Published:Updated:

`தில்லையைச் சொல்ல எல்லையும் உண்டோ?'

சிதம்பர தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிதம்பர தரிசனம்

சிதம்பரம் அற்புதங்கள்!

`அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

என்னம் பாலிக்கு ஆறு கண்டு இன்பு உற

இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே.'

- திருநாவுக்கரசர்.

இடையறாது அன்னம் பாலிக்கும் திருத் தொண்டு செய்யப்பட்ட பெருமைக்குரிய தலம் சிதம்பரம். சைவர்களுக்குக் கோயில் என்றாலே தில்லைதான். பூவுலகில் உள்ள எல்லா சிவமூர்த்தங்களின் சாந்நித்யமும் நள்ளிரவில் ஒடுங்கும் திருத்தலம் தில்லைச் சிதம்பரம்.

`தில்லையைச் சொல்ல 
எல்லையும் உண்டோ?'

தில்லை மரமே தல விருட்சமாக அமைந்த தால் இவ்வூர் தில்லை என்றானது. தில்லைக் கூத்தனே மூலவராக அமைந்திருக்கும் ஒரே ஒரு தலம் சிதம்பரம் மட்டுமே. மூலவரே உற்சவராக உலா செல்லும் அதிசயமும் இங்கு மட்டுமே நடைபெறுகிறது.

னந்தக் கூத்தன், ஆடலரசன், நடராஜன், ஆனந்த நடராஜன், அம்பலக் கூத்தன், திருச்சிற்றம்பலமுடையான், அம்பலவாணன், திருமூலட்டானேசுவரன், ஹடயோகி, கூத்த பிரான், கனக சபாபதி, சபாநாயகர் என பல திருநாமங்களுடன் இங்கே சுவாமி எழுந்தருளி உள்ளார். அம்பிகை உமையாம்பிகை எனும் சிவகாமசுந்தரியாக அருள் பாலிக்கிறாள்.

ங்கே திருமூலட்டானம் எனும் தனிக் கோயிலில், திருமூலட்டானேசுவரர் எழுந்தருளி உள்ளார். இவரே முதன்மையான மூல மூர்த்தி. திருமுறைகளில் அதிகம் பாடல் பெற்ற தலமும் இதுவே. சமயக்குரவர் நால்வரும் நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்த பெருமை கொண்டது இந்த ஆலயம். நாயன்மார்களில் பலரும் வழிபட்ட தலமிது. திருநாளைப்போவார், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பலரும் மோட்சம் அடைந்த புண்ணியப் பதி இது.

திருவாரூரில் திருத்தொண்டத்தொகை பாடுவதற்குச் சுந்தரருக்கு ஈசன் அடி எடுத்துக் கொடுத்தபோது வந்த முதல் வரி... `தில்லை வாழ் அந்தணர்கள் அடியார்க்கும் அடியேன்'. 3000 தில்லைவாழ் அந்தணர்களில் ஈசனும் ஒருவர் என்பது சிறப்புக்குரிய பேறு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
`தில்லையைச் சொல்ல 
எல்லையும் உண்டோ?'
`தில்லையைச் சொல்ல 
எல்லையும் உண்டோ?'

திருமால், நந்தி, பிரம்மன் ஆகியோர் இசைக்க, ஈசன் ஆதிசேடனுக்காக திருநடனம் புரிந்த தலம் இது. ஆகாயத் தலம் இது. விராட புருஷனின் அங்கங்களில் சிதம்பரம் ஹ்ருதய ஸ்தானம் எனப்படுகிறது. பஞ்ச சபைகளில் இது இரண்டாவதான பொற்சபை. சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜ சபை என ஐந்து அம்பலங்களைக் கொண்ட அதிசய ஆலயம் இது.

ழு நிலைகள் கொண்ட நான்கு கோபுரங்கள், ஐந்து பிராகாரங்களுடன் சுமார் 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ஆலயத்தில், `நால்வர் கோயில்’ ஒன்று உள்ளது. இதுவே தேவார மூவர்களின் ஓலைச் சுவடி களைப் பாதுகாத்த இடம். இங்கிருந்தே திருமுறைகள் உருவாயின என்பது வரலாறு.

1648-ம் ஆண்டு அந்நியர்களின் தாக்குத லால் இந்த ஆலயமும் பாதிப்புக்கு உள்ளானது. அப்போது தில்லை பெருமானின் விக்கிரகத் தைக் காக்க திருவாரூர், குடுமியான் மலை, மதுரை எனப் பல ஊர்களுக்கு எடுத்துச் சென்றார்கள் தீட்சிதர்கள். அப்போது சுமார் 35 ஆண்டுகள் மறைந்துறைந்த ஸ்வாமியின் லீலையை திருவாரூர்க் கோயிலில் உள்ள மராட்டியர் செப்பேட்டின் வழியே அறியலாம்.

சிதம்பரம் சிறப்புக்குரிய வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்குள்ள திருச்சித்திரக்கூடத்தில் கோவிந்தராஜ பெருமாள் நடராஜருக்கு அருகிலேயே சந்நிதி கொண்டிருக்கிறார்.

பொன்னம்பலத்தில் தினமும் ஆறு காலம் நடைபெறும் சந்திரமௌலீசுவரர் எனும் ஸ்படிக லிங்க அபிஷேகத்தைக் காண்பது பிறவிப் பிணி தீர்க்கும் என்பர்.

மாபதிசிவம் கொடிக்கவி பாடியது, திருநீலகண்டர் இளமை மீண்டது, ஊமைப் பெண்ணை மாணிக்கவாசகர் பாட வைத்தது, சேந்தனார் பல்லாண்டு பாடி திருத்தேரை ஓட வைத்தது, தில்லை அந்தணர்களைச் சம்பந்தர் சிவகணங்களாக தரிசித்தது, ஈசன் சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்து பெரிய புராணம் பாடவைத்தது என பல அற்புதங்கள் நடந்த தலம் இது.

`தில்லையைச் சொல்ல 
எல்லையும் உண்டோ?'

தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும் கோயில் இது. இரவு சாப்பிட்ட ஈசன், அதிகாலையில் பசியோடு இருப்பார் என்பதால், நடை திறந்ததும் பால், வாழைப்பழம், பொரி, வெல்லம், வெற்றிலைப் பாக்கு வைத்து பூஜை செய்வார்கள். இது வேறெங்கும் காண்பதற்கரிய பூஜை. அதேபோல் எல்லா சிவாலயங்களிலும் 9 மணிக்குள் அர்த்த சாம பூஜை முடிந்துவிடும். ஆனால், சிதம்பரத்தில் இரவு 10 மணிக்குத்தான் அர்த்தசாம பூஜை நடக்கும். அப்போது, ஈசனின் ஆனந்த நடனத்தைத் தரிசிக்க, எல்லா ஊர் தெய்வங்களும் இங்கு கூடுவதாக ஐதிகம்.

சிதம்பர ரகசியம் என்பது சூட்சுமமானது. நடராஜரின் கருவறைக்கு வலது பக்கத்தில் திரை ஒன்று உள்ளது. அந்தத் திரைக்குப் பின்னே உள்ள சுவரில், தங்கத்தாலான வில்வ மாலைகள் காணப்படும். அவை , சிவா என்கிற சம்மேளனச் சக்கரங்கள் ஆகும்; இந்த தரிசனம் மோட்சம் தரும் ஒன்று என்கிறார்கள். ஞானம் எனும் சக்கரத்தை மாயை மூடியிருக் கிறது. இறைவன் அருளால் மனம் ஒருமுகப்பட்டு, மாயை விலகினால், ஞானமாகிய ஶ்ரீசக்கரத்தை உணரலாம் என்பதே சிதம்பர ரகசியம்.

ராஜ உறுப்புகள் எனப்படும் மனிதனின் உள் உறுப்புகளில் இக்கோயில் இதயம். அதனா லேயே இடைவிடாத துடிப்பாக நடராஜர் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் இக்கோயிலின் ரகசியங்களில் ஒன்று.

தில்லைக் கோயில் அமைந்திருக்கும் இடம் உலகின் சரியான மையப் பகுதி; இங்கே நடராஜரின் ஆனந்த நடனமானது காஸ்மிக் நடனம் எனச் சிறப்பித்துச் சொல்கிறார்கள். அதாவது பிரபஞ்சத்தின் எளிய வடிவம் சிவலிங்க வடிவம். பிரபஞ்ச இயக்கத்தின் எளிய வடிவம் நடராஜர் ஆடும் திருநடனம். பிரபஞ்ச விரிவாக்கத்தின் உருவகமே ஆடல் கோலம் என்கிறார்கள் ஆன்றோர்.

க்கல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் எனும் ஐவகைத் தொழிலின் தத்துவத்தை உணர்த்தும் நடராஜர் வடிவம் அணுவின் இயற்பியல் விதியை ஒத்து உள்ளது என்பர். இந்தக் கருத்துக்கு இணங்க, ஜெனிவாவில் உள்ள உலகின் பெரிய அணு ஆராய்ச்சி நிறுவனமான CERN மையத்தில், நடராஜரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் நூறு கால் மண்டபம், சிவகாம சுந்தரி சந்நிதி, சித்சபைக்குப் பின்புறத்தில் இருக்கும் நந்தி மண்டபம் போன்ற பல இடங்களில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள் பலவும் காலத்தால் அழியாத கலைவடிவங்கள். இவை அனைத்தும் 1200 ஆண்டுகளைக் கடந்தவை என்பதும் விசேஷம்.

ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அதிகாலையில் ராஜகோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் அதிசயக் கோயில் இது. 1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீனப்போரின் போது, இந்திய ராணுவத்துக்குப் பெருமளவில் நிதி தேவைப்பட்டது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து பெருமளவு தங்கமும் தொகையும் கொடுக்கப்பட்டன. போர் முடிந் ததும், நமது அரசு இந்தக் கோயிலில் இருந்து அனுப்பப்பட்ட தங்கம் - பணத்தை, வட்டியும் முதலுமாகத் திருப்பிக்கொடுத்தது. அந்தத் தங்கம் ஆதிமூலநாத சுவாமிக்கு தங்கக் கவசம் செய்ய சமர்ப்பிக்கப்பட்டது.

பெரும்பற்றப்புலியூர் என ஆதியில் அழைக்கப்பட்ட இந்த ஊரில் அமைந்துள்ள ஆலயத்தின் ஒவ்வோர் அமைப்பும் மனித உடலின் அமைப்பை ஒட்டியே அமைக்கப் பட்டுள்ளன என்கின்றன ஞானநூல்கள்.

தேவதச்சன் மயனால் தில்லை வனத்தில் திரேதாயுகத்தில் சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஆலயம் கட்டப்பட்டதாக வைசம்பாயனம், விஸ்வகர்ம வம்ச பிரகாசிகை போன்ற நூல்கள் கூறுகின்றன.

முதலாம் பராந்தகனுக்கு முன்பே புராணக் காலத்து மன்னர்கள் பலரும் இந்த ஆலய பொன்னம்பலத்துக்குப் பொற்கூரை வேய்ந்துள்ளார்கள் எனும் தகவல் உண்டு. சோழர்கள் காலத்தில் இந்த ஆலயம் விஸ்தரிக்கப்பட்டது.

கோயிலின் நான்கு கோபுரங்களில் கிழக்குக் கோபுரத்தை விக்கிரமச் சோழனும்; மேற்கு கோபுரத்தைச் சுந்தர பாண்டியனும்; தெற்கு கோபுரத்தை பல்லவ அரசன் காடவர் கோப்பெருஞ்சிங்கனும்; வடக்குக் கோபுரத்தை விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரும் கட்டியதாகச் சொல்லப் படுகிறது.

பிற்காலத்தில் மராட்டிய செஞ்சி மன்னர் சாம்பாஜியின் ஆணைப்படி, கோபால ததாசி என்பவர் கோயில் திருப் பணிகளைச் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். பின்னர்,

1747- ம் ஆண்டு சரவணன் தம்பிரான் என்பவர் இக்கோயிலைப் புனரமைத்தார். வெகுகாலமாக அவரே இக்கோயில் நிர்வாகத்தைக் கவனித்தும் வந்தார். இதனால் இன்றும் இக்கோயிலின் மூன்றாம் சுற்றுப்பாதை தம்பிரான் திருவீதி என்று அழைக்கப்படுகிறது.

பிற்காலத்தில் பல ஆண்டுகள் கழித்து மைசூர் போர், பிரெஞ்சு - பிரிட்டிஷ் போரால் கோயில் சிதிலமாக, வள்ளல் பச்சையப்ப முதலியாரும் அவர் மனைவியும் சேர்ந்து சுமார் 40,000 வராகன் செலவழித்துப் புனரமைத்தனராம்.

ராஜேந்திர சோழனின் ஆட்சியில், சிதம்பரம் கோயிலின் பெருமைகளைக் கேட்ட கம்போடிய அரசன் ஒருவன் நடராஜப்பெருமானுக்கு தங்கம் மற்றும் கம்போடிய மாணிக்கக் கற்களைக் கொண்ட நகைகளை தூதுவர்கள் மூலம் கொடுத்து அனுப்பியதாகவும் வரலாறு கூறுகிறது.

ங்கு ஆண்டுக்கு ஆறு முறை நடைபெறும் அபிஷேகங் கள் விசேஷமானவை. அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆருத்ரா அபிஷேகம். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன திருவிழா 11.12.21 சனிக்கிழமை அன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

ருத்ரா விழாவின் முக்கிய நிகழ்வான பிட்சாடனர் திருக் கோலம் 18.12.21 அன்று நடைபெறும். மறுநாள் 19.12.21 அன்று அதிகாலை தனுர் லக்னத்தில் சித்சபையில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். மறுநாள் 20.12.21 அன்று அளவில்லா ஆனந்தம் அருளும் ஆருத்ரா தரிசன வைபவம் நிகழும். நிறைவாக 22-ம் தேதி தெப்போத்சவம் நடைபெறும்.

`தில்லையை எண்ண தொல்லை தீரும்; தில்லையைச் சொல்ல எல்லையே இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. ஆம், தில்லையின் மகிமைகளைச் சொல்லிக்கொண்டே இருக்க லாம். அதன் பெருமைகளைப் படிக்கப் படிக்க... கேட்கக் கேட்க... நம் வாழ்வு ஆனந்த மயமாகும். நாமும் அதன் மகிமையை படித்தறிவதுடன், தரிசிக்க முக்தி தரும் தில்லையை தரிசித்துத் தொழுது நலமும் வளமும் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்!