முக்தி தரும் ஏழு தலங்களில் ஓன்று காஞ்சி. மற்றவை: அவந்தி, துவாரகை, ஹரித்வார், மதுரா, காசி அயோத்தி. காஞ்சியில் அருள்பாலிக்கும் ஶ்ரீவரதராஜ பெருமாளை கிருத யுகத்தில் பிரம்மனும், திரேதா யுகத்தில் கஜேந்திரனும் (யானை), துவாபார யுகத்தில் பிரகஸ்பதியும், கலி யுகத்தில் அனந்தசேஷனும் வழிபட்டு அருள் பெற்றனராம்.

மேலும், சரஸ்வதிதேவி, நாரதர், ஆதிசேஷன், இந்திரன், பிருகு முனிவர் ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இன்றும், ஆண்டுக்கு இரு முறை- வைகாசி விசாகம் மற்றும் ஆடி மாதம் வளர் பிறை தசமி ஆகிய நாட்களில் ஆதிசேஷன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.
ஐந்து பிராகாரங்களுடன் காணப்படும் இந்தக் கோயில் வாரணகிரி மற்றும் அத்திகிரி எனும் இரு தளங்கள் கொண்ட கட்டுமலை அமைப்புடன் காணப்படுகிறது.
வாரணகிரியில் அழகிய சிங்கரையும், அத்திகிரியில் வரதராஜ பெருமாளையும் தரிசிக்கலாம். இந்தக் கட்டுமலையை பாண்குன்று கல், அஞ்சனவெற்பு, மணிக் குன்று, அஸ்தகிரி, கரி கிரி, வாரண வெற்பு ஆகிய பெயர்களாலும் குறிப்பிடுவர்.
ஆற்காடு யுத்தத்தின்போது நோய்வாய்ப்பட்ட ராபர்ட் கிளைவ், ஶ்ரீவரதரின் துளசி தீர்த்தம் பருகி, நோய் நீங்கப் பெற்றார். இதற்கு நன்றிக்கடனாக போரில் வெற்றி பெற்றுத் திரும்பும்போது, விலை உயர்ந்த மகர கண்டி (கழுத்தில் அணியும் ஆபரணம்) ஒன்றை வரதராஜருக்கு சமர்ப்பித்தார் எனும் தகவல் உண்டு.