ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

தாரக மந்திரம்

தாரக மந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
தாரக மந்திரம்

துஷ்யந்த் ஸ்ரீதர்

நம் பாரத தேசத்தின் பொக்கிஷங்கள் இதிகாசங்கள். இதிகாசங் களின் சிறப்பு, அவை நிகழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை என்பதுதான். ராமபிரான் வாழ்ந்த காலத்திலேயே வால்மிகி முனிவரால் எழுதப்பட்டது ராமாயணம். கிருஷ்ணபகவான் வாழ்ந்த காலத்திலேயே வியாசரால் எழுதப்பட்டது மகாபாரதம்.

தாரக மந்திரம்
தாரக மந்திரம்


ராமனும் கிருஷ்ணனும் அவதாரங்கள். இந்த உலகில் ஜீவாத்மாக்களாகிய நாமும் பிறக்கிறோம். பரமாத்மாவாகிய அந்த நாராயணனும் பிறக்கிறான். அவன் பிறப்பது அவதாரம். ‘அவதாரம்’ என்றால் மேலிருந்து கீழ்நோக்கி வருவது. ‘பவதாரம்’ என்றால் கீழிலிருந்து மேல் நோக்கிச் செல்வது.

ஜீவாத்மாக்கள் சம்சாரம் என்னும் சாகரத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை அதிலிருந்து மீட்டு மோட்ச கதியை அடையும் வரைக்கும் பகவான் தன் முயற்சியைக் கைவிடமாட்டார் என்கின்றன ஞானநூல்கள். அப்படிப்பட்ட பகவத் குணத்தைத்தான் வேதம், ‘அஜாயமானோ பகுதாவிஜாயதே’ என்று போற்றுகிறது. தமிழில் ஆழ்வார் மிக அழகாக அதை, ‘பிறப்பில் பல்பிறப்புப் பெருமான்’ என்று போற்றுகிறார்.

பரமாத்மாவுக்குப் பிறப்பு கிடையாது. பிறப்பே இல்லாதவன் பல்பிறப்பை ஏற்கிறான். அவை அனைத்தும் ஜீவாத்மாக்களாகிய நம்மைக் கரையேற்றுவதற்காகவே. ஒன்றல்ல இரண்டல்ல பல்வேறு அவதாரங்களை பகவான் நிகழ்த்துகிறார். பகவான் விஷ்ணு என்னென்ன அவதாரங்கள் செய்தார்... ஏன் செய்தார் என்பதை தேசிகர் அழகான ஸ்லோகம் ஒன்றின் மூலம் சொல்லுவார்.

`இச்சா, மீந ; விஹார, கச்சப ; மஹா, போத்ரிந் ; யத்ருச்சா , ஹரே...’ எனத் தொடங்கும் ஸ்லோகம் அது.

பகவான் தானே சங்கல்பித்துக்கொண்டு புரிந்தது மத்ஸ்யாவதாரம். பிறகு தேவர்களும் அசுரர்களும் மந்திரமலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்து விளையாட ஆமையாய் அவதரித்து கூர்மாவதாரம். உலகம் முழுவதும் சூழ்ந்து நிற்குமாறு பெரிய வராகமாய்த் தோன்றியருளியது வராக அவதாரம்.

யாரும் எதிர்பாராத வேளையில், சட்டென்று தூணைப் பிளந்துகொண்டு தோன்றியது நரசிங்க அவதாரம். மூவுலகமும் அளந்த உலகளந்த பெருமாளாய்த் தோன்ற எடுத்த அவதாரம் வாமன அவதாரம்.

ராமபிரான்
ராமபிரான்

சத்திரிய குலமே இல்லாமல் போக கோபமூர்த்தியாகத் தோன்றியது பரசுராம அவதாரம். கலப்பையைக் கையில் கொண்டு பல லீலைகள் செய்தது பலராம அவதாரம். ஆயர் குலக் கொழுந் தாகத் தோன்றி அற்புத லீலைகள் புரிந்தது கிருஷ்ண அவதாரம். தருமத்தைக் காக்கக் கலியுகத்தில் வெண்குதிரையில் ஏறி வர இருப்பது கல்கி அவதாரம்.

இப்படி ஒவ்வோர் அவதாரத்தின் குணத்தையும் சொல்லும் தேசிகர் அருளிய அந்த சுலோகம் ராமாவதாரம் குறித்துச் சொல் லும்போது, அதை ‘ராம; கருணா’ என்கிறது.

‘ராம’ என்றாலும் ‘கருணை’ என்றாலும் வேறு வேறில்லை. கருணையே வடிவானவன் ராமபிரான். அந்த `ராம’ என்கிற இரண்டு எழுத்து மந்திரமே நமக்கு மோட்சத்தை அருள்வது. அதைத்தான் கம்பர் தன் ராமாயணக் காப்பியத்தில், `இப்பிறப்பில் ராம என்னும் இரண்டெழுத்தை உச்சரித்தாலே நன்மை, செல்வம் பெருகும். தின்மையும் பாவமும் சிதைந்து தேயும். பிறப்பும் மரணமும் இல்லாமல் போகும்’ என்று அழகாகப் பாடுகிறார்.

ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் நாரத மகரிஷி. ஒரு நாள் ஒரு திருடனைச் சந்தித்தார். அவனுக்குப் பாவத்தின் தன்மையை எடுத்துரைத்தார்.

தொடக்கத்தில் அவர் சொல்லும் விளக்கங்களை எல்லாம் மறுத்த திருடன், அதன் உண்மைத் தன்மையை ஆராயத் தொடங்கினான். அவனுக்கு ஞானம் பிறந்தது. தனக்கு உபதேசம் செய்யுமாறு நாரதரிடம் வேண்டினான்.

வழிப்பறித் திருடனுக்கு உடனே என்ன மந்திர உபதேசம் செய்ய முடியும்? அந்தக் கானகத்தில் எங்கு நோக்கினாலும் மரங்களாக இருந்தன. ஒரு மரத்தைக் காட்டி ``இது என்ன?’’ என்று கேட்டார் நாரதர்.

அதற்கு அந்தத் திருடன், `‘மரா’’ என்றான்.

``அதுதான் மந்திரம். அதையே திரும்பத் திரும்பச் சொல்’’ என்று உபதேசம் செய்துவிட்டுச் சென்றார் நாரதர்.

திருடன் அப்படியே அமர்ந்துவிட்டான். ‘மரா... மரா... மரா...’ என்று திரும்பத் திரும்பச் சொன்னான். அது `ராம... ராம... ராம...’ என்று ஒலிக்கத் தொடங்கியது. மந்திர உச்சாடனத்தில் அவர் உடல் மரத்துப் போனது. சுற்றி வல்மீகம் தோன்றியது. ‘வல்மீகம்’ என்றால் புற்று.

ஒருநாள் பெருமழை பொழிந்தது. வல்மீகம் கரைந்தது. அதிலிருந்து மாமுனியாக வெளியே வந்தார். இப்போது அவர் திருடன் இல்லை. வல்மீகத்திலிருந்து வந்ததால் வால்மீகி என்னும் மாமுனி ஆனார். திருடனாக அமர்ந்து வால்மீகியாக மாறிய அற்புதத்தை நிகழ்த்தியது ராம நாமம்!

வால்மீகி முனிவருக்கு ஒரு நாள் சந்தேகம் ஒன்று வந்தது. அதை யாரிடம் கேட்பது என்ற சிந்தனையில் அவர் இருந்தபோது, அங்கு நாரத மகரிஷி வந்தார். திரிலோக சஞ்சாரியான நாரதரிடம் கேட்க வேண்டிய கேள்வியே அது என்று முடிவு செய்த வால்மீகி நாரதரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

``இந்த உலகத்தில் குணம், வீர்யம், தர்மத்தைக் கடைப்பிடித்தல், சத்தியத்தைக் கடைப்பிடித்தல், வித்தைகளில் தேர்ச்சி , கோபத்தை வெல்லுதல், கீர்த்தி, பொறாமைப் படாமல் இருத்தல், அழகே வடிவானவர், தேவர்களும் பயப்படும் கோபம் முதலிய 16 கல்யாண குணங்களையும் உடைய ஒருவர் தற்காலத்தில் வாழ்கிறாரா?’’ என்று கேட்டார்.

இதில் ஒரு சூட்சுமம் உண்டு. வால்மீகி கேட்கும்போது, `இத்தனை கல்யாணக் குணங்களையும் உடைய ஒருவன் நேற்று இருந்தார் என்றோ, நாளைப் பிறக்கப்போகிறான் என்றோ சொல்ல வேண்டாம். தற்காலத்தில் யாராவது இருக்கிறாரா?’ என்பதுதான் கேள்வி. ``மனிதர்களில் அப்படி ஒரு புனிதர் வாழ்கிறாரா” என்று வால்மீகி தன் கேள்வியை முன்வைத்தார்.

நாரதர், வால்மீகியின் அவதார நோக்கம் நிறைவேறப்போகும் வேளை வந்ததை அறிந்தார். கேள்விக்கான பதிலைச் சொல்லத் தொடங்கினார். பதில் சொல்லும் முன்பாக, தேனைச் சுவைத்தவர் போன்று நாக்கைச் சுழட்டி சப்புக்கொட்டிக்கொண்டே சொன்னாராம். காரணம், அவர் சொல்லப்போகிற நாமம் அப்படிப் பட்டது. சொல்லும்போதே நம் உடலையும் உள்ளத்தையும் பூரிப்படையச் செய்யும் தன்மை கொண்டது.

அதனால்தான் நாரதரும் அதை ருசித்தபடி, “இக்ஷ்வாகு வம்சத் தைச் சேர்ந்தவன். ராம என்னும் நாமத்தை உடையவன் ஒருவன் இருக்கிறான்” என்றாராம்.

ராம நாமம்தான் வால்மீகிக்கு ஞானத்தை அளித்தது. அந்த நாமம் உடைய மகாபுருஷன் ஒருவரே தன் காலத்தில் வாழ்கிறார் என்கிற செய்தியே அவருக்குச் சிலிர்ப்பூட்டியது.

அந்த மகாபுருஷனை தரிசனம் செய்யவேண்டும்; அவனின் சரிதத்தை இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்று விரும்பினார் வால்மீகி. அதற்காக ஒரு காவியம் படைக்கவேண்டும் என்று நினைத்தார்.

ராமாயணம் பிறந்தது!

- தொடரும்...

முருகன்
முருகன்

20 வகைப் பிரியர்கள்!

அபிஷேகப் பிரியன் - ஈசன்

அலங்காரப் பிரியன் - திருமால்

நாமாவளிப் பிரியன் - முருகன்

நைவேத்தியப் பிரியன் - கணபதி

நாதப் பிரியை - அம்பிகை

வேதப் பிரியை - சரஸ்வதி

நமஸ்காரப் பிரியர் - சூரியன்

திருவிளக்குப் பிரியை - திருமகள்

சரணகோஷப் பிரியன் - ஐயப்பன்

அன்னதானப் பிரியை - அன்னபூரணி

வெண்மைப் பிரியன் - சந்திரன்

பவழப் பிரியன் - செவ்வாய்

வெண்காந்தள் பிரியன் - புதன்

ஹம்ச வாகனப் பிரியன் - குரு

மொச்சைப் பிரியன் - சுக்கிரன்

இரும்புப் பிரியன் - சனி

கோமேதகப் பிரியன் - ராகு

கொள்ளுப் பிரியன் - கேது

ஹோமப் பிரியன் - அக்னி

நெல்லிப் பிரியன் - குபேரன்