அபிஷேகம், தரிசிப்போர் சிந்தை மகிழ அலங்காரம், ஆராதனைகள் எனச் சிறப்பாக வழிபாடுகள் நிறைவுற்றன. பிரசாதம் கொடுக்கும் வேளையில், புதுமாப்பிள்ளையான சிவகாசி அன்பரிடம் கோயில் பூசாரி ``பால் எங்கு வாங்கினீர்கள்... மாதா புரத்திலா?’’ என்று.

``இல்லை... சிவகாசியில்’’ என்று அன்பர் கூறியதும் பூசாரிக்கு பெரும் வியப்பு. காரணம் அவ்வளவு நேரமாகியும் அவர்கள் வாங்கி வந்த பால் கெட்டுப்போகாமல், அப்போது கறந்ததுபோல் இருந்தது தான்!

மாதாபுரம் தோரணமலைக்கு அருகில் உள்ள ஊர். இந்த அன்பர்கள் அந்த ஊரில்தான் பால் வாங்கி வந்திருப்பார்கள் என்றே பூசாரி நினைத்திருந்தார். ``இல்லை... சிவகாசியில் காலை யிலேயே வாங்கிவிட்டோம்’’ என்று இவர்கள் கூறவும் வியந்து போனார் பூசாரி. எல்லாவற்றுக்கும் முருகனின் திருவருளே காரண மன்றி வேறென்ன?!

இன்றைக்கும் சஷ்டி, கார்த்திகை என முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள்களில் பக்திப்பெருக்கோடு பெருந்திரளாகத் தோரணமலையில் சங்கமித்து அவனை வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள் பக்தர்கள். அவர்கள் ஓவ்வொருவரின் வாழ்விலும் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் தோரணமலையான் என்பதை அவர்களின் முகப்பொலிவும் மகிழ்ச்சியுமே காட்டித் தரும்!

தேரையர்
தேரையர்

முருகப்பெருமான் வைத்தியநாதனாகவும் அருள்பவன் அல்லவா? அதனால்தானே `பவரோக வைத்தியநாதப் பெருமாளே’ என அவரைப் போற்றுகிறார் அருணகிரியார். அந்த வைத்தியனின் ராஜதானி எனத் திகழும் தோரணமலை தீரத்தில் வளர்ந்து திகழும் தாவரங்கள் யாவும் ஒளஷதங்களே; மலைச்சாரலில் விழுந்து பாறைகளில் ஒழுகும் மழை நீரும் அமிர்தத் தாரைகளே!

அதனாலன்றோ, மருத்துவ அற்புதங்களை நிகழ்த்தும் மையமாக தோரணமலையைத் தேர்ந்தெடுத்தார் தேரையர். இங்கிருந்தபடி அவர் இந்த உலகுக்கு அளித்த மருத்துவ வழிகாட்டல்கள் எண்ணற்றவை. சில எளிய குறிப்புகள் உங்களுக்காகவும்...

வெள்ளை உள்ளிப் பூண்டு உரித்து, நெய் விட்டு வதக்கி உண்டால் உடம்பினுள் ஏற்பட்ட வலி நீங்கும். கொடி முந்திரிப் பழத்தை உண்டு வந்தால், உடல பலம் பெறும்; அசதி நீங்கும். அதேபோல் சாமை அரிசியைக் கஞ்சியாக வைத்துக் குடித்தால், உடல் வலி நீங்கும்.

நல்ல தினை மாவைத் தேன் விட்டுப் பிசைந்து உண்டு வர உடல் பருக்கும். பனை வெல்லத்தை நீர்விட்டுக் காய்ச்சிப் பருகினால் உடல் வெப்பம் நீங்கும்.

சீரகத்தை இரும்புக் கரண்டியில் இட்டு நெய் விட்டு வறுத்துப் பொடித்துவைத்து, அதை தேனில் குழைத்து, நாவினால் சுவைத்துச் சாப்பிட்டு வந்தால் விக்கல், கபத்தினால் ஏற்படும் வாந்தி மெள்ள மெள்ள குறையும். வாக்குத் தெளிவு உண்டாகும்.

இவையாவும் பெரியவர்கள் துணையுடன் செய்யக்கூடிய எளிய பக்குவ முறைகள். அவரவர் உடல்வாகுக்கு தக்கபடி மேற்காணும் வழிமுறைகளை ஏற்கலாம். இதுபோல் ஏராளமான அபூர்வ வழிகாட்டல்களையும் தேரையர் வழங்கியிருக்கிறார்.

தோரணமலைக்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமானை வணங்குவதோடு அகத்தியரையும் மனதாரப் பிரார்த்திக்கிறார்கள். அவரின் சீடரான தேரையர் பெருமானையும் பக்தியோடு வழிபட்டுச் செல்கிறார்கள்.

தேரையருக்கு உகந்த நாள் ஞாயிற்றுக் கிழமை. அன்றைய தினம் தோரணமலையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள். தேரையர் இன்றைக்கும் சூட்சுமமாக நிறைந்திருப்பதாகச் சொல்லப்படும் குகைக்கு அருகில் தீபம் ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள். மிளகு அதிகம் சேர்த்த வெண் பொங்கலும், பாயசமும் படைத்து தேரையரை வழிபடுவது சிறப்பு.

இதனால் தேரையரின் குருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அவர் அருளால் நாம் நம் மனதில் நினைத்த நற்காரியங்கள் யாவும் நல்லபடியே நிறைவேறும்; புதிய முயற்சிகள் பலிதமாகும்; தீராத பிணிகளும் தீரும்; தீவினைகளும் துன்பங்களும் நம்மை விட்டு விலகி ஓடும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!