Published:Updated:

சிவமயம்!

திருவாசகச் சித்தர் 
சிவ தாமோதரன் ஐயா
பிரீமியம் ஸ்டோரி
திருவாசகச் சித்தர் சிவ தாமோதரன் ஐயா

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

சிவமயம்!

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

Published:Updated:
திருவாசகச் சித்தர் 
சிவ தாமோதரன் ஐயா
பிரீமியம் ஸ்டோரி
திருவாசகச் சித்தர் சிவ தாமோதரன் ஐயா

வாசகர்களுக்கு வணக்கம். `சிவமயம்' தொடர் வெளியானதும்தான் எத்தனை கடிதங்கள், எத்தனை விதமான கேள்விகள்... அத்தனைபேரின் அன்புக்கும் அடியேனின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது தனித்திருக்க வேண்டிய காலம். பெருந்தொற்று நோய் பரவும் இந்த வேளையில், அமைதியாய் சிவத்தை வேண்டி கவனமாக இருப்போம்.

சிவமயம்!

நிச்சயம் நிலைமை மாறும். தொடர்ந்து வீட்டிலேயே இருந்து சிவத் தியானமும் திருமுறைப் பாராயணமும் செய்யுங்கள்; உங்கள் வேண்டுதல் யாவும் நிறைவேறும். அவை நிறைவேற அடியேனும் பிரார்த்திக்கிறேன். ஆரோக்கியமான, அன்பான உலகம் மலர எல்லோரும் சிவத்தை வணங்குவோம். நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு கேள்வியுமே அற்புதமானவை; சிந்திக்கத் தூண்டுபவை! அவற்றில் சிலவற்றுக்குப் பதில் அளிக்கிறேன்.

? சைவர்கள் பேதம் பார்க்கலாமா ஐயா..?

-மல்லிகா, போளூர்.

நிச்சயமாக பேதம் பார்க்கக்கூடாது. பார்ப்பது பாவமும்கூட!

`சைவ நெறி என்பது ஒரு திரு கூட்டம்' என்பர். அதில் பேதத்துக்கு இடமேது. நம்மில் பேதமே இல்லை என்பதற்குச் சாட்சி 63 நாயன்மார்கள். அவர்களை வைத்தும் பேதம் பார்க்கும் அவலம் நடக்கிறது. இது தவறு! சாக்கிய நாயனார் வேறு மதம்; எனினும் அவர் நமக்கு முக்கியமில்லையா? நரசிங்கமுனையரையரை சுந்தர மூர்த்தி நாயனார் பெயரை மாற்றியா ஏற்றுக்கொண்டார். 27 தேவாசிரியர்களில் திருவாலி அமுதனார், புருஷோத்தம நம்பி இருவரும் வைணவர்கள்.

அவர்களின் திருமுறைகளை ஒதுக்கி விட்டோமா என்ன! நம்முள் சாதி, மதம், இனம், படித்தவர், படிக்காதவர், செல்வந்தர், ஏழை... என்ற பேதங்களே இல்லை என்பதைத்தான் திருமுறைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. அப்பர் பெருமானை அடிதொழுது ஏற்றுக்கொண்டவர் அப்பூதி அடிகள். இங்கு பக்தியும் சேவையும்தான் உயர்வே தவிர, வேறு எதுவும் உயர்வானதில்லை என்கிறது சைவம்.

ஆனாலும் திறமை, குணம் என்ற அடிப்படையில் உலகம் பேதம் பார்க்கிறது. இவர் டாக்டர், இவர் கூலித் தொழிலாளி என்று திறமையின் அடிப்படையில் பிரிக்கிறது. இவர் நல்லவர், இவர் கோபக்காரர் என்றெல்லாம் குணத்தால் பிரிக்கிறது. இதையும் கூட தவறு என்கிறது சைவம். திறமை பயன்படாமல் போகலாம். குணமும் மாறக்கூடியது. ஆக, எந்த அடிப்படையிலும் பேதம் கூடவே கூடாது என்பதே சிவத்தின் விருப்பம்.

சிவமே மறையோனாக வந்துள்ளது. அரசனாக மதுரை யம்பதியை ஆட்சி செய்கிறது. நவரத்தினங்களும் வளையல்களும் விற்று இருக்கிறது. மண் சுமக்கும் தொழிலாளியாகவும் வந்துள்ளது. இப்படி எல்லாமுமாக சிவம் இருக்கும்போது, எதை ஒதுக்குவது எதை சேர்த்துக் கொள்வது... சொல்லுங்கள்! புல்லும் புழுவும் கூட சிவத்தின் அம்சம் எனும்போது மனிதர்களை ஒதுக்குவது தவறுதானே! அதைச் செய்ய வேண்டாம் அன்பர்களே.

சிவமயம்!

? ஆன்மா சிவபதம் அடைய எளிய வழி என்ன ஐயா!

-வேதநாயகம், சேலம்

இப்படி ஆன்மா விழித்துக் கொண்டு சிவத்தை நோக்கி வேண்டுவதே சிவபதம் அடைய முதல் வழி என்பேன். மும்மலங்களால் பாதிப்புற்று சிவத்தை அடைய முடியாமல் தவிக்கும் ஆன்மாக்கள் இறையருளால், ஈசன் விருப்பத்தால் அடியார் கூட்டத்தோடு இணைந்து இருப்பதே சிவபதம் அடைய எளிமையான முதல் வழி.

ஈசனே விரும்பாமல் ஈசனை அடைய முடியாது என்பது மட்டுமல்ல, `ஈசன் விரும்பினால் நீங்களும் ஈசத்துவத்தை அடைய முடியும்' என்றும் மாணிக்கவாசகர் கூறுகிறார். சுயநலமே இல்லாத அற்புதமான திருக்கூட்டத்தில் இணைந்து அவரவர்க்குத் தகுந்த மார்க்கத்தால் ஈசனை அடையலாம் என்கிறது சைவம்.

முதலில் பக்தி மார்க்கம். இதில் சரியை, கிரியை என்ற இருவிதங்களில் தொண்டு செய்து சுவாமியை அடையலாம். உடலால் உழவாரம் போன்ற தொண்டுகள் செய்வது சரியை. வழிபாடுகள், பாராயணம் போன்ற முறைகளால் ஈசனைத் துதிப்பது கிரியை.

அடுத்து யோக மார்க்கம். அட்டாங்க யோகம் எனப்படும் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், தாரணை, பிரத்தியாகாரம், தியானம், சமாதி ஆகிய நிலைகளால் இறைவனைக் கண்டு பரவெளி, பராபர வெளி, பரக்கிருத வெளி, பரம்பரவெளி, சுத்தவெளி, அகண்ட வெளி என பிரமாண்டங்களைக் கடந்து ஈசத்துவத்துக்குள் நுழைந்து, ஆனந்தத்தில் திளைப்பது யோக மார்க்கம்.

இன்னொன்று ஞான மார்க்கம். ஈசனின் அருளால் ஞான மார்க்கத்தைச் சார்ந்த சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் எனப்படும் சிவபதங்களை... சமம், தமம், விடல், சகித்தல், சமாதான சிறத்தை என்ற நிலைகளைக் கடந்து ஞான வழியால் ஈசனை அடைதல் ஞானமார்க்கம் ஆகும்.

இப்படி நம் ஞானியரும், சித்தர்களும், தவமுனிகளும் அவரவருக்கு உகந்த வகையில் எத்தனையோ வழியில் சிவத்தை அடைந்தனர். இதை எல்லாம் விளக்கிக் கூற 1000 பக்கங்கள் எழுதினாலும் போதாது.

நமக்கு எளிமையான வழி என்றால்... தொடர்ந்து சிவநாமம் ஜபித்தல், எவருக்கும் தொல்லை தராமல் வாழ்தல், எவ்வுயிரிலும் சிவத்தைக் கண்டு அன்பு செலுத்துதல் ஆகியவை போதும் சிவபதம் அடைய என்கின்றன திருமுறைகள். ‘அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார்!’ அன்பே சிவத்தை அடைய எளிய வழி.

? சிவத்தை வணங்கினால் செல்வம் கிடைக்குமா?

- பிரேமா, மதுரை.

செல்வமே சிவபெருமான்தானே தாயே. பூமியில் பிறந்த ஒரு சாதாரண வாணிபனிடம் உள்ள உண்மையான அன்பைக் கண்டு, தோழமைக் கொண்டு, எட்டு திசைகளில் வடதிசைக்கு அதிபதியாக்கி, அழகாபுரி என்கிற குபேர பட்டணத்தில் அவனை குபேரன் ஆக்கி சங்கநிதியும் பதுமநிதியும் தந்து அருளினார் நம் சிவம். சிவம் செல்வம் கொடுக்காது என்றால் வேறு எவரும் உள்ளனரோ சொல்லுங்கள். திருமாலே சிவச் சொத்தைக் காக்கும் மூலப்பண்டாரம் என்று சைவ நூல்கள் கூறுகின்றன.

திருவீழிமிழலையில் ஞானசம்பந்தருக்கும் அப்பருக்கும் படிக்காசு அளித்ததும், அரிசிற்கரைப்புத்தூரில் படிக்காசு வைத்ததும், சுந்தரருக்கு திருமுதுகுன்றத்தில் 12 ஆயிரம் பொற்காசுகள் அளித்ததும், புகலூரில் செங்கல்லை தங்கமாக மாற்றியதும், திருவிளையாடல் புராணத்தில் பாணபத்திரர்க்கு நிதி அளித்ததும், உலவா நெல்கோட்டை அமைத் ததும் ஆகிய அருள்சம்பவங்கள், சிவமே செல்வத்தின் அதிபதி என்றும் அவரே சகலமும் அளிக்க வல்லவர் என்பதையும் சொல்லவில்லையா.

செல்வத்தின் தேவதை என்று கருதப்படும் திருமகளும் தொழக் கூடியவர் நம் சிவம் அல்லவா. அழுத குழந்தைக்காகப் பாற் கடலையே வாசலுக்கு வரவைத்த நம் சிவம், அனைத்தையும் அளிக்கும். நிதியாளும் தெய்வங்களுக்கு நிதி கொடுத்தவர் ஈசன்.

கவலை வேண்டாம். உண்மையான அன்போடு உள்ளம் உருகிக் கேட்டுப் பாருங்கள். சிவம் அனைத்தும் கொடுக்கும். ஆகவே, இகத்திலும் பரத்திலும் சுகம் அளித்து சிவபதம் என்ற முக்தி அளிக்கும் ஒரே தெய்வம் சிவம் மட்டுமே. ஆகையால் சிவத்தை வணங்கினால் முக்தி மட்டுமே அன்றி, வேண்டுவன அனைத்துமே கிடைக்கும். இதில் எவ்வித ஐயமும் வேண்டியது இல்லை! சிவாயநம!

(பேசுவோம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism