Published:Updated:

`அருள்வாய் அபிராமியே'

அன்னை அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
அன்னை அபிராமி

- கே.சுகுணா, சென்னை-56

`அருள்வாய் அபிராமியே'

- கே.சுகுணா, சென்னை-56

Published:Updated:
அன்னை அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
அன்னை அபிராமி

வாழ்வில் நம்மைத் துரத்தும் விஷயங்களிடம் இருந்து காக்கும்படி அபிராமி அம்மையை வேண்டுகிறது இந்தப் பாடல். அப்படி எந்தெந்த விஷயங்கள் நம்மை துரத்துகின்றன?

மிகையுந் துரத்தவெம் பிணியுந் துரத்த
வெகுளி யானதுந் துரத்த
மிடியுந் துரத்தநரை திரையும் துரத்தமிகு
வேதனை களுந்து ரத்தப்
பகையுந் துரத்தவஞ் சனையுந் துரத்தப்
பசியென் பதுந்து ரத்தப்
பாவந் துரத்த பதிமோகந் துரத்தப்
பலகா ர்யமுந் துரத்த
நகையுந் துரத்தஊழ் வினையுந் துரத்தஎன்
நாளுந் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னைஅந்
நமனுந் துரத்து வானோ?
அகிலஉல கங்கட்கும் ஆதார தெய்வமே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி; அபிராமியே!

மிகையும் துரத்த - அறிவு, ஆற்றல், பணம், பதவி முதலானவற்றில் நம்மைவிட வலிமையானவர்கள் துரத்துவார்கள். பிணிகள் துரத்தும். கோபம் துரத்தும். இதேபோல், தரித்திரம், நரை-திரை, பகை, வஞ்சனை, பசி, பாவம், பதவி மோகம், அதன் பொருட்டு செய்யும் காரியங்கள், ஏளன நகைப்பு, ஊழ்வினை ஆகியவையும் துரத்தும். இந்த வரிசையில் காலத்துக்கும் பங்கு உண்டு. ஆம் நமக்காக நாள்கள் நிற்பதில்லை. வேகவேகமாகச் சுழன்று ஆயுள் கணக்கைக் குறைத்துக்கொண்டே வரும்.

இவ்வளவு துரத்தல்களில் சிக்குண்டு தவிக்கும் என்னை யமதேவனும் துரத்துவானோ எனும் கருத்துடன் முடிகிறது இந்தப் பாடல். அபிராமிப்பட்டர் அருளிய அற்புதமான பாடல் இது.

அதுசரி... ‘எமனும் துரத்துவானா என்ன?’ என்று அவர் ஏன் அபிராமி அன்னையிடம் கேட்க வேண்டும்? அனைவரது உயிரையும் பறிக்கும் எமனின் உயிரையே பறித்த தலம் திருக்கடவூர். சிவபெருமான் தன் இடது காலால் உதைத்து எமனை வீழ்த்தியது இங்குதான். அப்படியெனில், எமனை உதைத்து சம்ஹாரம் செய்த சிவபெருமானிடம் அல்லவா முறையிட வேண்டும்! அபிராமி அன்னையிடம் ஏன் முறையிட்டார்?

இங்கே ஒரு நுணுக்கமான தகவல்... சிவபெருமான் எமனை உதைத்து சம்ஹாரம் செய்தது இடது காலால்தானே? சிவபெருமானின் இடப் பக்கம் இருப்பவள் சக்திதேவி. ஆகையால், எமனை உதைத்து வீழ்த்தியது அபிராமி அன்னையின் திருவடி! அதனால்தான் அபிராமி அன்னையிடம் முறையிடுகிறார்.

‘எம பயத்தில் இருந்துகூடக் காப்பாற்றும் அபிராமி அன்னையே! என்னைத் துரத்தக்கூடிய அனைத்திலிருந்தும் என்னைக் காப்பாற்று!’ என அந்த அன்னையைப் பிரார்த்திக்கும் இந்தப் பாடல், ‘அபிராமியம்மை பதிகம் 1’-ல் பத்தாவது பாடலாக அமைந்துள்ளது. தினமும் காலை-மாலை வீட்டில் விளக்கேற்றி வைத்து இந்தப் பாடலைப் அம்பாளை வழிபட்டால் சகல நன்மைகளும் கைகூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism