Published:Updated:

லட்சுமி கடாட்சம் - 14

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம் - 14

லட்சுமி கடாட்சம்

Published:Updated:
லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம்

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கப் போகும் தருணத்தில், எங்கிருந்தோ ஐந்தாறு பேர் வந்தார்கள். எங்களுக்கு வகுப்பு எடுத்த மாஸ்டரின் மாணவர்கள் என்றார்கள்.

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்


“இங்கே இன்னிக்கு கிளாஸ் ஃபைனலாமே... நாங்க ‘சுதர்ஸன கிரியா’ கோர்ஸ் பண்ணனும்... மாஸ்டர் இங்கே இருக்கிறாதால் இங்கேயே கத்துக்கலாம்னு வந்தோம். பண்ணிக்கலாமா?” என்றனர் ஆர்வமுடன்.

கற்றுக்கொள்ள வந்த மாணவர்களை எப்படி போகச் சொல்வது? ஆனால், அவர்களையும் சாப்பிடச் சொல்ல வேண்டுமே!

எனக்குள் உதறல் எடுத்தது.

‘40 சாப்பாடுதானே சொல்லியிருந்தோம்..’

உடனே அவசர அவசரமாய் அந்த கேடரிங் மாஸ்டருக்கு போன் செய்தேன். ‘ரஸமலாய், சாப்பாடு முடிஞ்சது’ என்று பதில் வந்தது.

மீண்டும் நான் ‘பாபா’ என்றபடி அவரின் கால்களில்தான் விழுந்தேன். வந்தவர்களையும் சாப்பிட அமரச் சொன்னேன். பரிமாறியவர் எந்தவித பதற்றமும் இன்றி கேஷுவலாகப் பரிமாறினார். எல்லோரும் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்து கைகழுவச் சென்றனர்.

நான் சமையலறைக்குள் சென்று, “ஏன் சார்... 40 பேருக்குத்தானே சொல்லி யிருந்தோம். இப்போ 45 பேர் சாப்பிட்டிருக்காங்களே..!” என்றேன்.

உடனே அவர், “இல்லேம்மா... நீங்க ஆர்டர் பண்ற சாப்பாட்டைவிட, நாலைஞ்சு பேர் அதிகமாக சாப்பிடற மாதிரிதான் நாங்க எப்போதும் சமைச்சுக் கொண்டு வருவோம். கரெக்டா 40 பேர்தான் சாப்பிடுவாங்கன்னு சொல்ல முடியாதுல்ல. ஆட்கள் குறைந்து சாப்பாடு மீதமானால்கூட பரவாயில்லை; ஆனா, ஆட்கள் ஜாஸ்தியாகி சாப்பாடு பத்தாமல் போயிடக்கூடாது இல்லையா!” என்றார்.

சாப்பாடு விஷயத்தில் அவர் சொல்வது சரி. என்றாலும் நாங்கள் ஸ்வீட் நாற்பதுதானே சொல்லியிருந்தோம்! ஆமாம்... சாப்பிட்டவர்களில் பலர் ஸ்வீட் வேண்டாம் என்று சொன்னதால், அதுவுமே மீதம் இருந்து, உபரியாக வந்தவர்களுக்குப் பரிமாற முடிந்தது.

எல்லாம் பகவான் செயல்!

‘போதுமா, போதாதா... இன்னிக்கு எனக்கு உணவு கிடைக்குமா, கிடைக்காதா...’ இப்படி எந்தக் கவலையுமே நாம் படத் தேவையில்லை. அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட வேண்டும். நீங்கள் எந்த தெய்வத்தை நம்புகிறீர்களோ... அது உங்கள் இஷ்டம். நீங்கள் நம்பும் அந்த தெய்வத்தின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு உட்காருங்கள். நீங்கள் பட்டினி கிடக்கமாட்டீர்கள்.

ஏனெனில் இறைவன் தாயுருவம். அந்தத் தாய்தான் நமக்குப் படியளக்கும் அன்னபூரணி. அந்த அன்னபூரணி கண்டிப்பாக உங்கள் வயிற்றையும் பார்த்துக்கொள்வாள். இது பல நேரங்களில் எனக்கு நடந்திருக்கிறது.

எங்கேயாவது மலையடிவாரத்தில் ஷூட்டிங் நடக்கும். கொண்டு வந்த மதிய உணவு, அதிகாலையிலேயே தயாரிக்கப் படுவதால் சில தருணங்களில் கெட்டுவிடும்.

“மேலே போய்தாங்க சாப்பாடு வாங்கிட்டு வரணும்” என்பார்கள் புரொடக்‌ஷனில். ஷூட்டிங் நடக்கும் இடத்திலிருந்து வண்டியில் 25, 30 கி.மீ. தூரம் போக வேண்டியது வரும்.

‘சரி.. என்ன பண்றது.. பார்த்துக்கலாம்!’ என்று சொல்லிவிட்டு அமர்ந்தால், அந்தப்பக்கம் எதிர்பாராமல் அதிசயம் நடக்கும். பல வருஷங்களுக்கு முன்னால் ஏற்காட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

‘பொன்னி’ என்ற மலையாளப் படத்துக்கான படப்பிடிப்பில் இருந்தேன். மலையில் மிகவும் மேலே இருந்தோம் நாங்கள். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சாப்பாடு கொண்டு வந்த வேன் கவிழ்ந்து, யூனிட்டுக்கான சாப்பாடு அனைத் தும் கொட்டி வீணாகிவிட்டது. திரும்பவும் கீழே இறங்கிப் போய்தான் அனைவருக்கும் சாப்பாடு கொண்டு வரவேண்டும் என்ற நிலைமை. என்னைப் பற்றித் தெரிந்திருந்ததால் எல்லோரும் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

“லக்ஷ்மி மேடம்... உடனே சாமியை வேண்டிக்குங்க. எங்கேயிருந்தாவது சாப்பாடு கிடைச்சிடும்” என்றனர்.

நான் அசராமல் “கண்டிப்பாகக் கிடைக்கும் பாருங்க. மதியம் 1.30 மணிக்குள்ள எனக்கு சாப்பாடு கிடைக்கலன்னா, நாளையிலிருந்து நான் நாத்திகவாதி ஆயிடறேன்” என்றேன்.

எல்லோருக்கும் நல்ல பசி. காலையில் சீக்கிரமே சாப்பிட்டுவிட்டுக் கிளம்பியவர்கள்... மணி 12.30 ஆகிவிட்டது. சாப்பாடு வரும் வழியையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

மலைஜாதி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது. அவர்களில் ஓர் இளைஞர், கொஞ்சம் படித்தவர்... மலைஜாதிப் பிள்ளைகளுக்கு எல்லாம் பாடம் சொல்லிக்கொடுப்பார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் வணக்கம் சொல்லி, மரியாதையாகப் பேசுவார்.

அப்போது அவர் அந்தப் பக்கமாக வந்தார்.

“என்ன மேடம்... ஷூட்டிங் நடந்துட் டிருக்கா?” என்றவர், “எங்க ஜனங்களை எல்லாம் பார்க்கிறேன்னு சொன்னீங்களே மேடம்... எப்போ வர்றீங்க?” என்றார்.

உணவு வரும் வரை சும்மாதானே இருக்க வேண்டும் என்று நினைத்த நான், “இப்போ பார்க்கலாமே!” என்றேன்.

அவர் உடனே குஷியாகி, ‘’உங்களுக்கு நேரம் இருக்கா மேடம்?” என்றார்.

“இருக்கு இருக்கு... பிரேக் டயம்தான். வாங்க போலாம்” என்று அவருடன் கிளம்பினேன்.

“பிரேக் டயம்னா சாப்பாட்டு நேரம்தானே. எல்லாருமே வாங்க சாப்பிடலாம்!” என்று அழைத்தார்.

‘ஹா.. சாப்பாடு!’

சாப்பாடு என்றதும் சுற்றிலும் இருந்த 10, 15 பேர், டெக்னீஷியன்கள் உள்பட அனைவரும் ‘வாங்க போலாம்’ என்று கிளம்பிவிட்டோம்.

அவருடன் அங்கே போனால்...

நீங்கள் நம்ப மாட்டீர்கள்... அந்த ஜனங்களுக்குப் படிப்பறிவு சொல்லித் தரும் அந்த இளைஞர், அந்த மக்களுக்காக ஏற்பாடு செய்திருந்த உணவை எங்களுக்கும் பகிர்ந்தளித்தார்.

எளிமையானதாக இருந்தாலும் மிகவும் சுவையான சாப்பாடு அது!

ஒரு சாதம், ஒரு ரசம், பொரியல்தான். வறுவல் மாதிரி ஏதோ ஒன்றும் இருந்தது. ஆனால் வயிற்றுக்கு அவ்வளவு இதமாக இருந்தது. இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அவ்வளவு உயரத்தில், அந்த மலை உச்சியில் எங்களுக்கு ஜாங்கிரியும் போட்டார் அவர்.

அவர் பெயர் செந்தமிழ் செல்வன். மறக்க முடியுமா அவரை. பசி நேரத்தில் உணவளித்த தெய்வம் அல்லவா!

“எப்படிங்க ஜாங்கிரி எல்லாம்?” என்றேன் நான்.

“இந்த மக்களுக்குப் படிப்பு, மற்ற சுகாதார பழக்கவழக்கங்கள் சொல்லிக் கொடுப்போம். அதற்கு அவங்களை ஆர்வத்துடன் வரவழைக் கிறதுக்காக, மாசத்துக்கு ரெண்டு தடவை இந்த மாதிரி ஸ்வீட்டுடன் உணவு கொடுப்போம். இன்னிக்கும் அதே போல ஏற்பாடு செய்திருந் தோம். நீங்களும் வந்து சாப்பிட்டதில் ரொம்ப சந்தோஷம்!” என்றார்.

அந்த நேரத்தில் அவர்தான் எனக்கு அன்ன பூரணி! என்ன சொல்ல வருகிறேன் என்றால், விட்டுவிட வேண்டும்... `ஐயோ இப்படியா' என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கக் கூடாது. ‘எனக்குத் தெரியாது. சரணாகதி அடைஞ் சுட்டேன். நீ என்னைப் பார்த்துக்க. நீதான் என் தாய். நீதான் என்னுடைய வைத்தியன்...’ என்று அவன் தாள் சரணடைந்துவிட்டால், நமக்கு எந்த நாளுமே எந்தப் பிரச்னையுமே வராது. இந்த உண்மை நான் பல தருணங்களில் கண்கூடாகப் பார்த்தது.

இரவு நேரப் பயணத்தின் போது பிரச்னையில் மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது.

- கடாட்சம் பெருகும்...

கொண்டத்துக் காளியம்மன்
கொண்டத்துக் காளியம்மன்

பூ வாக்கு தருவாள்!

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது பாரியூர். இங்குதான் ஒய்யாரமாய் கோயில்கொண்டிருக்கிறாள் அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன். குண்டத்துக் காளியம்மன் என்ற பெயரே பின்னாளில் இப்படி மருவியதாம்.

திருமணத் தடை உள்ளவர்கள், பில்லி-சூனிய பாதிப்புக்கு உள்ளானவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்; துஷ்ட சக்திகளிடம் இருந்து மீள்வர் என்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

பாரியூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், வீட்டில் சுபகாரியம் நடத்துவது, புதிதாக தொழில் தொடங்குவது என எந்தக் காரியமாக இருந்தாலும், கொண்டத்து காளியம்மனிடம் பூப்போட்டு சம்மதம் கேட்டபிறகே செயல்படுகின்றனர். அம்மனுக்கு வலப்புறமாக பூ விழுந்தால், சுபகாரியத்தை நடத்தலாம்; புதிய தொழிலை உடனே ஆரம்பிக்கலாம்; அதிக லாபம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேநேரம், அம்மனுக்கு இடது பக்கத்தில் பூ விழுந்தால், அம்மன் உத்தரவு தரவில்லை என்று அர்த்தம். எனவே, சிறிது காலம் கழித்து மீண்டும் வந்து பூப்போட்டுப் பார்க்க வேண்டும்.

-சக்திதர், சென்னை-61