Published:Updated:

நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் அகத்திய லிங்கம்!

அகத்தியர்
பிரீமியம் ஸ்டோரி
News
அகத்தியர்

பூனைகள் வழிபடும் வில்லிப்பாக்கம் சிவாலயம் பழங்காமூர் மோ.கணேஷ்

சான்றோர் நிறைந்த தொண்டை மண்டலத்தில் புகழ்பெற்ற சிவாலயங்கள் பல உண்டு. அவற்றுள் பூனை பூஜித்த விசேஷ திருத்தலமாகத் திகழ்கிறது, வில்லிப்பாக்கம். ஆதிகாலத்தில் கிராதமார்ஜாலபுரம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தலத்தில் வேடுவன் ஒருவனும், கங்காதேவியும் மற்றும்பல தேவர்களும் வழிபட்டு அருள் பெற்றிருக்கிறார்கள் என்கிறது தலபுராணம்.

நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் அகத்திய லிங்கம்!

ருமுறை கங்காதேவி கயிலையில் ஈசனை தரிசித்து வணங்கி, “ஸ்வாமி! பகீரதனுக்காக என்னைப் பூவுலகில் பாய்வதற்குக் கட்டளையிட்டீர்கள். அதன்படியே காசி க்ஷேத்திரத்தில் நதி வடிவில் பாய்ந்து, என்னுள் மூழ்கி எழுவோரின் பாவங்களைப் போக்கி அவர்களுக்குப் புண்ணியம் அளிக்கிறேன். ஆனால், அவர்களின் பாவங்களை நான் ஏற்று துன்புறுகிறேன். அந்தப் பாவங்களைக் களைய நீங்களே வழிகாட்டவேண்டும்’’ என்று வேண்டினாள்.

சிவனார் அவளிடம் ``காஞ்சி மாநகரின் தென்கிழக்கு திசையில் ஐந்து காத தூரத்தில் ஒரு திருக்குளமும், அதற்கு அருகே தானே தோன்றிய மகாலிங்கமும் இருக்கின்றன. அங்கு சென்று தீர்த்தத்தில் நீராடி, மகாலிங்கத்தைப் பூஜித்து, உன் பாவங்களிலிருந்து விமோசனம் அடைவாய்” என்று கூறி அருள்பாலித்தார்.

அதன்படி கங்காதேவி இந்தத் தலத்துக்கு வந்து தாமரைகள் நிறைந்த புண்டரீக புஷ்கரணியில் நீராடி, இத்தல சிவலிங்கத்தை வழிபட்டு, பாவங்கள் நீங்கப்பெற்று பெருமகிழ்வு அடைந்தாள்.

நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் அகத்திய லிங்கம்!
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் அகத்திய லிங்கம்!

அகத்தியர் வழிபட்ட சுயம்புலிங்கம்!

சிவபார்வதி திருக்கல்யாணத்தைக் காண தேவர்களும் முனிவர்களும் கயிலையில் குவிந்திட, பாரம் தாங்காமல் வடபுலம் தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. உலகைச் சமன் செய்ய அகத்தியரை தெற்கே அனுப்பினார் ஈசன். அகத்தியரும் தன் கமண்டலத்தில் பாணலிங்கங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு தென்னகம் புறப்பட்டார்.

வழியில் - சிவபூஜைக்குரிய காலத்தில், தனது கமண்டலத்தில் உள்ள பாணலிங்கங்களை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.காஞ்சியை அடைந்து ஏகம்பனை வழிபட்டவர், திருக்கழுக்குன்றம் சென்று வேதகிரீஸ்வரரை வழிபட்டார். அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்தவர், ஒரு வில்வ வனத்தை அடைந்தார். அப்போது உச்சிவேளை வந்தது. சிவ பூஜைக்கு உரிய நேரம். வில்வகாட்டில் இருந்த தடாகத்தில் நீராடிக் கரையேறியவர், அங்கிருந்த கொன்றை மரத்தடியில் சுயம்பு லிங்கம் ஒன்றைக் கண்டு மகிழ்ந்தார்.

அந்த லிங்கத்தைப் பூஜித்து வழிபட்டவர், தான் அங்கு வந்ததற்கு அடையாளமாக காசி விஸ்வநாதரையும் அருகில் பிரதிஷ்டை செய்தார். தான் வழிபட்ட லிங்கம் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாராம். இந்த சரிதத்தை திருமால், பிரம்மன், தேவேந்திரன், சந்திரன் ஆகியோருக்கு நாரதர் கூறியதாகச் சொல்கின்றன ஞானநூல்கள்.

சாப விமோசனம் பெற்ற நந்தியின் சீடர்கள்

ந்திதேவருக்கு இரண்டு சீடர்கள். ஒருவன் காந்தன்; மற்றொருவன் மகா காந்தன். இவ்விருவரும் நந்திதேவரின் நித்திய சிவபூஜைக்குரிய திரவியங்களைச் சேகரித்துத் தருவது வழக்கம்.

ஒருநாள், பூவுலகில் ஒரு தடாகத்தின் கரையில் வெண் மந்தாரைச் செடிகள் இருப்பதைக் கண்டனர். அவற்றைப் பறித்தபோது, மலர்கள் தவறி நீரிலும், தடாகக் கரையிலும் விழுந்தன. கரையில் விழுந்த பூக்கள் கிளிகளாகவும், நீரில் விழுந்த பூக்கள் நீர்வாழ் இனங்களாகவும் மாறின. இதை கண்டு வியந்தவர்கள், மீண்டும் மீண்டும் மலர்களைப் பறித்து, நீரிலும் கரையிலுமாக வீசி விளையாடினர்.

குறிப்பிட்ட நேரமாகியும் பூஜைக்கு மலர்கள் வந்து சேராததால் கோபம் கொண்டார் நந்தி. சீடர்களைத் தேடி வந்தார். நந்தியைக் கண்டதும் காந்தன் பூனை போல் விழித்தான்; மகா காந்தனோ பூப்பறிக்கும் துரட்டுக்கோலை ஏந்தியபடி விழித்துக்கொண்டிருந்தான்.காந்தனைப் பூனையாகவும், மகா காந்தனை வேடுவனாகவும் மாறும்படி சபித்தார் நந்திதேவர்.

இருவரும் நந்தியின் பாதங்களை வணங்கி சாபவிமோசனம் வேண்டினர். நந்திதேவர் மன்மிரங்கினார். பூவுலகில் உள்ள புண்டரீக புஷ்கரணி மற்றும் அகதீஸ்வர லிங்கத்தைப் பற்றி எடுத்துக்கூறினார். ``இருவரும் அங்கு சென்று வழிபட்டு வாருங்கள். எப்போது அந்த லிங்கத் திருமேனியின் முன் நீங்கள் இருவரும் ஒரே காலத்தில் சந்திக்கிறீர்களோ, அப்போது விமோசனம் கிடைக்கும்’’ என்றார்.

இருவரும் பூனையாகவும் வேடனாகவும் மாறி தனித்தனியே இந்த க்ஷேத்திரத்துக்கு வந்து வழிபட்டுவந்தனர். ஒருநாள், வேடன் பூக்களோடு சிவலிங்கத்தை பூஜிக்க வந்தபோது அங்கே பூனை ஒன்று நிற்பதைக் கண்டான். பூனையின் மீது அம்பு ஏவினான். அம்பு பூனையின் மீது படாமல் லிங்கத்தின் மீது தைத்தது. லிங்க மேனியில் ரத்தம் பீறிட்டது. அக்கணத்தில் இருவரும் சுய உருவை அடைந்து ஈசனின் அருளைப் பெற்றனர்.

இதையொட்டி, இத்தல இறைவனுக்கு கிராதமார்ஜாலீஸ்வரர் என்று திருப்பெயர் ஏற்பட்டது. இவ்வூர் `கிராதமார்ஜாலபுரம்’ என்று அழைக்கப்பட்டது (கிராதன் என்றால் வேடன்; மார்ஜாலம் - பூனை). இந்தப் புராணக் கதைகள் கல்வெட்டுத் தகவல்கள் மூலம் கிடைக்கப் பெற்றவை.

நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் அகத்திய லிங்கம்!

மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை

வில்லிப்பாக்கம் ஊரில் சாலையை ஒட்டியே அமைந்திருக்கிறது கிராதமார்ஜாலீஸ்வரர் ஆலயம். தெற்கு நோக்கிய தோரணவாயில். உள்ளே நுழைந்தால் வாகனக் கொட்டடி மற்றும் கலயாண மண்டபம் உள்ளது. இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. எதிரில் நந்தி, கொடிமரம், பலிபீடம். அடுத்து சிற்பங்களுடன்கூடிய 32 கால் மண்டபம். அம்பிகையின் திருப்பெயர் முத்தாம்பிகை. வடமொழியில் மௌக்திகாம்பாள் ஒரு சுற்றுடன் கூடிய தெற்குநோக்கிய சந்நிதியில் அருள்கிறாள். மாங்கல்ய பலம் கூட்டி, தீர்க்க சுமங்கலியாக வாழ வைப்பவள் இந்த நாயகி.

மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்புடன் திகழ்கிறது ஸ்வாமி சந்நிதி. கருவறையில் சுயம்புலிங்கமாக அருள்கிறார் கிராதமார்ஜாலீஸ்வரர். அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு.

முற்பிறவிச் சாபங்களை எல்லாம் களைந்திடும் பெருமான் இவர். அகத்தியச் சித்தர் வழிபட்டதால், தீராத நோய்களையும் தீர்த்து வைக்க வல்ல தெய்வம் இவர் என்கிறார்கள். அதேபோல், விலங்குகளால் ஏற்படும் தோஷங்களைத் தீர்த்து வைத்திடும் தலம் ‘வில்லிப்பாக்கம்’ என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இரண்டு பிராகாரங்கள் கொண்ட இந்த ஆலயத்தில் உள் பிராகாரத்தில் சப்தமாதர்கள், கணபதி, தட்சிணாமூர்த்தி, எழில்மிகு கோலத்தில் அருளும் ஏகபாதமூர்த்தி, ஸதல கணபதி, இந்தத் தலத்து சிவனைப் பூஜிக்கும்படியான கங்கை ஆகியோரை தரிசிக்கலாம். கங்கைக்கு எதிரில் வேடுவனையும் பூனையையும் சிற்ப வடிவில் தரிசிக்கலாம். அவர்களுக்கு முன்னே ஒரு சிவலிங்கமும் அம்பிகை சிலையும் உள்ளன.

மேலும் அன்னை விசாலாட்சியுடன் அருளும் காசிவிஸ்வநாதரையும் இங்கே தரிசிக்கலாம். மட்டுமன்றி, ஆறு கரங்களுடன் அருளும் துர்கை, கந்தப்பெருமான் ஆகியோர் சந்நிதிகளும் உண்டு. மொத்தத்தில் அமைதியும், தூய்மையும் தெய்வச் சாந்நித்தியமும் சங்கமித்துத் திகழும் அற்புத ஆலயம் இது.

நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் அகத்திய லிங்கம்!

ஆலயத்தில் பூனைகள்

ருவறைச் சுவர்களில் சோழர்கால பழந்தமிழ்க் கல்வெட்டுகள் ஏராளமாய் காணப்படுகின்றன. புராணப் பெருமை மிகுந்த இத்தலம் தேவாரத்தில் இடம் பெற்றிருக்கக்கூடும் என்பது தமிழறிஞர்களின் கூற்றாகும். இவ்வாலயத்தில் இரண்டு விசேஷங்கள் உண்டு. இக்கோயிலில் எப்போதும் ஏதேனும் ஒரு பூனை இருக்குமாம். ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்த சாதத்தைப் பூனைக்கு உண்ணக் கொடுக்கிறார் அர்ச்சகர் இரத்தினசபாபதி குருக்கள். இறைவனை தரிசித்து வணங்கவே இந்தப் பூனைகள் வருவதாக நம்பிக்கை! அதேபோல், இன்றும் வேடுவர் குலத்தைச் சேர்ந்தவர்களே கோயிலைச் சுத்தம் செய்யும் பணி புரிகிறார்கள்.

இங்கு இரண்டாம் கரிகாலச் சோழனால் திருப்பணிகள் பல செய்யப்பட்டுள்ளன. சூனாம்பேடு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த வர்கள் இவ்வாலயத்தை நிர்வகித்து வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூனாம்பேடு ஜமீன் வழிவந்தவர்களால் திருப்பணி செய்யப்பட்டு, குடமுழுக்கு விமர்சையாக நடத்தப்படுகிறது.

இக்கோயிலின் தீர்த்தம் புண்டரீக புஷ்கரணி; தல விருட்சம் சரக்கொன்றை. சிவாலயங்களுகுரிய சகல வைபங்களும் இங்கு சிறப்புற நடைபெறுகின்றன. மாசிமகத்தன்று சுவாமி திருவீதியுலாவும், சமுத்திரத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது?: சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், கடப்பாக்கத்திற்கு அடுத்து வரும் ஊர் வெண்ணங்குபட்டு. இந்த ஊரிலிருந்து சூனாம்பேடு செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. பயணித்தால், சூனாம்பேட்டுக்கு முன்பு வில்லிப்பாக்கம் அமைந் துள்ளது. மதுராந்தகம், செய்யூர், மரக்காணம், மேல்மருவத்தூர் ஆகிய இடங்களிலிருந்து சூனாம்பேடு வர பேருந்து வசதி உண்டு. ஆலயம் தினமும் காலை 7 முதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் 7.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் அகத்திய லிங்கம்!
pixelfusion3d

மாறாத மனம்!

ங்கை ஆற்றங்கரையில் ஓநாய் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்று நீர் எங்கும் பரவியது. உயரமான பாறை ஒன்றின் மேல் ஏறியது ஓநாய். ஆபத்து இல்லை என்றாலும் உணவு கிடைக்கவும் அங்கு வாய்ப்பில்லை. ஆகவே, கண்களை மூடிய ஓநாய், ‘‘இறைவா! உன் நினைவாக உண்ணா நோன்பு இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு எதையும் உண்ண மாட்டேன்’’ என்று உரத்த குரலில் சொன்னது.

ஓநாயின் போலித்தனத்தை வெளிப்படுத்த நினைத்தார் இறைவன். எனவே, ஓர் ஆடாக மாறி தண்ணீரில் மிதந்தபடி வந்தார். ஆட்டின் குரல் கேட்டதும் ஓநாய் விழித்துக் கொண்டது. ஆட்டின் மீது பாய்ந்தது. ஆட்டுக்குப் பதில் அங்கே இறைவன் நின்றிருந்தார்.

‘‘ஓநாயே! உணவு கிடைக்காது என்று உறுதியாகியதும் உண்ணா நோன்பு இருந்தாய். உணவு கிடைத்ததும் உண்ணா நோன்பைக் கைவிடத் துணிந்தாய். உன் குணம் மாறவில்லை’’ என்று சொல்லி விட்டு மறைந்தார் இறைவன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இலை விபூதியும் பிள்ளைத் தமிழும்!

பாண்டி நாட்டில் உள்ள சிறு கிராமம் ‘சன்னியாசி’. இவ்வூரில் வாழ்ந்த கவிஞர் பகழிக்கூத்தர். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. நிரந்தரமாக நோய் குணமாக வழி கிட்டவில்லை. ‘இறையருளே துணை' என செந்தூர் முருகனைப் பிரார்த்தித்தார். அப்போது அந்த வழியே வந்த சிவனடியார் ஒருவர், பகழிக் கூத்தரிடம் இலை விபூதியைக் கொடுத்தார். அதில் சிறிதளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்ட பகழிக்கூத்தர், அதில் கொஞ்சத்தை வயிற்றில் பூசிக்கொண்டார். என்ன ஆச்சரியம்! வயிற்றுவலி உடனே குணமானது! திருநீறு கொடுத்த சிவனடியாரைத் தேடினார். அவரைக் காணவில்லை. எல்லாம் முருகனின் அருள் என்பதை உணர்ந்த பகழிக்கூத்தர், நன்றிக்கடனாக ‘கந்தவேல்’ குறித்து பாமாலை பாடினார். அதுவே, ‘திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்’ என்று போற்றப்படுகிறது.

- தி.இரா.பரிமளம், திருச்சி-21