Published:Updated:

அருள்மாரி பொழிவாள் கருமாரி!

அம்மன் அற்புதம்
பிரீமியம் ஸ்டோரி
அம்மன் அற்புதம் ( ஓவியர் ஸ்யாம் )

ஜனகை மாரியம்மன் நிகழ்த்திய அற்புதம்!

அருள்மாரி பொழிவாள் கருமாரி!

ஜனகை மாரியம்மன் நிகழ்த்திய அற்புதம்!

Published:Updated:
அம்மன் அற்புதம்
பிரீமியம் ஸ்டோரி
அம்மன் அற்புதம் ( ஓவியர் ஸ்யாம் )

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

அற்புதங்களுக்கும் மனிதர்களுக்கும் தூரம் அதிகம். அம்மனுக்கோ அற்புதங்களை நிகழ்த்திப் பார்ப்பதுதான் வேலையே! அப்படி ஜனகை மாரியம்மனின் அருளாள் ஒருவரது வாழ்வில் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைச் சொல்வதுதான் இந்தக் கதை!

`உற்றாளும் உறவினளும் பெற்றவளும் நீயேயெனப்

பற்றுடனே வந்து நின்றேன் உப்புச் சந்தை மாரியம்மா...’’

- தியான ரத்னாவளி

ராஜாராமுக்கு அன்றைய தினம் அழகாகத்தான் தொடங்கியது. பேருந்து நிலையத்தில் பஸ் ஏறியபோதே ஜன்னலோர இருக்கை கிடைத்தது. சில்லென்ற காற்று. பின்னிருக்கைப் பெண்மணி வைத்திருந்த கூடையிலிருந்து `கம்’மென்று எழுந்த மாம்பழ வாசனை. காதில் தண்டட்டி தொங்க, பெரிய பொட்டோடு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த கிழவியின் சிநேகமான சிரிப்பு..!

வைத்தியநாதன் சார் வழி சொல்லியிருந்தார்.சோழவந்தா னுக்குப் போகிற பஸ்ஸில் ஏறி, பரவை என்கிற ஊரில் இறங்கச் சொல்லியிருந்தார். பயண அலுப்பே தெரியாமல் பரவைக்கு வந்து இறங்கினான் ராஜாராம். இறங்கியதுமே ரோட்டோரமாக இருந்த டீக்கடையிலிருந்து ஓர் இளைஞன் வேகமாக அவனை நோக்கி வந்தான்.

``நீங்க ராஜாராம்தானே?’’ என்று கேட்டுவிட்டு, ``நான் மூர்த்தி’’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.

``ஒரு டீ சாப்பிட்டுட்டுப் போகலாமா... ப்ராஜெக்ட் நடக்குற இடத்துக்குக் கொஞ்ச தூரம் நடந்து போகணும். அங்கே கடையெல்லாம் இல்லை’’ என்று சொல்லி மென்மையாகச் சிரித்தான் மூர்த்தி. இருவரும் டீ குடித்துவிட்டு நடந்தார்கள். மூர்த்தி துறுதுறுவென இருந்தான். இதற்கு முன்பு அறிமுகமே இல்லையென்றாலும், நீண்ட நாள் பழகியவன்போல் உரிமையோடு பேசினான்.

``நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் இந்த ப்ராஜக்டை முடிக்கப் போறோம். நானும் உங்களை மாதிரி சிவில் இன்ஜினீயரிங்தான் படிச்சிருக்கேன். வைத்தி சார் நேத்தே உங்களைப் பத்திச் சொன்னாரு. இது பெரிய ப்ராஜெக்ட். வைகை டாம்லருந்து மதுரை வரைக்கும் பைப் லைன் போடுறதுன்னா எவ்வளவு வேலை இருக்கும்... இந்த கான்ட்ராக்ட் கிடைச்சதே பெரிய விஷயம்னு எல்லாரும் பேசிக்கிறாங்க...’’ சளைக்காமல் பேசிக்கொண்டே இருந்தான் மூர்த்தி.

ராஜாராமுக்குத் திருப்பரங்குன்றம்தான் ஊர். சிவில் இன்ஜினியரிங் முடித்திருந்தான். அப்பா இல்லை. அம்மா கூலி வேலை செய்து அவனையும் அவன் தம்பியையும் படிக்கவைத்திருந்தார். ராஜாராமுக்குக் கிடைத்திருக்கும் புது வேலை, அந்தக் குடும்பத்தில் படிந்திருந்த ஏழ்மையின் நிழலை மெல்ல மெல்ல விரட்டிவிடும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

கொஞ்ச தூரத்தில் ஆட்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். சாலையோரமாக பைப்புகள் குவிந்துகிடக்க, ஒரு நேர்கோட்டில் நீளமான குழி தோண்டப்பட்டிருக்க, ஐந்து பேர் குழிக்குள் இறங்கித் தோண்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ராஜாராமை அறிமுகப்படுத்தி வைத்தான் மூர்த்தி. வானம் மேகமூட்டமாக இருந்தது. ஈரக்காற்றில் மண் வாசனை.

``பால்சாமியண்ணே... மழை வர்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் வெரசா தோண்டுங்க...’’ குரல் கொடுத்தான் மூர்த்தி.

``மண் வாசனையை வெச்சுத்தான சார் சொல்றீக... பெரிய மழையெல்லாம் வராது சார். எல்லாம் வருசநாட்டுக்குக் கடந்து போற மேகக் கூட்டம். அடிக்கிற காத்துக்கு மேகமெல்லாம் கலைஞ்சு போயிரும்...’’

ராஜாராமுக்கு எல்லாம் புதிதாக இருந்தன. எப்படி இந்த ப்ராஜக்ட்டை முடிக்கப்போகிறோம் என்று மலைப்பாக இருந்தது. மூர்த்தி மாதிரி தோழமையுடன் பழகுகிற ஆள் கூட இருந்தால் எதையும் செய்துவிடலாம் என்றும் தோன்றியது.

ன்றைய காலை பதினோரு மணிப் பொழுது... மயங்கிய மாலை நேரத்தைப்போல ஒரு தோற்றத்தைத் தந்துகொண்டிருந்தது. ஓரமாகத்தான் நின்றிருந்தான் ராஜாராம். மூர்த்தி தோண்டப்பட்ட பள்ளத்துக்கு மறுமுனையில் நின்று ஆட்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். எதிர்பாராமல் தான் அது நடந்தது. விருட்டென்று வளைவிலிருந்து திரும்பி வந்த ஒரு மகேந்திரா வேன், ராஜாராம் மீது மோதிவிட்டு சற்று தூரத்தில் போய் நின்றது. வேன் மோதியதில் ரோட்டின் ஓரமாகப் போய் விழுந்தான் ராஜாராம். பதறிப்போய் மூர்த்தியும் மற்றவர்களும் அவனை நோக்கி ஓடினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருள்மாரி பொழிவாள் கருமாரி!

ந்த கணம், யாருக்கு என்ன நிகழும் என்பதை கணிக்கவே முடியாததுதான் வாழ்க்கை. இறைவனின் திருவுளம் அப்படி யிருக்கையில் சாதாரண மனிதர்களால் என்ன செய்ய முடியும்? மதுரை ராஜாஜி மருத்துவமனைப் படுக்கையில் கிடந்தான் ராஜாராம். வேன் மோதிய அதிர்ச்சியில் மயங்கிக் கிடந்தவனை அள்ளிக்கொண்டு வந்து போட்டிருந்தார்கள்.

அம்மா அவன் கையைப் பிடித்தபடி அருகில் அமர்ந்திருந்தார். மூன்று நாள்களாகப் படுக்கையில் படுத்திருக்கிறான். மருத்துவமனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அவனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. வேன் மோதி விழுந்தாலும் ஒரு சின்னக் கீறல்கூட இல்லை என்பது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், வேறொரு பிரச்னை. கால்களை அசைக்க முடியவில்லை. எவ்வளவு முயன்றாலும் கால் விரலில் ஒன்றைக்கூட அசைக்க முடியவில்லை. எக்ஸ்ரேயில் ஆரம்பித்து மருத்துவர்கள் என்னென்னமோ பரிசோதனைகள் செய்துவிட்டார்கள். பிரச்னையின் வேரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இருபது படுக்கைகளைக்கொண்ட பொது வார்டு அது. மருத்துவர்கள், செவிலியர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். அத்தனைபேரின் பார்வையும் ராஜாராமின் மேல் ஒரு கணமாவது பதிந்துவிட்டுத்தான் விலகின. அவனுடைய களையான முகம் அப்படி எல்லோரையும் ஈர்த்திருந்தது. சிலர் என்ன, ஏதென்று விசாரித்துவிட்டுப் போனார்கள். எல்லோருக்கும் அவனுடைய அம்மா பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

அன்று மதியம் கடைசிப் படுக்கையில் கிடந்த முதியவருக்கு ஓர் அம்மாள் உணவு கொண்டு வந்திருந்தார். வயது அறுபதைத் தாண்டியிருக்கும். மஞ்சள் பூசி குளித்து, பளிச்சென்று இருந்தார். நெற்றியில் குங்குமம் துலங்கியது. கழுத்தில் ஒற்றைவடச் சங்கிலி. பச்சை நிறப் புடவையில் பாந்தமான தோற்றம். போகும்போதே ராஜாராமின் அம்மாவிடம் விசாரித்துவிட்டுத்தான் போனார். சிறிது நேரம் கழித்து வந்தார். பக்கத்தில் போட்டிருந்த சேரில் அமர்ந்தார்.

எழுந்து அமர வேண்டும் என நினைத்தாலும், ராஜாராமல் எழ முடியவில்லை. அந்த அம்மாவே சைகையில் அவனை அப்படியே படுக்கச் சொன்னார். டைஃபாய்டு ஜுரம் வந்து படுத்திருக்கும் தன் கணவருக்கு உணவு கொண்டு வந்ததாகச் சொன்னார். அவருடைய மகன்தான் முதியவரைப் பார்த்துக்கொள்கிறானாம். அன்றைக்கு அவன் குழந்தைகளின் பள்ளிக்குப் போகவேண்டியிருந்ததால், தான் வந்ததாகச் சொன்னார்.

``தம்பி உனக்கு எந்த ஊர்ல அடிபட்டுது?’’

``சோழவந்தானுக்குப் போற வழியில இருக்குற பரவைங்கிற ஊர்லங்கைம்மா...’’

``கடவுள் நம்பிக்கை இருக்கா... சாமியெல்லாம் கும்பிடுவியா?’’

``கும்பிடுவேம்மா.’’

``ஒண்ணு செய்... சோழவந்தான் ஜெனகை மாரியம்மனுக்கு வேண்டிக்கோ. `அம்மா, தாயே என்னைக் குணப்படுத்து. உன் உண்டியல்ல கால் உருவம் போடுறேன்’னு வேண்டிக்கோ’’ என்றவர், ராஜாராமின் அம்மாவைப் பார்த்து, ஏம்மா... நீங்களும் ஞாபகத்துக்காக மஞ்சத்துணியில ஒரு ரூவாக் காசை முடிஞ்சு வைங்கம்மா. எல்லாம் சரியாயிரும். நான் வரட்டுமா?’’

அந்த அம்மாள் கிளம்பிவிட்டார். ராஜாராம் கண்களை மூடி மனதார மாரியம்மனை வேண்டிக்கொண்டான்.

அருள்மாரி பொழிவாள் கருமாரி!

ற்புதங்களுக்கும் மனிதர்களுக்கும் தூரம் அதிகம். அம்மனுக்கோ அற்புதங்களை நிகழ்த்திப் பார்ப்பதுதான் வேலையே!

கொஞ்சம் நேரம் அசந்து தூங்கிப்போனான் ராஜாராம். சாதாரணமாக காலை மடக்கிப் பார்த்தான்... மடக்க முடிந்தது. விரல்களை அசைத்துப் பார்த்தான்... அசைந்தன. படுக்கையிலிருந்து கீழே இறங்கினான். மெதுவாக நடந்தான்.

`அட... நடக்க முடிகிறதே...’ அந்த வார்டிலிருந்த அத்தனை பேரும் அவன் அம்மா உட்பட ராஜாராமை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஷயம் கேள்விப்பட்டு மருத்துவர் தன் மருத்துவ மாணவர் புடைசூழ வந்தார். அவன் கால் முட்டியில் சிறு மரச் சுத்தியலால் தட்டிப் பார்த்தார். விரல்களையும் காலையும் அழுத்திப் பார்த்தார்.

அவர் கண்கள் விரிந்தன. ``அன் பிலீவபுள். ஹி இஸ் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்...’ என்று மாணவர்களிடம் சொன்னார்.

``நீ இப்போவே டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போகலாம்ப்பா. மாத்திரை, மருந்து எதுவும் தேவையில்லை. ஏதாவது பிரச்னைன்னா மட்டும் வந்து பாரு...’’ மருத்துவர் போய்விட்டார்.

கோயில் படியில் கால் வைத்ததுமே அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. கோயிலின் சூழலே ஒரு பரவசத்தைக் கொடுத்தது. மனசுக்குள் ஏதோ கிளர்ந்தது. தானாகக் கண்களில் நீர் திரண்டது. கொடிமரத்தின் முன்னே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் ராஜாராம். அவனுடைய அம்மாவும் தம்பியும் உடன் வந்திருந்தார்கள்.

கருவறைக்கு முன்னே நிற்கையில் விம்மல் வந்தது. `இனிமே நீதான் எனக்கு எல்லாம்... தாயே எங்களை வாழ வை ஆத்தா... எல்லாரும் நல்லா இருக்கணும் தாயே...’ திரும்பத் திரும்ப மனம் வேண்டிக் கொண்டது. இரண்டடி உயரத்தில் சுயம்புவாக மாரியம்மன்.

அம்மனுக்க்குப் பின்னே நின்ற நிலையில் சந்தன மாரியம்மன் எனப்படும் ரேணுகாதேவி. கண்ணாரக் கண்டு, மனதார வேண்டிக் கொண்டு, உண்டியலில் காணிக்கையோடு கால் உருவத்தையும் போட்டுவிட்டு சுற்றுப் பிராகாரத்தில் வந்து அமர்ந்தான்.

கிராமங்களில் அசல் மனிதர்கள் இருக்கிறார்கள். புதியவர்களைப் பார்த்தால் விசாரிக்கும் பண்புடைய நல்லவர்கள் இருக்கிறார்கள். ஒரு முதியவர் அவர்களருகே வந்தார். அமர்ந்தார். ``யாரு தம்பி... எந்த ஊரு?’’ என விசாரித்தார். அம்மா எல்லாவற்றையும் சொன்னதும் பெருமூச்சு விட்டார். கண்களை மூடி கரங்கூப்பினார்.

``இந்த அம்மா ரொம்ப சக்தியுள்ள தெய்வம்ப்பா... நல்லா கும்பிட்டுக்கோ. இந்தத் தெரு கடைசியில பொரிக்கடை வச்சிருக்கேன். எப்பவாவது வந்தீங்கன்னா வாங்க’’ என்று சொல்லிவிட்டு எழுந்து போனார்.

அற்புதங்களை நிகழ்த்தும் அம்மனுக்கு அவ்வப்போது பக்தர்களிடம் சிறு சோதனைகளைச் செய்வதும் வாடிக்கை. அடுத்த நாளே வேலைக்குப் போனான் ராஜாராம். பத்து நாள்கள் கழிந்திருக்கும். மதிய உணவுக்குப் பின் லேசாகத் தலைவலி

யில் ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்திலேயே உடல் காந்த ஆரம்பித்துவிட்டது.

வேலை நடந்துகொண்டிருந்த இடத்தில், ஒரு மரநிழலுக்குக் கீழே இருந்த கல்லில் சோர்ந்துபோய் உட்கார்ந்தான். மூர்த்தி அவனிடம் வந்தான்.

``என்னங்க ராஜாராம்... டயர்டா இருக்கீங்க... ஒண்ணும் பிரச்னை இல்லையே?’’

``லேசா ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு.’’

மூர்த்தி, அவன் கழுத்தில் கைவைத்துப் பார்த்தான். ``ஆமா... ஒண்ணு பண்ணுங்க. அடுத்து வர்ற பஸ்ஸுல கெளம்பி மதுரைக்குப் போயிருங்க. நான் பார்த்துக்கறேன்.’’

வீட்டுக்கு வருவதற்குள் ஜுரம் அதிகமாகிவிட்டது. தலை பாரமானது. உடலெல்லாம் வலி. அம்மா அவனைப் பார்த்ததும் பதறிப்போனார். அவன் அப்படியே சுருண்டு படுத்துவிட்டான். பக்கத்து வீட்டிலிருந்து வந்து பார்த்த ஒரு மூதாட்டி, ``புள்ளைக்கு அம்மை போட்டிருக்கு. பாய், தலகாணியெல்லாம் போட்டுறாத. அம்மனுக்கு வேண்டிக்கோ. சின்னப் பயலைவிட்டு வேப்பிலையைக் கொண்டாந்து வெச்சுக்கோ. ஆத்தா இறங்கினதுக்கு அப்புறம்தான் தண்ணி ஊத்தணும். புரியுதா?’’

அந்த மூதாட்டி போனதும், அம்மா ராஜாராமின் அருகே அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அருள்மாரி பொழிவாள் கருமாரி!

சோழவந்தான். தன் எதிரே வந்து நின்ற ராஜாராமை ஆச்சர்யத்தோடு பார்த்தார் பொரிக்கடைக்காரர். ``தம்பி... நீயி ரெண்டு வாரத்துக்கு முன்னால அம்மன் கோயிலுக்கு வந்தவெந்தானே?’’

``ஆமாங்கய்யா...’’

``இப்போ மறுபடியும் கோயிலுக்கு வந்திருக்கியா?’’

``செத்த இரு... நானு வாறேன்’’ என்றவர் கடையிலிருந்து இறங்கினார். இருவரும் கோயிலை நோக்கி நடந்தார்கள். படியில் கால் வைக்கும்போது அதே சிலிர்ப்பு. அம்மனைக் கும்பிட்டுவிட்டு இருவரும் பிராகாரத்தில் போய் அமர்ந்தார்கள். அவனுக்கு அம்மை போட்டு, இறங்கியதைச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு பெரியவர் சிறிது நேரம் பேசாமல் இருந்தார்.

``தம்பி... அம்மா உனக்கு சோதனை கொடுத்தாலும் கைவிட்டுடலை. உன்னை அடிக்கடி இங்கே வரவைக்கப் பார்க்குறா. உனக்கு வேலையோ இந்தப் பக்கம்தான். பேசாம இந்த ஊருக்கே குடி வந்துடேன். தம்பிக்கு பரீட்சைகூட முடிஞ்சிருச்சுதானே... இங்கேயே பக்கத்துல ஏதாவது ஸ்கூல்ல சேர்த்துடலாம். நானே நல்ல வீடா பார்த்துத் தர்றேன். நீயும் அடிக்கடி கோயிலுக்கு வந்து தாயைக் கும்பிட்டுட்டுப் போகலாம்.’’

அவர் பேசியது யாரோ அருள்வாக்கு சொல்வதுபோலிருந்தது. அவர் வாய்மொழியில் அம்மனே ஆணையிட்டதுபோலிருந்தது. அடுத்த வாரமே குடும்பத்தோடு சோழவந்

தானுக்கு வந்துவிட்டான் ராஜாராம். சோழவந்தானுக்கு வந்த பிறகு ராஜாராமின் வாழ்க்கையே மாறிப்போனது. ஏறுமுகம்தான்.

அவனுடைய கான்ட்ராக்டர் அவனுக்குத் தொழிலைக் கற்றுக் கொடுத்ததோடு, சிறு சிறு கான்ட்ராக்டுகளைப் பெற வழிகாட்டினார். உதவினார். 90-களின் முற்பகுதியில் சோழவந்தானுக்கு வந்த ராஜாராம் இன்றைக்கு மதுரை வட்டாரத்தில் முக்கியமான தொழிலதிபர். பேரன், பேத்தி என பெரிய குடும்பம். இன்றைக்கும் வெள்ளிக்கிழமைகளில் ஜெனகை மாரியம்மனைக் கும்பிட வந்துவிடுகிறார். கோயிலுக்கருகிலோ, பிராகாரத்திலோ கவலை தோய்ந்த முகத்தோடு யாராவது அமர்ந்திருந்தால் வலியப் போய் பேசுவார். பிரச்னைகளை கேட்டு தேறுதல் வார்த்தைகளைச் சொல்வார். அவர்களிடம் நிறைவாக அவர் சொல்வது ஒன்றுதான்.

``கவலைப்படாதீங்க. ஆத்தாளைப் பார்த்து நல்லா கும்புட்டுட்டீங்கள்ல... அவ பார்த்துப்பா!’’