திருக்கதைகள்
Published:Updated:

எங்கும் நிறைந்த பரப்பிரம்மம்!

சதாசிவ பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
News
சதாசிவ பிரம்மேந்திரர்

சதாசிவ பிரம்மேந்திரர்

அது பிரிட்டிஷ் ஆட்சி காலம். ஓர்ஆங்கிலேய அதிகாரி சாரட் வண்டியில் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். வழியில் பாறை மீது ஒருவர் அமர்ந் திருப்பதைக் கண்டார். திகம்பரராக அவர் வீற்றிருந்த கோலம் கண்ட அந்த அதிகாரி முகம் சுளித்து `மன நோயாளி போலிருக்கிறது. இந்தியாவில் எத்தனைவிதமான பைத்தியங்கள்' என்று பரிகசித்துவிட்டு வேகமாக வண்டியை ஓட்டினார்.

சதாசிவ பிரம்மேந்திரர்
சதாசிவ பிரம்மேந்திரர்

கொஞ்ச தூரத்திலேயே அதே மனிதர் மற்றொரு பாறை மீது அமர்ந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒரே அதிர்ச்சி, `என்ன ஆச்சர்யம். வண்டியில் நான் வந்ததை விட விரைவாக இந்த பைத்தியக்காரன் எப்படி வரமுடியும்!' என்று வியந்தார். ஒருவேளை இவன் அந்தப் பைத்தியத் தின் சகோதரராக இருக்கலாம் அல்லது ஒரே தோற்றம் கொண்ட வேறு ஒரு பைத்தியம் போலும் என்று நினைத்துக் கொண்டே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

சில மணி நேரம் கழித்து அந்த அதிகாரிக்குக் கடுமையான தாகம் எடுத்தது. வழியில் எங்கும் நீர் கிடைக்கவில்லை. தவித்துப்போனார். சற்றுத் தொலைவில் ஒருவன் நடந்து போனதைக் கண்டார். எங்காவது நீர் கிடைக்குமா என்று விசாரிக்கலாம் என்று அவன் அருகே சென்றார். பார்த்தால்... வழியில் பார்த்த அதே திகம்பர மனிதன். அதிர்ச்சியில் உறைந்துபோன ஆங்கிலேய அதிகாரி. தான் இவ்வளவு விரைவாகக் குதிரையில் வந்து கொண்டிக்கும்போது, தன்னைக் கடந்து செல்லாமல், எப்படி அந்த மனிதர் தனக்கு முன்னால் செல்ல முடிந்தது என்று யோசித்தார்.

மகான்களுக்குத்தான் இவையெல்லாம் சாத்தியம் என நினைத்தவர், செண்பகப் பூவின் வாசம் கமழ நின்ற அந்த மகானைக் கண்டு தங்கள் வழக்கப்படி ஒரு ’சல்யூட்’ வைத்தார். அந்த மனிதனோ அவரைக் காணாதவர் போல் கடந்துவிட்டார்.

அதன்பின் எங்கு தேடியும் அந்த மகானைக் காண இயலவில்லை. அப்போதுதான் அதுவரை தனக்கு இருந்த தாகமும் களைப்பும் பசியும் தீர்ந்து போய் இருந்ததை உணர்ந்தார் அந்த அதிகாரி. விரைவாகத் தலைமையகத்துக்குச் சென்று நடந்த அற்புதத்தை சக நண்பர்களிடம் தெரிவித்தார். தன் நாள்குறிப்பில் பதிவு செய்தார். பின்னர் அது அரசாங்க கெஜட்டிலும் அக்காலத்தில் வெளியிடப்பட்டது.

அந்த மகான் யாரென்று தெரிந்து இருக்குமே… பரப்பிரம்மமாய் மௌன குருவாய், அவதூதராய் எங்கும் திரிந்த, எங்கும் நிறைந்த சதாசிவ பிரம்மேந்திரர்தான் அவர்!

- ஹரி, சென்னை-91