Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 23

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம் - 23

ரங்க ராஜ்ஜியம்

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

`கேசவனையே செவிகள் கேட்க திருவரங்கத்து

ஈசனையே சென்னி இறைஞ்சிடுக - நேசமுடன்

கண்ணனையே காண்க இரு கண் இணர்கொள் - காயாம்பூ

வண்ணனையே வாழ்த்துக என் வாய்’

- பிள்ளைப்பெருமாளைய்யங்கார்.

ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்


பெருமாளுக்கு ஒரு நம்பெருமாள், ஆழ்வார்களில் ஒரு நம்மாழ்வார், ஜீயர்களில் ஒரு நஞ்ஜீயர், பிள்ளைகளில் ஒரு நம்பிள்ளை என்ற வரிசையில், பாடுவான்களில் ஒரு நம்பாடுவானும் சேர்ந்தான்.

மேற்கண்ட இந்த கைசிக ஏகாதசி நிகழ்வை வராகர் வடிவில் எம்பெருமானே பூமிப் பிராட்டியாருக்கு கூறப்போக, அது கைசிக புராணமாயிற்று. இதை பராசர பட்டர் மிக உருக்கமாய் உபன்யாசமாய் கூறி, கேட்பவர் சிந்தையில் ஞானம் மலரச் செய்தார்.

ஒரு கைசிக ஏகாதசியன்று விரதம் இருந்து இந்த உபன்யாசத்தை அரங்கன் திருச்சந்நிதி அருகிலுள்ள மண்டபத்தில் அமர்ந்து நிகழ்த்திய பராசரர், அப்போதே அரங்கனின் அசரீரி குரலுக்கு ஆட்பட்டார்.

`பட்டரே! நீர் துவாதசி பாரணை முடித்து எம் திருவடி நிழலில் நித்யமும் இளைப்பாறிட வருவீராக. உமக்கு முக்தி தந்திட்டோம்' என்றார் அரங்கன்.

பராசரரும் புளகாங்கிதம் அடைந்தார். பிறப்பெனும் பெருங்கடலின் கரை தெரிந்து விட்டதில் அவருக்குள் மட்டற்ற மகிழ்ச்சி. கைசிக புராணம் அவரையும் கைவிடவில்லை. உபன்யாசம் முடிந்த கையோடு எம்பெருமானை... நிறைவாக தனக்கான ஸ்தூல உடலின் கண்களோடு கண்ணார தரிசித்தார். அதன்பின் திருமாளிகைக்குச் சென்று தன் உயிர் பிரியும் வரையில் மௌனித்திருக்காமல், பெருமாளின் கீர்த்தியைச் சொல்லும் திருநெடுந் தாண்டகத்துக்குப் பொருள் கூறலானார். குறிப்பாக `அலம்புரிந்த நெடுந்தடக்கை' என்கிற திருநெடுந்
தாண்டகத்தின் 6-ம் பாசுரத்தைக் கூறிடும்போது அவர் திருமேனி ஒட்டுமொத்தமும் சிலிர்த்துப் போனது.

திருவரங்கம்
திருவரங்கம்


பராசர பட்டர் `பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்' என்கிற பெரியாழ்வார் திருமொழியை ஒரு முறைக்கு இருமுறை சொல்லி மகிழ்ந்த நிலை யில், கூப்பிய கரங்களும் ஆனந்தக் கண்ணீரு மாய் அவர் இருந்த நிலையில், அவரது சிரசில் கபாலம் வெடித்து அவரின் ஆன்மா எல்லோ ரும் பார்த்திட, ஒரு சுடர் வடிவில் விண்ணே கியது. ஞானியர் மற்றும் முக்தர்களின் ஆத்ம விடுதலையை அன்று திருவரங்கத்தார் நேரில் கண்டனர். கைசிக ஏகாதசியின் பெரும் பயனையும் ஆழமாய் உணர்ந்தனர்.

பராசரர் இவ்வாறு வைகுண்டம் அடைந்த நிலையில், அவர் தம்பியான ராமப்பிள்ளை பராசரரின் திருத்தொண்டினைத் தொடர்ந் தார். இன்று–ம் இந்தப் பரம்பரையினர் கோயிலுக்கான புரோகிதத்தையும், பெரிய பெருமாள் முன்பு புராணங்களைச் சொல்லி வழிபடும் கைங்கர்யங்களையும் செய்து வருகின்றனர்.

பராசரரின் இடத்தை அவருடைய சிஷ்யரான நஞ்ஜீயர் அலங்கரித்தார். (இவரது காலத்தை கோயிலொழுகு கி.பி 1113 - 1208 என்று குறிப்பிடுகிறது) நஞ்சீயரின் வழிகாட்டு தலில் திருச்சந்நிதி கைங்கர்யத்தைத் திருவரங் கப் பெருமாள் அரையர் என்பவர் செய்யத் தொடங்கினார்.

ஒரு தருணத்தில் முன்வினை காரணமாக இவர் கடும் நோய் உபாதைகளுக்கு ஆளானார். இதை அறிந்து நஞ்சீயர் இவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தும் உபாதை குறையவில்லை.

உடம்பைக் கொண்டு ஆற்றும் காரியங்களில் பாவம் விளைவித்தால், அது நோயாக மாறி அந்த உடம்பைப் பற்றிக்கொண்டு உரியவருக் குத் துன்பம் தரும். அந்தப் பாவத்தை எந்த திதி, எந்த நட்சத்திரத்தில் செய்தோமோ, அந்த திதி, நட்சத்திரம், ஹோரை திரும்ப வரும்போது, விதைத்தது முளைப்பது போல அதுவும் முளைத்துவிடும்.

இந்த வேளையில் புண்ணிய பயன்களே உரிய மருந்தாக வந்து சேரும். இது இயற்கை வகுத்த நியதி. இதை வகுத்ததோடு எம்பெருமான் நின்று விட்டார். மற்றபடி இதனுள் சிக்குவதும் சிக்காததும் அவரவர் பாட்டைப் பொருத்ததே. ஆயினும் குருவருளும் எம்பெருமானின் தனிப் பெரும் கருணையும் இம்மட்டில் உதவ முன்வரும்.

அப்படி திருவரங்கப் பெருமாள் அரையருக்கும் இறைவனின் கருணை, திருமாலிருஞ்சோலை கூர நாராயண ஜீயர் என்கிற மந்திரப் பிரயோகி மூலம் உதவ முன்வந்தது.

திருமாலிருஞ்சோலையில் பெரும் மந்த்ரத் திரஷ்டராகவும், மகா யோகியாகவும் திகழ்ந்தவர் கூரநாராயண ஜீயர். திருச்சந்நிதி மண்டபத்தில் பல மணி நேரம் எம்பெருமானின் திருவடி தியானத்தில் ஈடுபட்டு, அப்படியே சிலை போல் அமர்ந்துவிடுவார்.

சுதர்சன மகா மந்திரத்தை உபாசித்து, பல அரிய சக்திகளை இவர் பெற்றிருந்தார். நால்வகை வேதங்களில், அதர்வண வேதமானது தன்னுள் அஸ்திரம் போன்று, எதிர்ப்படுவதை அழிக்கும் சக்தி மிக்க பல மந்திர சத்தங்களைக் கொண்ட தாகும்.

மலரைப் படைத்த எம்பெருமான், எப்படி அதன் மென்மையை உணர்ந்திட முட்களைப் படைத்தாரோ, அதேபோல் சத்வ மந்த்ரங்களின் தன்மையை உணர்ந்திடும் வகையில் அவற்றுக்கு எதிரான மந்த்ரங்களையும் வேதத்தில் அளித்திருந் தார். இவற்றைச் சுயநலத்துக்குத் துளியும் பயன் படுத்தக்கூடாது. இதை கற்பதும் சற்றுக் கடினம்.

ஆபத்தான பாம்பின் விஷத்தை மருந்திற்குப் பயன்படுத்துவது போல் இதைப் பயன்படுத்த வேண்டும். இதனுள்தான் மாந்த்ரீகம், தாந்த்ரீகம் போன்ற வித்தைக்கான பாடங்கள் உள்ளன. இதை அறிவதற்கும் ஒரு விதி வேண்டும். அப்படி ஒரு விதி அமைப்பு கூரநாராயண ஜீயருக்கு இருந்தது. அதனால் இவர் பெரும் மந்திர ஸித்தி உடையவராக இருந்தார்.

இவர் ஜலத்தை மந்திரித்துத் தர, அதை உட் கொண்டால் எவ்வளவு கொடிய விஷ ஜுரமும் இறங்கிவிடும். சில மந்திரங்களைச் சொல்லி முகத்தில் இவர் காற்றை ஊதும் பட்சத்தில், உடம்பை பற்றிக் கொண்டிருக்கும் துஷ்டசக்திகள் விலகி ஓடிவிடும்.

இப்படிப்பட்ட மஹாமந்த்ரத் திரஷ்டரான கூரநாராயண ஜீயரை திருவரங்கம் எழுந்தருளச் செய்து, திருவரங்கப் பெருமாள் அரையரின் உடல் நலனைச் சீர் செய்யும்படி வேண்டினார் நஞ்ஜீயர்.

கூரநாராயண ஜீயரும் அரையருடைய உபாதை எப்படிப்பட்டது என்பதை நாடி பார்த்து அறிந்ததோடு, கால ஞானத்துடன் அப்போதைய அவரது தசா புத்தி அந்தரங்களை கணக்கில் எடுத்துப் பார்த்தார். அவர் நெடுநாள் கள் படுத்த படுக்கையாகக் கிடக்கவேண்டிய அமைப்பு இருப்பது தெரியவந்தது.

அவ்வளவும் முன்கர்மத்தால் விளைந்தவை என்றபோதும், அரையரின் நிகழ்கால அரங்கன் சேவையும், ஏகாதசி போன்ற விரத பயன்களும் கூரநாராயண ஜீயர் வடிவில் அவரைக் காப்பாற்ற முன் வந்திருந்தன.

இதனை உணர்ந்த கூரநாராயண ஜீயர், அரையரின் கர்ம துயரத்தை, அதற்கேற்ற பெரும் மந்திர சக்திகள் மட்டுமே ஒழிக்க இயலும் என்பதை அறிந்தார். ஆக, அரையரின் பொருட்டு கூரநாராயண ஜீயர் அருளியதே ‘சுதர்சன சதகம்’ என்கிற ஸ்லோகமாகும்.

நூறு ஸ்லோகங்களைக் கொண்ட சுதர்சன சதகம், தன்னுடைய கட்டுக்கோப்பான ஒலி வடிவால் எதிர்மறை சக்திகளைச் சிதைத்து அழிக்கும் ஆற்றல் கொண்டதாக மாறிட, அரையர் வியாதியிலிருந்து விடுபட்டார். இந்த உலகுக்கு சர்வ ஆற்றல் பொருந்திய, சகல நன்மைகளும் தரும் சுதர்சன சதகம் எனும் ஸ்லோகம் கிடைத்தது.

இதை சப்தப் பிசகின்றி உச்சரிக்க வேண்டி யது முக்கியம். வேத சம்பந்தத்துடன், பிரபந்த சம்பந்தமுடைய பரம வைணவ குருநாதர்கள் வாயிலாகக் கற்று, இதைப் பாராயணம் செய்ய வேண்டும். அப்போது ரோகம் என்கிற ஒன்று உடலில் துளியும் இல்லாமல் போகும்.

இதுபோல், திருவரங்க வரலாற்றில் கூரநாராயண ஜீயரின் பங்கு பல விதங்களில் காணப்படுகிறது.

இன்று திருவரங்க ஆலயத்தைச் சுற்றி ஒரு மாலையிட்டது போல் ஓடிக்கொண்டிருக்கும் காவிரி, இவர் திருவரங்கத்தில் இருந்த காலத்தில் அப்படி ஓடவில்லை. அப்போதைய தெற்கு ராஜகோபுரத்தை ஒட்டி ஓடிக் கொண் டிருந்தது. இதனால் கோபுரம் எழுப்புதல் என்பது அசாத்தியமான ஒன்றாக இருந்தது.

ஆடிப்பெருக்கின்போது, திருக்குறளப்பன் எனப்படும் வாமனன் சந்நிதியே முழ்கும் அளவுக்கு வெள்ளம் வந்துவிடும். காவிரி பலமுறை தன் சீற்றத்தால் திருவரங்க ஆலயத்தைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறது. எம்பெருமானின் ரங்க விமானம் எனும் பிரணவாகார விமானத்தைத் தழுவி மகிழவேண்டும் எனும் காவிரியின் ஆசையே, அதன் வெள்ள சீற்றத்துக் காரணம் என்பர்!

ஒருமுறை, பெருமாளும் நாச்சியாரும் காவிரியில் தெப்ப உத்சவத்தில் எழுந்தருளும் போது பெரும் வெள்ளெப்பெருக்கு ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் ரங்கப்பட்டினத்தில் இருந்து திருவரங்கத்திற்கு மாந்திரீகன் ஒருவன், வந்திருந்தான். அவன், எம்பெருமானையும் பெருமாட்டியையும் காவிரியின் ஓட்டத்தில் மூழ்கச் செய்து, பின்னர் அந்த ஆதி விக்கிரகங் களைத் தனது இருப்பிடமான ரங்கப்பட்டினத் திற்குக் கொண்டு சென்று விடும் திட்டமுடன் இருந்தான்.

தனது உருவம் எவர் கண்களுக்கும் புலப்படாதபடி, புருவத்தில் அஞ்சனம் பூசிக் கொண்டு, பல நாள்கள் திருவரங்கம் ஆலயத் துக்குள் திரிந்துகொண்டிருந்தான். அந்த ஆலயத்தைப் பொலிவிழக்கச் செய்ய வேண் டும்; எம்பெரு மானையும், பெருமாட்டியையும் தன் இருப்பிடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இதுதான் அவனுடைய எண்ணம்.

மாற்றுச் சமயத்தவர் சிலரே, திருவரங்க ஆலயம் பெரும் அருளோடும் புகழோடும் திகழ்வதை விரும்பாமல், இந்த மாந்திரீகனை இவ்வாறு அனுப்பிவைத்தனர் என்றும் ஒரு கருத்து உண்டு.

எது எப்படியோ... திருவரங்கன் திருச் சந்நிதியில் அன்றாட வழிபாடுகளாலும், ஆராதனைகளாலும் ததும்பி வழிந்த தண்ணருளை ஒரு கலயத்தில் ஆவீர்பவிக்கச் செய்து, அங்கே பொலிவு இல்லாதபடிச் செய்ய வேண்டும் என்று செயல்பட்டான்.

அது சாத்தியமா?

திருவரங்கனின் திருவருளையே ஒருவன் அபகரிக்க இயலுமா?

- தொடரும்...

அம்மனுக்கு அபிஷேகம்
அம்மனுக்கு அபிஷேகம்

அம்மனுக்குக் கனிகள் சமர்ப்பணம்!

உபாசித்து பல அறிய சக்திகளையும் இவர் பெற்றிருந்தார். நால்வகை வேதங்களில் அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்; கனிகளைப் போன்றே நம் வாழ்வும் இனிப்பாகும் என்கின்றன சில ஞானநூல்கள்.

அவ்வகையில் அம்மனுக்கு வாழைப்பழ அபிஷேகம் செய்தால், சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும்.

பலாப்பழச் சுளைகளால் அபிஷேகம் செய்தால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும்.

மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால், தோஷங்கள் நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும்.

மாதுளம்பழ அபிஷேகம் செய்தால், முன்கோபம் தீரும்; சிந்தனை சிறக்கும்.

எலுமிச்சம்பழங்களால் அபிஷேகம் செய்தால், பகைவர் தொல்லை நீங்கும்; வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

இவ்வாறு எண்ணற்ற பழங்களால் அபிஷேக வைபவம் செய்ய இயலாதவர்கள், இந்தக் கனிகளை நைவேத்தியமாகப் படைத்து பலன் பெறலாம்.

- எம்.சாந்தி, திருக்குறுங்குடி