ஆஞ்சநேய கவச மகிமைகள்!
மகான் சேங்காலிபுரம் பிரம்மஶ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அபூர்வமான வல்லமை மிக்க பல ஸ்தோத்திரங்களைத் தொகுத்து ஶ்ரீஜயமங்கள ஸ்தோத்திரங்கள் என்று நூலாக்கி அருளியுள்ளார். அதிலுள்ள ஸோத்திரங்களில் ஆஞ்சநேய கவசமும் ஒன்று (இதை ஶ்ரீராமன் அருளியதாகச் சொல்வது உண்டு). இந்தக் கவசப் பாடலைப் பாடும் அன்பர்கள், சிறந்த போகங்களையும் மோக்ஷத்தையும் அடைவார்கள்.

மூன்றுமாத காலம் தினமும் மூன்று முறை ஶ்ரீஆஞ்சநேய கவசத்தைப் படிக்கும் அன்பர்களுக்குச் சகல சத்ருக்களையும் வெல்லும் வல்லமை உண்டாகும்; ஐஸ்வரியம் பெருகும். நடுநிசியில் இந்தக் கவசத்தை 7 முறை படித்தால் வலிப்பு முதலான பிணிகள் நீங்கும்; ஞாயிற்றுக் கிழமை அன்று அரச மரத்தடியில் அமர்ந்து ஶ்ரீஆஞ்சநேய கவசத்தைப் படித்து அனுமனைத் தியானித்து வழிபட்டால், அழிவற்ற செல்வம் உண்டாகும்.
செய்ய நினைத்த காரியங்கள் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. மேலும் இந்தக் கவசத்தை அனுதினமும் படித்து வரும் அன்பர்களுக்குப் பிணிகளும் வறுமையும் நீங்கும்; சகல யோகங்களும் கைகூடும்; காரிய ஸித்தி உண்டாகும். அனுமன் அருளால் வேண்டுதல்கள் யாவும் விரைவில் பலிதமாகும் என்பது நம்பிக்கை.
இங்ஙனம் அற்புதப் பலன்கள் தரும் ஶ்ரீஆஞ்சநேய கவசம் ஸோத்திரத்தை அடியொற்றி தமிழில் எழுதப்பட்ட எளிய துதிப்பாடல் உங்களுக்காக...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுமன் துதிப்பாடல்
ராம தூதனே நலம் தந்து ரட்சிப்பாய்
வாயுமைந்தனே வாழ்வை மலர்விப்பாய்
அஞ்சனை மைந்தனே
அஞ்சுதலை அகற்றிடுவாய்
ஆஞ்சநேயரே நின்
மலர்ப்பதம் போற்றுகிறேன்
கிழக்குத் திக்கிலே
ஶ்ரீஅனுமனே எமை ரட்சிப்பீர்
தெற்குத் திசையிலே
வாயுமைந்தனே காத்திடுவீர்
அசுரரை அழிக்கும் அனுமனே
மேற்கில் என்னைக் காத்திடுவீர்
கடல்கடந்த தெய்வமே
வடக்கிலும் வந்து துணை நிற்பீர்
ஶ்ரீகேஸரியே விஷ்ணு பக்தரே அனுமனே
விண்ணிலும் மண்ணிலுமாய் காத்தருள்வீர்
இலங்கையை எரித்த அஞ்சனை மைந்தனே
ஆபத்துகள் போக்கி நல்வாழ்வு தந்திடுவீர்
சுக்ரீவ மந்திரி என் சிரத்தினைக் காக்கட்டும்
வாயுமைந்தன் என் நெற்றியைக் காக்கட்டும்
புருவமத்தியை வீரஅனுமன் காக்கட்டும்
சொல்லும் செயலும்
அவரருளால் சிறக்கட்டும்
சாயாக்ராஹியாம் பூதத்தை வென்ற
மாருதிதேவர் என் கண்களைக் காக்கட்டும்
கன்னம் இரண்டும்
வானரத் தலைவர் காக்கட்டும்
ராமதூதன் என்னிரு
செவிகளைக் காக்கட்டும்.
அஞ்சனை மைந்தன் நாசியைக் காக்கட்டும்
வானர வீரன் என் முகம் காக்கட்டும்
அசுரரின் பகைவர் அனுமனென் கழுத்தினையும்
தேவர் தொழும் நாயகன்
எம் தோள்களையும் காக்கட்டும்
ஒளி பொருந்திய தெய்வமே சரணம்
வீர அனுமனே சரணம் சரணம்
நகங்களெனும் ஆயுதத்தால்
பகை கெடுக்கும் மூர்த்தியே
நீர் என் கால்களையும்
நகங்களையும்
எமது வயிற்றினையும் காத்திடுவீர்
கணையாழியுடன் சென்றீர்
சீதையின் சோகம் களைந்திட்டீர்
அனுமந்த சுவாமியே
என் மார்பையும் ஸ்தனங்களையும்
வலம் இடம் இருபுறத்தினையும்
காத்திடுவீர்
லங்கைக்குப் பயங்கரன் அனுமன்
பின்புறத்திலும் காக்கட்டும்
ராம தூதன் என் நாபியைக் காக்கட்டும்
வாயு மைந்தனென்
இடையினைக் காக்கட்டும்
சிந்தையில் சிறந்தவரே
சிவனருள் நிறைந்தவரே
நின்னருள் பெருகட்டும்
நின்னருள் துணைநின்று
மறைவான அங்கங்களைத் தொடைகளை
முழங்கால்களைக் காக்கட்டும்
முடிமுதல் கால்வரை எலும்புடன்
சதை நரம்புகள் அனைத்தையும்
வானரவீரர் காக்கட்டும் பலவான்
அனுமன் நம் வாழ்வைக் காக்கட்டும்!
ஶ்ரீராம ஜயம்