திருத்தலங்கள்
Published:Updated:

அஷ்டமங்கலங்கள் ஏந்தும் அரம்பையர்கள்!

அரம்பையர் தரிசனம்
News
அரம்பையர் தரிசனம்

- பூசை.ச.அருணவசந்தன் -

பாற்கடலில் தோன்றிய 60,000 அப்சரப் பெண்களில் முதன்மையானவர்கள் அஷ்ட அரம்பையர். இவர்கள் அம்பிகை உமாதேவியின் தோழிகளாக விளங்குபவர்கள். சிவாலயத்துக்கு வரும் அன்பர்களை வரவேற்கும் மங்கலப் பெண்களாகவும் இவர்கள் அருள்கிறார்கள் என்கின்றன புராண நூல்கள்.

அஷ்டமங்கலங்கள் 
ஏந்தும் அரம்பையர்கள்!

சிவ பூசையில் எட்டுவிதமான மங்கலப் பொருள்கள் முக்கியமாக இடம்பெறும். இவற்றை அஷ்டமங்கலப் பொருள்கள் எனப் போற்றுவர். சிவாலயங்களில் யாகவேதிகையைச் சுற்றிலும் கண்ணாடி, பூரணக் கும்பம், இடபக்கொடி, இரட்டைக் கவரி, ஶ்ரீவத்சம், சுவஸ்திகம், சங்கு, அடுக்கு தீபம் ஆகிய எட்டுப் பொருள்களையும் அஷ்ட அரம்பையர் சுமந்து சேவை செய்வதாக ஐதிகம்.

அதன்படி கிழக்குத் திக்கில் ஊர்வசி கண்ணா டியையும், மேனகை பூரணக் கும்பத்தையும் ஏந்தி நிற்பர். தெற்கில் ரம்பை இடபக் கொடியையும், திலோத்தமை இரட்டைக் கவரியையும் ஏந்தி நிற்கின்றனர். மேற்கில் சுமுகி ஶ்ரீவத்சத்தையும், சுந்தரி சுவஸ்திகத்தையும் ஏந்தி நிற்கின்றனர். வடக்கில் காமுகி சங்கையும், காமவர்த்தினி அடுக்குத் தீபத்தையும் ஏந்தி நிற்கின்றனர் என்று பூஜாபத்தி நூல்கள் கூறுகின்றன.

கும்பாபிஷேகம் போன்ற பெருஞ்சாந்தி விழாவில் யாகமேடையைச் சுற்றியுள்ள இந்த அஷ்ட கன்னியரும் பூஜிக்கப்படுகின்றனர். அப்போது அவர்களுக்குரிய நிவேதனம், பூசை, பலி ஆகியனவும் அளிக்கப்படுகின்றன.

இந்திர லோகத்தில் வசிக்கும் இந்த அரம்பைய ரையும் அவர்கள் வசமுள்ள மங்கலப் பொருள் களையும் மனதால் தியானித்து வணங்கினால் இன்பமும் செல்வசுகமும் கிட்டும் என்பது நம்பிக்கை. எனவேதான் ஆனி மாத திருதியை நாளில் இந்த அஷ்ட கன்னியரை வழிபடும் ரம்பா திருதியை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.