Published:Updated:

பெளர்ணமியில் அம்பிகை வழிபாடு ஏன்?

ஶ்ரீஉண்ணாமுலை அம்பாள் திருவண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீஉண்ணாமுலை அம்பாள் திருவண்ணாமலை

காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

பெளர்ணமியில் அம்பிகை வழிபாடு ஏன்?

காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

Published:Updated:
ஶ்ரீஉண்ணாமுலை அம்பாள் திருவண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீஉண்ணாமுலை அம்பாள் திருவண்ணாமலை

பெளர்ணமி நாளின் மகத்துவம், அன்றைய நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டுச் சிறப்புகள், அதனால் உண்டாகும் பலன்களை விரிவாக விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்!

பெளர்ணமியில் 
அம்பிகை வழிபாடு ஏன்?

? சூரிய-சந்திரனுக்கு வழிபாட்டில் அப்படியென்ன சிறப்பு?

சந்திரன் - சிறு வயதில் தாயார் நம்மை அமைதிப் படுத்தவும் ஆனந்தப்படுத்தவும் விண்ணைச் சுட்டி நமக்குக் காட்டிய சாக்ஷி தேவதை. ஆம், சூரியனும் சந்திரனும் அனைத்துக் காலங்களிலும் நம் செயல்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் சக்திகள். இவ்வுலகில் அனைவராலும் எளிதாக நேரில் தரிசிக்க இயலும் சக்திகள். கடவுளின் அருளை அனைவரும் எளிதில் அடைய வாய்ப்பு கிடைப்பது இவர்களால்தான்.

நமது இந்து மதம் உலகில் உள்ள அனைத்துக்கும் ஆதாரமாக விளங்கி வருவது. நமது உடலில் வலது பாகத்தை ஆண் என விவரித்து சூரிய நாடி இருப்பதையும்; இடது பாகம் பெண் என்று கூறி சந்திர நாடி இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றன ஞானநூல்கள்.

இதையே இடா - பிங்களா நாடிகளாகக் குறித்து, இவையிரண்டும் ஒன்றாகி, சுஷும்னா நாடி வழியே நமது யோக அப்யாஸத்தையும் பூஜைகளையும் செய்து இறையனுபூதியைப் பெறலாம் என்று வழிகாட்டுகின்றன சாஸ்திரங்கள்.

அபிராமிப்பட்டர் கூறிய வார்த்தைகளை மெய்ப்பிக்க, அமாவாசை திதியை பெளர்ணமியாகச் செய்த அம்பிகையின் அருளாடலை நாம் அறிவோம். அம்பிகையின் திருவருள் அவளின் பக்தர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதையும், காலம் அவளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும் எல்லோருக்கும் உணர்த் தும் அருள்சம்பவம் அது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

?வளர்பிறை, தேய்பிறை, திதிகளின் மகிமை வழிபாடுகள் பற்றி விளக்குங்களேன்!

சூரியன் - சந்திரன் இவர்களின் சேர்க்கை அமாவாஸ்யை எனப்படும். நன்றாக விலகியிருப்பது பெளர்ணமி ஆகும். சந்திரனுடைய கலை சூரியனிடத்தில் ஒவ்வொன்றாகப் பிரவேசிப்பது க்ருஷ்ண பக்ஷ திதிகள் என்றும், சூரியனிடமிருந்து ஒவ்வொரு கலையாக வெளிவருவது சுக்லபக்ஷ திதிகள் என்றும் அறியவும்.

வளர்பிறை பிரதமை முதல் பெளர்ணமி வரையிலும் 15 தினங்கள் மாலையில் சந்திரனையும், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையிலுமான 15 தினங்கள் காலையில் சூரியனையும் அம்பிகையின் இருப்பிடமாகக் கொண்டு வழிபடுவது சாக்த மரபு. சாதகர்கள், ஒவ்வொரு திதிக்கும் உரிய தேவதைகளை அவர்களுக்குத் தகுந்த மந்திரங்களை ஜபித்து வழிபடுவது உண்டு.

`ப்ரதிபத் - முக்ய - ராகா - அந்த - திதி - மண்டல - பூஜிதா’ என்று உண்டு. சுக்லபக்ஷ பிரதமை முதல் பெளர்ணமி வரையிலும் முறையே காமேச்வரீ, கமாலினீ, நித்யக்லிந்தா, பேருண்டா, வஹ்நிவாஸிநீ, மஹா வஜ்ரேச்வரி, சிவதூதீ, த்வரிதா, குலசுந்தரீ, நித்யா, நீலபதாகா, விஜயா, ஸர்வமங்களா, ஜ்வாலாமாலினீ, சித்ரா எனும் 15 திதிநித்யா தேவதைகள் திகழ, 16-வது கலையாக பூர்ணமான மஹாநித்யா எனப் போற்றப்படும் தேவியானவள் விளங்குகிறாள்.

நாம் சந்திரனில் கலைகள் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக் கிறோம். ஆனால், மாயையின் காரணமாக நமக்குத் தெரிய வில்லை என்பதே உண்மை. 15 திதி நித்யா தேவதைகளையும் நினைத்து வழிபட பெளர்ணமி அன்று 16-வது கலையாக முழுமையான உருவில் அம்பிகையின் தரிசனம் பக்தனுக்குக் கிடைக்கும்.

அதேபோல், தேய்பிறை அமாவாசை பக்ஷத்தில்... முதல் திதியான பிரதமையில் சித்ரா முதற் கொண்டு வழிபடுவர். அதாவது மேற்சொன்ன வரிசை நியமத்தைத் தலைகீழாகக் கடைபிடித்து அமாவாசை வரையிலும் வழிபடுவர்.

இப்படி இந்த 15 திதிநித்யா தேவதைகளும் அவர்களின் இருப்பிடமான பராசக்தியும் பெளர்ணமி திதியன்று முழுமையாக நம்மால் உணரப்படுவதால், பெளர்ணமி தினம் அம்பாள் வழிபாட்டுக்கு மிகச் சிறந்த தாகப் போற்றப்படுகிறது.

பெளர்ணமியில் 
அம்பிகை வழிபாடு ஏன்?
Poto69

? பெளர்ணியில் அம்பாள் வழிபாடு சிறப்புப் பெறுவது ஏன்?

அம்பிகை கலாநாதா என்று போற்றப்படு கிறாள். ஒவ்வொரு தெய்வத்துக்கும் கலைகள் என்ற அம்சம் உண்டு. அக்னிக் கலைகள் 10, சூரியக் கலைகள் 12, சந்திரக் கலைகள் 16, பிரும்மக் கலைகள் 10, விஷ்ணுக் கலைகள் 10, ருத்திரக் கலைகள் 10, ஈச்வரக் கலைகள் 4, ஸதாசிவக் கலைகள் 16. இந்தக் கலைகளுக்குத் தலைவியாக தேவி விளங்குகிறாள்.

மேலும், அந்தந்த திதிகளில் அந்தந்த தேவதைகளை வழிபட்டு உயர்ந்த பலன்களை அடையலாம்.

விநாயகர் - சதுர்த்தி

முருகன் - சஷ்டி; அக்னி-பிரதமை;

அச்வினி தேவர்கள் - த்விதீயை

உமா - திருதீயை; நாகர் - பஞ்சமி

சூரியன் - ஸப்தமீ

பிராம்மீ முதலான மாதர்கள் - அஷ்டமீ

துர்கா - நவமீ; திக்தேவதைகள் - தசமீ

குபேரன் - ஏகாதசீ; விஷ்ணு - த்வாதசீ

யமன் - த்ரயோதசீ; சந்திரன் - பெளர்ணமி

பித்ரு தேவதைகள் - அமாவாசை

இங்ஙனம் குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டைச் செய்வது சிறப்பு. ஆனால், இதேபோன்று தனித்தனியே வழிபாடு செய்வது அனைவருக்கும் சாத்தியமல்ல. ஆதலால், அனைவருக்கும் பொதுவாக அனைத்து பலன் களையும் ஒருங்கே பெற்று, இகபர சுகங்களைப் பெற்றுய்ய, பெளர்ணமி விரதம் இருந்து அம்பிகையை வழிபட வேண்டும்.

? பெளர்ணமியில் எவ்வாறு வழிபட வேண்டும்?

அன்று நமக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்

களையும், ஸகஸ்ரநாமம் முதலான அர்ச்சனை

களையும், தேவீ மஹாத்மியம் போன்ற பாராயணங்களையும், ஸெளந்தர்ய லஹரீ, அபிராமி அந்தாதி போன்ற அம்பிகையின் துதிகளையும் பக்தியுடன் அம்பிகைக்குச் சமர்ப்பணம் செய்வது நலம்.

`பூர்ணிமா பஞ்சமீ சைவ... ப்ரசஸ்தா: ஸர்வகர்மசு’ என்று பெளர்ணமி திதியும் மற்றும் சிலவும் அனைத்துக் காரியங்களுக்கும் சிறப்பானதாகப் போற்றப்படுகின்றன.

`திதி நக்ஷத்ர வாராதி ஸாதனம் புண்ய பாபயோ: ப்ரதான குண பாவேன ந ஸ்வாதந்த்ரேண தேக்ஷமா:' என்ற ஸ்லோக வரிகள் உண்டு. அதாவது திதி, நக்ஷத்ரம், கிழமை என்பவை புண்ணிய பாவங்களுக்கு உரிய ஸ்தானங்களாக விளங்குகின்றன. ஆனால் அந்தக் காலத்தில் நம்முடைய செயல் களாலேயே அந்தப் பலன்களைப் பெறலாம் என்பதை இந்த வரிகள் மூலம் அறியலாம்.

`பொருளே பொருள் முடிக்கும் போகமே...' - எனத் தொடங்கி, பொருள்களில் உருவமாகவும், போக மாகவும், மாயையாகவும், அந்த மாயை யின் முடிவில் தோன்றும் தெளிவாகவும் திகழ்வதாக அம்பிகையைப் போற்றுகிறார் அபிராமிப்பட்டர்.

பிரதமை முதல் சிறிது சிறிதாக நமது மாயையை விலக்கி, பெளர்ணமியன்று நம் மனதில் அஞ்ஞான இருள் சிறிதும் இல்லாமல் இருக்கச் செய்யும் அம்பிகையை, நம் சக்திக்கு இயன்றவாறு வழிபட்டு அருள்பெறலாம்.

? விரிவான முறையில் வழிபாடுகளைக் கடைப் பிடிக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று அம்பிகையை வழிபடலாம். திருவண்ணாமலை போன்ற தலங்களில் கிரிவலம் சென்று அம்பிகை அருளால் சிவஞானம் பெறலாம்.

`ராகா சந்த்ர ஸமான காந்தி வதனம்’ - பெளர்ணமிச் சந்திரனைப் போன்று அழகுடையவர் என்று திருவண்ணாமலையில் அருளும் சிவபெருமான் போற்றப்படுகிறார். ஆகவே, பெளர்ணமி தினத்தில் நம் தாய் தந்தையான சிவ-சக்தியை வணங்கித் துதித்து, பிறவிக்கடலை நீந்துவோம்.

- பதில்கள் தொடரும்...