Published:Updated:

நல்லன எல்லாம் அருளும் நரசிம்மர் தரிசனம்!

ஶ்ரீநரசிம்மர் தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீநரசிம்மர் தரிசனம் ( ஓவியர் ம.செ )

பி.சந்திரமெளலி ஓவியம்: ஓவியர் ம.செ.

நல்லன எல்லாம் அருளும் நரசிம்மர் தரிசனம்!

பி.சந்திரமெளலி ஓவியம்: ஓவியர் ம.செ.

Published:Updated:
ஶ்ரீநரசிம்மர் தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீநரசிம்மர் தரிசனம் ( ஓவியர் ம.செ )

ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கியெங்கும்
நாடிநாடி நரசிங்காயென்று
வாடிவாடும் இவ்வாழ் நுதலே

- நம்மாழ்வார்

ஶ்ரீநரசிம்மர்
ஶ்ரீநரசிம்மர்

ப்போதெல்லாம் அதர்மம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் நான் அவதரித்து, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அதர்மத்தை அழிப் பேன் என்கிறார் பகவான் கிருஷ்ணர். அப்படி துஷ்ட நிக்ரஹத்துக் காகவும் பக்தபரிபாலனத்துக்காகவும் நிகழ்ந்ததே நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனுக்காக தூணைப் பிளந்து தோன்றியது நரசிம்மம்!

நம் துன்பம் தீர்க்க நாம் அழைத்ததும் ஓடோடி வந்துவிடும் தெய்வம் நரசிம்ம மூர்த்தி. அழைத்ததும் வருவதென்றால் அவர் அருகில் இருக்க வேண்டுமே என்று அடியவர்கள் உள்ளத்தில் கேள்வி எழலாம். அவர் இல்லாத இடம்தான் ஏது?

கம்பர் சும்மாவா சொன்னார்... ‘சாணிலும் உளன் அணுவைச் சதகூறிட்ட கோணிலும் உளன்...’ என்று.

இறை, தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும். இதை உணர்த்துவதுதானே பிரகலாத சரித்திரம்!

ருவிலேயே திருவானவன் பக்த பிரகலாதன். அசுர வித்துதான் என்றாலும், ஆண்டவனின் அருள் பெற்ற சிசுவாயிற்றே! நாரத உபதேசத்தால் நலம்பெற்ற அந்தச் சிறுவனின் மனம் முழுக்க நாராயண சிந்தையே நிறைந்திருந்தது. அவன் சித்தம் எப்போதும் எட்டெழுத்து மந்திரத்திலேயே லயித்திருந்தது.

ஆனால், அவன் தந்தை இரண்யகசிபுவின் அசுரக் குணமோ மகனின் நிலைப்பாட்டை ஏற்க இயலாமல் தவித்தது. அதன் பொருட்டு மகனையே கொல்லவும் துணிந்தது. பல இன்னல்களை விளைவித்தான் இரண்யகசிபு. பகவான் அருளால் அனைத்திலும் இருந்து மீண்டெழுந்தான் பிரகலாதன். காரணம், அவனுடைய நாராயண பக்தி மகத்துவமானது.

‘ஆயவன் தனக்கு அரு மகன், அறிஞரின் அறிஞன், தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்’ என்று பிரகலாதனைச் சிறப்பிக்கிறார் கம்பர். `வேதத்தைவிடவும் தூய்மையானவன் பிரகலாதன்’ என்கிறார். அந்த பாலகனின் வாக்கை மெய்ப்பிக்க பகவான் நரசிம்மமாக அவதரிக்கவேண்டியிருந்தது. விளைவு... பிரகலாதனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கும் விமோசனம் கிடைத்தது. இரண்யகசிபு வதம் செய்யப்பட்டான்.

அசுரன் இரண்யகசிபுவின் அழிவைக் கண்ட தேவர்கள் ஆனந்தம் அடைந்தனர்; வானவீதியில் கூடி நின்று, ஸ்வாமியின் மீது பூமாரி பொழிந்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க, கந்தர்வர்களும் கின்னரர் களும் நரசிம்மரைப் போற்றித் துதித்தார்கள். ஆனாலும், ஸ்வாமியின் சினம் தணிந்தபாடில்லை. திருமகளே அவரை நெருங்குவதற்கு பயந்து விலகி நின்றாளாம்!

தேவதேவனின் கோபத்தை பிரகலாதனால் மட்டுமே தணிக்கமுடியும் என்றுணர்ந்தார் பிரம்மதேவன். அருகில் நின்றிருந்த அந்தப் பாலகனிடம், ``பிரகலாதா! மிகவும் கோபத்தில் இருக்கும் பகவானை, நீயே அருகில் சென்று சமாதானம் செய்’’ என்று பணித்தார்.

``அப்படியே ஆகட்டும்’’ என்ற பிரகலாதன், மெள்ள ஶ்ரீநரசிம்ம மூர்த்தியின் அருகில் சென்று வணங்கினான்; நெடுஞ்சாண் கிடையாக விழுந்து அவர் பாதங்களைப் பணிந்தான். அன்புடன் அவனைத் தூக்கி நிறுத்திய ஶ்ரீநரசிம்மர், தம் திருக் கரங்களால் அவன் சிரம் தொட்டு ஆசீர்வதித்தார். எவ்வளவு பெரும் பாக்கியம் இது!

நம்மாழ்வார், ‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்று சிறப்பிக்கிறார். அசுரனை வதைத்த ஆக்ரோஷம் அதிகம் இருந்தாலும், பக்த பிரகலா தனைப் பரிவுடன் அனுக்கிரஹித்தாராம் ஶ்ரீநரசிம்மமூர்த்தி.

அது எப்படி? சீற்றமும் கருணையும் ஒரே நேரத்தில் எழ முடியுமா என்ன?! கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். சரிதான்! ஆனாலும்... கோபம் - குணம் இரண்டு குணங்களும் ஒரே நேரத்தில் ஏற்படுவது சாத்தியம் இல்லையே?!

இதே கேள்வியை ஒருமுறை ஶ்ரீராமாநுஜரின் சீடர்கள் அவரிடம் கேட்டார்களாம். ஶ்ரீராமாநுஜரும் மிக அற்புதமாக பதில் தந்தார்.

‘`வனத்தில் இருக்கும் சிங்கத்துக்கும் யானைக்கும் எப்போதுமே பகைதான். ஆக்ரோஷத்துடன் யானையைத் துரத்தும் அதேவேளையில், தன் குட்டிக்குப் பால் புகட்டியபடியே துரத்திச் செல்லுமாம் சிங்கம். ஆக, ஒரே தருணத்தில் யானையிடம் பகை, தன் குட்டியிடம் பரிவு. சாதாரண சிங்கத்துக்கே இரண்டு குணங்களும் ஒருங்கே எழும் போது, நரசிம்மத்துக்கு எழாதா?’’ என்று பதில் தந்தார் ஶ்ரீராமாநுஜர். என்னவொரு அற்புதமான விளக்கம்!

ஆசி மட்டுமல்ல; நரசிம்மரிடம் இருந்து வரமும் கிடைத்தது பக்த பிரகலாதனுக்கு! தன்னை அனுக்கிரஹித்த நரசிம்ம ஸ்வாமியை 42 ஸ்லோகங்களால் போற்றிப் பாடினான் பிரகலாதன் என்கிறது பாகவதம். அதனால் மகிழ்ந்த பகவான், ‘ஏதேனும் வரம் கேள், தருகிறேன்’ என்றார். பக்த பிரகலாதனோ, ‘வரம் கேட்கும் ஆசையே இல்லாமல் போகும் வரம் வேண்டும்’ எனக் கேட்க நினைத்தானாம். ஆனாலும், தன்னை அகங்காரம் கொண்டவனாக ஸ்வாமி நினைத்துக்கொள்ளக்கூடாதே என்று கருதியவன், ஒரேயரு வரம் கேட்டான். ‘என் தந்தைக்கு நற்கதி அளியுங்கள்’ என வேண்டினான்.

அவனை அப்படியே தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்ட நரசிம்மர், ``பிரகலாதா! உன் தந்தை நற்கதி பெற, என் வரம் தேவை இல்லை; உன்னை மகனாகப் பெற்ற பாக்கியம் ஒன்றே போதும் அவனுக்கு. மகா பக்தனான நீ இந்த வம்சத்தில் பிறந்ததாலேயே, 21 தலை முறையினருக்கு நற்கதி கிடைக்கும். மேலும், உனது வம்சத்தில் இனி பிறக்கும் யாரையும் நான் கொல்லப் போவது இல்லை!’’ என்று அருள் புரிந்தார்.

பக்த பிரகலாதனுக்கு மட்டுமா... `நற்றுணையாகும் நாராயணா எனும் நாமம்’ என்று தம் திருவடிகளில் சரண்புகும் அன்பர்கள் யாவருக்கும் நரசிம்மரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும். ஆக நாமும் நாள்தோறும் நரசிம்மரை வழிபட்டு நலம்பெறுவோம்.

அருள் நிறை சுவாதி!

ரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது சுவாதி நட்சத்திரத்தில். நட்சத்திரக் கூட்டங்களில் மிகவும் ஒளிபொருந்தியது, சுவாதி நட்சத்திரம். ராகு பகவான் இந்த நட்சத்திரத்தின் அதிபதி. அற்புதமான இந்த நட்சத்திர திருநாளில் பிரதோஷ வேளையில்தான் நரசிம்ம மூர்த்தி அவதரித்தார். சுவாதி நட்சத்திரத்தின் பெருமைகளில் ஒன்றாக நரசிம்ம ஜயந்தி நிலைக்கிறது.

ஒவ்வொரு சுவாதியும் நரசிம்மருக்கு விசேஷம். அன்று நரசிம்மர் சந்நிதிகளில் சுவாதி அன்று விசேஷ பூஜைகள் நடைபெறும். சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்ம மூர்த்திக்கு துளசி மாலை சாத்தி, பானக நிவேதனம் செய்ய, சகல சங்கடங்களும் விலகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக நரசிம்ம ஜயந்தியுடன் வரும் வைகாசி சுவாதி, அதீத விசேஷம் வாய்ந்தது. இந்த நாளில் நரசிம்மரை வழிபட, சகல நன்மைகளும் வந்து சேரும்.

நல்லன எல்லாம் அருளும் நரசிம்மர் தரிசனம்!

நரசிம்மரை எப்படி வழிபடலாம்?

நரசிம்ம ஜயந்தி அன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, நரசிம்மர் படம் அல்லது விஷ்ணுவின் படம் இருந்தால் அதற்கு மலர்களால் அலங்கரித்து, சந்தன - குங்குமத் திலகங்கள் இட்டு வணங்க வேண்டும்.தொடர்ந்து நாம ஜபம் செய்ய வேண்டும்.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். துளசித் தீர்த்தம் மற்றும் சுவாமிக்குப் படைத்த பழங்களை உண்ணலாம்.

மீண்டும் மாலை பிரதோஷ காலத்துக்கு முன்பாக மீண்டும் நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும். பிரதோஷ வேளையில் பூஜை செய்வது சிறப்பு. நரசிம்ம மூர்த்தியைத் தொழு வதற்குப் பல்வேறு ஸ்தோத்திர மாலைகள், கராவலம்பம், அஷ்டோத்திரங்கள் என நிறைய உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றைச் சொல்லி துளசி மற்றும் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

நரசிம்மர் பானகப் பிரியர். எனவே, வீட்டில் எளிமையாக பானகம், நீர்மோர், பருப்பு வடை, சர்க்கரைப் பொங்கல், பாயசம் ஆகியவற்றில் இயன்ற நிவேதனங்களைச் செய்யலாம்.

புண்ணியம்கோடி அருளும் ஶ்ரீநரசிம்ம ஜயந்தி திருநாளில், `ஶ்ரீநரசிம்ம ப்ரபத்தி’ எனப் படும் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால், சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:

ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:

வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:

ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:

இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:

யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:

ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:

தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:

ஜயந்தி தினம் மட்டுமன்றி தினமும் நரசிம்மரை தியானித்து வழிபட்டால் மனபயம், சத்ரு பயம், தீவினைப் பாதிப்புகள் நீங்கும். நரசிம்மரின் மடியிலேயே அன்னை மகாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆக, செல்வம் நம்மிடம் நாடிவந்து சேரும். நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

நல்லன எல்லாம் அருளும் நரசிம்மர் தரிசனம்!

திருமார்பில் திருமகள்!

நாமக்கல்- கம்பீரமாக அமைந்திருக்கும் கோட்டை- கொத்தளங்கள் வரலாற்றுச் சிறப்பையும், திருக்கோயில்கள் ஆன்மிக மகிமையையும் பறைசாற்றும் அற்புதத் திருத்தலம் இது. இங்குள்ள நரசிம்மர் ஆலயம் பிரசித்திபெற்றது.

லட்சுமணனுக்காக சஞ்சீவி மூலிகை எடுக்கச் சென்ற அனுமன், வழியில் கண்டகி நதிதீரத்தில் அற்புதமான சாளக்கிராம கல் ஒன்றைக் கண்டு, எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டார். அவர் திரும்பி வரும் வழியில், பூமியில் கமலாலயக் குளத்தைக் கண்டு தரையிறங்கி, சற்றே களைப்பாறினார். அது, லட்சுமிதேவியின் தபோவனமாக இருந்தது.

தாயாரை தரிசித்த அனுமன் அவரிடம் தவத்துக்கான காரணத்தைக் கேட்டார். திருமாலை நரசிம்ம வடிவில் தரிசிக்க வேண்டி தவமிருப்ப தாகச் சொன்னார் அன்னை. பிறகு, சாளக்கிராமத்தை அவரிடம் தந்த அனுமன், தான் நீராடிவிட்டு வந்து பெற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

‘குறிப்பிட்ட நேரத்துக்குள் வராவிட்டால் சாளக்கிராமத்தை தரையில் வைத்துவிடுவேன்’ எனும் நிபந்தனையுடன் அதைப் பெற்றுக் கொண்டார் லட்சுமிதேவி. அனுமன் வர தாமதமா கவே, லட்சுமிதேவி சாளக்கிராமத்தை தரையில் வைத்ததாகவும், அது பெரும் மலையாக வளர, அதன் மீது நரசிம்மர் தோன்றி திருமகளுக்கு அருளியதாகவும் ஒரு வரலாறு சொல்வர்.

நாமக்கல் கோட்டையில் பிரமாண்ட திருவுருவத் துடனும், குளக் கரையில் சிறிய வடிவினராகவும் அருள்புரிகிறார் அனுமன். இவர், தனக்கு அருள் வேண்டி எதிர்நோக்கி இருப்பது, யோக நரசிம்மரின் திருக்கோயிலை. மலையைக் குடைந்து நரசிம்மர் சந்நிதியை அமைத்துள்ளனர். திருமகள் இவர் திருமார்பில் உறைந்திருப்பது விசேஷ அம்சம்! குடைவரை மூர்த்தி என்பதால், ஸ்வாமிக்கு அபிஷேகம் கிடையாது; உற்ஸவருக்கே திருமஞ்சனம் நடைபெறுகிறது.

நினைத்தது நிறைவேறவும்; தொழில் சிறக்கவும், உயர்பதவி வாய்க்கவும், எதிர்காலம் வளமாகவும் சனிக்கிழமை களில் நாமக்கல் அனுமனையும் நரசிம்மரையும் நாமகிரி தாயாரையும் வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள்!

நல்லன எல்லாம் அருளும் நரசிம்மர் தரிசனம்!

யானை மலை நரசிம்மர்!

துரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஒத்தக்கடை. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது, யானை மலை. இங்கே யோக நரசிம்மராக அருள்கிறார் ஸ்வாமி.

ரோமச முனிவர் சிறந்த தவசீலர்; பெரும் ஞானி. ஆனாலும் பிள்ளை இல்லாத குறை அவரை வாட்டியது. பிள்ளை வரம் கேட்டு இறைவனை வழிபட தீர்மானித்தார். எங்கு சென்றால் மிக எளிதில் இறையருளைப் பெற முடியும் என்று யோசித்தவர், மிக உன்னதமான ஒரு தலத்தை அடைந்தார். அதுதான் யானைமலை. அங்கே சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகம் தொடங்கினார்; மனமுருக வழிபட்டார். அவருக்கு இறையருள் கனிந்தது.

ஒன்று கிடைக்கும் வரை மனம் அதைப் பற்றிக் கொண்டிருக்கும். கிடைத்துவிட்டால் வேறொன்றை விரும்பத் தொடங்கிவிடும். முனிவ ருக்கும் வேறோரு விருப்பம் முளைத்தது. தன் மனதுக்கினிய பரந்தாமனை நரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விரும்பினார். அந்த ஆசையும் நிறைவேறியது; ஆக்ரோஷமாக காட்சி தந்தது நரசிம்மம்!

ஆண்டவனின் ஆக்ரோஷத்தை இந்தப் பூமி தாங்குமா? அல்லாடிப் போனார்கள் இந்திராதி தேவர்கள். அவர்களின் குறைதீர்க்க ஓடோடி வந்தாள் மகாலட்சுமி. அவள் முகம் கண்டதும் சினம் தணிந்தது சுவாமிக்கு. திருமகளை மார்பில் இருத்தியபடி, செல்வ சுகபோகங்களை வாரி வழங்கும் வள்ளலாய், யோக நரசிம்மராய் யானை மலையில் கோயில் கொண்டார்!

இங்கே, கருவறையில் சுமார் 6 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் யோக நரசிம்மர். பிரதோஷ நேரத்தில் இங்கு வந்து பானக நைவேத்தியம் செய்து இவரை வழிபட, குழந்தைகளின் கல்வி சிறக்கும், வியாபாரம் விருத்தியாகும், சத்ரு தொல்லைகளும் மரண பயமும் நீங்கும், அனைத்திலும் வெற்றி கிட்டும் என்கிறார்கள். தாயாரின் திருநாமம் நரசிங்கவல்லித் தாயார். இந்தத் தாயாரை வழிபட, திருமணத் தடை நீங்கும்.

நல்லன எல்லாம் அருளும் நரசிம்மர் தரிசனம்!

இன்னும் சில தலங்கள்...

திண்டிவனம் - மரக்காணம் வழியில், சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள தலம் `முன்னூர்’ எனப்படும் `முந்நூற்று மங்கலம்’. இங்குள்ள அருளாள பெருமாள் ஆலயத்தில் அருளும் யோக நரசிம்மர், கோயில் திருப்பணியின்போது, ஒரு சுவாதி நட்சத்திர நாளில் வெளிப்பட்டவர். இவர், கோரைப் பற்களின்றி குழந்தை வடிவமாகத் திருக்காட்சி தருகிறார். இவரின் சந்நிதியில் சுவாதி நட்சத்திர நாள்களில் சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு யோக நரசிம்மரை வழிபட்டு, ஹோமத்தில் வைத்த ரக்ஷையை கையில் அணிந்துகொண்டால், கடன் பிரச்னைகள் விரைவில் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும்.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்திலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சோளிங்கர். ஒரு கடிகைப் பொழுது அதாவது சுமார் அரை மணி நேரம் (ஒரு கடிகை - 24 நிமிடம்) தங்கியிருந்தாலே மோட்சம் தரும் அற்புதத் தலம் இது. எனவே, திருக்கடிகை என்று திருப்பெயர்! சப்தரிஷிகள் தவமிருந்து அருள்பெற்ற தலம் இது. இங்கே ஸ்வாமி,வருடத்தில் 11 மாதம் யோகத்தில் ஆழ்ந்திருப்பாராம். அவர் கண் விழித்திருக்கும் கார்த்திகை மாதத்தில்... ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்வாமியை வழிபடுவது விசேஷம்!

ந்தவாசியிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இஞ்சிமேடு ஶ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம். தாயாரின் திருநாமம் ஶ்ரீபெருந்தேவி தாயார். இந்தத் தலத்தின் தனிப்பெரும் சிறப்பு, ஶ்ரீகல்யாண லட்சுமி நரசிம்மர். இவரின் சந்நிதியில், தன் தந்தை இரண்யனுக்கு நற்கதி அளிக்க வேண்டும் என்று பிரகலாதன் நரசிம்ம ரைத் தொழுதவாறு எழுந்தருளியிருப்பது அரிய தரிசனமாகும்.

ஶ்ரீகல்யாண லட்சுமி நரசிம்மருக்கு ஒவ்வொரு சுவாதி நட்சத்திரத் தன்றும் ஶ்ரீசுவாதி மகா ஹோமம் செய்யப்படுகிறது. அன்றைய தினத்தில், திருமஞ்சனமும் விசேஷ ஆராதனைகளும் நடைபெறுகின்றன. அன்று கல்யாண லட்சுமி நரசிம்மர் வெள்ளிக் கவசத்துடன் அருள்பாலிப்பார். இந்த நாளில் இவரை வழிபட்டால், இன்னல்கள் யாவும் நீங்கும்; வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism