Published:Updated:

சிவமயம் - 15

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

சிவமயம்

சிவமயம் - 15

சிவமயம்

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

வணக்கம். வாழிய நலம்!

ஆடி அமாவாசை எனும் புண்ணிய தினம் 28.7.22 அன்று வரவுள்ளது. பித்ருக்களை வழிபடும் நாள் அது. மேலும் ராமேஸ்வரம், திருப்பூவனம் போன்ற தீர்த்தத் தலங்களுக்கும் சதுரகிரி. திருக்கழுக்குன்றம் போன்ற மலைத்தலங்களுக்கும் சென்று ஈசனை தரிசிக்க வேண்டிய நன்னாளும்கூட.

ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை

ஈசனைப் பூசிக்காத நாள் எல்லாம் வெறும் நாளே என்கின்றன திருமுறைகள். எல்லா நாள்களிலும் முடியாவிட்டாலும் ஆடி அமாவாசை போன்ற சிறப்பு நாள்களிலாவது புனித யாத்திரை களும் தீர்த்தமாடலும் அவசியம் என்கின்றன ஞான நூல்கள். எனவே, ஆடி அமாவாசையில் ஈசனைத் தேடிச் சென்று வழிபட்டு வாருங்கள்!

"ஈசனிடம் வேண்டிக்கொண்ட வேண்டுதலை எத்தனை நாள்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்" என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது.

`ஏழையின் காணிக்கையை எழுபது ஆண்டானாலும் பொறுப்பார்' என்று ஒரு பழமொழி உண்டு. ஈசனிடம் வேண்டிக்கொண்டதை தாமதிக்காமல் செய்துவிட வேண்டும் என்ற பயமுறுத்தலும் நம்மிடம் உண்டு. நீங்கள் என்ன வேண்டிக்கொண்டீர்கள் என்பதைப் பொறுத்தே அதை எப்படி, எப்போது செலுத்தப் போகிறீர்கள் என்று தீர்மானிக்கலாம். நீங்கள் வேண்டிக்கொண்டது நடந்ததும் காணிக்கையாக பணம், பொருள், தலைமுடி, சில நேர்த்திக்கடன் என்றுதானே செலுத்துவீர்கள். அதில் எல்லாம் அந்தப் பரம்பொருளுக்கு விருப்பம் இல்லையாம். அது வேண்டுவது வேறு ஒன்றாம்!

எது உங்களிடம் இல்லையோ, எது உங்களால் முடியாதோ அதைத்தானே ஈசனிடம் வேண்டுவீர்கள். அது உங்களுக்குக் கிடைத்தவுடன், ஈசனிடம் எது இல்லையோ அதைத்தானே நீங்களும் தரவேண்டும். ஈசனிடம் இல்லாதது என்ன இருக்க முடியும்... ஒன்றே ஒன்றைத் தவிர!

ஆம், ஞானத்தின் வடிவான ஈசனிடம் இல்லாதது அஞ்ஞானம் ஒன்றே. அதுதான் நம்மிடம் மண்டிக் கிடக்கிறதே... அதை அவனிடம் ஒப்படைத்துவிடுங்கள். உங்களிடம் அவன் ஞானத்தை ஒப்படைப்பான். `தான்' எனும் அகந்தையை, `தானே எல்லாம்' என்ற அஞ்ஞானத்தை ஒப்படைப்பதில் ஏன் தாமதம். இன்றே இப்போதே அதை அவனிடம் காணிக்கையாகச் செலுத்திவிடுங்கள்.

அளவற்ற கருணை கொண்ட ஈசன், அதன் பிறகு எதற்கும் எப்போதும்... `வேண்டுதல் செய்ய வேண்டும்' என்ற நிலையை உங்களுக்குக் கொடுக்காமல் பார்த்துக்கொள்வான். இதையே மாணிக்க வாசகப் பெருவள்ளல் அற்புதமாக விவரிக்கிறார், தமது பாடலில்.

"தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;

சங்கரா ஆர் கொலோ சதுரர்?

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என்பால்?" - என்று பாடுகிறார். உங்களை எடுத்துக்கொண்டு தன்னையே ஈசன் கொடுத்துவிட்டால், பிறகு எது வந்து என்ன... எது போய்தான் என்ன! அந்த ஆனந்த நிலையில் எதுவுமே தேவை இருக்காதே.

அன்பு கொண்டு ஈசனைத் தஞ்சம் அடைபவருக்கு ஈசனே அகப்பட்டுவிடுவார் எனும்போது பொன்னும் பொருளும் எப்படி காணிக்கை ஆகும். ஒன்றை தந்து, ஒன்றைப் பெறும் வணிகம் பக்தியில் இருக்காதே. அறுநூறு கோடிப் பொன்னை வேண்டாம் என ஒதுக்கி, திருவோடுகூட ஏந்தாமல் திரிந்த பட்டினத்து அடிகள் எதைக் கொடுத்து எதைப் பெற்றார்!

`வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன் மாது சொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து

நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன் நானினிச் சென்று

ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே'

அன்பினால் தொண்டு செய்து ஈசனையே தேடி வரச் செய்த அருளாளர்களின் திருக்கதைகள் சொல்வதெல்லாம் எதிர்ப்பார்ப்பு இன்மையைத்தானே! `அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன்' என்று ஆண்டவனிடம் பேரம் வேண்டாம். ஒருவேளை அன்பால் ஏதேனும் வேண்டிக்கொண்டாலும் அதை இயன்றவரையிலும் சீக்கிரம் செய்துவிடுங்கள்.

சிவபூஜை
சிவபூஜை

ஈசனிடம் பக்திகொண்டு `அவர் இருப்பது உண்மை' என்று நம்புவதே அவருக்குச் செய்யப் படும் உயர்ந்தபட்ச காணிக்கைதான்.

ஒருவன் சிவபூஜையில் சிறந்தவன். நாள்தோறும் ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகே மற்ற வேலைகளைக் கவனிப்பான். கடுமையான வறுமையிலும் சிவபூஜையை அவன் நிறுத்தவே இல்லை. ஒருமுறை அவனுக்கே உணவு கிடைக்காத நிலை வந்தது.

`இவ்வளவு நாள் சிவபூஜை செய்தோமே, அதையெல்லாம் ஈசன் கண்டுகொள்ளவே இல்லையே... அதற்கான பலன் எதுவுமே எனக்குக் கிடைக்கவே இல்லையே! ஒருவேளை சிவம் என்று ஒன்று இல்லவே இல்லையோ' என்று புலம்பினான்.

இதை அவன் தன் நண்பனிடம் கூற, `சிவனைக் கும்பிட்டால் இப்படித்தான் கஷ்டம் வரும். எனவே இன்றிலிருந்து இந்தத் தெய்வத்தைக் கும்பிடு' என்று வேறொரு தெய்வத்தைச் சொன் னான். சிவபூஜை செய்தவனும் சிவலிங்கத்தை எடுத்து பரண் மீது போட்டுவிட்டு, வேறு ஒரு தெய்வத்தின் சிலையை வைத்து அதற்கு பூஜை செய்யத் தொடங்கினான்.

அப்போது தூப வாசனையும் தீப ஒளியும் பரணில் இருந்த சிவத்தின் மீதும் பட்டது. உடனே அவன், `அடடா! இந்தத் தெய்வத்துக்கு நாம் செய்யும் பூஜைகள் சிவலிங்கத்துக்குப் போய்ச் சேருகிறதே' என்று எண்ணி, பரணில் இருந்த சிவலிங்கத்தை எடுத்து துணியால் கட்டி உள்ளே தள்ளி வைத்துவிட்டான். திரும்பினால், சாட்சாத் சதாசிவமாகிய ஈசன் அவன் எதிரே காட்சி தந்து அருள் செய்தார்.

சிவத்தைக் கண்டு அதிர்ந்துபோய் ஆனந்த மிகுதியால் அழுதும் தொழுதும் வணங்கிய அவன், ``ஸ்வாமி நான் ஆராதித்தபோதெல்லாம் வராத நீங்கள், இப்போது மூட்டை கட்டி தள்ளி வைத்ததும் வந்துவிட்டீர்களே' என்றான்.

சிவம் சிரித்துக்கொண்டே ``நீ பூஜித்த போதெல்லாம்... நான் இருக்கிறேனா, இந்தப் பூஜைக்கு பிரதிபலனாக என்ன தருவேன்... என்றெல்லாம் யோசித்துக்கொண்டே இருந்தாய். இன்றுதான் நான் இருப்பது நிஜம் என்று எண்ணி, எனக்குப் பூஜை நடந்துவிடக்கூடாது என்று பதறி, என்னைத் தள்ளிவைத்தாய். எப்போது நான் இருப்பதை முழுமையாக நம்பினாயோ, அப்போது உன்னைக் காண வருவதும் முறைதானே!'' என்றாராம்.

பிறகு என்ன... ஞானம் வந்த பிறகு அவனுக்கு சிவத்திடம் என்ன வேண்டுதல் இருக்க முடியும் சொல்லுங்கள்! நாமும் வேண்டுதல் வேண்டாமை இல்லாத நிலையை அடையவே விரும்ப வேண்டும். அந்த ஞானம் வந்துவிட்டால் அதுவே சிவகதி! நமக்கு அறிவாய் விளங்கும் பேரறிவை, பேராற்றலை நமது அறிவால் உணர்ந்து தெளிவது ஞானம். அதாவது அனுபவத்தால் உணர்வது ஞானம்.

ஞானத்தின் விளைவு முக்தி. ஞானமே வேண்டுதல் என்றால், அஞ்ஞானத்தைக் கொடுத்துவிடுவதே நல்ல காணிக்கை. அதை இன்றே கொடுத்துவிடுங்கள்; ஆனந்தமயமாக வாழுங்கள்!

சிவாயநம!

உலகெங்கும் சிவம்!

உலகெங்கும் சிவம்
உலகெங்கும் சிவம்
IHOR PUKHNATYY


சிவபெருமான் வெளிநாடுகளில் பல்வேறு பெயர்களில் வணங்கப்படுகிறார். நேபாளம் - காட்மாண்டுவில் பசுபதி நாதராக வழிபடப் படுகிறார்.

‘பாலி’ தீவில் புத்தரின் சகோதரராக அழைக்கப்படுகிறார். லாவோசில் விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு முன், சிவபெருமானை வழிபடுகிறார்கள்.

ஜப்பானில் ஆயின் எனும் நகரத்தில் சிவ லிங்கத்துக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. திபெத்தில் ஈசனின் பழம்பெரும் ஆலயம் உள்ளது. மங்கோலியர்கள் சிவபெருமானை மிகவும் பக்தி சிரத்தையுடன் வழிபடுகிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் கங்கை நீரை அமிர்தமாகக் கருதுகிறார்கள்.

மேற்கு ஆசிய நாடுகளின் சில பகுதிகளில் அதிகளவில் கிடைத்த சிவலிங்கங்கள், ‘சங்க் ஏ அசபத்’ என்ற திருநாமத்துடன் பூஜிக்கப் படுகின்றன.

கம்போடியா நாட்டில் பல நகரங்கள் சிவ பெருமானின் நாமங்களுடன் அழைக்கப் படுகின்றன. ஜாவாவில் குஞ்ரகுஞ்ச் பகுதியில் சிவபெருமானின் ஆலயங்கள் உள்ளன.

- ஷோபா, சென்னை-21